குடியரசுத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

12-வது தேசிய கைத்தறி தின விழா: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு தேசிய கைத்தறி விருதுகளை வழங்கினார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 AUG 2026 4:27PM by PIB Chennai

12-வது தேசிய கைத்தறி தின விழாவில் கலந்துகொண்ட இந்தியக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சந்த் கபீர் கைத்தறி விருதுகள் மற்றும் 2025-ஆம் ஆண்டிற்கான தேசிய கைத்தறி விருதுகளை புதுதில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் இன்று (ஆகஸ்ட் 07, 2026) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நாட்டின் செழுமையான மற்றும் பலதரப்பட்ட கைத்தறி நெசவு பாரம்பரியத்தைக் கொண்டாடும் நான்கு சிறப்பு அஞ்சல் தலைகளையும் அவர் வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர், நூறாண்டுகளாக இந்தியாவின் நாகரிகப் பயணத்தில் கைத்தறி ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக இருந்து வருகிறது என்றார். நமது நாட்டின் அசாதாரண பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் கைத்தறி, பிராந்தியத் தனித்துவத்தைப் பாதுகாத்து வருகிறது. கைத்தறித் துறை வேலைவாய்ப்பு, மகளிர் அதிகாரம், கலாச்சாரம் மற்றும் இயற்கை மீதான அன்பை வளர்க்கிறது. சுதந்திரப் போராட்டத்துடனும், தற்சார்பு மனப்பான்மையுடனும் கைத்தறி இணைக்கப்பட்டுள்ளது.

1905-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று சுதேசி இயக்கம் தொடங்கப்பட்டதை நினைவுகூர்ந்த குடியரசுத் தலைவர், உள்நாட்டுப் பொருட்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வரலாற்று நிகழ்வைச் சிறப்பிக்கும் வகையில், 2015 முதல் ஆகஸ்ட் 7-ஆம் தேதியை தேசிய கைத்தறி தினமாக இந்திய அரசு கொண்டாடி வருவதாகக் கூறினார்.

கைத்தறித் துறையின் நிலையான வளர்ச்சிக்கு நவீன தொழில்நுட்பங்களின் சரியான பயன்பாடு மிக அவசியம் என்று குடியரசுத் தலைவர் வலியுறுத்தினார். டிஜிட்டல் தீர்வுகள் மூலம் சந்தை அணுகலை மேலும் திறம்பட மாற்ற முடியும் என்றும், மின்-வணிகத் தளங்கள் மூலம் இந்தியக் கைத்தறிப் பொருட்களின் உலகளாவிய சந்தை அணுகலை வலுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2296051&reg=3&lang=1

****

TV/SE/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2296365) வருகையாளர் எண்ணிக்கை : 55