சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பு நடவடிக்கை: 80 லட்சம் மாணவிகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்தி புதிய மைல்கல் சாதனை

இடுகை இடப்பட்ட நாள்: 11 SEP 2026 2:12PM by PIB Chennai

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு புது மைல்கல் சாதனை படைக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க, நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் எச்பிவி தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இந்த இயக்கத்தின் கீழ், 14 வயது சிறுமிகளுக்கு பெற்றோரின் அனுமதியுடன், அரசு சுகாதார நிலையங்களில் முதல் தவணை எச்பிவி கருப்பை புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டது. 

இந்திய பதிவாளர் ஆணையரின் மதிப்பீடுகளின் படி ஒவ்வொரு ஆண்டும் ஒரு கோடியே 20 லட்சம் சிறுமிகள் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டத்தில் பயனடைவார்கள் என கணிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொது சுகாதார அமைப்பின் கீழ் மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மேற்கொண்ட நோய்த் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளின் பலனாக இதுவரை 80 லட்சம் சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசியின் ஒரு தவணை செலுத்தப்பட்டுள்ளது.

இதில், குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்கள் 100% இலக்கை எட்டிய நிலையில், பிகார், ஆந்திர பிரதேசம், அசாம் ஆகிய மாநிலங்கள் 90% இலக்கை எட்டியுள்ளன.

கர்நாடகாவில் 85% சிறுமிகளுக்கு எச்பிவி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர், சிக்கிம், கேரளா, தெலங்கனா, ஒடிசா, ஆகிய மாநிலங்களில் 60% சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 22 லட்சம் சிறுமிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு முதலிடத்தில் உள்ளது.

உலகளவில் 80 கோடி எச்பிவி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு, அதன் பயன்பாடு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆராயப்பட்ட பின்னர் இந்தியச் சிறுமிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும், இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார உள்கட்டமைப்பான U-WIN தளத்தின் மூலம் மாவட்ட அளவில் செலுத்தப்படும் தடுப்பூசி அளவை கண்காணித்து, தடுப்பூசி செலுத்த தவறிய மற்றும் விடுபட்ட பயனாளிகள் கண்டறியப்பட்டு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2309109&reg=3&lang=1

****

TV/AC/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2309335) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Punjabi , Gujarati , Kannada