பிரதமர் அலுவலகம்
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் மோதல் குறித்து பிரதமர் மக்களவையில் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
23 MAR 2026 3:25PM by PIB Chennai
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
மேற்கு ஆசியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மோதல்கள் மற்றும் அதனால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்துப் பேசுவதற்காக இந்த மதிப்பிற்குரிய சபையின் முன் நான் வந்துள்ளேன். மேற்கு ஆசியாவின் நிலைமை மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. கடந்த இரண்டு மூன்று வாரங்களாக, திரு. ஜெய்சங்கர் அவர்களும், திரு. ஹர்தீப் பூரி அவர்களும் இது தொடர்பாக அவசியமான தகவல்களை இந்தச் சபைக்கு வழங்கியுள்ளனர். தற்போது இந்த நெருக்கடி மூன்று வாரங்களுக்கும் மேலாக நீடித்து வருவதால், உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தில் அதன் மோசமான தாக்கம் தெளிவாகத் தெரிகிறது. இந்த நெருக்கடிக்கு விரைவான தீர்வு காணப்பட வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்தி வருகின்றன.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தப் போர் இந்தியாவிற்குப் பொருளாதாரம், தேசிய பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான ரீதியிலான எதிர்பாராத சவால்களை உருவாக்கியுள்ளது. போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுடனும், அதனால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுடனும் இந்தியா விரிவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளது. போர் நடக்கும் இந்தப் பகுதி, உலகின் பிற பகுதிகளுடனான நமது வர்த்தகத்திற்கு ஒரு முக்கியமான பாதையாகவும் உள்ளது. மிக முக்கியமாக, நமது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் பெரும்பகுதி இந்தப் பகுதியின் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
மற்றொரு காரணத்திற்காகவும் இந்தப் பகுதி நமக்கு மிக முக்கியமானது—சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசித்து வருகிறார்கள் மற்றும் பணிபுரிகிறார்கள். இப்பகுதியில் பயணிக்கும் வணிகக் கப்பல்களில் ஏராளமான இந்திய மாலுமிகளும் பணியாற்றி வருகின்றனர். இந்த அனைத்துக் காரணங்களாலும், இந்தியாவின் கவலைகள் இயற்கையாகவே அதிகமாக உள்ளன. எனவே, இந்த நெருக்கடி குறித்து இந்திய நாடாளுமன்றத்திலிருந்து ஒருமித்த மற்றும் தெளிவான குரல் உலகிற்குச் செல்வது அவசியமாகும்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
போர் தொடங்கியதிலிருந்து, பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் தேவையான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. பெரும்பாலான மேற்கு ஆசிய நாடுகளின் அதிபர்களுடன் நானே இரண்டு முறை தொலைபேசியில் பேசியுள்ளேன். அவர்கள் அனைவரும் இந்தியர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு உறுதி அளித்துள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, இக்காலகட்டத்தில் சிலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் சிலர் காயமடைந்துள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில், அவர்களின் குடும்பங்களுக்குச் சாத்தியமான அனைத்து ஆதரவும் வழங்கப்பட்டு வருகிறது, மேலும் காயமடைந்தவர்களுக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள நமது தூதரகங்கள் அனைத்தும் இந்தியர்களுக்கு உதவுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் தொழிலாளர்களாக இருந்தாலும் சரி அல்லது சுற்றுலாப் பயணிகளாக இருந்தாலும் சரி, அனைவருக்கும் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. நமது தூதரகங்கள் அவ்வப்போது முறையான ஆலோசனைகளை வழங்கி வருகின்றன. இந்தியாவிலும், பாதிக்கப்பட்ட பிற நாடுகளிலும், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் அவசர உதவி எண்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனுக்குடன் தகவல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
நெருக்கடியான காலங்களில், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பிற்கு நாங்கள் மிக உயர்ந்த முன்னுரிமை அளித்து வருகிறோம். போர் தொடங்கியதிலிருந்து, 3,75,000-க்கும் அதிகமான இந்தியர்கள் பாதுகாப்பாக தாயகம் திரும்பியுள்ளனர். ஈரானில் இருந்து மட்டும், மருத்துவக் கல்வி பயிலும் 700-க்கும் மேற்பட்ட இளம் மாணவர்கள் உட்பட சுமார் 1,000 இந்தியர்கள் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியப் பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். அத்தகைய பள்ளிகளில் திட்டமிடப்பட்டிருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை சிபிஎஸ்இ ரத்து செய்துள்ளது. இந்தக் குழந்தைகளின் கல்வி தடையின்றித் தொடருவதை உறுதி செய்ய சிபிஎஸ்இ தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது அரசு எவ்வளவு உணர்திறன்மிக்கதாகவும், விழிப்புடனும், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராகவும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தியா தனது கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் உரங்களை 'ஹார்முஸ் நீரிணை' வழியாகப் பெருமளவில் இறக்குமதி செய்கிறது. போர் தொடங்கியதிலிருந்து, இந்த ஜலசந்தி வழியாகக் கப்பல் போக்குவரத்து என்பது பெரும் சவாலாக மாறியுள்ளது. இருப்பினும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய நமது அரசு பணியாற்றி வருகிறது. சாதாரணக் குடும்பங்களுக்கு ஏற்படும் சிரமங்களைக் குறைப்பதே எங்களது நோக்கமாக உள்ளது. இந்தியாவின் எல்பிஜி தேவையில் 60 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக, எல்பிஜியை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு வழங்குவதில் அரசு முன்னுரிமை அளிப்பதோடு, உள்நாட்டு உற்பத்தியையும் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்யத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இன்றைய சூழ்நிலையில், எரிசக்தி பாதுகாப்பிற்காக கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இன்னும் பொருத்தமானவையாக மாறியுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில், இந்தியா தனது எரிசக்தி இறக்குமதியைப் பன்முகப்படுத்தியுள்ளது. முன்னதாக, கச்சா எண்ணெய், எல்என்ஜி மற்றும் எல்பிஜி ஆகியவை 27 நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இன்று, இந்தியா 41 நாடுகளிலிருந்து எரிசக்தியை இறக்குமதி செய்கிறது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
கடந்த பத்தாண்டுகளில், நெருக்கடி காலங்களுக்காகக் கச்சா எண்ணெய் சேமிப்பிற்கும் இந்தியா முன்னுரிமை அளித்துள்ளது. இன்று, இந்தியா 5.3 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மூலோபாய பெட்ரோலிய இருப்பு வசதியைக் கொண்டுள்ளது, மேலும் அதை 6.5 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் மேலாக விரிவுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நமது எண்ணெய் நிறுவனங்கள் பராமரிக்கும் இருப்புகள் இதிலிருந்து தனிப்பட்டவை. கடந்த 11 ஆண்டுகளில், நமது சுத்திகரிப்புத் திறனும் கணிசமாக அதிகரித்துள்ளது.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விநியோகஸ்தர்களுடன் அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வளைகுடா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கப்பல் போக்குவரத்துப் பாதைகளை இந்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. எண்ணெய், எரிவாயு, உரங்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் கப்பல்கள் பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைவதை உறுதி செய்வதே எங்களது நோக்கமாகும். நமது கடல்சார் வழித்தடங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க அனைத்து உலகளாவிய கூட்டாளிகளுடனும் நாங்கள் தொடர்ச்சியான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். இந்த முயற்சிகளின் விளைவாக, ஹார்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த நமது பல கப்பல்கள் சமீபத்தில் பாதுகாப்பாக இந்தியாவை வந்தடைந்துள்ளன.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்த நெருக்கடி நேரத்தில், நாட்டின் மற்றொரு தயாரிப்பு மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கடந்த 10-11 ஆண்டுகளில், எத்தனால் உற்பத்தி மற்றும் கலப்பு ஆகியவற்றில் முன்னெப்போதும் இல்லாத பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரு தசாப்தத்திற்கு முன்பு, இந்தியா சுமார் 1.5% எத்தனால் கலக்கும் திறனை மட்டுமே கொண்டிருந்தது. இன்று, பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் இலக்கை நெருங்கியுள்ளோம். இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 45 மில்லியன் பேரல் எண்ணெய் இறக்குமதி குறைந்துள்ளது. அதேபோல், ரயில்வே மின்மயமாக்கல் பெரும் பலன்களைத் தந்துள்ளது. இத்தகைய மின்மயமாக்கல் இல்லையென்றால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.8 பில்லியன் லிட்டர் கூடுதல் டீசல் தேவைப்பட்டிருக்கும். மெட்ரோ ரயில் வலையமைப்பையும் நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம். 2014-ல், இந்தியாவின் மெட்ரோ ரயில் சேவைகள் 250 கிலோமீட்டருக்கும் குறைவாகவே இருந்தது; இன்று அது சுமார் 1,100 கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. மின்சார வாகனப் பயன்பாட்டை நாங்கள் வலுவாக ஊக்குவித்துள்ளோம். மத்திய அரசு மாநிலங்களுக்கு 15,000 மின்சார பேருந்துகளை வழங்கியுள்ளது. இன்று மாற்று எரிபொருட்களில் எந்த அளவிற்குப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு இந்தியாவின் எதிர்காலம் இன்னும் பாதுகாப்பானதாக இருக்கும்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
பொருளாதாரத்தின் முதுகெலும்பு எரிசக்தி என்பதை நாம் அறிவோம், மேலும் உலகளாவிய எரிசக்தி தேவைகளை பூர்த்தி செய்வதில் மேற்கு ஆசியா ஒரு முக்கிய ஆதாரமாக உள்ளது. இயற்கையாகவே, தற்போதைய நெருக்கடியால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது, மேலும் இந்தியா குறைந்தபட்ச பாதிப்புகளை மட்டுமே எதிர்கொள்வதை உறுதி செய்யத் தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கருத்தில் கொண்டு ஒரு தெளிவான உத்தியுடன் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தின் அடிப்படைகள் வலுவாக உள்ளன, இது நாட்டிற்குப் பெரிதும் உதவியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் உள்ள சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நாங்கள் ஆலோசனைகளை நடத்தி வருகிறோம், தேவையுள்ள இடங்களில் உரிய ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அரசு ஓர் அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவையும் அமைத்துள்ளது, இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் உள்ள சிரமங்களை மதிப்பிடுவதற்கும், தேவையான தீர்வுகளைக் காண்பதற்கும் தினமும் கூடி ஆலோசிக்கிறது. அரசாங்கம் மற்றும் தொழில்துறையின் கூட்டு முயற்சிகள் மூலம், இந்தச் சூழ்நிலைகளை நம்மால் இன்னும் திறம்பட எதிர்கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன்.
மாண்புமிகு அவைத் தலைவர் அவர்களே,
இந்தப் போர் விவசாயத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒரு முக்கியமான கேள்வியாகும். நமது விவசாயிகள் நமது உணவு தானிய இருப்புகளை நிரப்பியுள்ளார்கள், எனவே இந்தியாவில் போதுமான உணவு இருப்பு உள்ளது. காரிஃப் பருவத்திற்கான விதைப்பு சரியாக நடப்பதையும் உறுதி செய்ய நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், அவசர காலங்களைச் சமாளிக்க உரங்களுக்கான போதுமான ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. கடந்த காலங்களிலும், உலகளாவிய நெருக்கடிகள் விவசாயிகளுக்குப் சுமையாக மாறாமல் இருப்பதை நமது அரசு உறுதிசெய்தது. கோவிட் காலத்திலும், அந்தச் சமயத்தில் நடந்த போர்களின் போதும், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் பாதிக்கப்பட்டன. உலகச் சந்தையில் ஒரு மூட்டை யூரியாவின் விலை ரூ.3000-ஐ எட்டியது, ஆனால் இந்திய விவசாயிகளுக்கு அதே மூட்டை ரூ.300-க்கும் குறைவான விலையிலேயே வழங்கப்பட்டது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இத்தகைய நெருக்கடிகளில் இருந்து விவசாயிகளைப் பாதுகாக்க, சமீபத்திய ஆண்டுகளில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த பத்தாண்டுகளில், நாட்டில் ஆறு யூரியா ஆலைகள் தொடங்கப்பட்டுள்ளன, இதன் மூலம் ஆண்டு உற்பத்தித் திறன் 7.6 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இக்காலகட்டத்தில், டிஏபி மற்றும் என்பிகேஎஸ் போன்ற உரங்களின் உள்நாட்டு உற்பத்தியும் கிட்டத்தட்ட 5 மில்லியன் மெட்ரிக் டன்கள் அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல், எண்ணெய் மற்றும் எரிவாயுவைப் போலவே, உர இறக்குமதியும் பன்முகப்படுத்தப்பட்டுள்ளது. டிஏபி மற்றும் என்பிகேஎஸ் இறக்குமதியிலும் நமது வாய்ப்புகளை நாங்கள் விரிவுபடுத்தியுள்ளோம்.
அரசு விவசாயிகளுக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'நானோ யூரியா' எனும் மாற்றையும் வழங்கியுள்ளது. இயற்கை விவசாயத்தை நோக்கி விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள். பிரதமரின் விவசாயிகளுக்கான எரிசக்தி பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 22 லட்சத்திற்கும் அதிகமான சூரிய சக்தி பம்புகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன, இது டீசல் மீதான அவர்களின் தேவையைக் குறைத்துள்ளது. இந்தச் சபையின் வாயிலாக, நாட்டிலுள்ள விவசாயிகளுக்கு அரசு தொடர்ந்து சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று நான் உறுதிளிக்கிறேன்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தப் போரின் மற்றொரு பெரிய சவால் என்னவென்றால், இந்தியாவில் கோடைகாலம் தொடங்குகிறது. வெப்பநிலை உயர்வால், வரும் மாதங்களில் மின்சாரத் தேவை அதிகரிக்கும். தற்போது, நாட்டில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் போதுமான நிலக்கரி இருப்பு உள்ளது. இந்தியா தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 1 பில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது. மின் உற்பத்தி முதல் மின் விநியோகம் வரை, நமது அனைத்து அமைப்புகளும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன; புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் நமது தயார்நிலைக்குப் பக்கபலமாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி இந்தியா முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இன்று, நமது மொத்த மின் உற்பத்தித்திறனில் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்தே கிடைக்கிறது. நமது மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் 250 கிகாவாட் என்ற வரலாற்று மைல்கல்லைக் கடந்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில், சூரிய சக்தி உற்பத்தித் திறன் சுமார் 3 கிகாவாட்டிலிருந்து 140 கிகாவாட்டாக உயர்ந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சுமார் 40 லட்சம் வீடுகளின் மேற்கூரையின் சூரிய சக்தி அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன; இதற்கு பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் கணிசமாக உதவியுள்ளது. கோபர்தன் என்ற கால்நடைச் சாணம் மற்றும் விவசாயக் கழிவுகளைப் பயன்படுத்தி உயிரி எரிபொருள் தயாரிக்கும் திட்டத்தின் கீழ், நாட்டில் 200 அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு ஆலைகள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளன. இந்த முயற்சிகள் அனைத்தும் இன்று மிகவும் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளன. 'அமிர்த கால எரிசக்தி மாற்ற' முன்முயற்சிகள் மூலம் அணுசக்தி உற்பத்தியையும் அரசு ஊக்குவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்புதான், சிறிய நீர்மின் திட்ட மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது, இது அடுத்த சில ஆண்டுகளில் 1500 மெகாவாட் புதிய நீர்மின் திறனைச் சேர்க்கும்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
ராஜதந்திரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் பங்கு தெளிவாக உள்ளது. ஆரம்பத்திலிருந்தே, இந்த மோதல் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வருகிறோம். மேற்கு ஆசியாவில் உள்ள அனைத்து முக்கியத் தலைவர்களுடனும் நானே நேரில் பேசியுள்ளேன். பதற்றத்தைக் குறைத்து மோதலை முடிவுக்குக் கொண்டு வருமாறு அவர்களை நான் வலியுறுத்தியுள்ளேன். பொதுமக்கள், எரிசக்தி மற்றும் போக்குவரத்து தொடர்பான உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை இந்தியா எதிர்த்துள்ளது. வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணை போன்ற சர்வதேச நீர்வழிகளில் ஏற்படுத்தப்படும் தடைகளும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ராஜதந்திரத்தின் மூலம், இந்தப் போர்ச் சூழலிலும் இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இந்தியா தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தியா எப்போதும் மனிதாபிமானத்திற்காகவும், அமைதிக்கு ஆதரவாகவும் தனது குரலை உயர்த்தி வந்துள்ளது. நான் மீண்டும் ஒருமுறை இதைக் கூறுகிறேன் - பேச்சுவார்த்தையும் ராஜதந்திரமுமே இந்தப் பிரச்சினைக்கு ஒரே தீர்வாகும். பதற்றத்தைக் குறைப்பதையும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதையுமே எங்களது அனைத்து முயற்சிகளும் நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தப் போரில் மனித உயிருக்கு ஏற்படும் எந்தவொரு அச்சுறுத்தலும் மனிதாபிமானத்திற்கு எதிரானது. எனவே, சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் மிக விரைவில் ஒரு அமைதியான தீர்வை நோக்கி ஊக்குவிப்பதே இந்தியாவின் முயற்சியாகும்.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இத்தகைய நெருக்கடி காலங்களில், சில சக்திகள் இந்தச் சூழ்நிலையைத் தவறாகப் பயன்படுத்தவும் முயல்கின்றன. எனவே, அனைத்துச் சட்ட அமலாக்க முகமைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கடற்கரைப் பாதுகாப்பு, எல்லைப் பாதுகாப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பு ஆகியவை பலப்படுத்தப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,
இந்தப் போர் நீண்ட காலத்திற்கு நீடிக்கக்கூடிய கடினமான உலகளாவியச் சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, நாம் தயாராகவும் ஒற்றுமையுடனும் இருக்க வேண்டும். கோவிட் நெருக்கடியின் போது இத்தகைய சவால்களை நாம் ஒற்றுமையுடன் எதிர்கொண்டோம். இப்போது மீண்டும், அதே வழியில் நாம் தயாராக வேண்டும். பொறுமை, நிதானம் மற்றும் அமைதியுடன் நாம் ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ள வேண்டும் - அதுவே நமது அடையாளம், அதுவே நமது பலம். அதே நேரத்தில், நாம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். சூழ்நிலையைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் பொய்களைப் பரப்ப முயல்வார்கள், ஆனால் நாம் அவர்களை வெற்றி பெற விடக்கூடாது.
இந்தச் சபையின் வாயிலாக, அனைத்து மாநில அரசுகளையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் - இத்தகைய காலங்களில் கள்ளச் சந்தைக்காரர்களும், பொருட்களைப் பதுக்குபவர்களும் தீவிரமாகச் செயல்படுவார்கள். எனவே கடுமையான கண்காணிப்பு அவசியமாகும், மேலும் இத்தகைய புகார்கள் எங்கு எழுந்தாலும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டின் ஒவ்வொரு அரசாங்கமும், ஒவ்வொரு குடிமகனும் இணைந்து செயல்படும்போது, நாம் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள முடியும். இந்த வேண்டுகோளுடன் எனது உரையை நிறைவு செய்கிறேன்.
மிக்க நன்றி.
----
(Release ID: 2243901
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2282074)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam