பிரதமர் அலுவலகம்
நியூசிலாந்து வாழ் இந்தியச் சமூகத்தினரிடையே பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
11 JUL 2026 6:53PM by PIB Chennai
வணக்கம்!
கியொரா நியூசிலாந்து!
இந்தியாவில் நாம் அடிக்கடி "20 ஆண்டுகளுக்குப் பிறகு" என்ற சொற்றொடரைக் கேட்பதுண்டு. ஆனால் இன்றோ, நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இந்தியப் பிரதமர் நியூசிலாந்து மண்ணில் கால் பதித்துள்ளார். இங்கு வந்திருப்பது எனக்குக் கிடைத்த பெருமையாகும். நியூசிலாந்தின் அனைத்து மக்களுக்கும், உங்களில் ஒவ்வொருவருக்கும் 140 கோடி இந்தியர்களின் நல்வாழ்த்துகளைக் கொண்டு வந்துள்ளேன்.
நண்பர்களே,
பிரதமராக நியூசிலாந்துக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாக இருக்கலாம். ஆனால், 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு, நான் எந்த அரசாங்கத்திலும் இல்லாதபோதும், பொது வாழ்வில் அறியப்படாதபோதும், நியூசிலாந்துக்கு வரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பயணத்தின் போது, யாரோ எனக்கு மூன்று பரிசுகளை வழங்கினார்கள். மப்ளர், ஒரு தொப்பி மற்றும் ஒரு ஜோடி கையுறைகள் தான் அவைகள். அவற்றை நான் இந்தியாவுக்கு எடுத்துச் சென்றேன்: ஏனெனில் அப்போது குளிர்காலம்.
அந்தப் பரிசுகளில் ஒன்று இன்று வரை என்னிடம் உள்ளது. நீங்கள் இங்கு காணும் இந்த மப்ளரை, 25 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்தில் உள்ள ஒரு நண்பர் எனக்குப் பரிசளித்தார். கடந்த ஆண்டுகளில் பலமுறை அதைப் பயன்படுத்தியுள்ளேன், மேலும் உங்கள் மீது நான் வைத்துள்ள அன்பைப் போலவே, அதையும் இன்று வரை மிகுவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறேன்.
இந்த நியூசிலாந்து பயணம் உறுதியானதும், வானிலை மிகவும் குளிராக இருக்கும் என்று என்னிடம் கூறப்பட்டதால் நான் அதைக் கண்டிப்பாக என்னுடன் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்தேன்.
நண்பர்களே,
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான உறவு என்பது பகிரப்பட்ட நினைவுகள், நட்பு, மதிப்புகள் மற்றும் கூட்டு அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த உறவின் சாராம்சத்தைப் படம்பிடித்துக் காட்டும் ஒரு அழகான நியூசிலாந்து பாரம்பரியம் உள்ளது. நூற்றாண்டுகளாக, ஒரு சொல் இங்கு மக்களை ஒன்றாக இணைத்து வருகிறது - அது வாகா. ஒரு 'வாகா' என்பது வெறும் படகு மட்டும் அல்ல; அது நமது கூட்டுப் பயணத்தின் சின்னம். இன்று, இந்தியா - நியூசிலாந்து உறவுகள் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கத் தயாராக உள்ளது.
நம் கண்முன்னே வாய்ப்புகள் நிறைந்த ஒரு திறந்த பெருங்கடல் பரந்து கிடக்கிறது. காற்று நம்முடன் இருக்கிறது. கடலின் பரந்த அலைகள் நம்முடன் இருக்கின்றன. நமது கூட்டு உறுதியின் நீல வானம் நம்முடன் இருக்கிறது. சாதிப்பதற்கு இன்னும் நிறைய உள்ளன, நாம் நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்பதை நான் அறிவேன்.
நண்பர்களே,
இந்தப் பயணம் ஒரு பெரிய வெற்றியாக அமையும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு. அது ஏன் தெரியுமா? மோடியால் அல்ல, மாறாக உங்கள் அனைவரும் தான் அதன் உண்மையான மாலுமிகள் என்பதால். ஆக்லாந்து முதல் வெலிங்டன் வரை, கிரைஸ்ட்சர்ச் முதல் குவீன்ஸ்டவுன் வரை, நியூசிலாந்தின் ஒவ்வொரு மூலையிலும் பரந்து விரிந்துள்ள இந்தியச் சமூகமே இந்தப் பயணத்தின் மாலுமியாகத் திகழ்கிறது.
நண்பர்களே,
நான் தொடர்ந்து பேசுவதற்கு முன்பு, எனது நண்பரும் நியூசிலாந்து பிரதமருமான கிறிஸ்டோபர் லக்சன், நியூசிலாந்து அரசாங்கத்தைச் சேர்ந்த பிரமுகர்கள் எனது சகாக்கள் மற்றும் இங்கு குழுமியிருக்கும் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அவர்களின் வருகை, இந்தியா - நியூசிலாந்து உறவுகள் பெற்றுள்ள வலுவான இரு கட்சிகளின் ஆதரவைப் பிரதிபலிக்கிறது. மேலும், கீவி இந்தியச் சமூகம் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க சாதனைகளையும், அவர்கள் ஆற்றியுள்ள மாபெரும் பங்களிப்புகளையும் இது எடுத்துரைக்கிறது. கீவி இந்தியச் சமூகத்தின் இந்தக் கொண்டாட்டத்தில் உங்கள் இருப்பு இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்துள்ளது.
எங்களுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, நீங்கள் காட்டிய அன்பு மற்றும் உற்சாகத்திற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
மதிப்பிற்குரிய பிரதமரே, நீங்களும் கீவி இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பெரும் செல்வாக்கு பெற்றவராக இருக்கிறீர்கள். இந்தியாவின் சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது நீங்களும் கிறிஸ் ஹிப்கின்ஸும் இணைந்து 'தமா தம் மஸ்த் கலந்தர்' பாடலுக்கு ஆடிய நடனம் இணையத்தில் வைரலானது. அந்த நடன அசைவுகள் கீவி இந்தியர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளன.
நியூசிலாந்து உண்மையிலேயே அமைதி, வளம், இயற்கை மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஒரு பூமியாகும். ஆனால், இதன் மிகப்பெரிய பலம் அதன் மக்கள்தான். ஒரு தேசம் ஆர்வம் மற்றும் ஒரு நோக்கத்தோடு முன்னோக்கிச் செல்லும்போது, அது உலகை உத்வேகப்படுத்துகிறது என்பதை நியூசிலாந்து மக்கள் நிரூபித்துக் காட்டியுள்ளனர்.
இங்குள்ள கீவி இந்தியச் சமூகமும் நியூசிலாந்து மக்களால் மிகுந்த அரவணைப்போடும் அன்போடும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் நியூசிலாந்து மக்கள் உங்களை அரவணைத்து, தங்களில் ஒருவராகவே உங்களை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அவர்கள் உங்களது திறமை மீதும் பார்வை மீதும் நம்பிக்கை வைத்துள்ளனர். இன்று, நியூசிலாந்தின் பொருளாதாரம் அல்லது அதன் சமூகம் எதுவாக இருந்தாலும், கீவி இந்தியர்கள் ஒவ்வொரு துறையிலும் புதிய வண்ணங்களைச் சேர்த்து வருகின்றனர்.
நியூசிலாந்து என்பது நிகில் ரவிசங்கர் ஏர் நியூசிலாந்து நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியாக வரக்கூடிய இடமாகும், ஆனந்த் சத்யானந்த் கவர்னர் ஜெனரலாகப் பணியாற்றக்கூடிய இடமாகும். மேலும் ரச்சின் ரவீந்திரா, இஷ் சோதி மற்றும் அஜாஸ் படேல் போன்ற திறமையாளர்கள் தேசிய கிரிக்கெட் அணியில் வாய்ப்புகளைப் பெறக்கூடிய இடமாகும்.
நியூசிலாந்தில் உள்ள சில சாலைகளுக்கு இந்தியாவின் பெயர்கள் (கந்தல்லா, பாம்பே ஹில்ஸ், கோரமண்டல் போன்றவை) சூட்டப்பட்டுள்ளன. இதன் மூலம் அந்த நாடு இந்தியாவுக்கு ஒருவிதப் பெருமையையும் மரியாதையையும் அளிக்கிறது"
கல்கத்தா வீதி, தில்லி கிரசண்ட் மற்றும் அமிர்தசரஸ் வீதி உள்ளிட்ட பல வீதிகள் பெயரிடப்பட்டுள்ளன. இங்கு வாழ்வதன் மூலம், நீங்கள் உண்மையிலேயே கீவி மக்களாகவே மாறிவிட்டீர்கள். உண்மையில், எந்தத் தலைப்பில் உரையாடல் தொடங்கினாலும், சிறிது நேரத்தில் அது தவிர்க்க முடியாமல் வானிலை பற்றிய விவாதமாக மாறிவிடுகிறது என்று என்னிடம் கூறினார்கள்!
நண்பர்களே,
நான் நியூசிலாந்தின் தலைவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்கள் உங்கள் அனைவரையும் மிகவும் உயர்வாகப் பேசியிருக்கிறார்கள். அந்தப் பாராட்டு உங்களுக்கானது, ஆனால் அது எனக்குப் பெருமையளிக்கிறது.
நண்பர்களே,
நீங்கள் அனைவரும் அறிந்தபடி, இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான நாகரிகத்தைக் கொண்ட நாடாகும். இன்று அது தனது பண்டைய பாரம்பரியத்தைப் பாதுகாத்துக்கொண்டே நவீனத்துவத்தைத் தழுவி வருகிறது. தனது வரலாற்றின் ஒவ்வொரு சகாப்தத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் இந்தியா தன்னைத் தானே மாற்றிக்கொண்டுள்ளது. அதற்குக் காரணம் கற்றுக்கொள்வதற்கான நமது ஆர்வமே ஆகும்.
இந்தியா அனைவரிடமிருந்தும் கற்றுக் கொள்கிறது. எங்களைப் பொறுத்தவரை, மற்றொரு நாட்டின் மக்கள் தொகையின் அளவல்ல முக்கியம், பொதுநலனுக்கான அதன் அர்ப்பணிப்பே முக்கியமாகும். அதனால்தான் நியூசிலாந்திடமிருந்து நாங்கள் பலவற்றைக் கற்றுள்ளோம், இப்போதும் தொடர்ந்து கற்று வருகிறோம்.
பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய உலகின் முதல் நாடு நியூசிலாந்து ஆகும். இன்று, நியூசிலாந்து சமூகம் முழுவதிலும் பெண்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்குவதை நாம் காண்கிறோம். இந்தியாவும் கூட, பெண்கள் தலைமையிலான வளர்ச்சியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் பெண்களுக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
நண்பர்களே,
வலுவான கிராமப்புற பொருளாதாரம் எவ்வாறு ஒரு நாட்டின் விதியை மாற்றியமைக்க முடியும் என்பதை நியூசிலாந்து நிரூபித்துக் காட்டியுள்ளது. விவசாயத்தைச் சுற்றி அது கட்டமைத்துள்ள திறமையான சுற்றுச்சூழல் அமைப்பே நியூசிலாந்தின் மிகப்பெரிய வலிமைகளில் ஒன்றாகும். அது உணவுப் பொருள்களின் மூலத்தைக் கண்டறியும் முறை, உணவுப் பாதுகாப்பு அல்லது விதிமுறைக் கடைப்பிடிப்பு அமைப்புகள் எதுவாக இருந்தாலும், இவை மதிப்புமிக்க உத்வேகத்தை அளிக்கின்றன. லட்சக்கணக்கான சிறு விவசாயிகளைக் கொண்ட இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய விவசாய நாட்டுக்கு இவை முக்கியமான பாடங்களைக் கொண்டுள்ளன.
ஜெஸ்பிரி மாதிரி மூலம், சிறு விவசாயிகள்கூட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டுகளை உருவாக்க முடியும் என்பதை நியூசிலாந்து நிரூபித்துக் காட்டியுள்ளது. நியூசிலாந்தின் பருவநிலைக்கேற்ற துல்லியமான விவசாய தொழில்நுட்பங்களிடமிருந்தும் நாம் கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளமாக உள்ளன.
நண்பர்களே,
இங்கு மனுகா தேன் பெரும்பாலும் "திரவ தங்கம்" என்று அழைக்கப்படுகிறது. நியூசிலாந்தில் தேன் என்பது பாரம்பரியம் மற்றும் சுவையுடன் மட்டுமல்லாமல், உடல்நலம் மற்றும் நல்வாழ்வுடனும் இணைக்கப்பட்டுள்ளதைப் போல, இந்தியாவின் ஆயுர்வேத பாரம்பரியத்திலும் தேன் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க இந்தியாவும் ஒரு தேசியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது என்பதை நீங்கள் அறிந்தால் மகிழ்ச்சியடைவீர்கள். இதன் விளைவாக, நாட்டில் தேன் உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.
இன்றைய நாட்களில், இமயமலையின் உச்சியிலிருந்து கிடைக்கும் தேன் தங்கமாக மாறுவது மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட வைரம் போன்ற மதிப்புமிக்கதாக மாறி வருகிறது. தேன் உற்பத்தியை மேலும் மேம்படுத்துவது குறித்து நியூசிலாந்திடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே,
இந்த ஆண்டு இந்தியா - நியூசிலாந்து விளையாட்டு உறவுகளின் நூற்றாண்டு விழாவைக் குறிக்கிறது. நூறு ஆண்டுகளுக்கு முன்பு, நமது ஹாக்கி அணி விளையாடுவதற்காக நியூசிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டது. அந்தச் சுற்றுப்பயணத்தின் போது, மேஜர் தயான் சந்த்தின் சிறப்பான செயல்பாடு பரவலாகப் பாராட்டப்பட்டது. அவரது ஹாக்கித் திறமையும் நியூசிலாந்து மக்களின் இதயங்களை வென்றது.
நண்பர்களே,
உள்ளடக்கங்கள் உருவாக்குபவர்களின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், இது கூட்டு உறவுகளின் சகாப்தம் என்று நான் கூறுவேன். நியூசிலந்தும் இந்தியாவும் விளையாட்டுகளிலும் குறிப்பிடத்தக்க கூட்டுறவுகளை உருவாக்க முடியும். ரக்பி அதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
சிறிது நேரத்திற்கு முன்பு நடைபெற்ற ஒரு ரக்பி போட்டியில் 'ஆல் பிளாக்ஸ்' அணி குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளதாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. ரக்பி விளையாட்டில் நியூசிலாந்திடமிருந்து கற்றுக் கொள்ள இந்தியா விரும்புகிறது. இந்தியாவில் ரக்பி விளையாட்டு முன்னேற, நமக்குப் பயிற்சியாளர்களும் நிபுணர்களும் தேவை, இந்தப் பகுதியில் நியூசிலாந்து மதிப்புமிக்க ஆதரவை வழங்க முடியும். புவனேசுவரத்தில் உள்ள நியூசிலாந்து ரக்பி மற்றும் இந்திய ரக்பி இடையே சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட பயிற்சித் திட்டம் இந்த திசையில் ஒரு நல்ல தொடக்கமாகும்.
நண்பர்களே,
இங்கு வருவதற்கு முன்பு, நான் நியூசிலாந்தில், விளையாட்டுத்துறையில் ஒரு புத்தொழில் நிறுவனத்தின் தொடக்க நிகழ்வைப் பார்வையிட்டேன். விளையாட்டுத் தொழில்நுட்பத்தில் உருவாகும் புதுமைகளும் புதிய யோசனைகளும் என்னை மிகவும் ஈர்த்தன. விளையாட்டுத் தொழில்நுட்பத் துறையில் நாம் இணைந்து பல சாதனைகளைப் படைக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இந்தியாவின் எதிர்காலமும் நியூசிலாந்தின் எதிர்காலமும் ஒன்றோடொன்று பிணைக்கப்பட்டுள்ளன. விண்வெளித் துறையில் நமது ஒத்துழைப்பு இதற்கு ஒரு எடுத்துக்காட்டாகும். இந்தியாவின் சந்திரயான் விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் தரையிறங்கியபோது, ஒட்டுமொத்த நியூசிலாந்தும் அந்தத் தருணத்தைக் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியது. அது நம் அனைவருக்கும் பெருமை சேர்த்த ஒரு தருணமாகும்.
இப்போது, பெருமைக்குரிய மற்றொரு விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த வெற்றியிலும் நியூசிலாந்தின் தொழில்நுட்பம் பங்களித்துள்ளதுடன், நீங்கள் பெருமிதம் கொள்ள மற்றொரு காரணத்தையும் அளித்துள்ளது. நியூசிலாந்தின் விண்வெளி நிறுவனங்கள் பல சந்தர்ப்பங்களில் எங்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளன. எதிர்காலத்தில் இந்த ஒத்துழைப்பை மேலும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
நண்பர்களே,
இந்தியாவின் பொருளாதாரமும் நியூசிலாந்தின் பொருளாதாரமும் ஒன்றுக்கொன்று எவ்வளவு பங்களிப்பை வழங்க முடியும் என்பதை நிரூபிக்க விண்வெளித்துறையே போதுமானதாக உள்ளது. இதுவே நமது வர்த்தக ஒப்பந்தத்தின் பின்னணியிலும் உள்ள உணர்வாகும். வர்த்தக ஒப்பந்தம் வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தும் மற்றும் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிலும் உள்ள வணிகங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
நண்பர்களே,
இந்தியாவும் நியூசிலாந்தும் மற்றொரு மிக முக்கியமான ஒற்றுமையைப் பகிர்ந்து கொள்கின்றன. நமது பூர்வீக கலாச்சாரங்களைக் கொண்டாடுவதிலும் நமது பூர்வீக பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் இந்த ஒற்றுமை உள்ளது. இன்று, நான் குறிப்பாக மாசூரி சமூகத்திற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
'ஹாக்கா' நடனத்தை நான் வெறும் ஒரு நிகழ்ச்சியாகப் பார்க்கவில்லை. அந்த 'ஹாக்கா'வில் ஒரு சமூகத்தின் ஆன்மாவை நான் கண்டேன். அது தைரியம், சுயமரியாதை, முன்னோர்கள் மீதுள்ள பக்தி மற்றும் முழு சமூகத்தின் கூட்டு வலிமையைப் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
மௌரி கலாச்சாரத்தில் "மனாக்கிடங்கா" என்ற அழகான ஒரு வார்த்தை உள்ளது. இதன் பொருள் மரியாதை காட்டுவது, சொந்தம் என்ற உணர்வை வழங்குவது மற்றும் ஒருவரை முழு மனதுடன் கவனித்துக்கொள்வதாகும். இந்தியாவிலும் கூட, "அதிதி தேவோ பவ" அதாவது விருந்தினரே கடவுளுக்கு சமம் என்று கூறுகிறோம். வார்த்தைகள் வெவ்வேறானவை, சூழல்கள் வெவ்வேறானவை, உடைகள் வெவ்வேறானவை, மொழிகளும் வெவ்வேறானவை, ஆனால் உணர்வு முற்றிலும் ஒன்றே.
இதேபோல், மௌரி கலாச்சாரத்தில் குடும்பத்தைக் குறிக்க "வானாவ்" என்ற அழகான வார்த்தை உள்ளது, இதன் பொருள் குடும்பம் என்பதாகும். இது பல தலைமுறைகள், உறவுகள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் உள்ளடக்கியது. இந்தியாவிலும் கூட, குடும்பத்தை நாம் வெறும் சமூக கட்டமைப்பாக மட்டும் பார்ப்பது கிடையாது; எங்களைப் பொறுத்தவரை குடும்பம் என்பது ஒரு புனித நிறுவனமாகும்.
நண்பர்களே,
மௌரி பாரம்பரியத்தில் மற்றொரு அழகான கருத்தாக்கம் உள்ளது - "கய்டியாகிடங்கா" நாம் இயற்கையின் உரிமையாளர்கள் அல்ல, மாறாகவும் அதன் பாதுகாவலர்கள் என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது. இந்தியாவும் நீண்ட காலமாக அதே தத்துவத்தைத்தான் பின்பற்றி வருகிறது: "பூமி நமது தாய், நான் அவளுடைய மகன்." இந்த உணர்வால் ஈர்க்கப்பட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடுதல் மற்றும் இயற்கை விவசாய இயக்கம் உள்ளிட்ட அன்னை பூமியைக் காப்பதற்காக இந்தியா பல முன்னெடுப்புகளைத் தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
நீங்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் வசித்தாலும், உங்கள் இதயத்தில் இந்தியா தொடர்ந்து ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது என்பதை நான் அறிவேன். உங்கள் அன்றாட வாழ்க்கையில், ஏதோ ஒரு வகையில், இந்தியா எப்போதும் இடம்பெற்றிருக்கிறது. அது உண்மைதானே? உங்கள் உடல் இங்கு இருக்கலாம், ஆனால் உங்கள் இதயம் எங்குள்ளது? அதனால்தான் இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியையும் நீங்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகிறீர்கள்.
நீங்கள் ஸ்டேடியத்திலிருந்து நேரில் கிரிக்கெட் போட்டி பார்க்கும்போது பல விவரங்கள் கவனிக்கப்படாமல் போகலாம். ஆனால், வீட்டிலிருந்து தொலைக்காட்சியில் பார்க்கும்போது ஒவ்வொரு சிறு நுணுக்கத்தையும் உங்களால் காண முடியும். அதேபோல், இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு வளர்ச்சியையும் நீங்கள் தொடர்ந்து அறிந்து வருகிறீர்கள். அதுதான் உங்களை மிகவும் சிறப்பானதாக்குகிறது.
வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளின் வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு, அதே நேரத்தில் தங்கள் சொந்த நாட்டின் வளர்ச்சியுடனும் ஆழமாக இணைந்திருக்கிறார்கள்.
நண்பர்களே,
நாம் நமது ஜென்மபூமியை, அதாவது நமது தாய்நாட்டை நம் முழு இதயத்துடன் போற்றுகிறோம், அதேபோல் நாம் பணிபுரியும் மற்றும் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் பூமியான நமது கர்மபூமிக்கும் நாம் சமமான பற்றுடன் இருக்கிறோம்.
நண்பர்களே,
உலகளாவிய சவால்களுக்கு மத்தியில், இந்தியா இன்று முன்னேறி வரும் வேகம் உண்மையில் முன்னெப்பொழுதும் இல்லாதது ஆகும். நாட்டின் திறமைகளைப் பிரதிபலிக்கும் இந்தியாவின் சாதனைகளின் ஒரு பூங்கொத்தை உங்கள் முன் சமர்ப்பிக்க அனுமதிக்கவும். இந்த பூங்கொத்தை நான் உங்களுக்காகவே பிரத்யேகமாகக் கொண்டு வந்துள்ளேன். மேலும், நீங்கள் ரசிக்கக்கூடிய, உங்களுக்குப் பெருமிதம் ஊட்டும் குறைந்தபட்சம் ஒரு மலராவது அதில் இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
எனவே, நீங்கள் தயாரா? நான் அந்தப் பூங்கொத்தை உங்களிடம் சமர்ப்பிக்கட்டுமா? நான் அதைக் காட்டும்போது, உங்களுக்கு மிகவும் பிடித்த மலரை நீங்கள் தேடிக் கொள்ளலாம். அல்லது ஒருவேளை, இந்தப் பூங்கொத்தில் உள்ள ஒவ்வொரு மலரும் உங்களுக்குச் சொந்தமானதாக இருக்கலாம்.
நண்பர்களே,
இன்று இந்தியா உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாகும். இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளராக உள்ளது. மொபைல் தரவு பயன்பாட்டில் உலக அளவில் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இன்று, இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக உள்ளது. இது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு சந்தையுமாகும். இந்தியா கோதுமை உற்பத்தியில் உலகின் இரண்டாவது இடத்திலும், பால் உற்பத்தியில் உலகின் முதலிடத்திலும் உள்ளது. மேலும் இந்தியா மீன் உற்பத்தியில் உலகின் இரண்டாவது மிகப்பெரிய உற்பத்தியாளராகவும் திகழ்கிறது.
நண்பர்களே,
அதுமட்டுமின்றி, இன்று இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையாக உள்ளது. உலகளவில் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில நிறுவனச் சூழல் அமைப்பாகவும் இந்தியா உருவெடுத்துள்ளது. மிக விரைவில் உலகளவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகம் உற்பத்தி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா மாறவுள்ளது. மேலும், சூரிய சக்தி திறனில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் இது மாறியுள்ளது.
நண்பர்களே,
இன்று இந்தியா உலகிற்கான புதிய வளர்ச்சி மாதிரிகளையும் வழங்கி வருகிறது. உலகின் மிகப்பெரிய டிஜிட்டல் அடையாளத் தளத்தை இந்தியா வெற்றிகரமாக இயக்கி வருகிறது. இன்று இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் யூபிஐ மூலம் கோடிக்கணக்கான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடைபெறுகின்றன. உலகின் பல நாடுகள் இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பில் ஆர்வம் காட்டி வருகின்றன. ட்ரோன் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிப் பொருளாதாரத்திலும் இந்தியா புதிய உச்சங்களைத் தொட்டு வருகிறது.
நண்பர்களே,
இது ஒரு புதிய இந்தியாவின் சித்திரமாகும்; நியூசிலாந்தைப் போலவே இந்தியாவும் சூழலியலுக்கும் பொருளாதாரத்திற்கும் இடையே எவ்வாறு சமநிலையைப் பேணி வருகிறது என்பதை இது காட்டுகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் வளர்ச்சியில் மற்றொரு முக்கியமான பரிமாணமும் உள்ளது. அது நமது பாரம்பரியம் ஆகும். இந்தியா தனது பொருளாதாரத்திற்கும் சூழலியலுக்கும் எத்தகைய முக்கியத்துவம் கொடுக்கிறதோ, அதே அளவுக்கு தனது பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் தீவிர கவனம் செலுத்துகிறது.
நண்பர்களே,
தேவைப்படும் நேரங்களில் இந்தியா எவ்வாறு பொறுப்புடன் நடந்துகொள்ளும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு, ஸ்ரீ குரு கிரந்த் சாகிப் அவர்களின் புனித வடிவங்களை நாம் கையாண்ட விதமாகும். ஆப்கானிஸ்தானில் நெருக்கடி நிலை உருவானபோது, குரு கிரந்த் சாகிப் அவர்களின் புனித ஸ்வரூபங்களை மிகுந்த பக்தி மற்றும் மரியாதையுடன் இந்தியாவுக்குக் கொண்டு வந்தோம்.
நண்பர்களே,
நமது மகா சீக்கிய குருமார்கள் மனித குலம் அனைத்திற்கும் சேவை, தைரியம், சமத்துவம் மற்றும் கருணை ஆகிய செய்திகளை வழங்கினர். உலகின் எந்தப் பகுதியிலும் குருத்துவாராக்கள் தன்னலமற்ற சேவையின் மையங்களாகச் செயல்படுகின்றன. பசியுடன் வருபவருக்கு உணவு வழங்கப்படுகிறது. துன்பத்தில் இருப்பவர் எவரும் ஆதரவைப் பெறுகின்றனர்.
இந்த உணர்வின் அடிப்படையில், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஸ்ரீ ஹர்மந்திர் சாகிப்பில் நடைபெறும் சேவையைப் பாதிக்கும் எஃப்சிஆர்ஏ விதிகள் தொடர்பான சில வேதாந்தப் பொருள் குறித்து எங்களது கவனத்திற்குக் கொண்டுவந்தனர். அந்தப் பிரச்சினையைத் தீர்க்க நாங்கள் உடனடி நடவடிக்கைகளை எடுத்தோம்.
நண்பர்களே,
உங்கள் அனைவருக்கும் ஹேம்குந்த் சாகிப்ஜி பற்றித் தெரியும். இமயமலையின் உச்சியில் அமைந்துள்ள இது ஆண்டின் பெரும்பகுதி பனி மூடிய சிகரங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தப் புனிதப் பயணப் பாதை மிகவும் சவாலானது, மேலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டுமே, குறிப்பாக நமது சீக்கிய சகோதர சகோதரிகள் மட்டுமே இந்தத் தலத்திற்குச் செல்ல முடிகிறது.
ஹேம்குந்த் சாகிப்புக்கான புனிதப் பயணத்தை, குறிப்பாக நமது முதிய பக்தர்களுக்கும் நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் எளிதாக்கும் வகையில், அரசாங்கம் அந்தத் தலத்திற்கு ரோப்வே வசதியை ஏற்படுத்தி வருகிறது.
நண்பர்களே,
சாஹிப்சாதாக்களின் தைரியத்தையும் தியாகத்தையும் என்றென்றும் நினைவுகூரும் வகையில், நமது அரசாங்கம் டிசம்பர் 26-ம் தேதியை ஆண்டுதோறும் வீர சிறுவர் தினமாக கடைப்பிடிப்பதையும் நடைமுறைப் படுத்தியுள்ளது. இன்று, இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது. கேரளம் முதல் அசாம் வரை, இந்தியா முழுவதும் உள்ள குழந்தைகள் இப்போது நான்கு சாஹிப்சாதாக்கள் மற்றும் மாதா குஜ்ரியின் தியாகத்தை கற்றுக் கொள்கிறார்கள்.
வீர சிறுவர் தினம் இந்தியா முழுவதும் உள்ள எண்ணற்ற குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் இதயங்களில் அசைக்க முடியாத தைரிய உணர்வை ஊட்டியுள்ளது.
நண்பர்களே,
நான் புனித ஜோரே சாஹிப் குறித்தும் உங்களிடம் பேச விரும்புகிறேன். அரசாங்கத்தில் எனது சக ஊழியர்களில் ஒருவர் திரு ஹர்தீப் பூரி ஆவார். பூரி குடும்பத்தின் முன்னோர்கள் குரு கோபிந்த் சிங்கிற்கு சேவை செய்தவர்கள். குரு கோபிந்த் சிங் மற்றும் மாதா சாஹிப் கௌர் ஆகியோரின் புனித ஜோரே சாஹிப்பை தனது குடும்பம் 300 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதுகாத்து வருவதாக ஸ்ரீ ஹர்தீப் பூரி என்னிடம் கூறினார்.
நாட்டின் பிரிவினையின் போது, பூரியின் முன்னோர்கள் இந்தப் புனிதச் சின்னங்களை தில்லிக்குப் பாதுகாப்பாகக் கொண்டு வந்தனர். அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் மரியாதை செலுத்த வாய்ப்பளிக்கும் வகையில், புனித ஜோரே சாஹிப்பை சீக்கிய சங்கத்திடம் ஒப்படைக்கக் குடும்பத்தினர் விரும்பினர்.
பின்னர் நாங்கள் ஒரு குழுவை அமைத்து, சீக்கிய பாரம்பரியங்களில் நன்கு தேர்ச்சி பெற்ற நிபுணர்களின் ஆலோசனையைக் கோரினோம். அவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், குரு கோபிந்த் சிங் இந்தப் புனித நிலத்தில் முதன்முதலில் கால் பதித்த இடமான, அவரது பிறந்த இடமான நமது போற்றத்தக்க பாட்னா சாஹிப்புக்கு புனித ஜோரே சாஹிப் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
புனித ஜோரே சாஹிப் இப்போது பாட்னா சாஹிப்பின் புனிதத் திருத்தலத்தில் உள்ளது என்பதை அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் எப்போதெல்லாம் இந்தியாவுக்குச் செல்கிறீர்களோ, அப்போதெல்லாம் பாட்னா சாஹிப்புக்குச் சென்று உங்கள் மரியாதையைச் செலுத்தத் தவறாதீர்கள் என்றும் நான் உங்களை வலியுறுத்துகிறேன்.
நண்பர்களே,
இன்று, நான் அளப்பரிய நம்பிக்கையுடனும், எல்லையற்ற அன்போடும், எண்ணற்ற பொன்னான நினைவுகளுடனும் விடைபெறுகிறேன். இந்த முறை நியூசிலாந்துக்கு ஒரு இந்தியப் பிரதமர் வருகை தர 40 ஆண்டுகள் ஆகியுள்ளன. ஆனால், நீங்கள் இனி இவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதில்லை. மற்றொரு 40 ஆண்டுகள் ஆகாது. இது மோடியின் உத்திரவாதமாகும். மோடியின் உத்திரவாதம் என்றால், அது நிறைவேற்றப்படும் என்பதற்கான உத்திரவாதமாகும்.
நண்பர்களே,
நான் உங்களிடம் ஒரு கோரிக்கையையும் வைக்க விரும்புகிறேன். சில காலத்திற்கு முன்பு, நமது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குழந்தைகளுக்காக ஒரு புதிய முயற்சியைத் தொடங்கினோம். நமது குழந்தைகள் இந்தியாவைப் புரிந்துகொள்ளவும், இந்தியாவின் பன்முகத்தன்மையை உலகுக்குக் காட்டவும் உதவ, இந்தியாவை அறிந்து கொள்வோம் வினாடி வினா போட்டியைத் தொடங்கினோம். இதுவரை அதன் தொடக்க நிகழ்வு மட்டுமே நடைபெற்றுள்ளது, மேலும் நமது இளம் பங்கேற்பாளர்கள் அதில் காட்டிய ஆர்வம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது.
இப்போது, இந்தப் போட்டியை இன்னும் மேம்பட்ட தொழில்நுட்ப அடிப்படையிலானதாக நாங்கள் மாற்றி வருகிறோம். இந்த முறை பல நிகழ்வுகள் ஒரு செயலி மூலமாக நடத்தப்படும். இங்குள்ள அனைத்து இளைஞர்களும் இந்தப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். இந்தியாவை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள், நியூசிலாந்து மக்களை இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்துடன் இணைக்க உதவுங்கள்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையும், நியூசிலாந்தின் வளமையும் பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதை நான் காண்கிறேன். இந்த நம்பிக்கையுடன், உங்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரதமர் லக்சன் அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நியூசிலாந்து மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மீண்டும் ஒருமுறை, என்னுடன் சேர்ந்து கூறுங்கள்,
பாரத மாதாவுக்கு ஜே!
வந்தே மாதரம்!
நன்றி!
கீ ஓரா!
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
(Release ID: 2283718)
***
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2290542)
வருகையாளர் எண்ணிக்கை : 23
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam