பிரதமர் அலுவலகம்
பொருளாதாரத் திட்டமிடல் வணிகக் கருத்தரங்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 10:09AM by PIB Chennai
அனைவருக்கும் எனது வணக்கங்கள்!
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வணிக வலிமையையும், வணிக இலட்சியங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு நிகழ்விற்குச் சாட்சியாக இன்று இந்த அரங்கம், இருக்கிறது. உங்கள் அனைவரின் வருகையும், நம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர நம்பிக்கை மற்றும் பொதுவான விருப்பங்களை இது பிரதிபலிக்கிறது.
இன்று உலகம் நிச்சயமற்ற தன்மை, விநியோகத் தடைகள் மற்றும் எரிசக்தி நெருக்கடி போன்ற கடினமான காலங்களைக் கடந்து கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை இயற்கையான மற்றும் நம்பிக்கைக்குரிய நட்புணர்வு நாடுகளாக இணைந்து செயல்படுவது அவசியமான ஒன்றாகும்.
கடந்த சில ஆண்டுகளில், நம் இரு நாடுகளின் திறன்களைப் பயன்படுத்தி, எதிர்காலக் கூட்டுசெயல்பாடுகளுக்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளோம். 2022-ம் ஆண்டில் சாதனை நேரத்தில முடிக்கப்பட்ட 'பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம், நமது பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, ஆஸ்திரேலியாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதி இருமடங்காக அதிகரித்துள்ளது; இரு நாட்டு வணிகர்களும் மேம்பட்ட சந்தை வாய்ப்புகளால் பயனடைந்துள்ளனர்.
ஆனால், இதோடு நாம் நின்றுவிடப் போவதில்லை. இப்போது நாம் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறி வருகிறோம். இந்த முயற்சிகளின் மூலம், இரு நாட்டு அரசுகளும் ஒரு புதிய பாதையை உருவாக்கியுள்ளன.
இப்போது, முதலீடு மற்றும் புத்தாக்கம் என்ற விமானம் இந்த ஓடுபாதையிலிருந்து புறப்படத் தயாராக உள்ளது. இந்த உறவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உங்கள் அனைவருடையது.
நண்பர்களே
இன்று இங்கே தூய்மையான எரிசக்தி துறையைச் சார்ந்த பல நிறுவனங்கள் கூடியுள்ளன. இந்தியாவில், நீர்மின் திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன், சூரிய ஆற்றல் தொகுதிகள் மற்றும் காற்று ஆற்றல் ஆகியவற்றுக்கான உற்பத்திச் சூழலை நாங்கள் உருவாக்கி வருகிறோம்.
2030ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை எட்டுவதையும், 2070ம் ஆண்டிற்குள் 'நிகர பூஜ்ஜிய' உமிழ்வை அடைவதையும் இந்தியா இலக்காகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், மூலதனம் மற்றும் வளங்கள் இந்த மாற்றத்தை விரைவுபடுத்த உதவும்.
சில மாதங்களுக்கு முன்பு, 'சாந்தி சட்டம்' மூலம் அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் முதலீடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. 2047ம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை அடைவது எங்கள் இலக்கு. ஆஸ்திரேலியாவின் பிரம்மாண்டமான யுரேனியம் கையிருப்பு, இந்தியாவின் அணுசக்தி பயணத்துடன் நேரடியாகத் தொடர்புடையது. இது இரு நாடுகளுக்கும் இந்த முக்கியமான துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பாகும்.
இந்தியாவில், துறைமுகங்கள், விமான நிலையங்கள், சாலைகள், ரயில்வே மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நீண்டகால முதலீடு செய்ய ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான வாய்ப்புகள் உள்ளன. இன்று, இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் நாளொன்றுக்கு சுமார் 34 கிலோமீட்டர் என்ற வேகத்தில் அமைக்கப்படுகின்றன. அதேபோல், நாளொன்றுக்கு 8 கிலோமீட்டருக்கும் அதிகமான புதிய இரயில் பாதைகள் போடப்படுகின்றன. இது இந்தியாவின் பிரம்மாண்டமான அளவு, வேகம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் தனித்துவமான சங்கமமாகும்.
உருக்குத் துறையில், நாம் ஏற்கனவே வலுவான பங்காளிகளாக இருந்து வருகிறோம். இன்று இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா உலோக உருக்கு உற்பத்தியாளராக உள்ளது. குறைந்த கரியமில வாயு வெளியேற்றத்தைக் கொண்ட அலுமினியம், பசுமை இரும்பு மற்றும் தூய்மையான உற்பத்தி ஆகிய துறைகளில் நாம் இணைந்து செயல்பட முடியும்.
செயற்கை நுண்ணறிவு இயக்கம், குவாண்டம் இயக்கம் மற்றும் செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ், இந்திய அரசு 10 பில்லியன் டாலர்களுக்கும் மேலான ஆதரவை வழங்கியுள்ளது. உலகளாவிய தீர்வுகளை உருவாக்க, தரவு மையங்கள், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், குறைக்கடத்திகள் மற்றும் மின்னணு பொது உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் நாம் இணைந்து செயல்படலாம்.
ஆஸ்திரேலியாவின் ஓய்வூதிய நிதியங்கள் இன்று 4 டிரில்லியன் டாலர்களுக்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கின்றன. இந்தியாவில், ஓய்வூதிய சேமிப்புகள் புனிதமான நம்பிக்கையாகக் கருதப்படுகின்றன. அவற்றை நாங்கள் வெறும் மூலதனமாக மட்டும் பார்ப்பதில்லை; லட்சக்கணக்கான குடும்பங்களின் நம்பிக்கையாகவே பார்க்கிறோம். உங்கள் நிதியங்களுக்குப் பாதுகாப்பான, நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான வாய்ப்பை இந்தியா வழங்குகிறது. உங்கள் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்துவதும், உங்கள் மூலதனம் வளர்வதற்கு உதவுவதுமே எங்கள் முயற்சியாக இருக்கும்.
கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைகளில் நம் இரு நாடுகளுக்கும் இடையே இயல்பான ஒத்துழைப்பு உள்ளது. டீக்கின் பல்கலைக்கழகம் மற்றும் வூலோங்கோங் பல்கலைக்கழகம் ஆகியவை கிஃப்ட் நகரில் வளாகங்களைத் திறந்துள்ளன. இது ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகும்; மேலும், இந்தியாவின் மீது அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது. மாணவர் பரிமாற்றத்தை ஒரு திறமைப் பகிர்வு கூட்டாண்மையாக மாற்றுவதே நமது பொதுவான இலக்காக இருக்க வேண்டும்.
நண்பர்களே,
இவை அனைத்திலும் நாம் முன்னேற வேண்டுமானால், மேலும் ஒரு முக்கியமான அம்சத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். நமது கூட்டாண்மை என்பது வெறும் இரு நாடுகளின் தலைநகரங்களிலோ அல்லது சில குறிப்பிட்ட நகரங்களிலோ மட்டும் நின்றுவிடக் கூடாது. நமது மாநிலங்கள், சிறிய மற்றும் பெரிய நகரங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் என அனைவரையும் இந்த கூட்டாண்மையில் பங்குதாரர்களாக்க வேண்டும்.
மேற்கு ஆஸ்திரேலியாவின் கனிம வள வலிமையை, ஒடிசா மற்றும் குஜராத்தின் உற்பத்தித் திறன்களுடன் இணைக்க முடியும். குயின்ஸ்லாந்து மற்றும் டாஸ்மேனியாவின் தூய்மையான எரிசக்தி மற்றும் வேளாண்மைத் துறை நிபுணத்துவம், பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வழித்தடங்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் சூழல்களுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்க முடியும்.
நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவின் நிதி, கல்வி, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கச் சூழல்கள், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவுடன் இணைந்து உலகளாவிய தீர்வுகளை உருவாக்க முடியும். தெற்கு ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு, விண்வெளி மற்றும் உற்பத்தித் திறன்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் கேரளாவோடு இணைந்து புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும்.
எனது ஆலோசனை என்னவென்றால், வரும் காலங்களில் மாநிலங்களுக்கு இடையிலான மற்றும் துறைக்கு இடையிலான சில குறிப்பிட்ட கூட்டாண்மைகளைக் கண்டறிந்து, அவற்றை முன்னெடுத்துச் செல்வதற்கான உத்திகளை நாம் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே,
ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான நமது பொதுவான தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில், நம் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான ஒருமித்த கருத்து உருவாகியுள்ளது. நமது வணிகக் கூட்டாண்மையை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம். இந்த முயற்சியில், உங்கள் பங்கு மிக முக்கியமானது.
இன்றைய கலந்துரையாடல் புதிய கருத்துகளுக்கும், புதிய கூட்டாண்மைகளுக்கும், புதிய உறுதிப்பாடுகளுக்கும் வழிவகுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேரம் ஒதுக்கிய மாண்புமிகு பிரதமருக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
நன்றி.
பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.
(Release ID: 2282675)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2286653)
आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
हिन्दी
,
English
,
Urdu
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam