குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி, காமராஜர் ஆகியோருக்கு குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் மரியாதை செலுத்தியுள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 02 OCT 2026 12:24PM by PIB Chennai

குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று (02.10.2026) மகாத்மா காந்தி, மறைந்த முன்னாள் பிரதமர் திரு லால்பகதூர் சாஸ்திரி,  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜர் ஆகியோருக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

 

மகாத்மா காந்தி பிறந்த தினத்தையொட்டி  ராஜ் காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில், குடியரசுத் தலைவர் மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செய்தார். அவரது நீடித்த பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த திரு சி.பி. ராதாகிருஷ்ணன், சத்தியம், அகிம்சையின் மீதான மகாத்மா காந்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை, நீதிக்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தின் மீதான ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை மனிதகுலத்திற்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கின்றன என்று கூறியுள்ளார்.

 

மகாத்மா காந்திஜியின் வாழ்க்கையும் அது விடுக்கும் செய்தியும் அமைதி, கருணை, சுயநலமின்மை, சேவை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் திகழ்கின்றன என்று அவர் கூறியுள்ளார். மகாத்மா காந்தி போற்றிய விழுமியங்களைப் பின்பற்றுவதை மீண்டும் உறுதிப்படுத்தவும், நல்லிணக்கமான, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குவதற்கும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு அவர் அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

மறைந்த முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் துணைத் தலைவர் விஜய் காட்டில் அவருக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார்.

 

லால் பகதூர் சாஸ்திரியை அமைதியான வலிமை, அசாதாரணமான உறுதிப்பாடு ஆகியவை கொண்ட தலைவர் என்று வர்ணித்துள்ள திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அவர் பணிவு, நேர்மை, தேசத்திற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார் என்று கூறியுள்ளார். இந்தியாவின் பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணத்தில், சாஸ்திரியின் தலைமை நம்பிக்கையையும் ஒற்றுமையையும் ஊட்டியது என்றும், அதே நேரத்தில் அவரது “ஜெய் ஜவான், ஜெய் கிசான்” என்ற அவரது முழக்கம், தேசத்தின் வீரர்களின் தியாகங்களுக்கும், விவசாயிகளின் முக்கிய பங்களிப்புக்கும் நிலையான அங்கீகாரத்தை வழங்கியது என்றும் குடியரசுத் துணைத் தலைவர் நினைவு கூர்ந்துள்ளார்.

 

உண்மையான தலைமை என்பது எளிமை, தைரியம், தேச சேவை ஆகியவற்றில் வேரூன்றியுள்ளது என்பதற்கு லால் பகதூர் சாஸ்திரியின் வாழ்க்கை ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக விளங்குகிறது என்று குடியரசுத் துணைத் தலைவர் கூறியுள்ளார்.

 

கர்மவீரர் காமராஜரின் நினைவு தினத்தை முன்னிட்டு குடியரசுத் துணைத் தலைவர் மாளிகையில், அவருக்கு குடியரசுத் துணைத் தலைவர் அஞ்சலி செலுத்தியதோடு, பொது வாழ்விற்கும் தேசக் கட்டமைப்பிற்கும் காமராஜர் ஆற்றிய மிகச்சிறந்த பங்களிப்புகளை நினைவு கூர்ந்துள்ளார்.

 

காமராஜரை ஒரு உயர்ந்த ராஜதந்திரி, உண்மையான மக்கள் தலைவர் என்று வர்ணித்துள்ள திரு சி.பி. ராதாகிருஷ்ணன், அவர் தனது வாழ்நாளை தேச சேவைக்கும் சாமானிய மக்களின் நலனுக்கும் அர்ப்பணித்ததாகக் கூறியுள்ளார்.

 

காமராஜர் தமது வாழ்நாள் முழுவதும் காந்திய சிந்தனையால் வழிநடத்தப்பட்டு வாழ்ந்தார் என்றும், சாலைகள், கல்வி நிறுவனங்களை விரிவுபடுத்துதல், மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்துதல், ஏழை மக்களின் வாழ்வில் புதிய நம்பிக்கையைக் கொண்டுவருதல் ஆகியவற்றின் மூலம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு நிலையான பங்களிப்புகளைச் செய்தார் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

அணைகளைக் கட்டுதல், தொழிற்பேட்டைகளை நிறுவுதல் ஆகியவற்றின் மூலம் பாசன வசதிக்கும், தொழில்துறை வளர்ச்சிக்கும் காமராஜர் ஆற்றிய பங்களிப்புகளையும் குடியரசுத் துணைத் தலைவர் நினைவு கூர்ந்துள்ளார். இவை தமிழ்நாட்டில் விவசாயம், தொழில்துறை ஆகியவற்றின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டன என்று குடியரசுத் துணைத் தலைவர் திரு சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2318085&reg=3&lang=1

(Release ID: 2318085)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2318138) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Malayalam