தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்ற விழாவில் தேசிய திரைப்பட விருதுகளை குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார்

அமரன், கேப்டன் மில்லர் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களுக்கு விருது வழங்கப்பட்டது

திரைத்துறையினர் இளைஞர்களுக்கு முன்மாதிரிகளாகத் திகழ்வதால், சிறந்த வாழ்க்கை முறைகளை அவர்கள் ஊக்குவிக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு

இடுகை இடப்பட்ட நாள்: 22 SEP 2026 8:34PM by PIB Chennai

குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (22.09.2026) 72-வது தேசிய திரைப்பட விருதுகளை வழங்கி, விருது பெற்ற அனைவரின் திறமை, அர்ப்பணிப்பு, கடின உழைப்பிற்காக அவர்களைப் பாராட்டினார். திரைப்படத்தை உருவாக்குவது ஒரு கூட்டு முயற்சி என்று கூறிய அவர், விருது பெற்ற திரைப்படங்களுக்குப் பங்களித்த குழுவின் ஒவ்வொருவருக்கும் தமது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

 

நாடகம், சினிமாவுக்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, தாதாசாகேப் பால்கே விருது பெற்ற திரு அனந்த் நாக்-குக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார்.

 

இந்திய சினிமா, நாட்டின் பன்முக மொழிகள், மரபுகள், எதிர்பார்ப்புகள், போராட்டங்கள் ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார். இந்தியாவின் கலாச்சார, தேசிய ஒற்றுமையின் சின்னமான குஜராத்தின் ஏக்தா நகரை தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் இடமாகத் தேர்ந்தெடுத்ததை அவர் பாராட்டினார்.

 

பிரபலமான கலைஞர்கள், குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் மீது செலுத்தும் செல்வாக்கை அவர் எடுத்துரைத்தார். வெற்றி பெற்ற திரைக் கலைஞர்கள் ஒழுக்கமான சிறந்த வாழ்க்கை முறைகளை ஊக்குவிக்கவும், உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களை ஆதரிப்பதைத் தவிர்க்கவும் வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

தேசிய திரைப்பட விருதுகளை தில்லிக்கு வெளியே நடத்தும் பாரம்பரியத்தைத் தொடங்கியதற்காக தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்திற்கு குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் நன்றி தெரிவித்தார். மேலும், சர்தார் வல்லபாய் பட்டேலின் பாரம்பரியத்துடன் தொடர்புடைய கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் இந்த மதிப்புமிக்க விருதுகளை நடத்துவது குஜராத்திற்குப் பெருமைக்குரிய விஷயம் என்றும் அவர் கூறினார்.

 

72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவிற்காக குஜராத்திற்கு வருகை தந்த குடியரசுத் தலைவரையும் சிறப்பு விருந்தினர்களையும் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல் வரவேற்றதோடு, ஏக்தா நகரில் இந்த விழா நடைபெறுவது மாநிலத்திற்குப் பெருமைக்குரிய விஷயம் என்றும் குறிப்பிட்டார்.

 

சினிமாவை சமூகத்தின் பிரதிபலிப்பாகவும், மனித உணர்வுகளை இணைக்கும் சக்திவாய்ந்த ஊடகமாகவும், இந்தியாவின் உலகளாவிய அடையாளத்தை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டதாகவும் குஜராத் முதலமைச்சர் விவரித்தார்.

 

கெவாடியாவில் உள்ள ஏக்தா நகரில் நடைபெற்ற 72-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு-வுக்கு, மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திருமதி அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்ததோடு, இந்தியத் திரையுலகில் சிறந்த சாதனைகளைப் புரிந்த விருது பெற்றவர்களை வாழ்த்தினார்.

 

சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சி என்றும், தேசிய திரைப்பட விருதுகள், விருது பெறுபவர்களையும் திரைக்குப் பின்னால் உழைப்பவர்களையும் அங்கீகரிக்கின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

 

தேசிய திரைப்பட விருது விழாவை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களுக்குக் கொண்டு செல்வதன் மூலம் இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியமும் சுற்றுலாவும் மேம்படுத்தப்படும் என்று திரு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தேசிய திரைப்பட விருதுகளின் எதிர்கால பதிப்புகளுக்கான இடங்களாக சுற்றுலாத் தலங்களைப் பரிந்துரைக்குமாறு மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். அடுத்த ஆண்டு அக்டோபரில் நடைபெறவுள்ள வேவ்ஸ் 2027 நிகழ்விற்கான ஆலோசனைகளையும் யோசனைகளையும் அவர் வரவேற்றார்.

 

தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சல் குமார் கூறுகையில், 72-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு, 34 மொழிகளில் 400 திரைப்படங்களும், 24 மொழிகளில் 161 திரைப்படமல்லாத படங்களும் பரிந்துரையாக பெறப்பட்டதாகவும், இதில் 22 திரைப்பட விருதுகளும் 23 திரைப்படமல்லாத படங்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்திய சினிமா, கலாச்சார வெளிப்பாட்டிற்கும் உலகளாவிய கதைசொல்லலுக்கும் ஒரு சக்திவாய்ந்த ஊடகமாகத் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

 

இந்த விழாவில் பிரம்மயுகம் படத்திற்காக மம்மூட்டியும், சந்து சாம்பியன் படத்திற்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர் விருதைப் பகிர்ந்து கொண்ட நிலையில் , ஆர்டிகிள் 370 படத்திற்காக யாமி கௌதம் சிறந்த நடிகை விருதைப் பெற்றார் .

 

துணை நடிகர் பிரிவுகளில், 'பக்ஷக்' படத்திற்காக சஞ்சய் மிஸ்ரா சிறந்த துணை நடிகராக கௌரவிக்கப்பட்டார் . அதே சமயம், 'மகாராஜா' படத்திற்காக சச்சனா நமிதாஸும் , 'மித்யா' படத்திற்காக ரோபஸ்ரீ வர்க்கடியும் சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பகிர்ந்து கொண்டனர்.

 

'ஆர்டிகிள் 370' சிறந்த திரைப்படமாக கௌரவிக்கப்பட்டது, அதே நேரத்தில் ரந்தீப் ஹூடா தனது முதல் இயக்கமான  'ஸ்வதந்தர்ய வீர சாவர்க்கர்' படத்திற்காக அங்கீகாரம் பெற்றார் . 'கல்கி 2898 கி.பி.' முழுமையான பொழுதுபோக்கை வழங்கும் சிறந்த பிரபலமான திரைப்படத்துக்கான விருதைப் பெற்றது. தமிழின் 'கேப்டன் மில்லர்' தேசிய, சமூக, சுற்றுச்சூழல் விழுமியங்களை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்திற்கான விருதைப் பெற்றது. 'அமரன்' படத்திற்காக ராஜ்குமார் பெரியசாமி சிறந்த இயக்கத்திற்கான விருதைப் பெற்றார் .

 

இந்த விருதுகள் இந்தியத் திரைப்படத்துறையின் மொழிப் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டின. அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள மொழிகளுக்கு அப்பால், கார்வாலி, துளுத் திரைப்படங்களும் தேசிய அங்கீகாரத்தைப் பெற்றன.

 

விருது பெற்றவர்களின் முழுமையான பட்டியல், விருதுகள் குறித்த விரிவான தகவல்களுக்கு இந்த இணையதள இணைப்பைப் பார்க்கவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286143&reg=48&lang=2&utm_source=chatgpt.com

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2313647&reg=3&lang=1

 

(Release ID: 2313647)

****

TV/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2313672) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Khasi , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Odia , Kannada