பிரதமர் அலுவலகம்
அகமதாபாத்தில் காணொளி வாயிலாக நடைபெற்ற உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
04 JUN 2026 7:47PM by PIB Chennai
நமஸ்காரம்!
இன்று, அகமதாபாத் மண்ணிலிருந்து, உலகின் விளையாட்டு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள பல்வேறு நாட்டு விளையாட்டு வீரர்களை நான் மனதார வரவேற்கிறேன், அவர்களுக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். யுனெஸ்கோ உலக பாரம்பரிய நகரமான அகமதாபாத் இந்த நிகழ்வை நடத்துவது, ஒட்டுமொத்த தேசத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். இன்னும் சில நாட்களில், அதாவது ஜூன் 21 அன்று, ‘உலக யோகா தினம்’ கொண்டாடப்பட உள்ளது. அன்று, பல்வேறு நாடுகளில் யோகா தொடர்பான நிகழ்வுகள் நடைபெற உள்ளன; இதன் முக்கிய நிகழ்ச்சி இந்தியாவின் மற்றொரு வரலாற்றுச் சிறப்புமிக்க நகரமான கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. எனவே, உலக யோகா தினத்திற்கு முன்னதாகவே உலக யோகாசன சாம்பியன்ஷிப் தொடங்கி, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை இரட்டிப்பாக்கியுள்ளது.
நண்பர்களே,
சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்பு, சர்வதேச யோகா தினத்திற்கான முன்மொழிவை இந்தியா ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தது. இந்தத் தொன்மையான இந்தியக் கலையை, மனிதகுலத்தின் ஆரோக்கியத்தோடும் ஒட்டுமொத்த நல்வாழ்வோடும் இணைப்பதே நமது நோக்கமாக இருந்தது. அப்போது, 190 நாடுகள் இந்தியாவின் முன்மொழிவை ஆதரித்தன. இன்று, லட்சக்கணக்கான மக்கள் யோகாவை தங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றியிருப்பதைப் பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தியானம் மற்றும் பிராணாயாமம் ஆகியவை அவர்களின் வாழ்க்கை முறையோடு ஒன்றிணைந்து வருகின்றன.
ஆனால் நண்பர்களே,
ஒவ்வொரு உயிருள்ள பாரம்பரியமும் காலப்போக்கில் புதிய பரிமாணங்களை எட்டுகிறது. இந்த உலக யோகாசன விளையாட்டுப் போட்டி அத்தகைய புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இந்தப் போட்டியின் மூலம், யோகாசனம் ஒரு போட்டி விளையாட்டாக அங்கீகாரம் பெறும். எதிர்காலத்தில், ஒலிம்பிக் அல்லது பிற பன்முக விளையாட்டுப் போட்டிகளில் யோகாசனம் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியால், நேர்மறையான விளைவுகள் நிச்சயம் சாத்தியமே. அகமதாபாத்தில் நடைபெறும் இந்த முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் அந்தப் பயணத்தில் முக்கியப் பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே,
யோகாசன விளையாட்டிற்கு மற்றொரு பரிமாணம் உள்ளது. ஒவ்வொரு முக்கியமான விளையாட்டும் ஒரு முழுமையான சூழலை தன்னுடன் கொண்டு வருகிறது என்பது நமக்குத் தெரியும். இது புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. யோகாசன விளையாட்டுகள் விரிவடையும் போது, புதிய சாத்தியக்கூறுகளும் வளரும். இது விளையாட்டு வீரர்களுக்கும், அதேபோல் பயிற்சியாளர்கள், விளையாட்டு விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் நிகழ்வு மேலாளர்களுக்கும் புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கித் தரும்.
நண்பர்களே,
நான் முன்னரே குறிப்பிட்டது போல, உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்திற்காகத் தயாராகி வரும் வேளையில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'ஆரோக்கியமான முதுமைக்கான யோகா' என்பதாகும். மக்கள் இன்று நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதற்கான வழிகளைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு யோகா மிகவும் பொருத்தமான ஒரு தேர்வாகும். யோகா நம்மை இச்சையிலிருந்தும், நோய்களிலிருந்தும் விடுவிக்கிறது. மிக முக்கியமாக, குறைந்த செலவில் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிக்க இதுவே சிறந்த வழியாகும். எனவே, இந்த மந்திரத்தை நினைவில் கொள்ளுங்கள்: தினசரி யோகா, அனைத்து நோய்களையும் விரட்டும்.
நண்பர்களே,
இந்த தொலைநோக்கு பார்வையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம், 365 நாட்களும் யோகா (யோகா 365) என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த உலக யோகாசன சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும், யோகாவைப் பற்றிய செய்தியை தங்களுடைய நாடுகளுக்கு எடுத்துச் செல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் உங்கள் நாடுகளில் 365 நாட்களும் யோகா பிரச்சாரத்தின் தூதுவர்களாக மாறலாம். யோகா மீது நீங்கள் கொண்டிருக்கும் அனுபவமும் நம்பிக்கையும், இந்தச் செய்தியுடன் ஒட்டுமொத்த உலகையும் இணைக்க முடியும்.
நண்பர்களே,
இந்தப் போட்டியில் யார் வெற்றி பெற்றாலும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தின் ஒரு பகுதியாக இருப்பதன் மூலம், நீங்கள் ஏற்கனவே வெற்றியாளர்கள்தான். உங்கள் திறமையும் ஒழுக்கமும் உலகம் முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு ஊக்கமளிக்கும். இந்த நல்வாழ்த்துகளுடன், உலக யோகாசன சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மற்றும் ஏற்பாட்டாளர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன் மூலம், அகமதாபாத்தில் நடைபெறும் முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் 2026-ஐ முறைப்படி தொடங்கி வைக்கிறேன்.
(Release ID: 2269045)
***
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282361)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam