இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2026 1:47PM by PIB Chennai
ஒடிசாவின் புவனேஸ்வரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் மத்திய நன்னீர் மீன்வளர்ப்பு நிறுவனத்தில் (ஐசிஏஆர்-சிஃபா) 14-வது இந்திய மீன்வளம், மீன்வளர்ப்பு மாநாடு தொடங்கியது. 2026 நவம்பர் 18 முதல் 20 வரை நடைபெறும் இந்த மூன்று நாள் சர்வதேச அறிவியல் மாநாட்டை, ஆசிய மீன்வளச் சங்கத்தின் இந்தியக் கிளை, மத்திய மீன்வளத் துறை, தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம், ஒடிசா மாநில மீன்வளத் துறை ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
‘மீன்வளர்ப்பு, மீன்வளக் கட்டமைப்பை மாற்றியமைத்தல்: அறிவியலையும் சமூகத்தையும் இணைத்தல்’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இம்மாநாட்டை பாங்காக்கில் உள்ள ஆசிய-பசிபிக் மீன்வளர்ப்பு மையங்கள் கட்டமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் எட்வர்டோ லியானோ தொடங்கி வைத்தார். மீன்வளர்ப்புத் துறையை மாற்றியமைக்க புத்தாக்கம், தொழில்நுட்ப பயன்பாட்டை விரைவுபடுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இத்துறை சார்ந்த முன்னணி ஆராய்ச்சிகளில் அதிக முதலீடு, வலுவான வணிக நடவடிக்கைகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை ஐசிஏஆர் துணைத் தலைமை இயக்குநர் டாக்டர் ஜே கே ஜெனா எடுத்துரைத்தார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மீன்வளக் கூட்டுறவு சங்கங்களை வலுப்படுத்த வேண்டும் என தேசிய மீன்வள மேம்பாட்டு வாரிய தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் பி கே பெஹெரா வலியுறுத்தினார்.
இந்தியா உட்பட 7 நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்முனைவோர், விவசாயிகள் என 1,000-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். நிலையான மீன்வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு, மரபணு திருத்தம், சரியான மீன்வளர்ப்பு முறைகள், மேம்பட்ட இனப்பெருக்கத் தொழில்நுட்பங்கள், தீவன மேம்பாடு, நீர்வாழ் உயிரினங்களின் ஆரோக்கியம் ஆகியவை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
மேலும், 20 நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியில் மீன்வளம், மீன்வளர்ப்பு சார்ந்த புதிய தொழில்நுட்பங்கள், தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தொடக்க விழாவில் அறிவியல் வெளியீடுகள் வெளியிடப்பட்டதுடன், இத்துறைக்குப் பங்காற்றிய சிறந்த விஞ்ஞானிகளுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2338354®=3&lang=1
***
SS/PD/SH