பிரதமர் அலுவலகம்
ஹரியானா மாநிலம், ஜிந்த் நகரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கிவைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
17 JUL 2026 3:18PM by PIB Chennai
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
ஹரியானா மாநில ஆளுநர் திரு. அசிம் கோஷ் அவர்களே, முதலமைச்சர் நயாப் சிங் சைனி அவர்களே, மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, இங்கு வருகை தந்துள்ள மற்ற பொதுப் பிரதிநிதிகளே, மற்றும் தொழில்நுட்பம் மூலமாகப் பல்வேறு இடங்களிலிருந்து இணைந்திருக்கும் எனது அருமை ஹரியானா சகோதர சகோதரிகளே!
இங்கு சிலர் புகைப்படங்களைக் கொண்டு வந்துள்ளார்கள் - தயவுசெய்து அவற்றைச் சேகரித்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் பின்னால் அமர்ந்திருப்பவர்களால் பார்க்க முடியாது. எஸ்பிஜி அதிகாரிகளே, தயவுசெய்து அவற்றை வாங்குங்கள். சகோதரரே, இதுபோன்ற அழகான ஓவியங்களைக் கொண்டு வந்ததற்கு நன்றி. அங்கே, ஒரு சிறுமி கூட ஏதோ கொண்டு வந்திருக்கிறாள் - தயவுசெய்து அதையும் சேகரியுங்கள். அனைவரும் தயவுசெய்து வசதியாக அமருங்கள். உங்கள் அன்பிற்கும், உங்கள் கலைப் பற்றுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்!
நண்பர்களே,
ஜிந்தின் இந்த மாபெரும் மண்ணிலிருந்து உங்கள் அனைவருக்கும் ராமர் பெயரில் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்! இந்தப் புனித பூமிக்கு வருவது என் இதயத்தை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. இது சாதாரண நிலம் அல்ல - இது வரலாறு, வீரம், நம்பிக்கை மற்றும் பெருமைமிக்க பூமி. சக்தி பீடம் மாதா ஜெயந்தியின் ஆசிகள் இந்த நகரத்தின் மீது எப்பொழுதும் நிலைத்திருக்கும். என்னை பொறுத்தவரை, ஜிந்திற்கு வருவது என்பது பழைய நினைவுகளின் ஜன்னலைத் திறப்பதைப் போன்றது.
இங்கு இன்று பல பரிச்சயமான முகங்களைக் பார்க்கிறேன். பலரும் தங்களது ஸ்கூட்டரில்தான் நான் முன்பு இங்கு வந்ததாகக் கூறுகிறார்கள். பல தசாப்தங்களுக்கு முன்பு, அமைப்புப் பணிகளுக்காக நான் முதன்முதலில் ஜிந்திற்கு வந்தேன். அப்போது நீங்கள் எனக்கு அளித்த பாசத்தையும் அன்பையும் நான் என்றைக்கும் மறந்ததில்லை. முர்ரா எருமைகளின் பால், தயிர், நெய், ஜிந்தின் நாட்டுச் சர்க்கரை மற்றும் இங்கிருக்கும் கேவர் இனிப்பு - இவை அனைத்தும் ஜிந்துடன் என்றென்றும் இணைக்கப்பட்ட நினைவுகளாகும்.
நண்பர்களே,
ஆண்டுகள் கடந்தாலும், ஜிந்தின் நெய்யும் கேவரும் மாறவில்லை, ஆனால் ஜிந்தின் உத்வேகம் மாறியிருக்கிறது. இன்று ஜிந்த், பாஜக- தேசிய ஜனநாயக கூட்டணி நல்லாட்சி மாதிரியின் அடையாளமாக மாறி வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில், ஹரியானா முழுவதும் வளர்ச்சியின் புதிய பாதையில் பயணித்துள்ளது. இரட்டை என்ஜின் பாஜக அரசின் லட்சியத்திற்கு இன்றைய நிகழ்ச்சி புதிய ஆற்றலை வழங்குகிறது.
நண்பர்களே,
இன்று ஜிந்த் மற்றும் ஹரியானாவின் பெயர் வரலாற்று ஏடுகளில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கிருந்துதான் நாட்டிற்கான முதல் ஹைட்ரஜன் ரயில் தொடங்கப்பட்டுள்ளது.
நண்பர்களே, உங்களுக்கு நினைவிருக்கும்,
இந்தியாவின் முதல் ரயில் இப்போது மும்பை என்று அழைக்கப்படும் பாம்பே மற்றும் தானே இடையே இயங்கியது என்று நாம் இன்னும் படித்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கிறோம். அதேபோன்று, எதிர்காலத்தில் எப்போது ஹைட்ரஜன் ரயில் குறிப்பிடப்பட்டாலும், ஜிந்த், சோனிபட் மற்றும் ஹரியானாவின் பெயர்கள் நிச்சயமாக நினைவுகூரப்படும். இந்திய ரயில்வேயின் இந்த நவீனமயமாக்கல் பாதையில் ஒரு மாபெரும் படியை எடுத்து வைத்துள்ளதற்காக உங்கள் அனைவருக்கும், ஒட்டுமொத்த நாட்டிற்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று ஹரியானா மாநிலத்திற்கு ரூ.14 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் பல ரயில் மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்கள், நமது பாரம்பரியத்துடன் தொடர்புடைய திட்டங்கள் மற்றும் ஹரியானாவிற்கு சேவை செய்வதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இரண்டு புதிய மருத்துவக் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். பிவானியில் பண்டிட் நெகி ராம் சர்மா மருத்துவக் கல்லூரியும், நார்நூலில் மகரிஷி சியவன் மருத்துவக் கல்லூரியும் ராவ் துலாராம் மருத்துவமனையும் ஹரியானாவின் சுகாதார சேவைகளை வலுப்படுத்தும். அதே நேரத்தில், இங்குள்ள இளைஞர்கள் மருத்துவர்களாகவும் மற்ற மருத்துவத் துறை வல்லுநர்களாகவும் மாறுவதற்கான புதிய பாதைகளை அவை திறந்துவிடும். இந்த அனைத்துத் திட்டங்களுக்காகவும் ஹரியானாவின் எனது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இன்று நான் ஜிந்த் மற்றும் ஹரியானா மக்களை மற்றொரு காரணத்திற்காகவும் பாராட்டியாக வேண்டும். நீங்கள் தூய்மையே வரவேற்பு என்ற இயக்கத்தை எந்தளவுக்கு தீவிரமாக எடுத்துக் கொண்டீர்களோ, எனது வருகைக்கு முன்பு புதிய ஆற்றலுடன் மக்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்ட விதமும் நெகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த ஒரு வாரமாக உங்களது தூய்மை இயக்கம் சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டதை நான் கண்டேன். "மோடி அவர்களே, எங்கள் ஜிந்த் எப்போதும் தூய்மையாக இருக்க தயவுசெய்து அடிக்கடி வாருங்கள்" என்று கூட சிலர் சமூக வலைத்தளங்களில் கூறினார்கள். இந்த உணர்வை வெளிப்படுத்திய பெருமகனுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன், ஆனால் இன்று நான் ஜிந்த் மக்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நமது ஊரைத் தூய்மையாக வைத்துக்கொள்ள மோடிதான் வர வேண்டுமா? "இனி நாம் எங்கும் குப்பை போட மாட்டோம்; குப்பையை உருவாக்க மாட்டோம்" என்று ஜிந்த் மக்களும், ஹரியானா மக்களும் ஒருபோதும் குப்பை சேர்க்க மாட்டோம் என முடிவு செய்துவிட்டால், ஜிந்த் நகரம் எப்போதாவது அசுத்தமாகுமா? ஹரியானா எப்போதாவது அழுக்காகுமா? இது எளிமையான ஒரு வேலைதான் - மோடி வரத் தேவையில்லை. தூய்மை நமது இயல்பாக மாற வேண்டும், தூய்மை நமது கலாச்சாரமாக மாற வேண்டும், அதை நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்றுவோம் என்று நீங்கள் மட்டும் முடிவு செய்தால் போதும்.
நண்பர்களே,
ரயில்வே வரலாற்றைப் பார்த்தால், 19ம் நூற்றாண்டின் ரயில் போக்குவரத்து நீராவியந்திரங்களால் அறியப்பட்டது. 20ம் நூற்றாண்டு டீசல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் ரயில்களால் அடையாளப் படுத்தப்பட்டது. இப்போது, 21ம் நூற்றாண்டு ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்களால் அடையாளம் காணப்படுகிறது. இன்று, இந்திய ரயில்வே இந்த 21ம்நூற்றாண்டுத் தொழில்நுட்பத்தில் ஒரு பெரிய அடியை எடுத்து வைத்துள்ளது. இன்று, ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. இப்போதைக்கு இந்தப் பயணம் 90 கிலோமீட்டர் தூரத்தைக் கொண்டுள்ளது, ஆனால் எதிர்காலத்தில் விரிவாக்கத்திற்கான அபரிமிதமான சாத்தியக்கூறுகள் உள்ளன. செலவைக் குறைப்பது எப்படி, செயல்திறனை அதிகரிப்பது எப்படி என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்வோம், மேலும் படிப்படியாக, முழுமையான ஆய்வுக்குப் பிறகு, நாங்கள் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம். உலகத்தில் ஹைட்ரஜன் ரயில்கள் தோன்றி 7 அல்லது 8 ஆண்டுகள் மட்டுமே ஆகின்றன. தற்போது, 3 அல்லது 4 நாடுகள் மட்டுமே ஹைட்ரஜன் ரயில்களை இயக்கும் திறனைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளிலும் கூட, ஹைட்ரஜன் ரயில்கள் இன்னும் ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளன. ஆனால் இந்தியாவின் ஹைட்ரஜன் ரயிலின் திறனைப் பற்றிக் கேள்விப்படுவது உங்களை வியப்படையச் செய்யும் - ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்வார்கள்.
நண்பர்களே,
ஜிந்த் மற்றும் சோனிபட் இடையே இயங்கும் ஹைட்ரஜன் ரயில்தான் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் ரயிலாகும். இந்த ஹைட்ரஜன் ரயில் 3200 குதிரைத்திறன் கொண்டது. மிகவும் சக்திவாய்ந்தது மட்டுமல்லாமல், இந்தியாவின் ஹைட்ரஜன் ரயிலும் மிக நீளமானது. மற்ற நாடுகளில், ஹைட்ரஜன் ரயில்கள் 3 அல்லது 4 பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. ஆனால் இந்தியாவோ, தனது முதல் முயற்சியிலேயே பத்துப் பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயிலை இயக்கி உலக அரங்கில் தன் கொடியை நாட்டியுள்ளது.
நண்பர்களே,
மற்றொரு பெருமைக்குரிய விஷயத்தையும் நான் உங்களிடம் கூறுகிறேன். இந்தியாவின் இந்த ஹைட்ரஜன் ரயில் புகை இல்லாதது மட்டுமல்லாமல், இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கம் திட்டத்தின் ஒரு பிரகாசமான உதாரணமாகவும் திகழ்கிறது. இந்த ஹைட்ரஜன் ரயில் இந்தியப் பொறியியலாளர்களால் வடிவமைக்கப்பட்டு, ஒரு இந்திய நிறுவனத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இந்த ஹைட்ரஜன் ரயில் மற்ற ரயில்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டது. இதற்கு தனி அமைப்பு மற்றும் தனி உள்கட்டமைப்பு தேவைப்படுகிறது. இங்கு ஜிந்தில், இதற்கான அனைத்து அவசியமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வரும் காலத்தில், ஹைட்ரஜன் ரயில்கள் தொடர்பான கூடுதல் உள்கட்டமைப்புகள் இங்கு உருவாக்கப்படும். ஹைட்ரஜன் ரயில் வலையமைப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக புதிய தொழிற்சாலைகள் அமைக்கப்படும். இதன் பொருள் என்னவென்றால், இந்த ரயில் ஹரியானா இளைஞர்களுக்குப் பல புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
கடந்த 12 ஆண்டுகளில், இந்திய ரயில்வேயில் ஏற்பட்டுள்ள முக்கிய மாற்றங்கள் இந்தியாவுக்கு மற்றொரு நன்மையை அளித்துள்ளன. கடந்த பல மாதங்களாக மேற்கு ஆசியாவில் - ஹோர்முஸ் பிராந்தியம் முழுவதும், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் போர் நடைபெற்று வருவதை நீங்கள் பார்க்கலாம். இந்தியா தனது விவசாயிகளுக்காகப் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் உரங்களை அதிக அளவில் இறக்குமதி செய்யும் அதே கடல் வழித்தடமே தற்போது நெருக்கடிகளுக்கு இடையில் ஒரு போர்க்களமாக மாறியுள்ளது.
நண்பர்களே,
2014-க்கு முன்பு இதுபோன்ற ஒரு சூழல் ஏற்பட்டிருந்தால், இந்தியாவின் முழு ரயில்வே அமைப்பும் முடங்கிப் போயிருக்கும். ஏனெனில், 2014-ல் நாட்டின் பெரும்பான்மையான ரயில்கள் டீசலில் மட்டுமே இயங்கின. கற்பனை செய்து பாருங்கள் - டீசல் இறக்குமதி நின்றிருந்தால், அந்த ரயில்கள் எப்படி ஓடியிருக்கும்? நாடு ஒரு மிகப்பெரிய நெருக்கடியைச் சந்தித்திருக்கும்.
ஆனால் நண்பர்களே,
இது 2014-ன் நிலைமை அல்ல - இது மோடி. அவர் காலத்திற்கு முன்பே சிந்திப்பதோடு, அதற்கான தீர்வுகளையும் களத்தில் கொண்டு வருகிறார். சற்றே கற்பனை செய்து பாருங்கள்: இந்திய ரயில்வேயின் மின்மயமாக்கல் கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு 1925-ல் தொடங்கியது. 1925 முதல் 2014 வரை, சுமார் 90 ஆண்டுகளில், ரயில்வே வலையமைப்பில் 30 சதவீதம் மட்டுமே மின்மயமாக்கப்பட்டது - மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவுதான். மீதமுள்ள எழுபது சதவீத ரயில்கள் இன்னும் டீசலில்தான் ஓடிக்கொண்டிருந்தன. அந்த வேகத்தில் சென்றிருந்தால், முழு மின்மயமாக்கலை அடைவதற்கு மேலும் 200 முதல் 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஒருவேளை ரயில்வே எப்போதும் மின்மயமாக்கப்பட்டிருக்காது, ரயில்கள் தொடர்ந்து டீசலில்தான் ஓடிக் கொண்டிருந்திருக்கும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளில், இந்தியாவின் ரயில்வே கட்டமைப்பில் கிட்டத்தட்ட 99 சதவீதம் மின்மயமாக்கப்பட்டுவிட்டது. ஹரியானாவில் ரயில்வே கட்டமைப்பு முழுமையாக மின்மயமாக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, போர்கள் மற்றும் எண்ணெய் நெருக்கடிகள் இருந்தபோதிலும், இந்தியாவின் ரயில்கள் நிற்கவில்லை. இந்தியாவின் வளர்ச்சியின் இயந்திரம் முடங்கவில்லை. ரயில்கள் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கின்றன.
நண்பர்களே,
ரயிலாக இருந்தாலும் சரி, சாலையாக இருந்தாலும் சரி, இணைப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்கு வசதியை வழங்குவதோடு, வளர்ச்சியின் வேகத்தையும் பன்மடங்கு பெருக்குகின்றன. பல நெடுஞ்சாலைகளுடன் இணைக்கப்பட்டு வரும் ஜிந்த் நகரில், இன்று இதே மேடையில் மூன்று பெரிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தில்லி - அமிர்தசரஸ் - கத்ரா விரைவுச் சாலையின் ஹரியானா பகுதி திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜிந்த் - கோஹானா தேசிய நெடுஞ்சாலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், அம்பாலா - கலா ஆம் நான்கு வழிச்சாலை ஹரியானா மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய இரு மாநில மக்களுக்கும் பெரும் வசதியை ஏற்படுத்தும்.
நண்பர்களே,
இப்போது ஜிந்த் 5 தேசிய நெடுஞ்சாலைகளால் இணைக்கப்பட்ட மாவட்டமாக மாறியுள்ளது. இத்தகைய தொடர்புகளின் மூலம், விவசாயிகளும் கால்நடை வளர்ப்பவர்களும் தங்கள் விளைபொருட்களைப் பெரிய சந்தைகளுக்குக் கொண்டு செல்வது எளிதாகவும் மலிவாகவும் மாறும். தொழில்கள் பலம்பெறும், சுற்றுலாத் துறை வளர்ச்சியடையும், மேலும் ஏராளமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே,
சில நாட்களுக்கு முன்புதான் நான் இந்தோனேசியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்குப் பயணங்களை மேற்கொண்டு திரும்பினேன் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தியா அங்கு பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது, அவை பரவலாகப் பேசப்பட்டன. ஆனால், அதுகுறித்து அவ்வளவாகப் பேசப்படாத ஒரு விஷயம் உள்ளது. இந்த விஷயம் எனது நாட்டின் இளைஞர்களுடன், குறிப்பாக ஹரியானாவுடன் நேரடியாகத் தொடர்புடையது - அந்த விஷயம் விளையாட்டுத் துறையாகும்.
நண்பர்களே,
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில், விளையாட்டுத் துறை குறித்து அந்நாட்டு அரசாங்கங்களுடன் நான் விரிவான கலந்துரையாடலை நடத்தினேன். வரும் காலத்தில், விளையாட்டுத் துறை, தடகள வீரா்களின் பயிற்சி மற்றும் பல துறைகளில் இந்த இரண்டு நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றும். இது ஹரியானா இளைஞர்களுக்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
நண்பர்களே,
இன்று இந்தியாவில் விளையாட்டுத் துறை உடல் தகுதி மற்றும் வேலைவாய்ப்பின் முக்கிய ஊடகமாக மாற்றப்பட்டு வருகிறது. நமது அரசு புதிய தேசிய விளையாட்டு கொள்கை மற்றும் கேலோ இந்தியா கொள்கையை உருவாக்கியுள்ளது. கேலோ இந்தியா இயக்கம் முதல் டாப்ஸ் திட்டம் வரை, விளையாட்டு வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லாத வசதிகளும் நிதி உதவியும் வழங்கப்பட்டு வருகின்றன. ஹரியானாவிலும் கூட, பாஜக அரசு விளையாட்டையும் விளையாட்டு வீரர்களையும் தீவிரமாக ஊக்கப்படுத்தி வருகிறது.
நண்பர்களே,
இன்றைய நிகழ்ச்சி ஹைட்ரஜன் ரயில் மற்றும் பிற வளர்ச்சித் திட்டங்களைப் பற்றியதாக இருக்கலாம், ஆனால் இங்குள்ள இளைஞர்களிடம் நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன். 2030ம் ஆண்டில் இந்தியா காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது என்பதும், 2036ம் ஆண்டில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த இந்தியா தயாராகி வருகிறது என்பதும் உங்கள் அனைவருக்கும் தெரியும். எனவே, ஒவ்வொரு விளையாட்டு வீரரும் கடுமையாகத் தயாராகி, தங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்த வேண்டும். இரட்டை என்ஜின் பாஜக அரசு அனைத்து வசதிகளையும் செய்து தரும் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். மேலும், 2036 ஒலிம்பிக் போட்டிகளைக் காண விரும்பும் - அதாவது தற்போது 5 முதல் 12-15 வயதுடைய குழந்தைகளுக்கு - நாம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன், வரும் காலத்தில் அகமதாபாத் உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு விளையாட்டுப் போட்டிகளை நடத்தவுள்ளது. ஹரியானாவில் உள்ள எனது நண்பர்கள் இதற்கும் நன்றாகத் தயாராகுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். ஹரியானாவின் புதல்வர்களும் புதல்வியர்களும், எப்போதும்போல இப்போட்டிகளிலும் தங்கள் கொடியை உச்சியில் பறக்கச் செய்வார்கள் என்ற முழு நம்பிக்கை எனக்கு உள்ளது.
நண்பர்களே,
ஹரியானாவின் இரட்டை என்ஜின் அரசு 'அனைவரும் இணைவோம் அனைவரும் உயர்வோம்' என்ற கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு வருகிறது. நயாப் சிங் அவர்களின் தலைமையின் கீழ், ஹரியானா அரசு இங்குள்ள இளைஞர்கள், விவசாயிகள், சகோதரிகள் மற்றும் மகளிருக்காகச் சிறந்த பணிகளைச் செய்து வருகிறது. லஞ்சம் அல்லது சிபாரிசு இல்லாமல் வேலைவாய்ப்பு வழங்கும் ஹரியானா அரசு காட்டிய பாதை அவ்வளவு எளிதானது அல்ல, ஆனால் இந்த பாஜக அரசு அதனைச் சாத்தியமாக்கியுள்ளது.
நண்பர்களே,
இங்குள்ள விவசாயிகளின் நலனும் நமது முன்னுரிமையாகும். ஹரியானாவில் உள்ள மிகப்பெரிய சந்தைகளில் ஜிந்த் சந்தையும் ஒன்றாகும். இரட்டை என்ஜின் பாஜக அரசுகளால் ஹரியானா விவசாயிகள் பெரும் பயன் அடைந்து வருகின்றனர். பிரதமரின் விவசாயிகளுக்கான வருவாய் ஆதரவு நிதி திட்டத்தின் மூலம், ஹரியானா விவசாயிகள் கிட்டத்தட்ட 8,000 கோடி ரூபாயைப் பெற்றுள்ளனர். இதில், ஜிந்த் விவசாயிகள் மட்டுமே 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாகப் பெற்றுள்ளனர்.
நண்பர்களே,
நம் நாடு கலாச்சாரமும் பண்பாடும் செறிந்த பூமியாகும். இந்தப் பகுதியானது அந்த வளமான பாரம்பரியத்தின் ஒரு மாபெரும் மையமாகத் திகழ்கிறது. இது மகாராஜா ரஞ்சித் சிங்கின் பெருமை வாழும், பாண்டவர்களின் நம்பிக்கை நிலைத்திருக்கும் ஜிந்தின் மண்ணாகும். பாண்டு-பிந்தாரா மற்றும் ராம்ராய் போன்ற புனித தலங்கள் இன்றும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களின் பக்தி மையங்களாக விளங்குகின்றன.
நண்பர்களே,
நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் இந்த பாரம்பரியத்தில்தான் இன்றைய இந்தியா பாதுகாத்து, இப்போது அடுத்த தலைமுறைக்கு மரியாதையுடன் கடத்துகிறது. இந்த உணர்வுடன், இன்று குருசேத்திரத்தில் சீக்கிய அருங்காட்சியகம் ஒன்றுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹரியானாவில் அமைந்துள்ள இந்த புதிய அருங்காட்சியகம் இந்தியாவின் குரு பாரம்பரியத்தை எதிர்கால சந்ததியினருக்குக் கொண்டு செல்லும்.
நண்பர்களே,
ஹரியானா இப்போது விரைவான வளர்ச்சியின் பாதையில் மின்னல் வேகத்தில் முன்னேறி வருகிறது. விவசாயமும் தொழிற்துறையுமே ஹரியானாவை வலுப்படுத்தும் இரண்டு சக்கரங்களாகும். இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள திட்டங்கள் ஹரியானாவின் வளர்ச்சியை மேலும் துரிதப்படுத்தும். ஹரியானாவின் இந்த விரைவான வளர்ச்சியானது, வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி நாட்டை அழைத்துச் செல்லும் பயணத்திற்கு புதிய ஆற்றலை வழங்கும். இந்த நல்வாழ்த்துகளுடன், இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயிலுக்காக உங்கள் அனைவருக்கும், நாட்டின் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
மிக்க நன்றி!
(Release ID: 2285710)
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2291901)
आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam