பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் அமர்வில் பிரதமர், உள்ளடக்கிய உலகளாவிய நிர்வாகம் மற்றும் வலுப்படுத்துதல் என்ற தலைப்பில் நிகழ்த்திய தொடக்க உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 SEP 2026 4:08PM by PIB Chennai

மேதகு தலைவரே,

மேதகு பிரதிநிதிகளே,

வணக்கம்!

இந்தியாவிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்று வாழ்த்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு, மக்களை மையமாகக் கொண்ட மற்றும் மனிதநேயத்திற்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையின் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது. மீண்டு வரும் திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எங்களின் முக்கிய முன்னுரிமைகளாக இருந்து வருகின்றன. இந்த முன்னுரிமைகளைக் கருத்தில் கொண்டு, சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் பிரிக்ஸ் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மேலும் நெருக்கமாக இணைந்திருப்பதற்கு நாங்கள் சிறப்பு முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

இந்த நோக்கத்துடன், 350-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 30 நகரங்களில் உங்கள் குழுக்களை வரவேற்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பு வெற்றிகரமாக அமைய நீங்கள் ஒவ்வொருவரும் அளித்த தீவிரமான பங்களிப்பு மற்றும் ஆதரவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டின் பிரிக்ஸ் உச்சி மாநாடு வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை நாம் கொண்டாடுகிறோம். ஒருவரது வாழ்க்கையில் 20 வயது என்பது முதிர்ச்சியும் பொறுப்பும் அதிகரிக்கும் முக்கியமான காலக்கட்டமாகும். இந்த வயதில் கனவுகளுடன் பொறுப்புகளும் இணைகின்றன. அதேபோல், பிரிக்ஸ் அமைப்பும் தனது 20-வது ஆண்டில் புதிய பொறுப்புகளுடன், தனது திறன்களை புதிய திசைகளில் பயன்படுத்த வேண்டிய முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது.

இன்று, பிரிக்ஸ் அமைப்பும் இதுபோன்ற ஒரு ‘முதிர்ச்சி அடையும்’ கட்டத்தில் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில், உலக அரங்கில் பிரிக்ஸ் தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது. நாம் ஒருவருக்கொருவர் கருத்துகளை மதித்து, ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முன்னேறி வருகிறோம். யாருக்கும் எதிரான அணுகுமுறையைப் பின்பற்றாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அணுகுமுறையுடன் முன்னேறுவதற்கு நாம் முயற்சி செய்து வருகிறோம்.

இப்போது, பிரிக்ஸ் அமைப்பிற்குள் நிலவும் நமது ஒற்றுமையையும் ஒருமித்த கருத்தையும் உலக அரங்கில் உறுதியான செயல்பாடுகளாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. அடுத்த 20 ஆண்டுகளுக்காக, புதிய மற்றும் மிகுந்த இலட்சியத்துடன் கூடிய செயல்திட்டத்தை நாம் உருவாக்க வேண்டும். முதலில், நமது சொந்த செயல்பாட்டு முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் இதைத் தொடங்க வேண்டும்.

பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. ஆனால், இதனால் நமது நிறுவன ரீதியான செயல்பாடுகளின் தொடர்ச்சி தடைபடக் கூடாது. எனவே, ‘பிரிக்ஸ் தொடர்ச்சி மற்றும் செயலாக்கக் கட்டமைப்பை’ உருவாக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். மூன்று நாடுகளின் கூட்டமைப்பின் வாயிலாக செயல்படும் இந்தக் கட்டமைப்பு, அனைத்து முன்முயற்சிகள் மற்றும் முடிவுகள் குறித்து முறையாகத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதி செய்யும்.

ஒவ்வொரு முடிவுக்கும் பொறுப்பான ஒருங்கிணைப்பு அமைப்பு, காலக்கெடு மற்றும் செயலாக்கத்தின் நிலை ஆகியவற்றைப் பதிவு செய்யக்கூடிய பாதுகாப்பான மின்னணு சேமிப்பகத்தை நாம் உருவாக்கலாம்.

நண்பர்களே,

பிரிக்ஸ் அமைப்பை வலுப்படுத்துவதுடன், உலகளாவிய சீர்திருத்தத்திற்கான பாதையையும் நாம் வகுக்க வேண்டும். தற்போதைய உலகளாவிய நிர்வாகக் கட்டமைப்பு ஒரு பிரமிடு போன்றதாக உள்ளது. அதன் உச்சியில் அதிகாரமும் முடிவெடுக்கும் ஆற்றலும் குவிந்துள்ளன. அதேவேளையில், அதன் அடித்தளத்தில், இந்த முடிவுகளால் பாதிக்கப்படும் நாடுகள் உள்ளன. ஆனால், அந்த முடிவுகளை உருவாக்குவதில் அவற்றுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வாய்ப்பு உள்ளது.

இன்று உலகில் ஏற்படும் நெருக்கடிகளால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் உலகின் தென்பகுதி நாடுகள் முன்னணியில் உள்ளன. ஆனால், முடிவுகளை எடுக்கும் போது அவற்றுக்கு போதிய இடம் கிடைப்பதில்லை. எனவே, இந்த “சலுகைகளின் பிரமிடு” முறையை மாற்றி, “கூட்டாண்மைக்கான தளமாக” உருவாக்க வேண்டும். அதில் ஒவ்வொரு நாட்டுக்கும் தனது கருத்தைச் சொல்ல வாய்ப்பு இருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினருக்கும் உரிய பங்களிப்பும் முக்கியப் பங்கும் இருக்க வேண்டும். மேலும், மனிதகுலத்தின் முன்னேற்றமே அனைத்து முயற்சிகளுக்கும் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்.

இந்த நோக்கத்துடன், உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தத்திற்கான பத்து முன்மொழிவுகளை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். அடுத்த உச்சி மாநாட்டிற்குள், இந்த முன்மொழிவுகளை  பிரிக்ஸ் சீர்திருத்தத்திற்கான செயல்திட்டப் பாதையாக உருவாக்குவதற்கான முயற்சியை நாம் மேற்கொள்ளலாம்.

இந்தச் செயல்திட்டப் பாதையைத் தயாரிக்கும்போது, மூன்று முக்கிய அம்சங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அவை: பிரதிநிதித்துவம், பொறுப்புணர்வுடன் செயல்படுதல் மற்றும் விதிகளை உருவாக்குதல் ஆகியவையாகும்.

முதலாவதாக, பிரதிநிதித்துவம் தொடர்பாக நான் கூற விரும்புவது என்னவென்றால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தம் மேற்கொள்வதை இனியும் தாமதப்படுத்த முடியாது. இந்த விவகாரம் தொடர்பான எழுத்துப்பூர்வ பேச்சுவார்த்தைகள், தெளிவாக வரையறுக்கப்பட்ட காலக்கெடுவுடனும், உறுதியான முடிவுகளுடனும் இணைக்கப்பட வேண்டும்.

இதேபோல், நிதி நிறுவனங்களில் வாக்குரிமை, தலைமைப் பொறுப்புகள் மற்றும் கொள்கை முன்னுரிமைகள் ஆகியவை இன்றைய பொருளாதார யதார்த்தங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்க வேண்டும். உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் நாடுகளுக்கு, உலகளாவிய பொருளாதார நிர்வாகத்தை வடிவமைப்பதில் உரிய பங்கும் அளிக்கப்பட வேண்டும்.

இரண்டாவதாக, பொறுப்புணர்வுடன் செயல்படுதல். உலகளாவிய சவால்களுக்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கும் திறன் பெற்றிருக்கும்போதுதான், உலகளாவிய நிறுவனங்கள் மனிதகுலத்தின் நம்பிக்கையைப் பெற முடியும். நமது கூட்டு நடவடிக்கைகளின் வேகம், அதன் அளவு மற்றும்  கடைகோடியில் உள்ள மக்களையும் சென்றடையும் தாக்கம் ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

கடல்வழிப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றும் மாலுமிகள் உலகளாவிய வர்த்தகத்திற்கு மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இருப்பினும், அவர்கள் சிரமங்களை எதிர்கொள்ளும் நேரங்களில் போதிய ஆதரவின்றி தவிக்கும் நிலை அடிக்கடி ஏற்படுகிறது. எனவே, ‘மாலுமிகளுக்கான அவசரகால ஆதரவு கட்டமைப்பை  நாம் உருவாக்க முடியுமா என்பதைப் பரிசீலிக்கலாம் என்று நான் முன்மொழிகிறேன். இந்த கட்டமைப்பு, சம்பந்தப்பட்ட நாடுகளின் கடல்சார் அதிகார அமைப்புகளையும் தூதரகப் பணிக்குழுக்களையும் ஒருங்கிணைக்க முடியும். இதன் மூலம் அவசரநிலை எச்சரிக்கைகளை வழங்குதல், மருத்துவ உதவியைப் பெற்றுத் தருதல், குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்படுத்துதல் மற்றும் அவசரகால வெளியேற்றத்திற்கான ஆதரவை வழங்குதல் ஆகியவற்றை எளிதாக்க முடியும்.

மூன்றாவதாக, விதிகளை உருவாக்குதல் குறித்து நான் பேச விரும்புகிறேன். எதிர்காலத்திற்கான உலகளாவிய விதிகளை உருவாக்குவதில் அனைத்து நாடுகளும் சமமான முறையில் பங்கேற்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமானதாகும்.

செயற்கை நுண்ணறிவு, இணையவெளி, விண்வெளி, உயிரித் தொழில்நுட்பம் மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள் ஆகியவை எதிர்காலத்திற்கான வாய்ப்புகளை மட்டுமல்லாமல், எதிர்காலத்தை நிர்வகிக்கப் போகும் விதிகளையும் வடிவமைத்து வருகின்றன.

உலகின் தெற்கு பகுதி நாடுகளை, விதிகளை ஏற்றுக்கொள்பவர்களாக மட்டும் இல்லாமல், விதிகளை உருவாக்குபவர்களாகவும் மாற்றுவதற்கு நாம் பாடுபட வேண்டும். பிரிக்ஸ் அமைப்பின் மூலம், உலகின் தெற்குபகுதி நாடுகளைச் சேர்ந்த இளம் தூதர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுக்கு பேச்சுவார்த்தை நடத்தும் திறன்கள், நடைமுறைப் பயிற்சி மற்றும் சட்டம் சார்ந்த நிபுணத்துவம் ஆகியவற்றை வழங்க முடியும்.

தற்செயலாக, இன்று ஐக்கிய நாடுகள் சபையின் தெற்கு-தெற்கு ஒத்துழைப்புக்கான தினமாகும். உலகின் தென்பகுதி நாடுகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்த நாளில், இதுபோன்ற ஒரு முடிவு எடுக்கப்படுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த முயற்சியில் இந்தியா முன்னின்று செயல்படத் தயாராக உள்ளது.

நண்பர்களே,

இந்தியாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் செய்தி மிகவும் தெளிவாகவும், வலுவாகவும் இருக்க வேண்டும்: நமது எதிர்காலம் அனைவருக்கும் பொதுவானது என்றால், அந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் உரிமையும் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.

குரல் கொடுப்பதிலிருந்து செயல்பாட்டை நோக்கியும், சலுகைகளைத் தாண்டி கூட்டாண்மையை நோக்கியும் பிரிக்ஸ் அமைப்பு முன்னேற வேண்டும். 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரிக்ஸ் அமைப்பின் உறுதிப்பாடாக இது இருக்க வேண்டும்.

மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான தமிழாக்கமாகும். பிரதமரின் அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது

***

(Release ID: 2309468)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2327165) வருகையாளர் எண்ணிக்கை : 9