பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 6:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.07.2026) மெல்போர்னில் உள்ள மார்வெல் ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினர் பங்கேற்ற கூட்டத்தில் உரையாற்றினார். ஒரு சிறப்பு நிகழ்வாக, ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அந்தோனி அல்பானீஸும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

 

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியர்கள் அளித்த அன்பான வரவேற்புக்கு நன்றி தெரிவித்தார். மேலும், ஆஸ்திரேலியப் பிரதமர் திரு அய்தோணி அல்பானீஸின் கனிவான வருகைக்கும், இந்திய சமூகத்தினரின் நலன் உட்பட இந்தியா-ஆஸ்திரேலிய உறவுகளில் அவர் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கும் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதமர் எடுத்துரைத்தார். இரு நாடுகளின் பொருளாதாரங்களுக்கு இடையேயான நிலைத்தன்மை, பாதுகாப்பான, வளமான, மீள்திறன் கொண்ட ஒத்துழைப்பை உருவாக்குவதில் இந்தியாவையும் ஆஸ்திரேலியாவையும் இயல்பான கூட்டு ஒத்துழைப்பு நாடுகளாக நிலைநிறுத்துகின்றன என்று அவர் சுட்டிக் காட்டினார்.

 

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினர் இருதரப்பு உறவுக்கு ஆற்றிய பங்களிப்பைப் பிரதமர் பாராட்டினார். அவர்களை இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு பாலம் என்று அவர் வர்ணித்தார். ஆஸ்திரேலியாவின் சமூகக் கட்டமைப்பில் முக்கியப் பங்காற்றும் அதே வேளையில், இந்தச் சமூகம் தங்கள் கலாச்சார மரபுகளைப் பாதுகாத்து, அவற்றின் அம்சங்களையும், துடிப்பையும் உள்ளூர் மக்களுடன் பகிர்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் பெரிய அளவில் இருப்பதையும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்கள் தங்கள் வளாகங்களைத் திறந்து வருவதையும் சுட்டிக் காட்டிய அவர், இருதரப்பு உறவின் மிக வலிமையான தூண்களில் கல்வியும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

 

தொடர்ச்சியான உயர் வளர்ச்சி, கொள்கை சீர்திருத்தங்கள், டிஜிட்டல் புரட்சி, அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் ஏற்பட்டு வரும் விரைவான முன்னேற்றத்தை பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார். தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செமிகண்டக்டர், ஸ்மார்ட்போன் உற்பத்தி,  பாதுகாப்புத் தளவாட ஏற்றுமதி ஆகிய துறைகளில் இந்தியா புதிய முன்னேற்றங்களை அடைந்து வருவதாக அவர் கூறினார். இந்தியாவின் ஜனநாயக வலிமை, அதன் திறமை, தொழில்நுட்பம், புதுமை ஆகியவை, அதன் உலகளாவிய நட்பு நாடுகளுக்குப்  புதிய வாய்ப்புகளை உருவாக்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தியாவின் அணுகுமுறை என்பது தனது சொந்த முன்னேற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவது அல்ல எனவும், மாறாக தனது நண்பர்களுடன் கைகோர்த்து நடப்பதாகும் என்றும் அவர் கூறினார். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய, இந்திய சமூகம் தங்கள் யோசனைகளைக் கூறி, நிபுணத்துவத்தை வழங்கிப் பங்களிக்க வேண்டும் என்று பிரதமர் அழைப்பு விடுத்தார்.

 

இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர், ஆராய்ச்சியாளர்கள், சமூகத் தலைவர்கள், கலாச்சார அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த இந்திய சமூகத்தினர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு, இந்தியா-ஆஸ்திரேலியா உறவின் சிறப்பம்சமாக விளங்கக் கூடிய மக்களுக்கு இடையேயான ஆழமான பிணைப்புகளைப் பிரதிபலிப்பதாக அமைந்தது. ஆஸ்திரேலியாவில் சுமார் பத்து லட்சம் இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282982&reg=3&lang=1

(Release ID : 2282982)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2283011) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam