பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியச் சமூகத்தினர் மத்தியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 6:36PM by PIB Chennai

நாம் சந்திக்கும் இந்த மண்ணின் பாரம்பரிய உரிமையாளர்களை முதலில் நான் நன்றியோடு நினைவு கூர்கிறேன்; மேலும் அவர்களின் கடந்தகால, நிகழ்கால மற்றும் வளர்ந்து வரும் மூத்த தலைவர்களுக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன்.

வணக்கம் மெல்பர்ன்!

நமஸ்கார்  நண்பர்களே!

அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?

கேம் சோ?

இந்த நிகழ்வு அரங்கு நிறைந்த காட்சியாக, ஒரு மாபெரும் வெற்றிப் படமாக  அமைந்துள்ளது.

எனது உரையைத் தொடங்குவதற்கு முன்பாக, நீங்கள் அனைவரும் உங்கள் கைபேசி விளக்கை ஒளிரவிட்டு, விக்டோரியா மாகாணத்தின் முதலமைச்சருக்கும், எனது நண்பரான ஆஸ்திரேலியப் பிரதமருக்கும் என்னோடு சேர்ந்து மரியாதை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இதற்கு முன்பு நாம் சிட்னியில் இரண்டு முறை சந்தித்துள்ளோம். மெல்பர்ன் மக்களை நேரில் சந்திக்க வேண்டும் என்று நானும் ஆவலுடன் காத்திருந்தேன். அதனால் தான் இந்த முறை மெல்பர்ன் மக்களுடன் சேர்ந்து ஒரு கோப்பை காபி அருந்தலாம் என்று நினைத்து வந்தேன்.

நண்பர்களே,

நீங்களும் நமது ஆஸ்திரேலிய நண்பர்களும் இணைந்து எங்களை வரவேற்ற இந்த ஆற்றலும் உற்சாகமும் உண்மையிலேயே வியக்க வைக்கிறது. ஒருவகையில், மெல்பர்ன் மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து அசத்திவிட்டீர்கள்.

நண்பர்களே,

எனது நண்பரும், இந்தியாவின் நல்லாசிரியருமானப் பிரதமர் ஆண்டனி அல்பானீஸுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் சிட்னியிலும் எங்களோடு இருந்தீர்கள்; இன்று மீண்டும் இதோ மெல்பர்னில், இந்திய சமூக மக்களுக்கு இடையே எங்களுடன் இணைந்திருக்கிறீர்கள். ஒருவகையில், நாம் தொடங்கிய வட்டத்தை முழுமையாக நிறைவு செய்தது போல் உணர்கிறோம்.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்ட அகமதாபாத்தும், வரலாற்று சிறப்புமிக்க மைதானத்தைக் கொண்ட மெல்பர்னும் பல வழிகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்துள்ளன. நண்பர்களே, பிரதமர் அல்பானீஸ் பேசும்போதெல்லாம், அவர் இந்தியர்களின் இதயங்களையும் மனங்களையும் வெல்கிறார் என்பதை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். சிட்னியில் நீங்கள் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றீர்கள்; இப்போது மெல்பர்னிலும் அதை மீண்டும் செய்து காட்டியிருக்கிறீர்கள்.

விக்டோரியா மாகாண முதலமைச்சரின் சுறுசுறுப்பான உரைக்கும், இந்தியா மீது அவர் காட்டிய பேரன்பிற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நான் 2014-ல் ஆஸ்திரேலியாவிற்கு வருகை தந்தபோது, 28 ஆண்டுகளுக்குப் பிறகே ஓர் இந்தியப் பிரதமர் இங்கு வந்திருந்தார். அப்போது நான் கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம்—இனிமேல் இதுபோன்றதொரு சந்திப்பிற்கு நீங்கள் 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை வராது என்று கூறியிருந்தேன்.

கடந்த 12 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவிற்கு இது என்னுடைய மூன்றாவது வருகையாகும். அதாவது, இந்த முறை நான் ஒரு 'ஹாட்ரிக்' சாதனை படைத்திருக்கிறேன்! இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான உறவு எந்தளவுக்கு உன்னத நிலையை எட்டியுள்ளது என்பதற்கு இதுவே ஒரு சான்று. இதற்கு மிக முக்கியக் காரணம் யார் தெரியுமா? மோடி இல்லை! இந்த முழுப் பெருமையும் என் நண்பர்களாகிய உங்களுக்கும், இங்கு வாழும் இந்திய வம்சாவளி மக்களையேச் சேரும்.

நண்பர்களே,

மெல்பர்ன் நகரில் ஒரே நாளில் நான்கு பருவநிலைகளையும் அனுபவிக்க முடியும் என்று கூறுவார்கள். ஆனால், இங்குள்ள இந்தியச் சமூகம் தன்னுடைய செழுமையான பண்பாட்டு வண்ணங்களால் இந்நகரை இன்னும் வண்ணமயமாகவும் உயிரோட்டமாகவும் மாற்றியுள்ளது.

இங்கே மெல்பர்னிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்திய உணர்வுகளால் நிறைந்த பல இடங்களும் சந்தைகளும் உள்ளன. சிலர் அவற்றை 'லிட்டில் இந்தியா' என்கிறார்கள், வேறு சிலர் 'மினி இந்தியா' என்கிறார்கள். பெயர் எதுவாக இருந்தாலும், அவை அனைத்துமே இந்தியப் பண்பாட்டின் வண்ணங்களால் நிரம்பி வழிகின்றன.

சமீபத்தில் ஒருவர் எனக்கு அத்தகைய சந்தை ஒன்றின் வீடியோவைக் காட்டினார். அந்த வீடியோவில், எப்போதும் அங்குச் சிறப்பான தள்ளுபடி விற்பனைகள் நடைபெறுவதாகவும், மக்கள் ஷாப்பிங் மோகத்தில் மூழ்கியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. வாங்கும் எண்ணமே இல்லாமல் செல்பவர்கள் கூட, எப்படியோ ஏதேனும் ஒன்றை வாங்கிவிட்டுத்தான் திரும்புகிறார்களாம். நான் சொல்வது சரிதானே?

நண்பர்களே,

உங்களில் பலர் ஆஸ்திரேலியாவிற்கு முதன்முறையாக வந்திருப்பீர்கள்; வேறு பலரோ இங்கேயே பிறந்திருப்பீர்கள். தலைமுறைகள் மாறியிருக்கலாம், ஆனால் உங்களுக்குள் இருக்கும் 'இந்தியத்தன்மை' என்ற உணர்வு எப்போதும் உயிர்ப்போடு இருக்கிறது. உங்களில் பலரது வீடுகளில் குறைந்தபட்சம் இரண்டு கடிகார நேரங்கள் ஒரே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இங்கே குழந்தைகள் ஆஸ்திரேலிய நேரப்படிப் பள்ளியிலிருந்து வீடு திரும்புவார்கள்; அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள தாத்தாவும் பாட்டியும் அவர்களோடு வீடியோ காலில் பேசுவதற்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். இங்கே வார இறுதி நாட்களாக இருக்கும்போது, இந்தியாவில் நடக்கும் குடும்பத் திருமணங்களை லைவ் ஸ்ட்ரீமிங் வழியாகப் பார்த்துக்கொண்டிருப்பீர்கள். தூரம் பல ஆயிரம் கிலோமீட்டர்களாக இருக்கலாம், ஆனால் உங்கள் அன்றாட வாழ்க்கை முறை இன்னமும் இந்தியாவுடன் ஆழமாக இணைக்கப்பட்டே இருக்கிறது. அந்த பிணைப்பைத் தக்கவைத்துக்கொண்டே, ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் நீங்கள் அனைவரும் முழு மனதுடன் பங்காற்றி வருகிறீர்கள். உங்கள் ஒவ்வொருவரைக் குறித்தும் நான் பெருமைப்படுகிறேன்.

நண்பர்களே,

நாம் இந்தியர்கள் அப்படித்தான்! பாலில் சர்க்கரை கரைந்து அதை மேலும் இனிப்பாக்குவது போல, நாம் இந்தியர்கள் செல்லும் இடமெல்லாம் அன்பைப் பரப்புகிறோம்.

வீட்டில் இருக்கும் பால் ஆஸ்திரேலிய பாலாக இருக்கலாம், ஆனால் அதில் போடும் டீ இந்திய டீ! காய்கறிகளும் பருப்பு வகைகளும் ஆஸ்திரேலியாவிலிருந்து வரலாம், ஆனால் அவை சமைக்கப்படுவது இந்திய நறுமணப் பொருட்களால்  தான்!

நண்பர்களே,

இந்தியாவில் பஜன் கிளப்பிங்  என்ற புதிய கலாச்சாரம் நமது ஜென்-ஜி இளைஞர்களிடையே மிகவும் பிரபலமாகி வருவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அதேபோல இங்கே ஆஸ்திரேலியாவிலும், உங்கள் வார இறுதி நாட்கள் பக்தி உணர்வோடும் ஆன்மீகத்தோடும் நிறைந்திருப்பதாக நான் கேள்விப்பட்டேன்.

ஒருபுறம், ஒரு குடும்பம் 'சத்யநாராயண பூஜை' நடத்திக்கொண்டிருக்கும்; இன்னொருபுறம், குருத்வாராவில் பிரார்த்தனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்; வேறொரு இடத்தில், குழந்தைகள் பங்க்ரா அல்லது பரதநாட்டியம் ஆடிக்கொண்டிருப்பார்கள்; மற்றொரு இடத்தில், கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும்.

மேலும் இப்போது, 'இந்தியத் திரைப்பட விழா' மெல்பர்னின் பண்பாட்டு அட்டவணையில் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. இன்னும் சில நாட்களில், இந்தியத் திரைப்பட விழா இங்கு மெல்பர்னில் தொடங்கவுள்ளது. அது மிகப்பெரிய வெற்றியடைய எனது முன்கூட்டிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

உங்கள் கடின உழைப்பின் மூலம் ஆஸ்திரேலியாவின் வளர்ச்சிக்குப் பங்காற்றி வருகிறீர்கள். ஆனால், உங்கள் ஒரு கண் எப்போதும் இந்தியா மீதே இருக்கிறது என்பதை நான் அறிவேன். இந்தியாவில் என்ன நடக்கிறது—அதன் முன்னேற்றம், வேகம் மற்றும் சாதனைகளை நீங்கள் மிகவும் கூர்ந்து கவனித்து வருகிறீர்கள்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் இந்தியா, 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற ஒரு தெளிவான இலக்கோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தின் அழகு என்னவென்றால், ஒரு கனவு நனவாகும் அடுத்த கணமே, ஒரு புதிய கனவு பிறந்துவிடுகிறது!

"ஒரு அகல் விளக்கு மற்றொன்றை ஏற்றி, ஆயிரமாயிரமாய் ஒளியை பரப்பும்" என்று முன்பு நாம் கூறுவோம். இன்று நான் சொல்கிறேன்: "ஒரு கனவு மற்றொன்றிற்கு வழிவகுத்து, விரைவில் ஆயிரக்கணக்கான கனவுகள் மலர்கின்றன!" ஒவ்வொரு முறையும் நாம் ஒரு இலக்கை அடையும் போது, அதைவிடப் பெரிய இலக்கை நோக்கி எங்களது பார்வையைத் திருப்புகிறோம்.

அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!" என்று தீவிரமாக நம்புகின்ற இந்தியா இதுதான்.

நாம் 140 கோடி பேரின் கனவுகளையும் ஆசைகளையும் கொண்ட ஒரு தேசம். முன்னேறிச் செல்வதிலும், மேலும் பல சாதனைகளைச் செய்வதிலும் நாம் மிகவும் ஆர்வத்தோடும் துடிப்போடும் இருக்கிறோம். ஏற்கனவே உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக நாம் திகழ்கிறோம்; ஆனால், மிக விரைவிலேயே உலகின் முன்னணி 3  பொருளாதார நாடுகளின் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்பதே நமது விருப்பம். ஏனெனில் எங்களது தாரக மந்திரமே மிகவும் எளிமையானது: "அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!"

நண்பர்களே,

நீங்களே நேரில் பார்த்திருப்பீர்கள்—உலகில் வேறு எந்த ஒரு நாடும் சாதிக்காத வகையில், நிலவின் தென் துருவத்தில் 'சந்திரயான்' விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாகத் தரையிறக்கியது. ஆனால், இந்தியா அத்துடன் நின்றுவிடவில்லை; ஏனெனில் இந்தியா எப்போதும் நம்புவது ஒன்றைத்தான்: அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!

அதனால் தான் நண்பர்களே, இந்தியா இப்போது மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்குத் தயாராகி வருகிறது. மேலும், விண்வெளியில் நமக்கென்று சொந்தமாக 'விண்வெளி மையம்' அமைக்கும் இலக்கை நோக்கியும் நாம் வேகமாக முன்னேறி வருகிறோம்.

நண்பர்களே,

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பத்தைப் பற்றி ஏராளமான கேள்விகள் எழுந்தன. '5ஜி எப்போது தொடங்கப்படும்? எப்படி விரிவாக்கப்படும்? இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?' என்றெல்லாம் கேட்டார்கள். 2022-ம் ஆண்டின் இறுதியில் நாம் 5ஜி சேவையைத் தொடங்கினோம்; இன்றோ, இந்தியாவின் 99 சதவீத மாவட்டங்களுக்குச் சென்று சேருமாறு அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவேகமாக 5ஜி சேவையை விரிவுபடுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதை அறிந்து நீங்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சியடைவீர்கள் என்று நம்புகிறேன்.

இன்று, உலகின் இரண்டாவது மிகப்பெரிய 5ஜி சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது. அதுமட்டுமல்ல—இப்போது முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட '6ஜி' தொழில்நுட்பத்தை நோக்கியும் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. ஏனெனில், "அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!" என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

நண்பர்களே,

கடந்த 12 ஆண்டுகளில், மெட்ரோ ரயில் சேவை இந்தியாவின் இருபதுக்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவாக்கப்பட்டுள்ளது. இன்று தினமும் 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்கிறார்கள். உலகின் மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் நெட்வொர்க்கைக் கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது. ஆனாலும், இந்தியர்களாகிய நாம் இத்துடன் திருப்தியடையவில்லை! ஏனெனில் நமது கொள்கை: "அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!"

அதனால்தான், நாடு முழுவதும் 'நமோ பாரத் அதிவிரைவு ரயில் போன்ற அதிவேகப் போக்குவரத்து அமைப்புகளையும், 'வந்தே பாரத்' போன்ற அதிவேக ரயில்களையும் நாம் மிக வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறோம்.

மற்றொரு சிறந்த உதாரணம், இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கத்தின் வெற்றியாகும்! கடந்த 12 ஆண்டுகளில்  இந்தியாவுக்கான உற்பத்தி இயக்கம்  ஒரு உலகளாவிய பிராண்டாகவே உருவெடுத்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கைபேசிகளும் மின்னணுப் பொருட்களும் இன்று உலகெங்கிலும் உள்ள சந்தைகளைச் சென்றடைகின்றன. நமது வாகன தயாரிப்புகளும் மருந்துப் பொருட்களும் உலகளவில் தங்களின் தடத்தைப் பரப்பியுள்ளன. மேலும் இன்று, இந்தியாவின் பாதுகாப்புத் துறை உபகரணங்களின் திறனையும் நம்பகத்தன்மையையும் உலகம் நேரில் கண்டு வருகிறது.

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போதும் இதற்கான சான்றினை நீங்கள் கண்டீர்கள். குண்டுவெடிப்புகள் நடந்த இடம் பயங்கரவாதிகளின் முகாம்கள்தான், ஆனால் அதற்கான அதிர்வுகள் உலகெங்கும் எதிரொலித்தன! பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தப்பட்ட அந்தத் தீர்க்கமான தாக்குதல்கள் உங்கள் அனைவரையும் பெருமையடையச் செய்தன அல்லவா?

நண்பர்களே,

இந்தியா அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை; "அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!" என்றே இந்தியா முழங்குகிறது. எனவேதான், இன்று இந்தியாவில் 'சிப் முதல் கப்பல் வரை' தயாரிப்பதற்கான ஒரு புதிய உற்பத்திச் சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

இந்தியாவின் மாபெரும் கனவுகளுக்கும் துணிச்சலான ஆசைகளுக்கும் அடித்தளமாக விளங்குவது அதன் மக்களே ஆவர்! இந்தியக் குடிமக்களாகிய 'நாம்'தான் இந்த கனவுகளுக்குத் தேவையான பேராற்றலைத் தருகிறோம். "மக்களுக்கே முதலுரிமை" அல்லது குடிமக்களே முதன்மையானவர்கள் என்பதே இன்றைய இந்தியாவின் நிர்வாக வழிகாட்டும் கோட்பாடாக மாறியுள்ளது.

இதற்கு ஒரு சிறிய உதாரணம் கூறுகிறேன்: சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சான்றிதழ்களைச் சான்றொப்பம் செய்வது வழக்கமான ஒன்றாக இருந்தது. நீங்கள் எதற்காவது விண்ணப்பிக்க வேண்டும் என்றாலோ அல்லது ஏதேனும் அதிகாரப்பூர்வ ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றாலோ, முதலில் ஒரு அரசு அதிகாரியிடம் சென்று அதில் சான்றொப்பம் வாங்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

இந்தியா அத்துடன் நின்றுவிட விரும்பவில்லை; "அதிகமாக வளர்வோம்! அதிகமான சாதனைகளைப் படைப்போம்!" என்றே இந்தியா முழங்குகிறது. எனவேதான், இன்று இந்தியாவில் 'சிப் முதல் கப்பல் வரை' தயாரிப்பதற்கான ஒரு புதிய உற்பத்திச் சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

மக்கள் தங்களின் உண்மைத்தன்மையை நிரூபிப்பதற்காகவே அதிகாலையிலேயே நீண்ட வரிசைகளில் சென்று நிற்பார்கள். ஆனால் எங்களைப் பொறுத்தவரை, "குடிமக்களே முதன்மையானவர்கள்". இப்போது நிலைமை அதுவல்ல; பெரும்பாலான தேவைகளுக்குப் பொதுமக்கள் தங்களது சொந்தச் சான்றொப்பமே போதுமானது என மாற்றப்பட்டுவிட்டது.

நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட அந்தப் பயணம், இன்று 'டிஜிலாக்கர்' எனும் மின்னணுத் தளமாக வளர்ந்துள்ளது. இந்தியர்கள் தங்களது ஆவணங்களைப் பாதுகாப்பாக டிஜிட்டல் முறையில் இதில் சேமித்து வைக்க முடியும். ஒரே ஒரு கிளிக் மூலம் சான்றிதழ்களைப் பகிரவும், சரிபார்க்கவும், ஏற்றுக்கொள்ளவும் இயலும்.

நண்பர்களே,

ஒரு புதிய முறையை உருவாக்குவது ஒருபுறம் என்றால், அதை மிகப்பெரிய அளவில் பாதுகாப்போடும் நம்பகத்தன்மையோடும் செயல்படுத்துவது மிகப்பெரிய சாதனையாகும். இன்று இந்தியாவில் எத்தனை பேர் 'டிஜிலாக்கர்' பயன்படுத்துகிறார்கள் தெரியுமா? அந்த எண்ணிக்கையை நினைவில் வைத்திருப்பது அவ்வளவு எளிதல்ல என்பது எனக்குத் தெரியும்.

இன்றைய நிலவரப்படி, 'டிஜிலாக்கர்' தளத்தை 70 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகிறார்கள்! அவர்கள் அனைவரும் இணைந்து இதுவரை 850 கோடிக்கும் அதிகமான ஆவணங்களை இதில் பாதுகாப்பாகச் சேமித்து வைத்துள்ளனர்.

நண்பர்களே,

எங்களது  குடிமக்களே முதன்மையானவர்கள் என்ற கோட்பாட்டிற்கு மற்றுமொரு சிறந்த உதாரணம், இந்தியாவின் மருத்துவச் சேவைத் துறையாகும். இன்று கோடிக்கணக்கான இந்தியர்கள் பாதுகாப்பான 'டிஜிட்டல் ஹெல்த் ஐடி' வைத்துள்ளனர். அதில் அவர்களின் முழுமையான மருத்துவக் குறிப்புகளும் டிஜிட்டல் முறையில் சேமிக்கப்படுகின்றன. இது நாடு முழுவதும் நோய்களைத் துல்லியமாகக் கண்டறியவும், மருத்துவச் சேவைகளை மிகவும் திறம்பட வழங்கவும் பெரிதும் உதவுகிறது.

அதுமட்டுமல்ல, 'தொலைதூர மருத்துவ ஆலோசனை' சேவையும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது. அரசின் 'ஈ-சஞ்சீவனி' தளம் வாயிலாக இதுவரை 48 கோடிக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தளத்தில் 2 லட்சத்து 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவச் சேவை வழங்குநர்கள் இணைந்துள்ளனர்.

ஒரு காலத்தில், நீங்கள் அனைவருமே பாஸ்போர்ட் பெறுவதில் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்திருப்பீர்கள். பாஸ்போர்ட் கைக்கு வர எத்தனை வாரங்கள் ஆகும் என்பது நினைவிருக்கிறதா? ஆனால் இன்று, சராசரியாகச் சில நாட்களிலேயே பாஸ்போர்ட் வழங்கப்பட்டுவிடுகிறது. இதுதான் "குடிமக்களுக்கே முதலுரிமை" அளிக்கும் ஆட்சிமுறை! குடிமக்களே முதன்மையானவர்கள் என்ற தாரக மந்திரத்தின் வெற்றி இதுதான்!

நண்பர்களே,

இந்தியா எந்த அளவுக்கு வலிமை பெறுகிறதோ, அந்த அளவுக்கு அது மனிதகுலம் முழுமைக்கும் மாபெரும் நன்மையை அளிக்கும் என்று நான் அடிக்கடி கூறுவதுண்டு. "அனைவரும் மகிழ்ச்சியுடனும் வளமுடனும் வாழ வேண்டும்" என்பதே நமது பழம்பெரும் பண்பாட்டு நெறியாகும். இந்த பண்பாட்டு மதிப்புதான் இன்றைய இந்தியாவின் கொள்கைகளுக்கும் செயல்பாடுகளுக்கும் வழிகாட்டி வருகிறது.

நண்பர்களே,

கடந்த மாதம் தான் வெனிசுலா நாட்டில் ஒரு பேரழிவு தரும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குப் பெரும் சேதம் விளைந்ததுடன், நூற்றுக் கணக்கான மக்கள் தங்களது உயிரை இழந்தனர். நாடுகள் இடையேயான தூரம் எங்களின் உதவிக்குத் தடையாக இருக்க நாங்கள் அனுமதிக்கவில்லை. வெனிசுலா மக்களின் துயரத்தை நமது சொந்தத் துயரமாகக் கருதினோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்தியா உடனடியாக நிவாரண மற்றும் மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியது.

நாங்கள் முடிந்தவரை விரைவாக நிவாரண உதவிகளை அனுப்பினோம், எங்களது நிபுணர்களைக் களமிறக்கினோம், எங்களது மருத்துவக் குழுக்களும் எவ்வித தாமதமுமின்றி பணிகளைத் தொடங்கின. இந்த முயற்சிகள் பல உயிர்களைக் காப்பாற்ற உதவியது என்பதில் நான் பெரும் மனநிறைவு கொள்கிறேன்.

நண்பர்களே,

இதேபோல, துருக்கியே மற்றும் சிரியாவில் பேரழிவு தரும் நிலநடுக்கம் ஏற்பட்டபோதும், நிவாரணம் மற்றும் மீட்பு உதவிகளை விரைவாக அனுப்பி இந்தியா பதிலளித்தது. இதுபோன்ற பல உதாரணங்கள் உள்ளன. கடந்த ஆண்டு, மியான்மருக்கு ஆதரவளிக்க நாம் 'ஆபரேஷன் பிரம்மா' திட்டத்தைத் தொடங்கினோம். மேலும், இலங்கை நாடு சக்திவாய்ந்த புயலால் பாதிக்கப்பட்டபோது, நிவாரணமும் உதவியும் வழங்க 'ஆபரேஷன் சாகர் பந்து' திட்டத்தை மேற்கொண்டோம்.

கரோனா பெருந்தொற்றின் நினைவுகள் இன்னமும் நம் மனங்களில் பசுமையாக இருக்கின்றன. அந்தக் கடினமான காலத்தில், இந்தியா தனது சொந்தக் குடிமக்களை வீட்டிற்கு அழைத்து வந்தது மட்டுமன்றி, உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் தங்களது தாயகத்திற்குப் பாதுகாப்பாகத் திரும்புவதற்கும் உதவியது. நாம் மிகப்பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டோம்; தேவையானவர்களுக்கு மருந்துகளை வழங்கினோம்; மேலும் 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்குத் தடுப்பூசிகளை விநியோகித்தோம். போர் நடக்கும் பதற்றமான பகுதிகளில்கூட, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா தொடர்ந்து அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

நண்பர்களே,

இந்தியா உதவிக்கரம் நீட்டும்போது, அது மக்களின் கடவுச்சீட்டைப் பார்ப்பதில்லை. இந்தியா உதவிகளை அனுப்பும்போது, அந்த பாஸ்போர்ட்டின் வண்ணத்தைப் பார்ப்பதில்லை. அதனால்தான், உலகம் இந்தியாவின் மீது இவ்வளவு ஆழமான நம்பிக்கையை வைத்திருக்கிறது!

நண்பர்களே,

ஆஸ்திரேலியாவும் மனிதகுலத்திற்குச் சேவை செய்வதில் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது என்பதை நான் அறிவேன். இந்தப் பகிர்ந்தளிக்கப்பட்ட அர்ப்பணிப்பு உணர்வுதான், நமது இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டாண்மையின் முதன்மையான தூண்களில் ஒன்றாக விளங்குகிறது.

நமது உறவை மேலும் வலுப்படுத்தும் மற்றொரு முக்கியமான துறை விளையாட்டு! விளையாட்டு உலகில், ஆஸ்திரேலியா தனக்கென ஒரு தனி முத்திரையையும் பிராண்டையும் கொண்டுள்ளது. அதேபோல இந்தியாவிலும், விளையாட்டுத் துறைக்கான உள்கட்டமைப்பும் சூழலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டு வருகிறது.

நண்பர்களே,

நீங்கள் 'கேலோ இந்தியா' திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இது வெறும் விளையாட்டுக்கான கொள்கை மட்டுமல்ல—பள்ளி அளவிலிருந்தே இளம் விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு உருவாக்கும் ஒரு மிகப்பெரிய தேசிய இயக்கமாகும்! பள்ளி, பல்கலைக்கழகம் மற்றும் தேசிய அளவிலும் 'கேலோ இந்தியா' போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் லட்சக்கணக்கான விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த இயக்கத்தின் கீழ், இந்தியாவின் கடைக்கோடி கிராமப்புறங்களிலும் விளையாட்டு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இது விளையாட்டு வீரர்களுக்கு, குறிப்பாக நமது பெண் குழந்தைகளுக்கு மிகச்சிறந்த வாய்ப்புகளை உருவாக்கித் தருகிறது. மேலும், இந்த முயற்சி நகரங்களோடு மட்டும் நின்றுவிடவில்லை; விளையாட்டுப் பெருவிழா போன்ற முன்னெடுப்புகள் மூலம், நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் விளையாட்டும் உடற்தகுதியும் ஊக்குவிக்கப்பட்டு, அவை எதிர்கால வாழ்க்கை வாய்ப்புகளோடும் இணைக்கப்பட்டு வருகின்றன.

இதற்கான முடிவுகள் இன்றைக்கு விளையாட்டுக் களங்களில் மிகத் தெளிவாகத் தெரிகின்றன. இந்தியாவின் விளையாட்டு வீரர்களும், விளையாட்டு அணிகளும் சிறப்பாகச் செயல்பட்டு, தங்களை மேலும் உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள்.

நண்பர்களே,

இந்தத் தன்னம்பிக்கைதான் உலகளவில் விளையாட்டுத் துறையில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. இந்தியா 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும்; மேலும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கும் நாம் தீவிரமாக முயற்சித்து வருகிறோம். விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான கூட்டாண்மை மேலும் வலுவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நண்பர்களே,

இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இணைந்து எதைச் செய்தாலும், அது இரு நாடுகளுக்குமே பெரும் நன்மையைத் தரும். இதற்கு மிகப்பெரிய உதாரணம் 'இந்தியா - ஆஸ்திரேலிய வர்த்தக ஒப்பந்தம்' ஆகும். உங்களுக்கு இந்த கவிதை வரி நினைவிருக்கலாம்:

"நான் தனியாகத்தான் இலக்கை நோக்கிப் பயணிக்கத் தொடங்கினேன்,

ஆனால் மக்கள் என் வழியில் இணைந்துகொண்டே இருந்தார்கள்,

அதுவே ஒரு மாபெரும் பயணக் குழுவாக மாறியது!"

அதேபோல, இந்தியா-ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் என்பது ஒரு தொடக்கம் மட்டுமே. இன்று அந்தப் பயணம், உலகெங்கிலும் உள்ள சுமார் 40 நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தங்களாக ஒரு மாபெரும் குழுவாக உருவெடுத்துள்ளது.

நண்பர்களே,

நாம் வெறும் வர்த்தகம் செய்யும் ஒரு நாடு மட்டுமல்ல. கண்டுபிடிப்புகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம். ஆஸ்திரேலியா தனது கணக்கில் பல குறிப்பிடத்தக்க சாதனைகளைக் கொண்டுள்ளது. காது கேளாதோருக்கான கருவி, வைஃபை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி, விமானத்தின் கருப்புப்பெட்டி  மற்றும் ரகசிய வாக்குப்பதிவு முறை ஆகிய அனைத்தும் ஆஸ்திரேலியாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்ட கண்டுபிடிப்புகளாகும். இன்று, இந்தக் கண்டுபிடிப்புகள் உலகைச் சிறந்த இடமாக மாற்ற உதவுகின்றன.

நண்பர்களே,

இந்தியாவும் தனது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புச் சூழலை உருமாற்றி வருகிறது. இன்று இந்தியா முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் அடல் அறிவியல் ஆய்வகங்கள்  அமைக்கப்பட்டுள்ளன என்பதை அறிய நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள். இந்த ஆய்வகங்கள் பள்ளி அளவிலிருந்தே புதிய கண்டுபிடிப்புகளுக்கான சிந்தனையை குழந்தைகளிடையே வளர்த்து வருகின்றன.

கடந்த 12 ஆண்டுகளில், உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் சூழலைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. ஆனால், இதன் எண்களைப் பற்றி நான் உங்களிடம் கூறினால், நீங்களும் ஆச்சரியப்படுவீர்கள்! அந்தத் தகவல்களைக் கேட்க விரும்புவீர்களா?

இன்று, இந்தியாவில் 2 லட்சத்திற்கும்  அதிகமான பதிவு செய்யப்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும், நாட்டில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய புத்தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. பாதுகாப்புத் துறை மற்றும் விண்வெளித் துறை போன்ற துறைகளில்கூட நூற்றுக்கணக்கான புத்தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நான் ஏன் இந்த உதாரணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், இந்தத் துறைகள் அனைத்தும் ஒரு காலத்தில் இந்தியாவில் மூடப்பட்டிருந்தன. கடந்த சில ஆண்டுகளில்தான் இவை தனியார் தொழில்முனைவோருக்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. இப்போது, இந்தியாவைச் சேர்ந்த ஒரு விண்வெளி புத்தொழில் நிறுவனம், முதன்முறையாகத் தனது சொந்த ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தத் தயாராக உள்ளது.

நண்பர்களே,

கல்வி, தொழிற்திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் துறையில் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான கூட்டாண்மை மேலும் ஆழமாகவும் வலுவாகவும் மாறி வருவது எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது. இன்று, ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் பயின்று வருகிறார்கள். இப்போது, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களும் இந்தியாவில் தங்களது கிளை வளாகங்களைத் திறந்து வருகின்றன.

'டீக்கின் பல்கலைக்கழகம்' மற்றும் 'வொல்லாங்காங் பல்கலைக்கழகம்' ஆகியவற்றின் இந்திய வளாகங்கள் ஏற்கனவே தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கிவிட்டன. மேலும் பல ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களும் இதே பாதையில் பயணித்து வருகின்றன. இது வெறும் புதிய கிளை வளாகங்களைத் திறப்பது பற்றி மட்டுமல்ல; உலகளாவிய தலைவர்களை உருவாக்குவதற்கும், உலகிற்காகத் திறமையான மற்றும் புதிய கண்டுபிடிப்பாளர்களைக் கொண்ட ஒரு தலைமுறையை உருவாக்குவதற்குமான ஒரு முக்கிய முயற்சியாகும்.

நண்பர்களே,

இந்தியாவைப் பற்றி உங்களுடன் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டேன். இப்போது உங்களிடம் ஒரு வேண்டுகோளையும் விடுக்க விரும்புகிறேன். சில காலத்திற்கு முன்பு, நமது வெளிநாடுவாழ் இந்தியர்களின் குழந்தைகளுக்காக  இந்தியாவைத் தெரிந்துகொள்ளுங்கள் வினாடி வினாப் போட்டியைத் தொடங்கினோம். இந்த வினாடி வினா உலகிற்கு இந்தியாவின் பன்முகத் தன்மையை அறிமுகப்படுத்துவதோடு, இந்திய சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் அவர்களின் குடும்பங்களையும் அவர்களின் பாரம்பரியத்தோடு இணைக்க உதவுகிறது. இந்த ஆண்டு, ஆஸ்திரேலியாவில் உள்ள பல இளம் நண்பர்கள் இந்த நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வில் பங்கேற்றதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இப்போட்டியின் 6-வது பதிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த முறை, இது விளையாட்டுகள் போன்ற சுவாரஸ்யமான வடிவில் பல்வேறு போட்டிகளுடன் இடம்பெறும். ஆஸ்திரேலியாவில் உள்ள அனைத்து இந்தியக் குடும்பங்களும் இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதே நேரத்தில், உங்களுடைய ஆஸ்திரேலிய நண்பர்கள், பள்ளி நண்பர்கள் மற்றும் கல்லூரி நண்பர்களையும் இந்த வினாடி வினாப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்குமாறு உங்களை ஊக்குவிக்கிறேன்.

நண்பர்களே,

நீங்கள் அனைவரும் கடினமாக உழைத்து, இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்துவதில் மிகமுக்கியமான பங்களிப்பை வழங்கியுள்ளீர்கள். ஆனால், உங்களது பணி இத்துடன் முடிந்துவிடவில்லை; உண்மையில், உங்களது பொறுப்புகள் இப்போது இன்னும் அதிகமாகியிருக்கின்றன. ஏனெனில், இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டாண்மை தற்போது ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது.

எனவே, இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளில் இதே உற்சாகத்தைத் தொடர்ந்து செலுத்துங்கள். தொடர்ந்து 4, 6 என விளாசிக்கொண்டே இருங்கள்! உங்களது வெற்றிதான் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு நாடுகளின் வெற்றியாகும்.

நண்பர்களே,

இன்றைய இந்தச் சிறப்பான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த பிரதமர் ஆல்பனீஸ் அவர்களுக்கும், இங்கு வருகை தந்துள்ள எனது நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரத் மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான தமிழாக்கமாகும். மூல உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.

(Release ID: 2282976)

***

AD/VK/PD


(रिलीज़ आईडी: 2288727) आगंतुक पटल : 31
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam