பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத், வாவ்-தாராத் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 31 MAR 2026 8:27PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள குஜராத் முதலமைச்சர் திரு. பூபேந்திர பாய் அவர்களே, குஜராத் சட்டமன்றப் பேரவைத் தலைவர் சங்கர் பாய் அவர்களே, துணை முதலமைச்சர் பாய் ஹர்ஷ் சங்கவி அவர்களே, குஜராத் அரசின் அனைத்து அமைச்சர்களே, சக சட்டமன்ற உறுப்பினர்களே, மற்றும் பனஸ்கந்தா, வாவ், தாராத் மற்றும் வடக்கு குஜராத்தைச் சேர்ந்த எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

இன்று என் தாய்மார்கள், சகோதரிகள் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வந்திருக்கிறார்கள். எனது இந்தத் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் எனது சிறப்பான வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சில நாட்களுக்கு முன்புதான் நவராத்திரி திருவிழா நிறைவடைந்தது. அன்னை அம்பாஜியின் அருளால், இன்று அவரது திருப்பாதங்களில் வந்து சேரும் நற்பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்னையின் அருளால், இன்று உங்கள் அனைவரையும், எனது சொந்தக் குடும்ப உறுப்பினர்களாகிய உங்களைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அன்னை அம்பாஜியின் பாதங்களில் நான் தலைவணங்குகிறேன். பகவான் ஸ்ரீ தர்ணிதார்ஜி, "முக்தா கிருஷ்ணா", ஆகியோருக்கும் இன்று எனது மரியாதைக்குரிய வணக்கங்களைச் செலுத்துகிறேன். இன்று பகவான் மகாவீர் ஜெயந்தியும் கொண்டாடப்படுவது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வு. நமது இந்தப் பகுதி பல ஜைனத் திருத்தலங்களைக் கொண்ட பூமியாகும். பகவான் மகாவீரை நான் வணங்குகிறேன், மேலும் புனிதமான மகாவீர் ஜன்ம கல்யாண தினமான, மகாவீர் ஜெயந்தி நன்னாளில் உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று என் மனம் மற்றொரு காரணத்திற்காகவும் மகிழ்ச்சியடைகிறது. நான் இங்கு வந்தபோது, முதல்முறையாக எனது விமானம் நேரடியாக டீசா (Deesa) விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. இந்த டீசா விமானப்படை தளம், சர்வதேச எல்லையிலிருந்து வெறும் 130 கிலோமீட்டர் தொலைவில் மட்டுமே உள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு இது எவ்வளவு முக்கியமானது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

ஆனால் நண்பர்களே,

டீசா விமான நிலையத் திட்டத்தைப் பற்றிய எண்ணம் இன்று உருவானதல்ல. நான் இங்கு முதலமைச்சராக இருந்தபோதே இதற்கான நிலத்தை நாங்கள் கையகப்படுத்தினோம். எனது விவசாயச் சகோதர, சகோதரிகள் இதற்காக நிலத்தை வழங்கினர். தேசிய பாதுகாப்பு மற்றும் இந்தியாவின் மேற்கு எல்லைப் பாதுகாப்பிற்காக டீசா மிக முக்கியமான இடம் என்றும், இங்கு ஒரு விமானப்படை தளம் இருப்பது மிகவும் அவசியம் என்றும் நாங்கள் கருதினோம். ஆனால், அந்த நேரத்தில் தில்லியில் ஆட்சியில் இருந்தவர்களுக்கு குஜராத் மீது என்ன வெறுப்பு இருந்தது என்று தெரியவில்லை; தேசிய பாதுகாப்பு தொடர்பான இந்தத் திட்டம் கூட பல ஆண்டுகளாகக் கோப்புகளிலேயே முடங்கிக் கிடந்தது.

நீங்கள் என்னை தில்லிக்கு அனுப்பிய பிறகு, நான் அந்தக் கோப்புகளைத் தூசியைத் தட்டி எடுத்து வெளியே கொண்டு வந்தேன். அதன் பலனாகவே, இன்று ஒரு மிகப்பெரிய விமானப்படை தளம் நம் டீசாவுடன் இணைந்துள்ளது. இது வெறும் ஒரு விமான ஓடுபாதை மட்டுமல்ல; இதன் காரணமாக இங்கு அதிக அளவிலான செயல்பாடுகள் நடைபெறப்போகின்றன, பெரும் எண்ணிக்கையிலான வீரர்கள் இங்கு தங்கப்போகிறார்கள். இது இப்பகுதியின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்கப்போகிறது.

ஆனால், இவ்வளவு தாமதம் ஏற்பட்டதற்கு அன்று டெல்லியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கமே காரணம். அவர்களின் அலட்சியமான அணுகுமுறையே இதற்கு முழுக் காரணம். நாட்டின் பாதுகாப்பில் இத்தகைய அக்கறையின்மையை நாடு ஒருபோதும் மன்னிக்காது. டீசா விமான நிலையப் பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முடித்துக்கொடுத்தது எங்களது அரசாங்கம். இன்று இந்த விமான நிலையம் இப்பகுதியின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகவும், நாட்டின் மிகப்பெரிய உத்திசார்ந்த விமானநிலையமாகவும் மாறியுள்ளது. இந்த விமான நிலையத்திற்காகவும், இப்பகுதிக்காகவும் உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

வாவ்-தாராத் மற்றும் பனஸ்கந்தாவின் இந்தப் பகுதியுடன் எனக்கு எவ்வளவு பிணைப்பு உண்டு என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். நான் செல்லாத கிராமமே இங்கு இருக்க முடியாது; அங்கு ஒவ்வொன்றிலும் எனது நினைவுகள் பதிந்துள்ளன. இன்று நான் இங்கு வந்தபோது, பல முதியவர்களின் முகங்களைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. வரவேற்பு ஊர்வலம் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது, அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. தூரத்தில் இருந்தபடியே பல முதியவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் ஒரு அமைப்பின் பணியைச் செய்துகொண்டிருந்த காலத்தில், இப்பகுதியில் நான் நிறையப் பயணம் செய்திருக்கிறேன். ஸ்கூட்டரிலேயே சுற்றித் திரிந்திருக்கிறேன். அப்போது உங்களையெல்லாம் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கும். வடக்கு குஜராத்திற்கு நான் வரும்போது, தாய்மார்களும் சகோதரிகளும் மிகவும் சுவையான ரொட்டிகளைச் செய்து தருவார்கள். கம்பு ரொட்டி , நெய், வெல்லம், பூண்டுச் சட்னி, மற்றும் புதிய வெண்ணெய்! அந்த அன்பு, உங்களின் அளவற்ற பாசம்... இதை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. நீங்கள் என் மீது காட்டிய அன்பும், என்னை ஒரு குடும்பத்து மகனாக வளர்த்தெடுத்த விதமும், அதனால்தான் நான் எங்கிருந்தாலும் அந்த அன்பிற்கு வட்டியும் முதலுமாக வளர்ச்சியைத் தந்து திருப்பிச் செலுத்த முயல்கிறேன். இங்கு என்னுடன் இரவு பகலாகப் பணியாற்றிய அமைப்பின் பல பழைய தொண்டர்கள் இருக்கிறார்கள். பல பெரியவர்கள் இன்று நம்மிடையே இல்லை, ஆனால் அவர்களுடன் சேர்ந்து நான் நிறையக் கற்றுக்கொண்டேன். அத்தகைய நண்பர்கள் அனைவரும், இன்று பாஜக தொண்டர்களின் ஒரு புதிய தலைமுறைக்கு முன்னால் நிற்கிறார்கள். இத்தகைய வெற்றிகரமான தலைமுறை இருக்கும்போது, வாழ்க்கையில் ஏதோ ஒன்றைச் சாதித்துவிட்டோம் என்ற திருப்தி ஏற்படுகிறது. நமது இளம் தொண்டர்கள், அதே திறமையுடன் அமைப்பின் பணிகளை முன்னெடுத்துச் செல்வதை நான் இன்று காண்கிறேன். இந்த நிகழ்ச்சி, இந்த மாநாடு, இதன் ஏற்பாடுகள், மற்றும் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் நீங்கள் இங்கு கூடியிருப்பது இதற்குச் சான்றாகும். நான் மேடையின் இரு முனைகளுக்கும் சென்றேன். எவ்வளவு தூரம் பார்க்க முடியுமோ அவ்வளவு தூரம் என் கையை நீட்டிக் காட்டினேன். என் பார்வை எட்டும் தூரத்திற்கும் அப்பால் மக்கள் அமர்ந்திருப்பதையும், இன்னும் பலர் வெளியே நின்று கொண்டிருப்பதையும் என்னால் உணர முடிந்தது. பனஸ்கந்தா மட்டுமல்லாமல், படான், மெஹ்சானா எனப் பல மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்திருப்பதைக் காண முடிந்தது. இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக, எனது தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மீண்டும் ஒருமுறை தலைவணங்குகிறேன்.

நண்பர்களே,

இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன; அன்றுதான் நீங்கள் பனஸ்கந்தா மற்றும் இப்பகுதியின் வளர்ச்சிப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தீர்கள். நான் குஜராத்தில் இருந்தவரை, இந்த பணியை ஒரு இயக்கமாகவே முன்னெடுத்தேன்; குஜராத்தை எவ்வளவு தூரம் முன்னேற்ற முடியுமோ அவ்வளவு தூரம் முன்னேற்றினேன். பல தசாப்தங்களாக நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள், இப்பகுதி புறக்கணிக்கப்பட்ட நிலை என அனைத்து இன்னல்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. வளர்ச்சியின் மீதான எதிர்பார்ப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேறிக் கொண்டே வந்தன. நான் இங்கே தொடங்கி வைத்த அந்த வளர்ச்சிப் பயணம், இன்று வரை எந்தத் தடங்கலும் இன்றித் தொடர்வதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன். 2014-ம் ஆண்டிலிருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த ஆட்சியின் வலிமையும் இதனுடன் இணைந்துள்ளது. இன்றும், சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய மற்றும் மாநில அரசின் திட்டங்கள் இங்கே தொடங்கப்படுகின்றன. 20 ஆயிரம் கோடி ரூபாய்! இந்தத் திட்டங்கள் இப்பகுதியின் ஒட்டுமொத்த முகத்தையே மாற்றப்போகின்றன. எரிசக்தி, சாலை, ரயில்வே மற்றும் வீட்டுவசதித் துறை தொடர்பான இந்தத் திட்டங்கள், இங்குள்ள மக்களின் வாழ்க்கைக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும். இந்த வளர்ச்சிப் பணிகள் அனைத்திற்காகவும், வாவ்-தாராத், பனஸ்கந்தா மற்றும் ஒட்டுமொத்த குஜராத் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

சாலைக் கட்டமைப்பு தொடர்பான எந்தெந்தத் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டதோ, அவை ஒட்டுமொத்த வடக்கு குஜராத்திற்கும் வேகத்தை அளிக்கும். இங்கே புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும். இடர் முதல் வடலி  பைபாஸ் வரையிலான 4 வழிச்சாலை மற்றும் தோலவிரா முதல் சந்தல்பூர் வரையிலான நெடுஞ்சாலையை மேம்படுத்தும் பணி ஆகியவை, கிராமங்களைச் சந்தைகளுடனும், விவசாயிகளைப் புதிய வாய்ப்புகளுடனும், இளைஞர்களை வேலைவாய்ப்புடனும் இணைக்கும். அகமதாபாத்-தோலேரா விரைவுச்சாலை, இந்த முழு வழித்தடமும் இன்று இப்பகுதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெரிய இணைப்பு வசதிகள் உருவாகும்போது, அதனுடன் தொழில்துறைகளும், முதலீடுகளும் தேடி வரும். மேலும், இப்பகுதியின் ரயில் போக்குவரத்து இணைப்பும் மேம்படுத்தப்பட்டுள்ளது. ஹிமத்நகரிலிருந்து கேத்பிரும்மா வரையிலான அகலப்பாதையாக மாற்றும் பணி, வடக்கு குஜராத்தின் நமது பழங்குடியினப் பகுதியை தேசிய அகலப்பாதை  வலைப்பின்னலுடன் இணைக்கிறது. கேத்பிரும்மா, ஹிமத்நகர் மற்றும் அசர்வாவை இணைக்கும் புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.

சகோதர சகோதரிகளே,

சிறந்த சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில்வே தொடர்பான இந்தத் திட்டங்கள் அனைத்தும் குஜராத்தின் முழுமையான வளர்ச்சிக்கான திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, நமது முழு கவனமும் இங்குள்ள எரிசக்தி தேவைகள் மீதும் உள்ளது. ஏனெனில், புதிய தொழில்கள், புதிய முதலீடுகள் மற்றும் புதிய வாய்ப்புகள் மின்சாரம் இருந்தால்தான் வரும். அதனால்தான், கவ்தா  புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா தொடர்பான மின் கடத்திக் கட்டமைப்புகள் இன்று மிகவும் முக்கியமானவை. இங்கிருந்து 4.5 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இந்த மின்சாரம் புதிய தொழிற்சாலைகளுக்குப் பயன்படும், உங்கள் வீடுகளைச் சென்றடையும், மேலும் விவசாயிகளின் விளைநிலங்களுக்கும் பலன் தரும்.

நண்பர்களே,

இன்று சூரிய மின்சக்தித் துறையில் குஜராத்தின் கொடி கம்பீரமாகப் பறக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் குஜராத் இவ்வளவு முன்னேறியிருப்பதற்குக் காரணம், இந்தியாவில் இத்துறை மீது பெரிய அளவில் கவனம் செலுத்தப்படாத காலத்திலேயே குஜராத் அதைத் தொடங்கிவிட்டதுதான். 2010-ம் ஆண்டில், அதாவது இன்று முதல் 15-16 ஆண்டுகளுக்கு முன்பு, நான் முதலமைச்சராக இருந்தபோது, சரங்காவில் உள்ள ரத்தன்பூர் அருகே நாட்டின் முதல் சூரிய மின் பூங்காவின் பணிகளைத் தொடங்கி வைத்தேன். இப்போது 15-16 வயதுள்ள குழந்தைகள் அப்போது பிறந்திருக்கக்கூட மாட்டார்கள். இதுவே சூரிய ஆற்றல் இயக்கத்தைத் தொடங்கி வைத்த ஒரு பன்முகத் தொழில்நுட்பப் பூங்காவாகும். இன்று குஜராத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி நடக்கும் விதம் மற்றும் கவ்தா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா போன்ற இன்றைய திட்டங்கள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, குஜராத் உலகிலேயே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மிகப்பெரிய மையமாக உருவெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

நண்பர்களே,

இன்று உலகில் இந்தியாவின் வளர்ச்சியைப் பற்றிப் பேசப்படும்போது, இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைப் பற்றி விவாதிக்கப்படும்போது, 'குஜராத் மாதிரி' புகழப்படுகிறது. வளர்ச்சிக்குக் கட்டமைப்புத் திட்டங்கள் எவ்வளவு அவசியமோ, அதே அளவு மக்கள் நலத் திட்டங்களும் அவசியம் என்பதை குஜராத் நிரூபித்துக் காட்டியுள்ளது. அதாவது, சாலைகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே ஆகியவற்றின் வளர்ச்சி நடைபெற வேண்டும்; அதேசமயம் கிராமப்புற மக்கள், ஏழைகள் மற்றும் சாமானிய மனிதர்களின் வாழ்க்கைத்தரமும் மேம்பட வேண்டும். பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் மூலம் இதை இன்று நம் கண்முன்னே காண்கிறோம். இன்று நீங்கள் இங்கு கவனித்துப் பாருங்கள்; குஜராத்தில் 40 ஆயிரம் குடும்பங்கள் பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் நிரந்தர வீடுகளை பெற்றுள்ளனஆயிரக்கணக்கான குடும்பங்களுங்கு  கிடைத்துள்ள இந்த நிரந்தர வீடுகளின் வசதி, அவர்களுக்கு ஒரு பாதுகாப்பைத் வழங்குகிறது. அது அவர்களின் வாழ்க்கையின் அடையாளமாக மாறுகிறது, மேலும் புதிய கனவுகளை மெருகேற்றுவதற்கான துணிச்சலை அவர்களுக்கு வழங்குகிறது. இதிலிருந்து அவர்களின் வாழ்வில் எவ்வளவு பெரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன! இதுவரை சொந்தமாக வீடு இல்லாமல், நடைபாதைகளிலும், குடிசைகளிலும், களிமண்ணால் ஆன ஓலை வீடுகளிலும் வாழ்நாளைக் கழித்தவர்களுக்கு, இப்போது பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தில் நிரந்தர வீடுகள் கிடைத்துள்ளன. இதற்காக அவர்கள் அளிக்கும் வாழ்த்துகள் எனக்குக் கிடைக்க வேண்டுமா, கூடாதா? புண்ணியம் கிடைக்க வேண்டுமா, கூடாதா? இந்த புண்ணியம் யாருடைய கணக்கில் சேரும்? யாருடைய கர்மபலனில் சேரும்? இன்று 40 ஆயிரம் பேர் வீடுகளைப் பெற்றுள்ளனர் என்றால், அவர்களின் வாழ்த்துகளுக்கும், அவர்களின் புண்ணியத்திற்கும் உரிமையாளர்கள் நீங்கள்தான். நீங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்கள்; உங்கள் ஒரு வாக்குகளின் பலம்தான் எனக்குச் சேவை செய்யும் வாய்ப்பை வழங்கியது. அதன் மூலமாகவே 40 ஆயிரம் பேருக்கு நிரந்தர வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த புண்ணியத்திற்குச் சொந்தக்காரர்கள் நீங்கள்தான், நான் வெறும் ஒரு கருவி மட்டுமே. இன்று பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று நான் உங்கள் மத்தியில் வந்துள்ளதால், இப்பகுதியின் பல தசாப்தங்களுக்கு முந்தைய நிலை என் நினைவுக்கு வருகிறது. வடக்கு குஜராத் என்ற பெயரைக் கேட்டாலே மக்களின் மனதில் ஒரு தனி பிம்பம் உருவாகும் அந்த நாட்களை யாராலும் மறக்க முடியாது. வறட்சி, பஞ்சம், தண்ணீர்ப் பற்றாக்குறை என 10 ஆண்டுகளில் 7 முறை பஞ்சம் ஏற்பட்டது. தண்ணீர் பிடிக்க குடங்களைச் சுமந்து கொண்டு 3-4 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருந்தது. போராட்டங்கள் நிறைந்த அந்த வாழ்க்கை, காங்கிரஸ் அரசாங்கங்கள் எங்களைத் தொடர்ந்து புறக்கணித்த அந்த நாட்களை நம்மில் யாரால் மறக்க முடியும்? பல கிலோமீட்டர் தூரத்திலிருந்து தண்ணீர் கொண்டு வர வேண்டியிருந்தது. வீடுகளில் உள்ள பெண்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் நேரத்தில் பெரும்பகுதி தண்ணீரைத் திரட்டுவதிலேயே செலவானது. தண்ணீர் பற்றாக்குறையினால், விவசாயிகளுக்கு அவர்களின் கடின உழைப்பிற்கேற்ற சரியான பலனும் கிடைக்கவில்லை. கால்நடை வளர்ப்பவர்களும் தங்கள் விலங்குகளுக்குத் தண்ணீர் மற்றும் தீவனம் கிடைக்குமா என்று கவலைப்பட்டுக் கொண்டே இருந்தனர். இந்தப் பிரச்சினை நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்தது. முன்னொரு காலத்தில், கோடை காலம் வந்துவிட்டால் இங்கெல்லாம் கால்நடை பராமரிப்பு முகாம்கள் நடத்தப்படும். அரசாங்கம் புற்களைக் கொண்டு வந்து கொடுக்கும். குடிநீருக்கே பெரும் சிரமம் நிலவும். ஆனால், இரண்டு தசாப்தங்கள் கடந்துவிட்டன, அந்த அவலநிலை முற்றிலும் நின்றுவிட்டது. இப்போது அது எங்கும் தெரிவதில்லை, அதற்கான தேவையுமில்லை. குஜராத் மக்களின் மன உறுதி இதுதான்; நம் கடின உழைப்பால் விதியை மாற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை நாம் இணைந்து எடுத்தோம். நீர்வள செழிப்பு  திட்டத்தின் மூலம் தண்ணீர் பிரச்சினையைத் தீர்த்தோம். நர்மதை நதிநீர் தொலைதூரப் பகுதிகளுக்கும் சென்று சேரத் தொடங்கியது. புதிய நீர்ப்பாசன முறை உருவாக்கப்பட்டது.

நண்பர்களே,

இன்று இங்கிருக்கும் விவசாயி ஒரே ஒரு பயிரைச் சார்ந்து இருப்பதில்லை. அவர் தனக்கு ஏற்றவாறு விவசாயத்தைத் திட்டமிடுகிறார். உருளைக்கிழங்கு உற்பத்தியில் இன்று பனஸ்கந்தாவின் பெயர் எந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறதோ, அதுவே அதற்குச் சிறந்த உதாரணமாகும்.

அதேபோல், சகோதர சகோதரிகளே,

இன்று நாம் முன்னெடுத்துச் செல்லும் இந்த வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் ஒட்டுமொத்த வடக்கு குஜராத்திற்கும் பலனளிக்கும். வாவ்-தாராத், பனஸ்கந்தா, படான் மற்றும் மெஹ்சானா என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்; சிறப்பான வாழ்க்கைக்கான பாதைகள் திறக்கப்படும்.

நண்பர்களே,

கடந்த 25 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற மாபெரும் பயணத்தை எவ்விதத் தொய்வும் இன்றித் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுதான் குஜராத்தின் மிகப்பெரிய பலம். குஜராத் புதிய சாதனைகளைப் படைத்தது; தன் சொந்தச் சாதனைகளைத் தானே முறியடித்தது. பிறகு புதிய சாதனைகளைப் படைத்தது, மீண்டும் அதை முறியடித்தது, மீண்டும் புதிய சாதனைகளைப் படைத்தது. இப்பதான் குஜராத்தின் கட்டமைப்புத் திட்டங்கள் பற்றிப் பேசினோம்; அதேபோல், ஒட்டுமொத்த குஜராத்திலும் கிராமத்திற்கு கிராமம் சிறந்த சாலைகளை இணைத்தோம். அதிவேக நெடுஞ்சாலைகளை உருவாக்கினோம். வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில் வசதிகளும் இன்று குஜராத்திற்கு கிடைத்து வருகின்றன.

சகோதர சகோதரிகளே,

குஜராத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் வளர்ச்சியை எடுத்துச் செல்ல, 2005-ம் ஆண்டில் நான் 'நகர்ப்புற வளர்ச்சி ஆண்டைதொடங்கினேன். அப்போது அதன் பட்ஜெட் சுமார் 650 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், வளர்ச்சியின் சக்கரம் எவ்வளவு வேகமாகச் சுழன்றது என்றால், இன்று அந்த பட்ஜெட் 33 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்தப் பாதையில், 9 புதிய மாநகராட்சிகளுக்காக சுமார் 2,300 கோடி ரூபாய் மதிப்பிலான 300 திட்டங்கள் ஒப்புதலுக்காக வந்துள்ளன. 72 நகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டு குஜராத் அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் கூட 4 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். இந்த நிதி கிராமங்கள், நகரங்கள் மற்றும் மாநகரங்களின் மாற்றத்திற்காகச் செலவிடப்படும். ஒவ்வொரு கிராமத்திலும் மேம்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குழாய்கள் மூலம் வீடு வீடாகத் தண்ணீர் கொண்டு சேர்க்கப்படுகிறது.

சகோதர சகோதரிகளே,

பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை உங்கள் நம்பிக்கை இருக்கும் வரை, வளர்ச்சியின் இந்த அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இதே வேகத்தில் ஓடிக்கொண்டே இருக்கும்.

நண்பர்களே,

இந்தியாவின் மிகப்பெரிய பலம் எப்போதும் என்னவென்றால்காலம் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், அந்தச் சோதனையான நேரத்தில் நம் நாடு ஒற்றுமையுடன் நின்றதுதான். நீங்கள் சில காலமாகவே கவனித்து வருகிறீர்கள், உலகின் பல நாடுகள் போர், அமைதியின்மை மற்றும் உறுதியற்ற சூழலால் சூழப்பட்டுள்ளன. மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள நிலைமை ஒட்டுமொத்த உலகையும் பாதித்துள்ளது. உலகம் முழுவதும் எரிசக்தி தேவைகள், டீசல், பெட்ரோல் மற்றும் எரிவாயு தொடர்பான நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. இத்தகைய இக்கட்டான சூழலிலும், இந்தியா அந்தச் சூழ்நிலைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதற்குப் பின்னால் நாட்டின் வெற்றிகரமான வெளியுறவுக் கொள்கையும், நாட்டு மக்களின் ஒற்றுமையுமே உள்ளன.

ஆனால் சகோதர சகோதரிகளே,

துரதிர்ஷ்டவசத்தைப் பாருங்கள், உலகளாவிய நெருக்கடி காலத்தில்கூட நம் நாட்டில் சில அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காகப் பாடுபடுவதைத் தவிர்க்கவில்லை! இந்த அரசியல் சதியில் யாராவது முன்னணியில் இருக்கிறார்கள் என்றால், அது காங்கிரஸ் கட்சிதான்! இன்று நாட்டை ஒற்றுமையாகவும், ஒரே திரளாகவும் வைத்திருக்க வேண்டிய தருணத்தில், காங்கிரஸ் தலைவர்கள் நாட்டைப் பிரிக்கும் வேலையில் மும்முரமாக இருக்கிறார்கள். இன்று நாடு நம்பிக்கையை எதிர்பார்க்கும் நிலையில், காங்கிரஸ் பயத்தையும் வதந்திகளையும் பரப்புவதில் பிஸியாக இருக்கிறது. இன்று நாடு கட்டுப்பாட்டுடனும், பொறுமையுடனும் இருக்க வேண்டிய நிலையில், காங்கிரஸ் மக்களைத் தூண்டிவிடும் செயல்களில் ஈடுபட்டுள்ளது. அரசியல் கழுகுகளைப் போல, நாடு எப்போது இக்கட்டான நிலைக்குச் செல்லும் என்றும், அந்தச் சாக்கில் தங்களுக்கு எப்படியாவது அரசியல் ஆதாயம் கிடைக்கும் என்றும் காங்கிரஸ் காத்திருக்கிறது!

சகோதர சகோதரிகளே,

இன்று சிறிய நாடுகள் முதல் உலகின் வல்லரசு நாடுகள் வரை, டீசல் மற்றும் பெட்ரோல் விலை எங்கோ 10 சதவீதமும், எங்கோ 20 சதவீதமும், எங்கோ 25 சதவீதம் வரையிலும் அதிகரித்துள்ளது. ஆனால், இந்தியா அதன் பாதிப்பை நாட்டு மக்கள் மீது விழ விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது. இதை காங்கிரஸால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், நாட்டில் பயம் மற்றும் பதற்றமான சூழலை உருவாக்கவும், பெட்ரோல் பங்குகள் மற்றும் எரிவாயு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று குழப்பத்தை ஏற்படுத்தவும் காங்கிரஸ் தொடர்ந்து வதந்திகளைப் பரப்பி வருகிறது. இதைப் பற்றிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம்!

நண்பர்களே,

அதிகாரத்தில் இல்லாதது காங்கிரஸ் கட்சிக்கு ஒருவிதமான சித்தப்பிரமையைத் தருகிறது. சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில்  இதைக் கண்டிருப்பீர்கள். உலகம் முழுவதிலுமிருந்து விருந்தினர்கள் வந்திருந்தனர், தில்லியின் அந்த உச்சி மாநாடு உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. ஆனால், எதிர்ப்பைக் காட்டுவதற்காகக் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்டனர். இந்தியாவின் பிம்பம் உலகின் முன்னால் கெட்டுவிட வேண்டும் என்பதே அவர்களின் முயற்சியாக இருந்தது! இத்தகைய இக்கட்டான சூழலிலும், இந்தியாவை வெறுக்கும் அந்நிய சக்திகளின் மொழியையே காங்கிரஸ் பேசுகிறது. காங்கிரஸின் இந்தச் சதி குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும்.

நண்பர்களே,

இந்தியா எந்தவொரு கடினமான சூழ்நிலையையும் உறுதியுடன் எதிர்கொள்ளும் என்பதை, கொரோனா காலத்திலும் நாம் நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதுபோலவே, இதுவும் நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து இருக்க வேண்டிய காலமாகும். இன்று ஒட்டுமொத்த உலகமும் தற்காப்பில் மட்டும் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போது, இந்தியா நிலைத்தன்மையைப் பேணுவதோடு மட்டுமல்லாமல், வளர்ச்சியின் பாதையில் ஒவ்வொரு நாளும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பது குறித்து நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். இன்று குஜராத்தில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்ததும், அடிக்கல் நாட்டியதும் இதற்கு ஒரு நேரடிச் சான்றாகும். இந்த வளர்ச்சிப் பணிகளுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டு மக்களின் பொறுமை, ஒத்துழைப்பு மற்றும் ஒழுக்கத்திற்காக அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இப்போது உங்கள் ஆசீர்வாதங்களை ஏற்றுக்கொண்டு நான் அடுத்த கட்டப் பயணத்தைத் தொடர்கிறேன். மிக்க நன்றி.

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான தமிழாக்கம் ஆகும். மூல உரை இந்தி மொழியில் நிகழ்த்தப்பட்டது.

----

(Release ID:2247400)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2282316) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam