பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) நூற்றாண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 OCT 2026 1:51PM by PIB Chennai

மத்திய அமைச்சர்கள் டாக்டர் ஜிதேந்திர சிங், பி. கே. மிஸ்ரா ஜி, டி. வி. சோமநாதன், அஜய் குமார்  அவர்களே, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, பல்வேறு மாநிலங்களில் இருந்து வருகை தந்துள்ள மாநில பொதுப்பணி ஆணையங்களின் தலைவர்களே, மற்றுமொரு சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!

இன்றைய விவாதத்தை நான் தொடங்குவதற்கு முன்பாக, நேற்று நடந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். இந்தியாவின் கேப்டன் ஸ்மித் அவர்கள் எந்த அளவுக்குப் பொறுமையையும், விவேகத்தையும், துணிச்சலையும் வெளிப்படுத்தினார் என்பதையும், இன்று இஸ்ரேல் பிரதமர் கூறியது போல, இந்த இந்தியர் மற்றொரு 9/11 (செப்டம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல் போன்ற ஒரு பெரும் பேரழிவு) நிகழாமல் தடுத்துள்ளார் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். ஸ்மித்தின் இந்த வீரம் செறிந்த செயல் நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் பெருமிதத்தால் நிரப்புகிறது. இன்று, நான் அவரது தந்தை பூபேந்திர பாய், அவரது தாய் கீதா பென் மற்றும் அவரது மனைவி சோனல் ஆகியோரிடமும் பேசினேன். அவருக்குத் தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, இன்று ஒட்டுமொத்த உலகமே அவரைக் கண்டு பெருமை கொள்கிறது. நம் நாட்டின் மக்கள் அனைவரும் ஸ்மித் அவர்களின் நீண்ட ஆயுளுக்காகவும், சிறந்த ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்றும், இந்தியாவின் புகழை உலக அரங்கில் உயர்த்திய நமது சகோதரர் ஸ்மித் அவர்களுக்கு நாம் அனைவரும் வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று நாம் யுபிஎஸ்சி-யின்  100 ஆண்டுகாலப் பயணத்தைக் கொண்டாடுவது மட்டுமல்லாமல், அதன் மகத்தான பாரம்பரியத்தையும் சேர்த்துக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான இளைஞர்கள் தங்கள் நெஞ்சில் ஏந்திப் போற்றி வளர்க்கும் லட்சியங்களின் கொண்டாட்டம் இது. இந்த நிறுவனத்தின் மீது ஒவ்வொரு இந்தியரும் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையின் கொண்டாட்டம் இது. ஒரு நூற்றாண்டு கால இந்த நீண்ட பயணத்தில் தலைமுறைகள் மாறின, அரசாங்கங்கள் மாறின, தொழில்நுட்பங்கள் மாறின, பாடத்திட்டங்களும் மாறின; இருந்தபோதிலும், யுபிஎஸ்சி மீதான மக்களின் நம்பிக்கை இன்றும் அதேபோல உறுதியாக நிலைத்து நிற்கிறது. இதுதான் உங்களுடைய மிகப்பெரிய சொத்துக்களில் ஒன்றாகும். இந்த 100 ஆண்டுகாலப் பயணத்தைக் குறிக்கும் வகையில் ஒரு சிறப்பு நினைவு அஞ்சல் தலையும், நாணயமும் இப்போதுதான் வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 100 முக்கியமான சட்ட முன்மாதிரிகளின் தொகுப்பும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டு காலப் பயணத்தில் பங்களித்த அனைத்து சான்றோர்களுக்கும் எனது மரியாதையைச் செலுத்துகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். சற்று முன்புதான், இங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சிக் கூடத்தைப்  பார்வையிட்டேன். நீங்கள் அனைவரும் ஒரு 10 முதல் 15 நிமிடங்கள் அங்குச் சென்று அதனைப் பார்வையிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அங்கு வைக்கப்பட்டிருந்த 75-வது ஆண்டு நிறைவு விழாவின் புகைப்படத்தில், லெப்டினன்ட் ஜெனரல் சுரேந்திர நாத் அவர்களை நான் பார்த்தேன். இன்று, 90 வயதான அவர் நம்மிடையே இங்கு நேரில் வருகை தந்துள்ளார்.

இந்த நீண்ட பயணத்தை ஒரு நம்பிக்கையான பாரம்பரியமாக மாற்றியவர்கள், காலத்தின் தேவைக்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வந்தவர்கள், மற்றும் இந்த நிறுவனத்தை ஒரு புதிய உயரத்திற்கு இட்டுச் சென்றவர்கள் எனப் பல மனிதர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவருமே பாராட்டுதலுக்கும் அங்கீகாரத்திற்கும் தகுதியானவர்கள் ஆவர். அங்குள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, கடந்த 1920-ஆம் ஆண்டில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் இதே தேர்வு முறையை எவ்வாறு எதிர்கொண்டார் என்பது பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றிருந்ததை நான் கவனித்தேன். அந்தச் சமயத்தில் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்தபோதிலும், இந்தத் தேர்வில் சமஸ்கிருதப் பாடம் ஒன்று இருந்தது என்பதும், சுபாஷ் பாபு அவர்கள் தனது தேர்வுத் தாளைச் சமஸ்கிருத மொழியிலேயே எழுதினார் என்பதும் தான் என்னுடைய கவனத்தை ஈர்த்த மிக முக்கியமான விஷயமாகும்.

நண்பர்களே,

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்கத் தருணத்தில், நான் சர்தார் வல்லபாய் படேல் அவர்களுக்கும் எனது அஞ்சலியைச் செலுத்த விரும்புகிறேன். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அவருக்கு முன்னால் இருந்த சவால் என்பது தேசத்தை வெறுமனே சுதந்திரமாக வைத்திருப்பது மட்டுமே அல்ல. நாட்டைத் திறம்பட நிர்வகிப்பதும், அதனை ஒரு வலிமையான தேசமாகக் கட்டியெழுப்புவதும் தான் அவருக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய சவாலாகும். தேசத்தின் மறுசீரமைப்பிற்குத் தேவைப்பட்ட அந்த 'இரும்புச் சட்டகத்தை' (அதாவது குடிமைப் பணிக் கட்டமைப்பை) சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் தான் உருவாக்கிக் கொடுத்தார். அவர்தான் இந்த நிறுவனத்தை சுதந்திர இந்தியாவின் முதன்மையான தூண்களில் ஒன்றாக மாற்றி, அதனை மேலும் வலுப்படுத்தினார்.

கடந்த 1926-ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் நிறுவப்பட்ட போது, அந்த காலக்கட்டத்தின் முன்னுரிமைகள் முற்றிலும் வேறானவையாக இருந்தன. அந்தச் சமயத்தில், இந்த ஒட்டுமொத்த அமைப்பின் கவனமும் அதன் அர்ப்பணிப்பும் பிரிட்டிஷ் ஆட்சியை நோக்கியே செலுத்தப்பட்டிருந்தன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சுதந்திர இந்தியாவின் கனவுகளும், சுதந்திர இந்தியாவின் நிர்வாகத் தேவைகளும் தான் இந்த அமைப்பின் முதன்மை மையப்புள்ளியாக மாறின. கடந்த தசாப்தங்களில், யுபிஎஸ்சி தனது பொறுப்புகளை மிகச் சிறந்த முன்மாதிரியான முறையில் நிறைவேற்றியுள்ளது. அதன் சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் குறித்து இந்த மேடையில் ஏற்கனவே பல விஷயங்கள் விரிவாகப் பேசப்பட்டுவிட்டன. எனவே, நான் அந்தப் புள்ளிகளை மீண்டும் மீண்டும் சொல்லவோ அல்லது அவற்றைப் பற்றி விரிவாகப் பேசவோ விரும்பவில்லை.

வரலாற்றைக் கடந்து, இப்போது இந்தியாவின் எதிர்காலம் நமக்கு முன்னால் காத்துக் கொண்டிருக்கிறது. 21-ஆம் நூற்றாண்டின் கால் பகுதி, அதாவது இருபத்தைந்து ஆண்டுகள் ஏற்கனவே கடந்துவிட்டன. அடுத்த இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது இந்தியாவிற்கும், இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும், இந்தியாவின் ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மிக மிக முக்கியமானதாக இருக்கப் போகிறது. எனவே, இன்றைய எனது உரையை நான் அந்த திசையை நோக்கியே செலுத்த விரும்புகிறேன்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கு, நம் நாட்டிற்கு தற்போது தேவைப்படும் நிர்வாகத் திறன் என்பது யுபிஎஸ்சி மற்றும் மாநில பொதுப்பணி ஆணையங்களைத்தான் பெருமளவு சார்ந்துள்ளது. இன்று நீங்கள் தேர்வு செய்யும் இந்த இளைஞர்கள், ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டியெழுப்புவதில் மிக முக்கியப் பங்காற்றப் போகிறார்கள்; அதுமட்டுமன்றி, அவர்களே அந்த வளர்ச்சியடைந்த இந்தியாவின் மிகப்பெரிய பலன்களைப் பெறுபவர்களாகவும் இருப்பார்கள்.

இதைக் கருத்தில் கொண்டு, நாம் எப்போதும் இரண்டு மிக முக்கியமான அடிப்படைத் தகுதிகளை நினைவில் கொள்ள வேண்டும். முதலாவது தகுதி: தேசத்திற்கு முதலிடம். இரண்டாவது தகுதி: குடிமக்களுக்கு முதலிடம். இந்த இரண்டு அளவுகோல்களைக் கொண்டுதான் ஒவ்வொரு தேர்வு முறையும் அளவிடப்பட வேண்டும். இந்த உயர்ந்த சிந்தனையோடு தேர்வர்கள் மதிப்பிடப்படும் போதும், இந்த எண்ணம் கொண்ட நபர்கள் தேர்ந்தெடுக்கப்படும் போதும், தேசத்தின் இலக்குகளை அடைவது என்பது மிகவும் இயல்பானதாகவும் எளிதானதாகவும் மாறிவிடுகிறது.

நண்பர்களே,

2047-ஆம் ஆண்டில் இந்தியா என்பது இன்றைய இந்தியாவிலிருந்து மிகவும் வேறுபட்டதாக இருக்கும். இந்தியா இன்று இருப்பதை விட மிக அதிகளவில் நகரமயமாக்கப்பட்டிருக்கும். கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் இடையே உள்ள இடைவெளி குறையும். நமது குடிமக்களின், குறிப்பாக நமது இளைஞர்களின் இலட்சியங்களும் எதிர்பார்ப்புகளும் கணிசமான அளவுக்கு அதிகமாக இருக்கும். இந்த மாற்றத்திற்கான அறிகுறிகள் ஏற்கனவே நமக்குத் தென்படத் தொடங்கிவிட்டன. எனவே, இன்றைய கேள்வி என்பது வெறுமனே பொதுச் சேவைகளை மக்களுக்கு வழங்குவது பற்றி மட்டும் அல்ல. நொடிப் பொழுதில் சேவைகள் கிடைக்கும் இன்றைய நவீன உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க பொதுச் சேவைகளால் முடிகிறதா என்பதும்தான் இன்றைய கேள்வியாகும். அவர்களால் அந்த வேகத்தில் நகர முடிகிறதா? இன்று குடிமக்கள் ஒரு சேவைக்காக வாரக்கணக்கிலோ அல்லது மாதக்கணக்கிலோ காத்திருக்க விரும்புவதில்லை. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கான ஆவணங்களை ஒரு சில நொடிகளில் பரிசீலிக்க முடியும் என்ற நிலை இருக்கும் போதும், அரசாங்கங்களுக்கு உடனுக்குடன் நேரடித் தரவுகள்  கிடைக்கும் போதும், குடிமக்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு விரைவான தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்கள்.

மாறிவரும் இந்த மக்கள் மனநிலை, நமது குடிமைப் பணிகளிலும் புதிய மாற்றங்களைக் கோருகிறது. எனவே, நமது தேர்வு அளவுகோல்களையும், ஆள்சேர்ப்பு செயல்முறைகளையும் எதிர்காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப நாம் மாற்றியமைக்க வேண்டும். அரசுப் பதவிகளின் மீதான ஆசையால் ஈர்க்கப்படாமல், பொது மக்கள் சேவையின் மீதுள்ள ஈர்ப்பால் வரக்கூடிய இளைஞர்களை நாம் பொதுச் சேவைக்குக் கொண்டு வர வேண்டும். எனவே, ஆள்சேர்ப்புத் தேர்வுகள் என்பது ஒரு தேர்வர் எவ்வளவு தெரிந்து வைத்துள்ளார் என்பதை மட்டும் மதிப்பிடுவதாக இருக்கக் கூடாது. அந்த இளைஞர் ஏன் குடிமைப் பணியில் சேர விரும்புகிறார் என்பதையும் அவை மதிப்பிட வேண்டும். ஏனெனில், அவர்களின் உந்துதல் சரியாக இருக்கும் போது, மாறிவரும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப வேகமாகவும், அதற்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக் கொள்வதும் எளிதாகிறது.

நண்பர்களே,

உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும், நான் பயிற்சி அதிகாரிகளைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் ஏன் குடிமைப் பணியில் சேர்ந்தார்கள் என்பதை ஆரம்பத்திலேயே தங்களுடைய சொந்தக் கையெழுத்தில் எழுதி வைக்குமாறு கேட்டுக்கொள்வேன். ஏனென்றால், காலம் செல்லச்செல்லப் பொறுப்புகள் கூடுகின்றன, புதிய சவால்கள் முளைக்கின்றன. அப்படிப்பட்ட தருணங்களில், அந்தச் சிறிய குறிப்பு அவர்கள் எதற்காக இந்தத் துறைக்கு வந்தார்கள் என்ற தங்களின் அசல் நோக்கத்தை அவர்களுக்கு நினைவூட்டும். அதுமட்டுமன்றி, அது அவர்களே தங்களை சுயமதிப்பீடு செய்துகொள்வதற்கான ஒரு கருவியாகவும் மாறும். யுபிஎஸ்சி மற்றும் மாநில பொதுப்பணி ஆணையங்களும் இது போன்ற ஒரு நடைமுறையை உருவாக்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.

நண்பர்களே, அரசாங்கம் தான் இறுதிப் பாதுகாவலன் மற்றும் அனைத்தையும் வழங்குபவன் என்று நம்பப்பட்ட ஒரு காலத்தைக் கடந்த காலத்தில் நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்று, நமது தாரக மந்திரம், குடிமகனே தெய்வம் என்பதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இந்த நாட்டின் குடிமக்கள் நமக்குத் தெய்வத்திற்கு நிகரானவர்கள் ஆவர். குடிமக்களுக்குச் சேவை செய்வதே நமது முதன்மையான முன்னுரிமையாகும்.

எனவே, நண்பர்களே,

 

21-ம் நூற்றாண்டின் இந்தியா ஒரு புதிய பணிக் கலாச்சாரத்துடன் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதன் அடிப்படைக் கொள்கை என்னவென்றால்: மக்களுக்கு ஆதரவான, முன்கூட்டியே செயல்படக்கூடிய, சிறந்த நிர்வாகம்  ஆகும்.

மக்களுக்கு ஆதரவான என்பது அரசாங்கத்தின் வசதிக்கேற்ப வேலை செய்யாமல், குடிமக்களின் நலன்களுக்கு எல்லாவற்றிற்கும் மேலாக முதலிடம் அளித்துச் செயல்படுவதாகும். முன்கூட்டியே செயல்படக்கூடிய என்பது சிக்கல்கள் அல்லது பிரச்சனைகள் தோன்றிய பிறகு நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, அவை உருவாவதற்கு முன்பே முன்கூட்டியே கணித்து அதற்கான தீர்வுகளைத் தயார் செய்து வைப்பதாகும். சிறந்த நிர்வாகம் என்பது அங்கு அரசாங்கம் இல்லாமல் இருக்கக் கூடாது, அதே நேரத்தில் அரசாங்கத்தின் அழுத்தமோ அல்லது தேவையற்ற ஆதிக்கமோ இருக்கக் கூடாது என்பதாகும்.

தேசிய மற்றும் மாநில அளவுகள் ஆகிய இரண்டிலுமே, நமது தேர்வு முறைகளை இந்த உயர்ந்த சிந்தனைக்கு ஏற்பவே நாம் வடிவமைக்க வேண்டும். ஏழை எளிய மக்களின் துயரங்களைப் புரிந்து கொள்ளும் இரக்க குணம் கொண்ட; இளமைத் துடிப்புடன் தானாகவே முன்வந்து செயல்படக்கூடிய; கடினமான சவால்களுக்குப் புதுமையான தீர்வுகளைக் கண்டறியக்கூடிய; தேசத்தின் தேவைகளை நன்கு உணர்ந்த; சட்டத்தை முறையாக நிலைநாட்டுவதை உறுதி செய்யக்கூடிய; அதே நேரத்தில் ஒரு சட்டம் மக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறதா அல்லது அதுவே ஒரு தடையாக மாறுகிறதா என்று சீர்தூக்கிப் பார்க்கக்கூடிய வல்லமை பெற்ற தொழில்முறை நிபுணர்களை நாம் இந்த தேசத்திற்கு வழங்க வேண்டும்.

நண்பர்களே,

காலம் எவ்வளவு அதிவேகமாக மாறி வருகிறது என்பதையும், தொழில்நுட்பம் எந்த அளவிற்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதையும் நாம் அனைவரும் நேரில் கண்டு வருகிறோம். நமக்கு முன்னால் இருக்கக்கூடிய காலம் சமுதாயத்திற்கு முற்றிலும் புதிய வகையான சவால்களைக் கொண்டுவரப் போகிறது. தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைச் சுற்றி உலக அளவில் நடந்து வரும் விவாதங்களை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், நமது குடிமைப் பணி அதிகாரிகளும் முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளில் பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படும். தகவல் போர், டீப்ஃபேக் சவால்கள், அல்காரிதம் சார்பு தொடர்பான கவலைகள் மற்றும் பருவநிலை நீதி  போன்ற சிக்கலான கேள்விகள் உள்ளிட்ட பல சவாலான சூழ்நிலைகள் உருவாகும். எனவே, நமது தேர்வு முறைகளில், சிக்கலான பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் திறன் மற்றும் நீண்ட கால தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை மதிப்பிடுவதற்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும்; அதோடு அந்த திசையை நோக்கித் திட்டமிட்ட முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும்.

நண்பர்களே,

சீர்திருத்தங்கள் என்ற அதிவேக நெடுஞ்சாலையில் இன்று நமது தேசம் மிக வேகமாக முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இப்படிப்பட்ட ஒரு காலக்கட்டத்தில், தேர்வுக் கட்டுப்பாட்டு முகமைகள் காலத்தின் தேவையாக இருக்கக்கூடிய சீர்திருத்தங்களை நோக்கி மிக விரைவாக நகர வேண்டும். அதில் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால், தேர்வுகளை நடத்தி முடிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் கால அவகாசம் ஆகும். நாம் ஒரு தேர்வை வெறுமனே ஒரு நிகழ்வாக மட்டும் பார்க்கக் கூடாது. அது ஒரு நிகழ்வோடு மட்டும் தொடர்புடையது அல்ல; மாறாக அது நம் இளைஞர்களின் எதிர்காலத்தோடும் அவர்களுடைய வாழ்க்கையோடும் இணைந்ததாகும்.

தேர்வுகளில் சில மாதங்கள் தாமதம் ஏற்பட்டால் கூட, அது அவர்களுக்குப் பெரியதொரு சவாலாக மாறிவிடுகிறது. பயிற்சி மையங்களுக்கான கட்டணங்கள், அறை வாடகை, போக்குவரத்துச் செலவுகள் என இவை அனைத்துமே அந்தந்தக் குடும்பங்களுக்குப் பெரும் சுமையாக அமைகின்றன. எனவே, நமது தேர்வு முறை என்பது 'நிச்சயிக்கப்பட்ட கால வரம்பு' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பது மிக மிக இன்றியமையாததாகும். யுபிஎஸ்சி மற்றும் நாடு முழுவதும் உள்ள அனைத்துத் தேர்வு வாரியங்களும் தங்களது தரத்தைக் குறைக்காமல், தேர்வு சுழற்சியின் கால அளவைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். உண்மையில், நான் அங்குள்ள கண்காட்சிக் கூடத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, ஏற்கனவே தேர்வு நடத்தும் நாட்களில் கிட்டத்தட்ட நூறு நாட்கள் வரை குறைக்கப்பட்டிருப்பதை நான் கவனித்தேன். இந்தச் சாதனை நிச்சயமாகப் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும், இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் நண்பர்களே,

தலைமைச் செயலாளர்களின் மாநாடு மற்றும் காவல்துறை தலைமை இயக்குநர்கள் (டிஜபி) மாநாடு பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள். கடந்த பத்து ஆண்டுகளில், இவை மிக முக்கியமான நிறுவன வழிமுறைகளாக உருவெடுத்துள்ளன. இந்தத் தளங்களின் கீழ், நாட்டின் அனைத்துத் தலைமைச் செயலாளர்களும் மூன்று நாட்களுக்கு ஒன்றிணைந்து ஆலோசனைகளை மேற்கொண்டு தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். இதேபோல், டிஜிபி மாநாட்டின் போது, அனைத்து மாநிலக் காவல்துறை தலைமை இயக்குநர்களும் 3 நாட்கள் ஒன்று கூடிப் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்து, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த மாநாடுகளின் ஒரு முக்கிய நோக்கம் என்னவென்றால், ஒரு மாநிலம் மற்றொரு மாநிலத்தின் சிறந்த நடைமுறைகளை படித்துப் புரிந்துகொண்டு, தேவைப்படும் இடங்களில் அவற்றைத் தங்களுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள உதவுவதாகும்.

யுபிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் மாநில பொதுப்பணி ஆணையங்களுடன் இணைந்து ஒரு தேசிய மாநாட்டை ஏற்பாடு செய்கிறது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை இன்னும் விரிவானதாகவும், அதிகப் பலன் தரக்கூடியதாகவும் மற்றும் புதிய கருத்துக்கள் நிறைந்ததாகவும் மாற்றுவதற்கு, இதற்கு ஒரு புதிய வடிவத்தையும் புதிய பரிமாணத்தையும் வழங்குவது குறித்து நீங்கள் தொடர்ந்து சிந்தித்து வருகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இத்தகைய முயற்சிகள் நிறுவனங்கள் தங்களது சிறந்த நடைமுறைகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளப் பெரிதும் உதவுகின்றன. அதே நேரத்தில், இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் உள்ள சிறந்த வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும். நமது செயல்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் திறனை மேம்படுத்துவதற்குத் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்தும் குறிப்பிட்ட விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

இத்தகைய பரஸ்பர கற்றல் முயற்சிகள் யுபிஎஸ்சி-க்கும், அதே போல் ஒவ்வொரு மாநிலத் தேர்வு வாரியத்திற்கும் பெரும் பலனைத் தரும். நமது நடைமுறை விதிகள் மற்றும் செயல்பாடுகளை ஒரே சீரானதாக மாற்றுவது குறித்தும் நாம் பரிசீலிக்க வேண்டும். இது நமது இளைஞர்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும்.

நண்பர்களே,

மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், யுபிஎஸ்சி மற்றும் மாநிலத் தேர்வு வாரியங்களுக்குள் இருக்கும் மனிதவளத் திறனை மேம்படுத்துவதாகும் இந்த முயற்சியானது தொடர்ந்து இடைவிடாமல் மேற்கொள்ளப்பட வேண்டும். 'மிஷன் கர்மயோகி' திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள 'ஐகாட்' இணையதளத் தளத்தை, நமது உள்நாட்டு அமைப்புகளுக்காகவும், நமது குழுக்களின் திறன்களை வலுப்படுத்துவதற்காகவும் மற்றும் பல்வேறு தளங்களின் மூலம் நமது நிறுவனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும் நாம் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நண்பர்களே,

உங்களது பணி இந்தியாவின் இளைஞர்களின் எதிர்காலத்தோடு நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இளைஞர்களின் சக்தியை நாட்டின் சக்தியாக மாற்றும் உன்னதப் பணியில் நீங்கள் ஒரு முக்கியமான தூணாக விளங்குகிறீர்கள். இத்தனை ஆண்டுகளில், இந்த லட்சியத்தை முன்னோக்கி எடுத்துச் செல்வதில் நீங்கள் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள்.

யுபிஎஸ்சி தொடங்கப்பட்ட ஆரம்பக் காலத்தில், பெரிய நகரங்களைச் சேர்ந்த, பொருளாதார ரீதியாக வசதி படைத்த குடும்பங்களைச் சேர்ந்த மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் படித்த இளைஞர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் எளிதாகக் கிடைத்து வந்தன. ஆனால் இன்று, கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கூட பொதுச் சேவைகளில் பெருமளவில் நுழைந்து வருகிறார்கள். நமது பெண் பிள்ளைகளின் பங்களிப்பும் இதில் தொடர்ந்து சீராக அதிகரித்து வருகிறது.

கடந்த 1952 ஆம் ஆண்டில், குடிமைப் பணிகளில் பெண்களின் பங்களிப்பு வெறும் 3 சதவீதமாக மட்டுமே இருந்தது, வெறும் மூன்று சதவீதம் மட்டுமே. ஆனால் இன்று, அந்த எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. யுபிஎஸ்சியின் ஒட்டுமொத்த வரலாற்றிலேயே இதுவரை நான்கு பெண் தலைவர்கள் இருந்துள்ளனர். இதற்கான கைதட்டல் தருணம் இப்போது தான் வருகிறது; யுபிஎஸ்சியின் ஒட்டுமொத்த வரலாற்றில் இருந்த அந்த நான்கு பெண் தலைவர்களில், மூன்று பேர் 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்கள் வெறும் புள்ளிவிவரங்கள் மட்டுமல்ல; நமது நாட்டில் வாய்ப்புகளின் எல்லை எந்த அளவிற்குப் பரந்த அளவில் விரிவடைந்துள்ளது என்பதை இவை நமக்குத் தெளிவாகக் காட்டுகின்றன.

நண்பர்களே,

கடந்த 1976-ஆம் ஆண்டில், யுபிஎஸ்சி தனது 50 ஆண்டுகளை நிறைவு செய்த போது, தேர்வெழுதும் நபர்களின் எண்ணிக்கை இன்று இருப்பதை விட மிக மிகக் குறைவாகவே இருந்தது. அந்த காலக்கட்டத்துடன் ஒப்பிடும் போது, இன்று தேர்வெழுத விரும்பும் ஆர்வலர்களின் எண்ணிக்கை 45 மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இன்று நமது நாட்டிற்கு முன்னால் ஒரு பிரம்மாண்டமான திறமையாளர்களின் பட்டாளமே உள்ளது. இது தேசத்திற்குப் பெருமகிழ்ச்சி அளிக்கக்கூடிய ஒரு பெருமிதமான விஷயமாகும். அதே நேரத்தில், இதற்கு இணையாக நமது பொறுப்பும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. உலக நாடுகளே பொறாமைப்படும் அளவிற்கு இவ்வளவு பெரிய திறமைசாலிகளின் கூட்டம் நம்மிடம் இருக்கும் போது, நீங்கள் இங்கு வெறுமனே ஒரு வேட்பாளரை மட்டும் தேர்ந்தெடுக்கவில்லை; பிற்காலத்தில் அரசாங்கத்தின் முகமாக, அதன் பிரதிநிதியாக மாறப்போகும் ஒரு தனிமனிதரைத்தான் நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். அடித்தட்டு மக்கள், அந்த அதிகாரியைத்தான் அரசாங்கமாகவே பார்ப்பார்கள். எனவே, சரியான நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்கள் அனைவரின் மீதும் சுமத்தப்பட்டுள்ளது.

நண்பர்களே,

அதன் முதல் நூற்றாண்டில், யுபிஎஸ்சி தனது நம்பகத்தன்மையை நொடிக் கணமும் தளராமல் தொடர்ந்து வலுப்படுத்தி, தேசத்தின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ளது. இப்போது, இந்த நிறுவனம் தனது இரண்டாவது நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் வேளையில், புதிய வாய்ப்புகள் மற்றும் புதிய சவால்களுக்கு ஏற்ப அந்த நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்த வேண்டும்.

இதுவரை நமக்கு வலிமையாக இருந்து வந்த நெறிமுறைகளை பாதுகாக்கும் அதே வேளையில், எதிர்காலத்தின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் நாம் நம்மை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். யுபிஎஸ்சியின் சுதந்திரமான செயல்பாடுகள், நடுநிலைமை, தகுதிக்கு முன்னுரிமை அளிக்கும் அர்ப்பணிப்பு, ரகசியத்தன்மை மற்றும் நியாயமான தேர்வு நடைமுறைகள் ஆகியவைதான் அதன் தனித்துவமான அடையாளங்களாகும். இந்த உன்னத விழுமியங்கள் எக்காலத்திலும் எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த வேண்டுகோளுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

பொறுப்புத்துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிப்பெயர்ப்பு மட்டுமே ஆகும். அவரது அசல் உரை இந்தி மொழியில் நிகழ்த்தப்பட்டது.

***

(Release ID: 2317535)

AD/VK/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2326055) வருகையாளர் எண்ணிக்கை : 19