சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
சர்வதேச பாறு கழுகுகள் விழிப்புணர்வு தின கொண்டாட்டங்கள் - மத்திய அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ் தலைமை வகித்தார்
இடுகை இடப்பட்ட நாள்:
06 SEP 2026 10:49AM by PIB Chennai
சர்வதேச பாறு கழுகுகள் விழிப்புணர்வு தினம் 2026, இன்று (06.09.2026) ஹரியானாவின் பஞ்ச்குலாவில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை அமைச்சர் திரு பூபேந்தர் யாதவ், 'நெருக்கடியிலிருந்து மீட்சிக்கு – இந்தியாவில் பாறு கழுகுகளைப் பாதுகாத்தல்' என்ற கருப்பொருளில் தேசிய அளவிலான பயிலரங்கைத் தொடங்கி வைத்தார். ஹரியானா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு ராவ் நர்பீர் சிங், மத்திய, ஹரியானா அரசுகளின் உயர் அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்தியாவில் பாறு கழுகுப் பாதுகாப்பிற்கான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்தும் நோக்கில், வனத்துறை அதிகாரிகள், விஞ்ஞானிகள், கால்நடை மருத்துவர்கள், விலங்கியல் பூங்கா வல்லுநர்கள், பாதுகாப்புப் பயிற்சியாளர்கள் பிற தரப்பினரை இது ஒன்றிணைத்தது.
நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பூபேந்தர் யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலான அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணுகுமுறையானது, ஒரு குறிப்பிட்ட உயிரினத்திற்கு மட்டும் அல்லாமல், முழுமையான சூழல் மண்டலத்தை மையமாகக் கொண்டதாக உள்ளது என்று எடுத்துரைத்தார். பல்வேறு உயிரினங்களின் பாதுகாப்பு முயற்சிகளில் இந்த அணுகுமுறை தெளிவாகத் தெரிகிறது என்று அமைச்சர் குறிப்பிட்டார். கழுகுகளைப் பற்றிப் பேசிய அவர், பலதரப்பட்ட கழுகுகளின் தாயகமாக விளங்கும் இந்தியா, அவற்றின் பாதுகாப்பிற்காக எவ்வாறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதைத் தெரிவித்தார்.
பாறு கழுகுகள் இறந்த உடல்களை உண்ணும் பறவைகளாக விளங்குவதால் அவை சூழலியல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், இயற்கை படைத்த தூய்மைப்படுத்தும் அமைப்புகள் அவை எனவும் அவர் விவரித்தார். இறந்த விலங்குகளின் உடல்களை விரைவாக உண்பதன் மூலம், பாறு கழுகுகள் சூழலியல் சமநிலையைப் பராமரிக்க உதவுகின்றன என்று அவர் தெரிவித்தார். 1990-களிலிருந்து இந்திய பாறு கழுகுகளின் எண்ணிக்கையில் பெரும் சரிவு காணப்பட்டதாகவும், பாறு
கழுகுப் பாதுகாப்புக்கு ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2307093®=48&lang=1
***
SS/PLM/RJ
(வெளியீட்டு அடையாள எண்: 2307139)
வருகையாளர் எண்ணிக்கை : 7