பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 07 JUL 2026 8:20PM by PIB Chennai

இந்தோனேசியாவின் மாண்புமிகு அதிபர் அவர்களே,

மாண்புமிகு துணை அதிபர் அவர்களே,

சபாநாயகர் அவர்களே,

நாடாளுமன்ற உறுப்பினர்களே,

தூதர்களே,

எனது அன்புக்குரிய இந்தோனேசிய சகோதர, சகோதரிகளே,

அனைவருக்கும் எனது பணிவான வணக்கங்கள்.

'செலமத் சியாங்' (மதிய வணக்கம்)!

எனது உண்மையான நண்பர்களாகிய உங்கள் மத்தியில் இருப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் கொள்கிறேன்.

இன்று உங்கள் மத்தியில் இருப்பதைக் காட்டிலும் எனக்குப் பெரிய கவுரவம் வேறில்லை. 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதியாகவும், ஜனநாயகத்தின் தாயகத்தைச் சேர்ந்த ஒரு பெருமைமிகு குடிமகனாகவும் நான் உங்கள் முன் நிற்கிறேன். இந்திய மக்கள் அனைவரின் அன்பான வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்தோனேசியாவின் மக்கள் – குறிப்பாக குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் – எனது வாழ்க்கையின் மிக மறக்க முடியாத நாட்களில் ஒன்றாக இன்றைய நாளை மாற்றியுள்ளனர். இன்று காலை இந்தோனேசிய மக்கள் எனக்கு அளித்த அன்பான வரவேற்பும், பாசமும் என் வாழ்நாள் முழுவதும் என் நினைவில் இருக்கும்.

இன்று காலை அதிபர் பிரபோவோ அவர்கள் 'காப்புரிமை' குறித்துப் பேசினார். அவருக்கு நான் ஒன்று சொல்ல விரும்புகிறேன்: அன்பு, பாசம், நட்பு மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் மீது எவருக்கும் காப்புரிமை கோர முடியாது. அதிபர் பிரபோவோவுக்கும் எனக்குமான நட்பு என்பது, இது போன்ற எந்தவொரு காப்புரிமை எல்லைகளையும் கடந்தது.

நண்பர்களே,

இன்று காலை, இந்தோனேசியாவின் மிக உயரிய குடிமகன் விருதைப் பெறும் பாக்கியமும் எனக்குக் கிடைத்தது. இந்தோனேசிய மக்கள் இந்திய மக்கள் மீது வைத்திருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே, இந்த விருதை மிகவும் பணிவோடும் நன்றியுணர்வோடும் ஏற்றுக்கொள்கிறேன். நாம் பகிர்ந்து கொள்ளும் ஜனநாயக விழுமியங்களையும், நம்முடைய பொதுவான கலாச்சாரப் பாரம்பரியத்தையும், நம் இரு நாடுகளுக்கு இடையே நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் உறவையும் இந்த விருது கொண்டாடுகிறது. இந்த உயரிய கவுரவத்திற்காக உங்கள் அனைவருக்கும், அதிபர் பிரபோவோவுக்கும், இந்தோனேசிய அரசாங்கத்திற்கும், அந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இன்று இந்தியாவும் இந்தோனேசியாவும் வரலாற்றின் மிக முக்கியமான கட்டத்தில் இணைந்து நிற்கின்றன. இந்த நூற்றாண்டின் முதல் கால்பகுதி முடிந்துவிட்டது. இனி வரும் இருபத்தைந்து ஆண்டுகள், நம் இரு நாடுகளுக்கும் மிக முக்கியமானதாக இருக்கப்போகிறது. இந்தோனேசியாவின் இந்தப் புண்ணிய பூமியில் நின்று, நமது கூட்டு வளர்ச்சிப் பயணத்தின் மீதுள்ள நம்பிக்கையுடன் உங்கள் முன் பேசுகிறேன். இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து, மனிதகுலத்திற்குப் புதிய நம்பிக்கையையும், நோக்கத்தையும், ஆற்றலையும் வழங்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் நான் வந்திருக்கிறேன்.

இந்தியாவின் 140 கோடி மக்களும், இந்தோனேசியாவின் 29 கோடி மக்களும் ஒரே நோக்கத்துடனும் கூட்டு முயற்சியுடனும் முன்னோக்கிச் செல்லும்போது, உலகம் வரலாற்றின் ஒரு புதிய அத்தியாயத்தைப் பார்க்கப் போகிறது.

இந்தியா என்பது ஆக்கிரமிப்புக் கொள்கையில் நம்பிக்கை கொண்ட நாடு அல்ல; வளர்ச்சியில் நம்பிக்கை கொண்ட நாடு. அதனால்தான், அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற கொள்கை எங்களை வழிநடத்துகிறது. இதே மந்திரத்துடனும், இதே உணர்வுடனும் தான், இன்று இந்தோனேசிய நாடாளுமன்றத்தின் மாண்புமிகு உறுப்பினர்களாகிய உங்கள் முன்னால் நான் நிற்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நமது தலைநகரங்களுக்கு இடையே ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் இடைவெளி இருந்தாலும், கடலைக் கடந்து நம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள தூரம் வெறும் 150 கிலோமீட்டர் மட்டுமே. பல நாடுகளுக்குக் கடல்கள் என்பவை எல்லையாகவும், தூரத்தைக் குறிக்கும் குறியீடாகவும் இருந்துள்ளன. ஆனால், இந்தியாவையும் இந்தோனேசியாவையும் கடல் ஒருபோதும் பிரித்ததில்லை. எங்களைப் பொறுத்தவரை, கடல் என்பது தடையல்ல - அது ஒரு பாலம். நமது கூட்டு எதிர்காலத்தின் மையப்புள்ளியே இந்தக் கடல்தான்.

இந்தியா, இந்தோனேசியா மற்றும் இந்தியப் பெருங்கடல் – இந்த பெயர்களே நம் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஆழமான மற்றும் நீடித்த பிணைப்பிற்குச் சான்றாகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம் துறைமுகங்கள் உலகத்தோடு இணைந்திருந்தன; நம் கப்பல்கள் வணிகத்தையும், கலாச்சாரத்தையும், கருத்துக்களையும் தொலைதூரக் கரைகளுக்குக் கொண்டு சென்றன. இந்தக் கடல்கள் நமது கூட்டு எதிர்காலத்திற்கு இன்னும் பல பிரம்மாண்டமான வாய்ப்புகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன. இந்தக் கடலின் பரந்த தன்மையையே உத்வேகமாகக் கொண்டு, இந்தியா-இந்தோனேசியா உறவை இன்னும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லுமாறு நான் இன்று உங்களை அழைக்கிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்தியாவையும் இந்தோனேசியாவையும் இணைப்பது கடல் மட்டுமல்ல, நாம் பகிர்ந்து கொள்ளும் பொதுவான வரலாறும் தான். நமது உறவு இராமாயணம் மற்றும் மகாபாரதத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியத்தில் வேரூன்றி இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்த நாளந்தாவின் ஞானத்திலும், வயாங் நடனம் மற்றும் இசையின் மரபுகளிலும் அது பிணைந்துள்ளது.

போரோபுதூர் மற்றும் பிரம்பானன் போன்ற பிரம்மாண்டமான நினைவுச் சின்னங்கள் வழியாக நாம் இணைக்கப்பட்டுள்ளோம். இந்தோனேசியாவின் தேசியச் சின்னமான கருடன்  நம்மையும் ஒன்றிணைக்கிறது. பாலி யாத்ரா  திருவிழாவின் உணர்வுகள் மற்றும் கொண்டாட்டங்கள் மூலமாக நாம் பிணைக்கப்பட்டுள்ளோம். உணவு சுவைகளை எடுத்துக்கொண்டால், அப்பளம் அல்லது க்ருபுக் - இதில் எது அதிக மொறுமொறுப்பானது என்று சொல்வது கடினம். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் - இந்திய மசாலாவும், இந்தோனேசியாவின் 'பும்பு' மசாலாவும் நமது வாழ்க்கைக்கு அதிக சுவையையும் வளமையையும் சேர்க்கின்றன.

நண்பர்களே,

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள குஜராத், எனது சொந்த மாநிலம். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, குஜராத்தைச் சேர்ந்த வணிகர்களும் சூஃபி ஞானிகளும் கடல் வழியாக இந்தோனேசியாவுக்குப் பயணம் செய்து, இஸ்லாத்தின் போதனைகளையும் விழுமியங்களையும் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இன்றும் கூட, குஜராத்தின் நேர்த்தியான 'படோலா' துணிகள் இங்கு கவுரவத்தின் அடையாளமாகவே மதிக்கப்படுகின்றன. இந்தோனேசியாவின் பாரம்பரிய 'பாட்டிக்' கலை நுணுக்கங்களிலும் அந்தத் தாக்கத்தை நாம் இன்றும் காண முடியும்.

 

ஜனநாயகம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகிய கொள்கைகளில் நாம் கொண்டுள்ள கூட்டு உறுதிப்பாடு, நம்மை இன்னும் நெருக்கமாக்குகிறது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு, ஜனநாயகத்தின் தாயகம். இந்தோனேசியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய ஜனநாயக நாடாகத் திகழ்கிறது.

இந்தியா நூற்றுக்கணக்கான மொழிகளையும், வளமான கலாச்சாரப் பாரம்பரியங்களையும் கொண்டது. அதேபோல, இந்தோனேசியாவும் நூற்றுக்கணக்கான மொழிகளாலும், பல்வேறு கலாச்சாரப் பழக்கவழக்கங்களாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நாடு.  "உலகமே ஒரு குடும்பம்" என்ற காலத்தால் அழியாத கொள்கையாலும், இந்தோனேசியா "வேற்றுமையில் ஒற்றுமை"  என்ற தத்துவத்தாலும் வழிநடத்தப்படுகின்றன. நாம் இரு நாடுகளுமே இந்த பன்முகத்தன்மையை நமது ஜனநாயகத்தின் மற்றும் ஒற்றுமையின் அடித்தளமாக மாற்றியுள்ளோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் சற்று முன் நினைவுபடுத்தியது போல, 1950-ல் இந்தியா தனது முதல் குடியரசு தினத்தைக் கொண்டாடியபோது, அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் இந்தோனேசிய அதிபர் சுகர்ணோ அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அதே காலகட்டத்தில், பாண்டுங் மாநாட்டில், அதிபர் சுகர்ணோ மற்றும் பிரதமர் நேரு ஆகியோர் உலகிற்கு ஒரு தெளிவான செய்தியைச் சொன்னார்கள் – தன்னிச்சையான நாடுகள் தங்கள் முடிவுகளைத் தாங்களே எடுப்பதற்கான இறையாண்மை உரிமையைக் கொண்டுள்ளன என்பதுதான் அந்தச் செய்தி.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்தோனேசியா, தனது  சீர்திருத்தங்கள் மூலம் ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை உலகுக்குக் காட்டியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களில், அந்நாட்டுப் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைந்து, லட்சக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது.

இந்தியாவின் ஜனநாயகப் பயணமும் இதேபோன்ற கதையைத்தான் சொல்கிறது. இன்று, உலகின் மிக வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக இந்தியா உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், 25 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்துள்ளனர். அதனால்தான் எனது நண்பர்களே, இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து நிற்கும் போது, ஜனநாயகம் வாய்ப்புகளை உருவாக்குகிறது மற்றும் ஜனநாயகம் நம்பிக்கையை ஊக்கப்படுத்துகிறது என்ற உலகத்தின் நம்பிக்கையை நாம் வலுப்படுத்துகிறோம்.

ஜனநாயகம் எதிர்காலத்தைக் கட்டமைக்கிறது. நமது ஜனநாயக விழுமியங்களும், பொதுவான  எதிர்பார்ப்புகளும் இந்தியா-இந்தோனேசியா உறவை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.

மாண்புமிகு உறுப்பினர்களே,

புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளாக நாம் ஒன்றாகத் தொடங்கிய பயணம், விரைவில் நூறு ஆண்டுகளை எட்டப்போகிறது. இங்கே இந்தோனேசியாவில், நீங்கள் பொற்கால இந்தோனேசியா 2045 என்ற லட்சியக் கனவோடு முன்னேறி வருகிறீர்கள். இந்தியாவில், நாங்கள் 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற உறுதிமொழியுடன் முன்னேறி வருகிறோம். இந்த தேசிய லட்சியங்களை நோக்கிய பயணத்தில், நமது இரு நாடுகளும் ஒன்றையொன்று பூர்த்தி செய்தும், பலப்படுத்தியும் இந்த இலக்குகளை அடைய முடியும்.

நாம் உலகின் மிகவும் இளமையான மக்கள் தொகையைக் கொண்ட சமூகங்களில் ஒன்றாக இருக்கிறோம். உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களில் நாம் முன்னணியில் உள்ளோம். நாம் இருவரும் பெரிய கடல்சார் சக்திகளாக இருக்கிறோம். தெற்குலக நாடுகள் எனப்படும் வளரும் நாடுகள் அமைப்பின் வலுவான குரல்களாக நாம் இருக்கிறோம். நாம் பழமையான நாகரிகங்களைக் கொண்டவர்கள், அதே நேரத்தில் வருங்காலத்தை வடிவமைப்பதில் இயற்கையான பங்காளிகளாகவும் இருக்கிறோம்.

 

இந்தப் பயணத்தில், நாம் ஒருவருக்கொருவர் வெறும் கூட்டாளிகளாக மட்டுமல்லாமல், ஒருவருக்கொருவர் பாலமாகவும் இருப்போம். இந்த தொலைநோக்குப் பார்வையுடன் தான், இன்று காலை அதிபர் பிரபோவோ அவர்களுடன் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டேன். நமது நோக்கங்கள் மிகவும் தெளிவானவை. இந்தியாவிற்கும் இந்தோனேசியா விற்கும் இடையே உள்ள நல்லெண்ணத்தையும், பரஸ்பர நம்பிக்கையையும் நம் மக்களின் வாழ்விற்கான புதிய வாய்ப்புகளாக நாம் மாற்ற வேண்டும்.

கடந்த ஆண்டு, நமது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் 25 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய நிறுவனங்கள் இந்தோனேசியாவில் செயல்பட்டு வருகின்றன. நாம் இருவரும் இணைந்து மிக வேகமாக முன்னேறி வருகிறோம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இருப்பினும், வரும் ஆண்டுகளில் இன்னும் பெரிய மற்றும் எல்லையற்ற வாய்ப்புகள் நமக்காகக் காத்திருக்கின்றன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

எதிர்காலத் தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவதன் மூலம், இந்தியாவும் இந்தோனேசியாவும் எல்லையற்ற உயரங்களை எட்டும் திறன் கொண்டவை. அதற்கு ஒரு சிறந்த உதாரணம் விண்வெளித் தொழில்நுட்பம். இன்று, விண்வெளித் துறையில் இந்தியாவின் திறமைகளை உலகம் முழுவதுமே அங்கீகரிக்கிறது. இந்த விண்வெளிப் பயணத்தில், இந்தோனேசியாவை இந்தியா தனது இயற்கையான பங்காளியாகவே கருதுகிறது.

பல ஆண்டுகளாக, 'பியாக்' பகுதியில் உள்ள செயற்கைக்கோள் கண்காணிப்பு வசதிகள் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் ஆதரவை அளித்துள்ளன. இந்தியாவும் பல இந்தோனேசிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதுடன், விண்வெளித் துறையில் அந்நாட்டின் திறன் மேம்பாட்டிற்கும் பங்களித்துள்ளது. இந்த ஒத்துழைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது. செயற்கைக்கோள் பயன்பாடுகளில் நாம் இணைந்து செயல்பட முடியும். இந்தோனேசியாவில் செயற்கைக்கோள் ஏவுதளங்களை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது.

நண்பர்களே,

நமது வளமான கடல்சார் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும், அதைக் கொண்டாடும் வகையிலும், 5,000 ஆண்டுகள் பழமையான துறைமுக நகரமான லோத்தலில் 'தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்தை' நாங்கள் உருவாக்கி வருகிறோம்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டத்தில் இந்தோனேசியாவும் எங்களுடன் இணைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

தீவிரவாதம் போன்ற விவகாரங்களில் இந்தியாவும் இந்தோனேசியாவும் எப்போதும் ஒரே மாதிரியான பார்வையையே கொண்டுள்ளன. கடந்த ஆண்டு, ல்காமில் கொடூரமான தீவிரவாதத் தாக்குதல் நடைபெற்றபோது, இந்தோனேசியா உறுதியாக இந்தியாவுடன் துணை நின்றது. அந்த ஆதரவிற்காக அதிபர் பிரபோவோ அவர்களுக்கும், உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது இரு நாடுகளும் 'கூட்டுப் பணிக்குழு' மூலம் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இணைந்து பணியாற்றி வருகின்றன. உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வது, இணையவழி அச்சுறுத்தல்கள், தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளிப்பதைத் தடுப்பது மற்றும் தீவிரவாதக் கருத்துகளிலிருந்து மக்களை விடுவித்தல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேலும் அதிகரிப்பதன் மூலம், உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்டும் சக்திகளை நாம் வலுப்படுத்த முடியும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இன்று உலக ஒழுங்கு மிக வேகமாக மாறி வருகிறது. இந்தச் சூழலில், நம்மைப் போன்ற வளரும் நாடுகள் உலக விவகாரங்களில் சமமான பங்கேற்பையும், முக்கியத்துவமிக்க பங்கையும் கோரி வருகின்றன. மாறிவரும் இந்த உலகச் சூழலில், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்வதை இனி மேலும் தாமதிக்க முடியாது என்று இந்தியா உறுதியாக நம்புகிறது.

2022-ல் இந்தோனேசியாவின் ஜி20 தலைமைத்துவமும், 2023-ல் இந்தியாவின் ஜி20 தலைமைத்துவமும், வளரும் நாடுகளின் முன்னுரிமைகளை உலகளாவிய விவாதங்களின் மையத்திற்குக் கொண்டு வரப் பாடுபட்டன.

இந்தோனேசியாவின் சுதந்திரமான மற்றும் சுறுசுறுப்பான வெளியுறவுக் கொள்கை மரபும், இந்தியாவின் 'உத்திசார் தன்னாட்சி' மீதான உறுதிப்பாடும், உலகளாவிய விவகாரங்களில் நாம் இணைந்து செயல்படுவதற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன.

இந்தியா, தடையற்ற, திறந்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு ஒரு வலுவான ஆதரவாளராக உள்ளது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கப்பல் போக்குவரத்திற்கான சுதந்திரத்தை இந்தியா வலியுறுத்துகிறது. இதை அடைவதற்காக, நமது அணுகுமுறையின் மையத்தில் ஆசியான் அமைப்பை வைத்துள்ளோம். எங்களது கிழக்கு நோக்கிய கொள்கையும் ஆசியான் அமைப்பை மையமாகக் கொண்டதுதான். இந்தியா மற்றும் ஆசியான் இடையிலான விரிவான உத்திசார்ந்த கூட்டு செயல்பாடுகள் தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. எனவே, இந்தப் பாதையில் இந்தியாவும் இந்தோனேசியாவும் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவது மிக அவசியமாகும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

நமக்கு முன்னால் மற்றொரு மிக முக்கியமான வாய்ப்பு உள்ளது. கடந்த ஆண்டு இந்தோனேசியா பிரிக்ஸ் அமைப்பின் முழு உறுப்பினராகச் சேர்ந்தது, இந்த ஆண்டு இந்தியா பிரிக்ஸ் அமைப்பிற்குத் தலைமை தாங்குகிறது. பிரிக்ஸ் மேடையை இன்னும் நடைமுறைக்குச் சாத்தியமானதாகவும், சமநிலையானதாகவும், உலகளாவிய தெற்கு நாடுகளின் தேவைகளுக்கு ஏற்பச் செயல்படக்கூடியதாகவும் மாற்றுவதற்கு நாம் இணைந்து பணியாற்ற முடியும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இன்று, இந்தோனேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும், இந்தியா-இந்தோனேசியா கூட்டாண்மையில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்க அழைப்பு விடுக்கிறேன். கங்கை மற்றும் மஹாகம் ஆறுகளில் ஓடும் நீரைப் போல, நம் நாகரிகங்கள் பல நூற்றாண்டுகளாக கருத்துகள், நம்பிக்கை, வணிகம் மற்றும் கலாச்சாரத்தை இணைத்துள்ளன. இந்த வரலாற்றுப் பிணைப்பிற்கு எதிர்காலத்திற்காகப் புதிய ஆற்றலை ஊட்ட, உங்கள் அனைவர் முன்னிலையிலும் 'கங்கை-மஹாகம் தொலைநோக்குப் பார்வையை' சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

இந்தத் தொலைநோக்குப் பார்வை, நமது கூட்டாண்மையை தற்போதைய தேவைகளுக்கு மட்டுமே என்று சுருக்கிவிடவில்லை. இது எதிர்கால சந்ததியினருக்கான அமைதி, வளம், பாதுகாப்பு மற்றும் கூட்டு முன்னேற்றத்திற்கான பாதையை வகுத்துத் தருகிறது.

முதலாவதாக... நாகரிக ரீதியிலான பிணைப்பு.

நமது நாகரிக ரீதியிலான பிணைப்புகளை இளம் தலைமுறையினரின் உணர்வுடன் இணைப்போம். இராமாயணத்திலிருந்து போரோபுதூர் வரை, கடல் பயணங்கள் முதல் கலாச்சாரப் பரிமாற்றங்கள் வரை, நம்முடைய பகிரப்பட்ட வரலாற்றை எதிர்காலத்திற்கான ஒரு வலிமையின் ஆதாரமாக நாம் மாற்றுவோம். இதை அடைவதற்கு, நாம் ஒரு 'இந்தியா-இந்தோனேசியா நாகரிக உரையாடலை' தொடங்க வேண்டும்.

இரண்டாவதாக... கூட்டு வளர்ச்சி

வளர்ந்த நாடுகளாக மாறுவதற்கான தங்கள் தனித்தனி பயணங்களில், இந்தியாவும் இந்தோனேசியாவும் உறுதியான கூட்டாளிகளாகத் தொடர்ந்து இருப்பார்கள். இந்தோனேசியாவின் "இந்தோனேசியாவின் தொலைநோக்கு பார்வையும் இந்தியாவின் "வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கான தொலைநோக்கு கொள்கையும் ஒன்றையொன்று வலுப்படுத்தி, முன்னேற்றத்தை வேகப்படுத்தும். இதன் மூலம் ஒருவரை ஒருவர் வலுப்படுத்திக் கொண்டு, நம் மக்களுக்கான புதிய வாய்ப்புகளை நாம் உருவாக்குவோம்.

மூன்றாவதாக... பாதுகாப்பு மற்றும் உத்திசார்ந்த நம்பிக்கை

நமது பாதுகாப்பு மற்றும் தற்காப்பு ஒத்துழைப்பை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்வோம். இணைந்து, நமது தேசியத் திறன்களை வலுப்படுத்துவோம்; மேலும் தீவிரவாதம், இணைய அச்சுறுத்தல்கள், கடல்சார் சவால்கள் மற்றும் உருவாகி வரும் பாதுகாப்பு இடர்பாடுகளை எதிர்கொள்வோம். இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையே உள்ள இந்த உத்திசார்ந்த நம்பிக்கை, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மைக்கு ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.

நான்காவதாக… கடல்சார் வளம்

மிகச்சிறந்த இரண்டு கடல்சார் நாடுகளாகிய நாம், நமது பொதுவான கடல்சார் புவியியல் அமைப்பைச் சாமானிய மக்களின் பொதுவான வளமாக மாற்றுவோம். சபாங் முதல் கிரேட் நிக்கோபார் வரை, மலாக்கா நுழைவாயில் முதல் இந்தோ-பசிபிக் வரை, இணைப்புத்திறன், தளவாடங்கள், நீலப் பொருளாதாரம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் வர்த்தக உறுதித்தன்மை ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளை உருவாக்குவோம்.

ஐந்தாவதாக… உலகளாவிய தெற்கு நாடுகளின்  குரல்

உலகளாவிய வளரும் நாடுகள் எதிர்பார்ப்புகளுக்கு இன்னும் வலுவான குரலாக நாம் ஒலிப்போம். வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாகவும், தொழில்நுட்பம் அனைவருக்கும் எளிதில் கிடைப்பதாகவும், உலகளாவிய நிர்வாகம் மிகவும் நியாயமானதாகவும், சமத்துவமானதாகவும், பிரதிநிதித்துவம் கொண்டதாகவும் இருக்கும் ஒரு உலக ஒழுங்கை உருவாக்க நாம் இணைந்து பணியாற்றுவோம்.

நண்பர்களே,

இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்து மனிதகுலத்தில் ஐந்தில் ஒரு பங்கைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. நமது கூட்டாண்மை என்பது வெறும் இரு நாடுகளுக்கிடையிலான உறவு மட்டுமல்ல – இது இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும், உலகளாவிய தெற்குலக நாடுகளின் வலிமைக்கும், உலகின் எதிர்காலத்தின் மீதான நமது கூட்டு நம்பிக்கைக்குமான ஒரு அர்ப்பணிப்பாகும். நமது வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை ஒரு புதிய சகாப்தத்திற்கு எடுத்துச் செல்வோம். கங்கை-மஹாகம் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க நாம் இணைந்து செயல்படுவோம்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இந்தியாவில், மகா கவிஞரும் ஞானியுமான துளசிதாசர் இவ்வாறு எழுதியுள்ளார்:

ஜானேன் பின்னு ந ஹோஇ பரதீதீ ।

பின்னு பரதீதி ஹோஇ நகிம் பிரீதீ ॥

பொருள்: ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் நம்பிக்கை ஏற்படாது; நம்பிக்கை இல்லாமல் அன்பு மலராது.

இதன் பொருள் என்னவென்றால், மக்கள் ஒருவரை ஒருவர் உண்மையாகத் தெரிந்துகொள்ளும் வரை, அவர்களிடையே நம்பிக்கை வளர முடியாது; நம்பிக்கை இல்லாமல் அன்பு ஏற்பட முடியாது.

இந்தோனேசியாவிலும் இதே போன்ற ஞானத்தைக் கூறும் ஒரு பழமொழி இருப்பதாக நான் அறிகிறேன்:

"தாக் கெனால் மக்கா தாக் சாயாங்"

ஒருவரைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல், அவரை உண்மையாக நேசிக்க முடியாது.

இதன் காரணமாகவே, நமது மக்களிடையேயான பிணைப்பை மேலும் வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். இன்று மாலை, அதிபர் பிரபோவோ அவர்களும் நானும் இங்கு இந்தோனேசியாவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரைச் சந்திக்க இருக்கிறோம். நாளை, அதிபர் பிரபோவோவும் நானும் பிரம்பானன் செல்லவிருக்கிறோம். அங்கு, யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான இந்த இடத்தைப் பாதுகாப்பதற்கும், புனரமைப்பதற்குமான திட்டத்தை நாங்கள் தொடங்கி வைக்கிறோம். வரலாறு நம்மிடம் ஒப்படைத்த விலைமதிப்பற்ற பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும், பேணுவதிலும் இந்தியாவும் இந்தோனேசியாவும் முழுமையாக உறுதிபூண்டுள்ளன.

மாண்புமிகு உறுப்பினர்களே,

இன்று, இந்த அவையின் அனைத்து மாண்புமிகு உறுப்பினர்களுக்கும் நான் ஒரு சிறப்பு அழைப்பை விடுக்கிறேன்; நீங்கள் அனைவரும் இந்தியாவுக்கு வாருங்கள். உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் வருமாறு உங்களை அன்புடன் அழைக்கிறேன். இந்திய மக்கள் உங்களை மனதார வரவேற்று மகிழ்ச்சியடைவார்கள்.

நாம் எப்போதும் கூட்டாளிகளாக  நிலைத்திருப்போம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இந்திய மற்றும் இந்தோனேசிய மக்களின் பொதுவான வளமான எதிர்காலத்தை நாம் இணைந்து உருவாக்குவோம். இந்த வார்த்தைகளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.

இந்தோனேசியா வாழ்க!

பாரத மாதாவுக்கு ஜெ!

நன்றி.

பொறுப்புத் துறப்பு - இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் வழங்கப்பட்டது.

(Release ID: 2282239)

***

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2286647) आगंतुक पटल : 29
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam