பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அசாம் மாநிலம் குவஹாத்தியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 13 MAR 2026 8:00PM by PIB Chennai

எனது அன்பிற்குரிய குவஹாத்தி குடிமக்களே, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அசாம் ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா அவர்களே, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக அமைச்சர் சர்பானந்த சோனோவால் அவர்களே, மாநில அரசின் அமைச்சர்களே, மக்கள் பிரதிநிதிகளே, தொழில்நுட்பம் வாயிலாக நாடு முழுவதிலும் இருந்து இந்த நிகழ்ச்சியில் இணைந்துள்ள விவசாய நண்பர்களே, தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் எனது சகோதர சகோதரிகளே, நாட்டின் மூலை முடுக்கிலிருந்தும் இன்று நம்முடன் இணைந்துள்ள மூத்த முதலமைச்சர்களே, உங்கள் அனைவருக்கும் எனது வணக்கங்கள்.

சகோதர சகோதரிகளே,

இன்று நவராத்திரிக்கு முன்னதாக, அன்னை காமாக்யா தேவியின் இந்தப் புனித பூமியில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்துள்ளது. அன்னை காமாக்யாவின் அருளுடன், சற்று நேரத்திற்கு முன்பு 19.5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு இங்கிருந்து அடிக்கல் நாட்டப்பட்டு, அவை அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. எரிசக்தி துறையில் அசாமைத் தற்சார்பு அடையச் செய்யும் திட்டங்கள் முதல், அசாமிற்கு வரும் மக்களின் வசதிக்கான பணிகள் வரை பல திட்டங்கள் இன்று அசாமிற்கு வழங்கப்பட்டுள்ளன.

இன்று நாட்டின் விவசாயிகளுக்கும், அசாம் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஒரு மிகப்பெரிய நாளாகும். சில நிமிடங்களுக்கு முன்புதான், பிரதமரின் விவசாயி கௌரவிப்பு நிதி திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை அனுப்பப்பட்டுள்ளது. இது தவிர, அசாம் தேயிலைத் தோட்டங்களுடன் தொடர்புடைய பல குடும்பங்களுக்கு இன்று நிலப்பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன. அசாம் மக்களுக்கும், இங்குள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் மற்றும் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

இன்று நாடு முழுவதிலும் உள்ள விவசாயத் தோழர்கள் அன்னை காமாக்யாவின் இந்த மண்ணுடன் இணைந்துள்ளனர். சற்று நேரத்திற்கு முன்பு, கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி வரவு வைக்கப்பட்டதற்கான குறுஞ்செய்திகள் அனைவருடைய மொபைல் போன்களுக்கும் வந்தடைந்திருக்கும். இந்தத் திட்டம் உண்மையிலேயே ஒரு அற்புதமானத் திட்டமாகும். ஒரே ஒரு கிளிக்கில், கோடிக்கணக்கான விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்படுகிறது. உலகின் வளர்ந்த நாடுகளில் கூட இத்தகைய விஷயம் சாத்தியமில்லை. வெளிநாட்டு விருந்தினர்கள் என்னைச் சந்திக்கும்போது, இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது என்று மிகுந்த ஆர்வத்துடன் பல கேள்விகளைக் கேட்கிறார்கள். உலகின் பெரிய நாடுகளின் பெரிய தலைவர்களுக்குக் கூட இது ஒரு பெரும் அதிசயமாகத் தெரிகிறது. 2014-ம் ஆண்டிற்கு முன்பு இவர்களில் பெரும்பாலான விவசாய சகோதர சகோதரிகளிடம் மொபைல் போனோ அல்லது வங்கிக் கணக்கோ கூட கிடையாது. ஆனால் இன்று, இத்தகைய கோடிக்கணக்கான விவசாயிகளின் கணக்குகளில் இதுவரை 4.3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 19 லட்சம் விவசாயிகளும் அடங்குவர். அவர்களுக்கு இதுவரை கிட்டத்தட்ட எட்டாயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

நண்பர்களே,

பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டம் தொடங்கப்பட்டபோது, வதந்திகளைப் பரப்புவதிலும் பொய்களைச் சொல்வதிலும் வல்லுநர்களான காங்கிரஸ் கட்சியினர், "மோடி இன்று இந்தப் பணத்தைத் தந்தாலும், தேர்தலுக்குப் பிறகு அதைத் திருப்பித் தர வேண்டியிருக்கும்" என்று கூறினார்கள்; பொய் சொல்வதில் அவர்கள் அந்த அளவிற்கு வல்லுநர்கள். ஆனால் இன்று, இந்த வருவாய் கௌரவிப்பு நிதி திட்டம் நாட்டின் சிறு விவசாயிகளுக்கான சமூகப் பாதுகாப்பு ஊடகமாக மாறியுள்ளது.

நண்பர்களே,

பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு விவசாயிகளின் நலனை விட மேலானது எதுவுமில்லை. விவசாயிகளுக்குப் பணம் என்று வரும்போது காங்கிரஸ் கட்சியினருக்கு மூச்சு முட்டியது. நான் உங்களுக்கு மற்றொரு உதாரணத்தைத் தருகிறேன். 2014-ம் ஆண்டிற்கு முன்பு, மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அந்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்ச ஆதரவு விலையாக  விவசாயிகளுக்கு 6.5 லட்சம் கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால் எங்களது ஆட்சியின் இந்த 10 ஆண்டுகளில், குறைந்தபட்ச ஆதரவு விலையாக விவசாயிகளுக்கு 20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை கிடைத்துள்ளது.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில், பாரதிய ஜனதா - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, நாட்டின் விவசாயிகளைச் சுற்றி ஒரு வலுவான பாதுகாப்பு கவசத்தைப் பின்னியுள்ளது. குறைந்தபட்ச ஆதரவு விலை, குறைந்த வட்டி கடன், பயிர் காப்பீடு அல்லது பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி என இந்தத் திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்குப் பெரும் ஆதரவாக மாறியுள்ளன. அதுமட்டுமின்றி, சர்வதேச நெருக்கடிகளின் தாக்கம் விவசாயத்தைப் பாதிக்காதவாறு நாங்கள் பார்த்துக் கொண்டுள்ளோம். கொரோனா மற்றும் அதற்குப் பிறகு ஏற்பட்ட போர்களின் காரணமாக, சர்வதேச சந்தையில் உரங்களின் விலை பல மடங்கு அதிகரித்தது. வெளிநாட்டுச் சந்தைகளில் உரம் கிடைப்பதே குதிரைக்கொம்பாக மாறியது. ஆனால் இந்த நெருக்கடியைத் தடுக்க இந்திய அரசு முழு முயற்சிகளையும் மேற்கொண்டது. சர்வதேச சந்தையில் 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படும் ஒரு மூட்டை யூரியாவை, நமது அரசு தனது விவசாயிகளுக்கு வெறும் 300 ரூபாய்க்கு மட்டுமே வழங்கியுள்ளது. இதன் சுமை என் நாட்டு விவசாயிகள் மீது விழுந்துவிடக் கூடாது என்பதற்காக, அரசு தனது கருவூலத்திலிருந்து 12 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட்டுள்ளது. இந்தச் சுமையை அரசாங்கம் தன் தோள்களில் சுமந்து கொள்கிறது.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில், தற்சார்பு தொடர்பாக பிஜேபி - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மற்றொரு மிகப்பெரிய பணியைச் செய்துள்ளது. விவசாயத்தைப் புற நெருக்கடிகளிலிருந்து பாதுகாக்கத் தற்சார்பு நிலையை நாங்கள் ஊக்குவித்துள்ளோம். சுதந்திர இந்தியாவில், உலகின் பிற பகுதிகளில் போர்கள் நடக்கும்போதோ அல்லது விநியோகச் சங்கிலியில் சிக்கல்கள் ஏற்படும்போதோ, அதன் பாதிப்பு நமது விவசாயிகளுக்கே உருவாவதை நாம் மீண்டும் மீண்டும் பார்த்திருக்கிறோம். சில நேரங்களில் உரங்கள் விலை உயர்ந்தன, சில நேரங்களில் டீசல் மற்றும் எரிசக்தி விலை அதிகரித்தது. பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சி நாட்டைப் பிற நாடுகளையே சார்ந்திருக்க வைத்ததுதான் இதற்குக் காரணம். இதனால் விவசாயச் செலவுகளும் அதிகரித்தன.

நண்பர்களே,

விவசாயிகள் புதிய தொழில்நுட்பங்களுடன் இணைய வேண்டும், புதிய நீர்ப்பாசன முறைகளுடன் இணைக்கப்பட வேண்டும், அதன் மூலம் பயிர்கள் பலன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், நமது அரசு 'சொட்டு நீருக்கு அதிக பயிர்'  என்ற கொள்கையை உருவாக்கி, சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் போன்ற நுண்நீர்ப்பாசனத் தொழில்நுட்பங்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்த்தது. இதன் காரணமாக நீர்ப்பாசனம் மேம்பட்டதுடன் செலவும் குறைந்தது. இன்று உங்கள் நிலங்களைச் சூரியசக்தி பம்புகளுடன் இணைக்க அரசு பணியாற்றி வருகிறது. டீசலுக்கான உங்கள் செலவு எவ்வளவு குறைவாக இருக்க முடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதே எங்களது முயற்சி. இதற்காகவே மத்திய அரசு 'குசும்' திட்டத்தை உருவாக்கியுள்ளது. இன்று பல விவசாயிகள் சூரியசக்தி பம்புகளை நிறுவி நீர்ப்பாசனம் செய்வது மட்டுமல்லாமல், அதன் மூலம் மின்சாரம் தயாரித்து பணமும் சம்பாதிக்க முடிகிறது. அதனால்தான் நான் சொல்கிறேன், 'உணவு அளிப்பவர் (அன்னதாதா), ஆற்றல் அளிப்பவராகவும் (ஊர்ஜதாதா) மாற வேண்டும்'.

நண்பர்களே,

விவசாயிகள் உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைச் சார்ந்திருப்பது குறைய வேண்டும் என்பதே எங்களது தொடர்ச்சியான முயற்சியாகும். காங்கிரஸின் தவறான கொள்கைகளால், நாட்டின் ஐந்து பெரிய உரத் தொழிற்சாலைகள் மூடப்பட்டன. அந்த உரத் தொழிற்சாலைகளை நாங்கள் மீண்டும் தொடங்கினோம். அத்துடன் விவசாயிகளை 'நானோ யூரியா'வுடன்  இணைக்கப் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று நாட்டின் விவசாயிகள் அதன் பலனைப் பெற்று வருகின்றனர். தற்போது பாரதிய ஜனதா - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள நாட்டின் விவசாயிகளை ஊக்குவித்து வருகிறது. விவசாயிகள் மிக அதிக அளவில் இயற்கை விவசாயத்தைக் கடைப்பிடிக்கும்போது, மண்ணும் பாதுகாப்பாக இருக்கும்; நமது உணவு அளிப்பவர்களும் உலகளாவிய நெருக்கடிகளிலிருந்து பாதுகாப்பாக இருப்பார்கள்.

நண்பர்களே,

ஒருபுறம் பாரதிய ஜனதா - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளுக்காகப் பணியாற்றி வருகிறது, நாட்டைத் தற்சார்புடையதாக மாற்றுவதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். ஆனால் இன்று காங்கிரஸ் எந்தச் சூழ்நிலையிலும் நாட்டிற்கு நேர்மையாக இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. இன்றும் போரினால் உருவான நெருக்கடிகளுக்கு மத்தியிலும், வதந்திகளைப் பரப்புவதிலும் எதிர்மறைப் பிரச்சாரங்களிலும் மட்டுமே காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நான் காங்கிரஸ் நண்பர்களுக்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்; ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலிருந்து பண்டித நேரு அவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டுப் பாருங்கள், நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஒருமுறை ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையிலிருந்து பண்டித நேரு பேசும்போது, "வடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே போர் நடக்கிறது, அதனால்தான் இந்தியாவில் பணவீக்கம் அதிகரிக்கிறது" என்று கூறுகிறார். வடகொரியா எங்கே இருக்கிறது, தென்கொரியா எங்கே இருக்கிறது, ஆனால் நேரு இங்கே பணவீக்கம் அதிகரிப்பதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். இன்றும் காங்கிரஸ்காரர்கள் நாட்டைத் தவறாக வழிநடத்துவதில் மும்முரமாக உள்ளனர். உலகளாவிய நெருக்கடிகளின் தாக்கம் என்ன என்பதை உலகம் இன்று பார்த்துக் கொண்டிருக்கிறது.

நண்பர்களே,

நமது சுத்திகரிப்பு நிலையங்களின்  வளர்ச்சி மற்றும் சுத்திகரிப்புத் திறனை விரிவாக்கம் செய்வதற்காகப் பாரதிய ஜனதா - தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பணியாற்றியுள்ளது. இன்று இந்தியா தனது தேவையை மட்டுமின்றி, உலகின் எரிசக்தி தேவைகளையும் கவனித்துக் கொள்ளக்கூடிய ஒரு நாடாகத் திகழ்கிறது. அசாமில் உள்ள நமது சுத்திகரிப்பு நிலையங்களும் கடந்த ஆண்டுகளில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அசாம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களிலும் எரிவாயுக் குழாய் கட்டமைப்பு வசதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடு செய்யப்படுகிறது. நுமலிகார் - சிலிகுரி இடையேயான குழாய்த்தடத்தை மேம்படுத்தும் பணியும் நிறைவடைந்துள்ளது. மேலும், உலகின் முதல் இரண்டாம் தலைமுறை பயோ-எத்தனால்  ஆலை அசாமின் கோலாகாட்டில் நிறுவப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் அனைத்தின் மூலமும் இந்தப் பிராந்தியம் முழுவதற்கும் மிகப் பெரிய பலன் கிடைக்கும்.

நண்பர்களே...

ரயில்வே துறை வெளிநாடுகளைச் சார்ந்திருப்பது குறைய வேண்டும் என்பதற்காகவும், நாம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெயைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவும் கடந்த பத்தாண்டுகளில் ஒரு மிகப்பெரிய பணி நடந்துள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில், இன்று நாட்டின் ஒட்டுமொத்த ரயில்வே கட்டமைப்பும் மின்சாரப் பாதைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. விரைவில் 100 சதவீத மின்மயமாக்கல் என்ற இலக்கை நாம் எட்டிவிடுவோம். இந்த மின்மயமாக்கல் காரணமாக, நாட்டில் சுமார் 175 கோடி லிட்டர் டீசல் சேமிக்கப்படுகிறது. அசாமிலும் ரயில்வே கட்டமைப்பை மின்மயமாக்கும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இன்றும் ரயில்வே மின்மயமாக்கல் தொடர்பான திட்டங்களின் தொடக்க விழாவும், அடிக்கல் நாட்டு விழாவும் இங்கு நடைபெற்றுள்ளன.

நண்பர்களே,

நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான தீர்மானங்களை நிறைவேற்றுவதில் அசாம் பெரும் பங்காற்றி வருகிறது. லோயர் கோபிலி நீர்மின் திட்டத்தின் மூலம் அசாம் உட்பட ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் பயன்பெறும். மிக முக்கியமாக, அசாமில் தொடங்கப்பட்டுள்ள இந்த ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள், அசாம் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், அசாமின் செழிப்பையும் அதிகரிக்கின்றன.

நண்பர்களே,

பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இரட்டை என்ஜின் அரசின் அடையாளம் என்பது உணர்வுப்பூர்வமான அணுகுமுறை மற்றும் நல்லாட்சியில் உள்ளது. நாட்டின் ஒவ்வொரு பிராந்தியத்தின் மற்றும் ஒவ்வொரு பிரிவினரின் வளர்ச்சியும் எங்களது முன்னுரிமையாகும். இதே உணர்வுடன், அசாம் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் நண்பர்களுக்காக இன்று ஒரு மிகப்பெரிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. யாருடைய கடின உழைப்பால் அசாமின் உலகளாவிய அடையாளம் வலுப்பெற்றதோ, யாருடைய தேயிலை நறுமணத்தால் உலகெங்கிலும் இந்தியாவின் பெருமை நிலைநாட்டப்பட்டதோ, அந்த நண்பர்களுக்கு இன்று பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மரியாதையையும் உதவியையும் வழங்கி வருகிறது.

கடந்த கால காங்கிரஸ் அரசுகள் இந்த நண்பர்களைக் கண்டுகொள்ளவே இல்லை; அவர்களுக்கு நிலத்திற்கான சட்டப்பூர்வ ஆவணங்கள் கூட இல்லை. ஹிமந்தா அவர்களையும் அவரது ஒட்டுமொத்த குழுவையும் நான் பாராட்டுகிறேன்; தேயிலைத் தோட்டங்களுடன் தொடர்புடைய இந்தக் குடும்பங்களுக்காக நீங்கள் ஒரு மிகப்பெரிய பணியைச் செய்துள்ளீர்கள். இன்று அசாம் அரசு இந்த வரலாற்று அநீதியை முடிவுக்குக் கொண்டுவரும் பணியைச் செய்து வருகிறது. தற்போது இந்தக் குடும்பங்களுக்குச் சொந்தமான நிலம் கிடைத்துள்ளது, மேலும் அவர்கள் நிரந்தர வீடுகளைப் பெறுவதற்கான வழியும் தெளிவாகியுள்ளது. இதன் மூலம் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் சகோதரிகள் குறிப்பாகப் பெரும் பயனடைவார்கள். தேயிலைத் தோட்டக் குடும்பங்களின் குழந்தைகள் நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதற்காகவும் பாஜக அரசு முழு வசதிகளையும் உருவாக்கியுள்ளது. அதனால்தான் ஒவ்வொரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியும் - "மீண்டும் ஒருமுறை பாஜக அரசு!" என்று கூறி வருகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, எனது தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களைக் கௌரவிப்பது என்பது நான் ஒரு கடனைத் திருப்பிச் செலுத்துவதைப் போன்றது. ஏனெனில், நீங்கள் தோட்டங்களில் உழைத்துக் கொண்டிருந்தபோது, அந்தத் தேயிலை இலை தூரத்திலுள்ள எனது குஜராத் கிராமத்தை வந்தடைந்தது; நான் தேநீர் விற்றுதான் இந்த நிலைக்கு வந்தேன். இப்போது சொல்லுங்கள், இந்தத் தேயிலைத் தோட்ட மக்களின் ஆசி இல்லையென்றால் நான் இந்த நிலையை எட்டியிருக்க முடியுமா? இவர்களின் தேநீர் எனது இடத்தை வந்தடைந்தது, இன்று நான் உங்கள் மத்தியில் வந்துள்ளேன். அன்னை காமாக்யா தேவியின் அருளைப் பாருங்கள், எனது தேயிலைத் தோட்டச் சகோதரர்களின் கடனைத் தீர்ப்பதற்கான வாய்ப்பை இன்று அன்னை எனக்கு வழங்கியுள்ளார்.

நண்பர்களே,

இன்று முதல் புகழ்பெற்ற நிமதி காட் மற்றும் விஸ்வநாத் காட் ஆகிய இடங்களில் நவீன உல்லாசக் கப்பல் முனையங்களை  அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளது. இது வெறும் உள்கட்டமைப்புத் திட்டம் மட்டுமல்ல; இது அசாமின் சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரத்திற்குப் புதிய திசையைக் காட்டும் பணியாகும். பாஜக அரசு சுற்றுலாவை வெறும் சுற்றிப் பார்க்கும் இடங்களாக மட்டும் சுருக்கிவிடாமல், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கான ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகப் பார்க்கிறது. இதே சிந்தனையுடன், பிரம்மபுத்திரா நதியிலும் நீர் வழிச் சுற்றுலாவுக்கான சாத்தியக்கூறுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த உல்லாசக் கப்பல் முனையம் கட்டப்படுவதன் மூலம், பிரம்மபுத்திரா நதியில் உல்லாசக் கப்பல்களை இயக்கும் பணி முன்னோக்கிச் செல்லும்; இதன் மூலம் நாட்டின் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அசாமை வந்தடைவது எளிதாகும். உல்லாசக் கப்பல் சுற்றுலா அதிகரிக்கும் போது, உள்ளூர் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். கைவினைஞர்கள் மற்றும் கைவினைப் பொருட்களுடன் தொடர்புடையவர்களுக்குப் புதிய சந்தை கிடைக்கும். சிறு கடைக்காரர்கள், படகோட்டிகள், ஹோட்டல் மற்றும் போக்குவரத்துத் துறையுடன் தொடர்புடையவர்களின் வருமானமும் அதிகரிக்கும். அதாவது, அசாமின் சுற்றுலா இப்போது வெறும் பயணத்துடன் மட்டும் நின்றுவிடாமல்; உள்ளூர் வளர்ச்சி மற்றும் பொது மக்களின் செழிப்பிற்கான புதிய எஞ்சினாக மாறி வருகிறது.

நண்பர்களே,

அசாம் இன்று நமது வடகிழக்கு மாநிலங்களின் புதிய எதிர்காலமான 'அஷ்டலட்சுமி'யின்  மாதிரியாக உருவெடுத்து வருகிறது. இங்குள்ள முன்னேற்றம் ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களுக்கும் புதிய வேகத்தைத் தருகிறது. கடந்த தசாப்தத்தில் அசாமில் பாஜக-தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள மாற்றம், அதன் தாக்கம் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் தெரிகிறது. அங்கேயும் மக்கள் பிஜேபி-தேசிய ஜனநாயகக் கூட்டணியின் இத்தகைய நல்லாட்சியை விரும்புகிறார்கள். எனவே, அசாமின் ஒவ்வொரு இளைஞரிடமும், ஒவ்வொரு குடும்பத்தினரிடமும் நான் கூறுவது என்னவென்றால், வளர்ந்த அசாமிற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து பாடுபட வேண்டும். அதன் மூலம் அசாம் நாட்டின் ஒரு மாதிரி மாநிலமாக உருவெடுக்க வேண்டும்.

இதே உத்வேகத்துடன், இந்த விழாவில் நம்முடன் இணைந்துள்ள மதிப்பிற்குரிய அனைத்து முதலமைச்சர்களிடமும் நான் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகிறேன் - இங்கே திறந்து வைக்கப்பட்டுள்ள 'பிரதமர் ஒற்றுமை வணிக வளாகம், உங்கள் மாநிலப் பொருட்களை இங்கே விற்பனை செய்ய நீங்களும் ஏற்பாடு செய்யுங்கள். இதற்காக நீங்கள் இங்கே ஒரு இடத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள்; அசாமில் இருப்பவர் கேரளா மாநிலப் பொருள் ஒன்றை விரும்பினால், அது இங்கேயே கிடைக்க வேண்டும்; மகாராஷ்டிராவின் பொருள் வேண்டுமென்றால் அது இங்கேயே கிடைக்க வேண்டும்; குஜராத் அல்லது ராஜஸ்தானின் பொருட்கள் வேண்டுமென்றால் அவை இங்கேயே கிடைக்க வேண்டும். அதாவது, ஒட்டுமொத்த நாட்டின் ஒற்றுமையைப் பறைசாற்றும் ஒரு பார்வையாக இது இருக்க வேண்டும்.

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் இந்த வணிக வளாகத்தில்  இடம்பெற வேண்டும்; அசாமின் ஒவ்வொரு மாவட்டமும் இந்த மாலில் இடம்பெற வேண்டும். 'ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு'  என்பதன் அடிப்படையில், ஒருவர் பிரதமர் ஒற்றுமை வணிக வளாகம் சென்றால் அவர் அங்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் காண வேண்டும். அசாம் மண்ணிலிருந்து முழு நாட்டிற்கும் ஒரு முன்மாதிரி கிடைக்கும் என்றும், நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் இத்தகைய ஏக்தா மால்கள் வெற்றிகரமாக உருவாக்கப்படும் என்றும் நான் நம்புகிறேன்.

இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதிலுமிருந்து நம்முடன் இணைந்துள்ள விவசாயத் தோழர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் சில நாட்களில் நவராத்திரி தொடங்க உள்ள நிலையில், அன்னை காமாக்யாவின் அருள் அனைத்து நாட்டு மக்கள் மீதும் இருக்க வேண்டும் என்றும், புதிய நம்பிக்கை மற்றும் புதிய வலிமையுடன் அனைத்து நெருக்கடிகளையும் கடந்து நாம் முன்னேற வேண்டும் என்றும் அன்னை காமாக்யாவிடம் பிரார்த்திக்கிறேன். எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

வந்தே மாதரம்!

 

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

----

(Release ID:2239897)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2282055) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam