இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 4:24PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள புராணா கிலாவில் 2026 நவம்பர் 20 அன்று மாலை 5.30 மணியளவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதலாவது பண்பாட்டு உரையாடல் மன்றத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.
2026 நவம்பர் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மன்றம் இப்பிராந்தியத்தின் செழுமையான ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்ட நாகரீக பாரம்பரியத்தை கொண்டாடுவதையும் மக்களுக்கிடையேயான இணைப்புகளை வலுப்படுத்துவதையும், கலாச்சாரங்களுக்கிடையேயான உரையாடல், ஒத்துழைப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
2025-ம் ஆண்டு சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்த அமைப்பின் கீழ் பண்பாட்டு உரையாடலுக்கான தனித்துவமான தளத்தை உருவாக்க பிரதமர் முன்வைத்த முன்மொழிவின் அடிப்படையில் இம்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இந்த முன்மொழிவு ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பிஸ்கெக் பிரகடனத்தில் வரவேற்கப்பட்டது.
இதன் தொடக்க விழாவில் இசை, நடனம், காட்சி வழி கதை கூறல், விவரித்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய பண்பாட்டுகளுக்கிடையேயான உரையாடல்-கலாச்சார நிகழ்ச்சி இடம்பெறுகிறது. உலகம் ஒரு குடும்பம் என்ற தலைப்பை மையமாக கொண்ட இந்நிகழ்ச்சி இந்தியா-யுரேஷியா இடையேயான கலாச்சார தொடர்புகளை எடுத்துரைக்கும்.
இம்மன்றத்தில் இந்தியாவின் தொல்பொருள், கலை, இலக்கிய பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அஸ்தித்வ-நம்முடைய இருப்பின் அம்சம் என்ற தலைப்பில் கண்காட்சிகள் இடம்பெறுகின்றன. இது கி மு 1200 முதல் கி பி 1200 வரையிலான காலத்தைச் சேர்ந்த தொல்பொருள் சான்றுகள், அகழ்வராய்ச்சி பொருட்கள், கலைப்பொருட்கள், கட்டடக்கலை சிதிலங்கள், இதர முக்கிய கண்டுபிடிப்புகள் மூலம் தில்லியின் வரலாற்றை நேரடியாக காண்பது போன்ற அனுபவத்தை அளிக்கும்.
நவம்பர் 21, 22-ம் தேதிகளில் நான்கு தலைப்புகளில் அமர்வுகள் நடைபெறவுள்ளன. அதில் அறிஞர்கள், கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்கள், கலாச்சார பிரதிநிதிகள் ஆகியோர் ஒருங்கிணைந்து உரையாட உள்ளனர். இசை, ஜவுளி, உணவு வகைகள், பாரம்பரிய விளையாட்டுகள் ஆகிய கலாச்சார வெளிப்பாடுகள், கலை, கட்டடக்கலை சார்ந்த பொதுவான மரபுகள், எழுத்து வடிவங்கள், கையெழுத்து பிரதிகள் உள்ளிட்ட மொழி, இலக்கிய மரபுகள், துறவறங்கள், தத்துவ மரபுகள் போன்ற பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும்.
***
(Release ID: 2338477)
SS/IR/PS/SH