உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காவலர் நினைவு தினத்தையொட்டி தேசிய காவலர் நினைவிடத்தில் அக்டோபர் 21-ல் அஞ்சலி செலுத்துகிறார்
போதைப்பொருள்களுக்கு எதிரான மோட்டார் சைக்கிள் பேரணியையும் தொடங்கி வைக்கிறார்
இடுகை இடப்பட்ட நாள்:
19 OCT 2026 5:50PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாளை மறுநாள் (2026 அக்டோபர் 21), காவலர் நினைவு தினத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள தேசிய காவலர் நினைவிடத்தில் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.
பல்வேறு மாநிலங்களின் காவல்துறைகள், மத்திய ஆயுதக் காவல் படைகள் ஆகியவற்றைச் சேர்ந்த சுமார் 90 காவல்துறை வீரர்கள் பங்கேற்கும் மோட்டார் சைக்கிள் பேரணியை உள்துறை அமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இது 'போதைப்பொருளுக்கு எதிரான போராட்டம்' என்ற கருப்பொருளைக் கொண்ட நாடு தழுவிய பேரணியின் ஒரு பகுதியாகும். இந்த காவல்துறையினர், 2026 அக்டோபர் 31 அன்று குஜராத்தில் உள்ள ஏக்தா நகரை அடைந்து, அங்கு ஒற்றுமை அணிவகுப்பில் கலந்துகொள்வார்கள்.
1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி, லடாக்கின் ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் கனரக ஆயுதம் ஏந்திய சீனப் படைகள் நடத்திய தாக்குதலில் வீரமிக்க பத்து இந்திய காவலர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். அன்று முதல், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினமாக அனுசரிக்கப்படுகிறது. காவல்துறையினரின் தியாகங்களையும், தேசியப் பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் பேணுவதில் அவர்களின் முதன்மையான பங்கையும் அங்கீகரிக்கும் விதமாக, 2018-ம் ஆண்டில், புது தில்லி, சாணக்கியபுரியில் தேசிய காவலர் நினைவிடத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இந்த நினைவகம், காவல் படைகளுக்கு தேசிய அடையாளம், பெருமிதம் ஆகிய உணர்வுகளை அளிப்பதோடு தங்கள் உயிரைப் பணயம் வைத்தும் தேசத்தைப் பாதுகாக்கும் அவர்களின் அர்ப்பணிப்பைப் போற்றுகிறது.
நாளை நடைபெறும் நிகழ்வில், பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு திரு அமித் ஷா அஞ்சலி செலுத்தி உரையாற்றுவார். இந்நிகழ்ச்சி தூர்தர்ஷனில் நேரலையாக ஒளிபரப்பப்படும். காவல்துறை இணையதளங்களில் இணையவழியாகவும் இது ஒளிபரப்பப்படும்.
இதன் ஒரு பகுதியாக, மத்திய காவல் படைகள்/மத்திய காவல் அதிகாரிகள் அக்டோபர் 22 முதல் 30 வரை தேசிய காவலர் நினைவிடத்தில் பல்வேறு நினைவு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் குடும்ப உறுப்பினர்களின் வருகை, காவலர் இசைக்குழுவின் அணிவகுப்பு, மோட்டார் சைக்கிள் பேரணிகள், ரத்த தான முகாம்கள், குழந்தைகளுக்கான கட்டுரை/ஓவியப் போட்டிகள் போன்றவை இடம்பெறும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2325195®=3
****
AD/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2325233)
வருகையாளர் எண்ணிக்கை : 6