உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாமல்லபுரத்தில் 31-வது தென் மண்டலக் குழுக் கூட்டம்: மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தலைமை வகித்தார்

प्रविष्टि तिथि: 20 AUG 2026 6:25PM by PIB Chennai

மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெற்ற தென் மண்டலக் குழுவின் 31-வது கூட்டத்திற்கு இன்று தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய், ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு, கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவகுமார், கேரள முதலமைச்சர் திரு வி டி சதீசன், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் திரு கே கைலாசநாதன், அந்தமான் - நிக்கோபார் தீவுகளின் துணைநிலை ஆளுநர் திரு டி கே ஜோஷி, லட்சத்தீவு நிர்வாகி திரு பிரஃபுல் படேல், தெலங்கானா துணை முதலமைச்சர் திரு பட்டி விக்ரமார்க்க மல்லு ஆகியோர் கலந்துகொண்டனர். மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள், ஆலோசகர்கள், பிற உயர் அதிகாரிகளும், மத்திய அரசின் உயர் அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா, தென்னிந்தியாவின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம் என்று கூறினார். அனைத்துத் துறைகளிலும் தென்னிந்தியா எப்போதும் சிறப்பாகப் பங்களித்துள்ளது என்று அவர் கூறினார்.

2014-ம் ஆண்டு முதல், மண்டலக் குழுக் கூட்டங்களை ஒரு அர்த்தமுள்ள தளமாக மாற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக திரு அமித் ஷா கூறினார். 2004-2014-ம் ஆண்டுக்கு இடையிலான காலக்கட்டம், 2014-2026-ம் ஆண்டுக்கு இடையிலான காலக்கட்டம் ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்க்கையில், முன்பு, ஆண்டுக்குச் சராசரியாக இரண்டரை கூட்டங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது, ஒவ்வொரு ஆண்டுக்கும் ஆறு கூட்டங்கள் நடத்தப்படுகிறது என்று அவர் கூறினார். 2014-ம் ஆண்டு முதல் மொத்தம் 70 மண்டலக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளதாகவும், அவற்றில் 1,869 பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு 1,445 பிரச்சனைகளுக்கு (சுமார் 80%), தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 60 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த பல பிரச்சனைகள் இந்த மண்டலக் குழுக் கூட்டங்கள் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளன என்றும் திரு அமித் ஷா மேலும் கூறினார்.

தென்னிந்திய மாநிலங்கள் நாட்டின் முன்னேற்றத்தின் முக்கியத் தூண்கள் என்றும், அவற்றின் முன்னேற்றம் நீர் ஆதராங்களைச் சார்ந்துள்ளது என்றும் திரு அமித் ஷா கூறினார். விவசாயம், தொழில், ஆரோக்கியமான மக்கள், சுற்றுச்சூழல் என இந்த நான்கு அம்சங்களிலும், நீர்வளம் இப்பகுதியின் ஆன்மாவாக விளங்குகிறது என அவர் குறிப்பிட்டார்.

தென்னிந்திய மாநிலங்கள் தொடர்பான நிலுவையில் உள்ள நீர்ப் பிரச்சனைகளை, ஜல் சக்தி அமைச்சகம், உள்துறை அமைச்சகம், மாநிலங்களுக்கு இடையேயான குழு, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டங்கள் ஆகியவை மூலம் விரைவாகத் தீர்க்க வேண்டியதன் அவசியத்தை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வலியுறுத்தினார். நிலுவையில் உள்ள இந்த நீர் பிரச்சனைகளை பரஸ்பர பேச்சுவார்த்தை மூலமும், ஆக்கப்பூர்வமான தீர்வுகள் மூலமாகவும் விரைவாகத் தீர்க்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அறிவுறுத்தினார். அமைச்சரின் இந்தப் பரிந்துரையை தென்னிந்திய மாநிலங்கள் ஏற்றுக்கொண்டன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2301631&reg=3&lang=1    

****

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2301714) आगंतुक पटल : 36
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada , Malayalam