சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வலுவான கண்காணிப்புடன் முதுநிலை நீட் தேர்வு நாடு முழுவதும் சுமுகமாக நடத்தப்பட்டது

இடுகை இடப்பட்ட நாள்: 30 AUG 2026 1:56PM by PIB Chennai

தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியமான என்பிஇஎம்எஸ், பாதுகாப்பான மற்றும் தடையற்ற தேர்வுச் செயல்முறையை உறுதி செய்யும் வகையில் விரிவான ஏற்பாடுகளுடன், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை இன்று (2026 ஆகஸ்ட் 30) நாடு முழுவதும் வெற்றிகரமாக நடத்தியது.

அனைத்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உள்ளடக்கி, 339 நகரங்களில் உள்ள 1,111 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 2,65,535 தேர்வர்கள் தேர்வு எழுதினர்.

நாடு தழுவிய இந்தத் தேர்வு, விரிவான கண்காணிப்புடனும் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடனும் நடத்தப்பட்டது. தேர்வை மேற்பார்வையிட மொத்தம் 2,527 மருத்துவக் கல்வித்துறை ஆசிரியர்கள் மதிப்பீட்டாளர்களாக நியமிக்கப்பட்டனர். மேலும், துறைத் தலைவர்கள், இயக்குநர்கள், மருத்துவக் கண்காணிப்பாளர்கள், மூத்த பேராசிரியர்கள் உட்பட 700-க்கும் மேற்பட்ட மூத்த ஆசிரியர்கள் பறக்கும் படை உறுப்பினர்களாகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஒருங்கிணைப்பையும் கண்காணிப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் 16 மண்டலக் கட்டளை மையங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டன. அனைத்துத் தேர்வு மையங்களும் நேரடி சிசிடிவி கண்காணிப்பின் கீழ் இயங்கின.

தேர்வுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும் ஆள்மாறாட்டத்தைத் தடுக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேர்வு மையங்களில் தேர்வர்களின் ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. தேர்வைப் பாதுகாப்பாகவும் முறையாகவும் நடத்துவதற்குப் பல்வேறு அரசு நிறுவனங்கள் தங்களின் முழு ஆதரவையும் வழங்கின.

நாடு தழுவிய அளவில் பெரும்பாலான தேர்வர்களுக்குத் தேர்வு வெற்றிகரமாக நிறைவடைந்தபோதிலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மையங்களில் ஏற்பட்ட உள் மின் விநியோகப் பிரச்சனைகள் காரணமாக அங்கு 2,445 தேர்வர்கள் தேர்வை முடிக்க இயலவில்லை. பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு என்பிஇஎம்எஸ் ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதோடு, அவர்கள் தேர்வில் பங்கேற்க நியாயமான, சமமான வாய்ப்பு வழங்கப்படுவதை உறுதிசெய்ய உடனடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்துத் தேர்வர்களுக்கும் 2026 செப்டம்பர் 5-ம் தேதி சனிக்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணிக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மறுதேர்வு நடத்தப்படும். தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேர்வு தொடர்பான இதர அறிவுறுத்தல்கள் சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்குத் தனியாகத் தெரிவிக்கப்படும்.

நாடு தழுவிய இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தேர்வு அதிகாரிகள், மருத்துவ நிறுவனங்கள், பேராசிரியர்கள், பாதுகாப்பு முகமைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் ஆகியோரிடையே இருந்த ஒருங்கிணைப்பினால் இத்தேர்வு வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2304654&reg=48&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2304729) வருகையாளர் எண்ணிக்கை : 55