பிரதமர் அலுவலகம்
இந்தியா – தென் கொரியா இடையே நிலைத்தன்மைத் துறையில் ஒத்துழைப்புக்கான கூட்டு அறிக்கை
प्रविष्टि तिथि:
20 APR 2026 10:55PM by PIB Chennai
இந்தியக் குடியரசும் தென் கொரிய குடியரசும் (இனி “இரு தரப்புகள்” என்று குறிப்பிடப்படும்) பருவநிலை மாற்றம், கடல்சார் மற்றும் ஆர்க்டிக் தொடர்பான பிரச்சனைகள் உள்ளிட்ட உலகளாவிய நிலைத்தன்மை சவால்களை சமாளிக்க நடைமுறை ஒத்துழைப்பின் மூலம் இருதரப்பு கூட்டுறவை வலுப்படுத்த ஒப்புக் கொண்டன.
சுற்றுச்சூழல் பொறுப்புள்ள நாடுகளாக, சுற்றுச்சூழலை ஒருங்கிணைந்த முறையில் காக்கும் வகையில், 2030 நிலையான வளர்ச்சித் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான தங்களது உறுதிப்பாட்டு அர்ப்பணிப்பை இரு தரப்புகளும் மீண்டும் உறுதிப்படுத்தின. இதை அடைய, நிலம், காற்று, நீர், உயிரியல் பல்வகைமை, கழிவுகள் உள்ளிட்ட இயற்கை வளங்களின் நிலையான மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றம் தொடர்பான துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இருதரப்பும் தீர்மானித்தன.
பருவநிலை மாற்ற ஒத்துழைப்பு:
விதிமுறைகளின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கை ஆதரிப்பதையும், பாரிஸ் ஒப்பந்தத்திற்கான தங்களது உறுதிப்பாட்டையும் மீண்டும் வலியுறுத்திய இரு தரப்பும், மனிதகுலத்தையும் இயற்கையையும் அச்சுறுத்தும் முன்னெப்போதும் இல்லாத பருவநிலை நெருக்கடியைச் சமாளிக்க பருவநிலை நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் அவசியத்தை உணர்ந்தன.
இந்த நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்தின் பிரிவு 6.2-ன் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டதை இரு தரப்புகளும் வரவேற்றன. இது முதலீட்டின் மூலம் இயக்கப்படும் குறைப்புத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பை உருவாக்கி, தங்களது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை அடைய உதவுவதோடு, பருவநிலை நடவடிக்கையில் இருதரப்பு உத்திசார் கூட்டுறவை மேலும் வலுப்படுத்துகிறது.
கார்பன் சந்தை, பிரிவு 6.2 ஒத்துழைப்பு முறைகள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் குறைந்த கார்பன் தொழில்நுட்பங்கள் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த இரு தரப்பும் உறுதியளித்தன.
சுற்றுச்சூழல் ஒத்துழைப்பு மற்றும் நீடித்த முன்னேற்றம்
சுற்றுச்சூழல் பொறுப்புள்ள நாடுகளாக, இந்தியாவும் தென் கொரிய குடியரசும் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் நிறுவனம் சார்ந்த ஒத்துழைப்பை முன்னெடுக்க முடிவு செய்தன.
சர்வதேச சூரிய கூட்டணியில் (ஐஎஸ்ஏ) உறுப்பினராக தென் கொரிய இணைந்ததை இந்தியா வரவேற்றது. உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தில் (ஜிஜிஜிஐ) உறுப்பினராக இந்தியா இணைந்ததை தென் கொரியா தரப்பு வரவேற்றது.
கடல்கள் மற்றும் கடல்சார் நிலைத்தன்மை
பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் சமநிலை மற்றும் உணவுப் பாதுகாப்பிற்காக கடல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, கடல்சார் அறிவியல், நிலையான மீன்பிடித்தல், கடற்கரை சூழல் பாதுகாப்பு மற்றும் கடல் மாசு தடுப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இரு தரப்பும் ஒப்புக் கொண்டன.
நீலப் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளின் அறிவியல் நிறுவனங்கள் மற்றும் கடல்சார் அமைப்புகளுக்கிடையே நெருக்கமான பரிமாற்றங்களை ஊக்குவிக்கவும் தீர்மானித்தன.
ஆர்க்டிக் ஆய்வு மற்றும் துருவ ஒத்துழைப்பு
இந்தியா மற்றும் தென் கொரியா, ஆர்க்டிக் ஆய்விலும் அறிவியல் ஒத்துழைப்பிலும் தங்களது அதிகரித்து வரும் ஈடுபாட்டைக் குறிப்பிட்டன. பருவநிலை மாற்றத்தைப் புரிந்து கொள்ள ஆர்க்டிக் பகுதி முக்கியமானது என்பதை உணர்ந்து, ஆர்க்டிக் அறிவியல் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
ஆர்க்டிக் ஆய்வு நிறுவனங்களுக்கிடையே நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள், அறிவியல் பரிமாற்றங்கள் மற்றும் சர்வதேச துருவ ஆராய்ச்சி திட்டங்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஆராயவும் இரு தரப்பும் தீர்மானித்தன.
எதிர்கால முன்னேற்றம்
நீடித்த முன்னேற்றத்திற்கும் பருவநிலை நடவடிக்கைக்கும் பங்களிக்கும் நடைமுறை ஒத்துழைப்பை முன்னெடுக்க தங்களது உறுதிப்பாட்டை இரு தரப்பும் மீண்டும் உறுதிப்படுத்தின.
இந்தக் கூட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விரிவுபடுத்தப்பட்ட ஒத்துழைப்பு, இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அதற்கு அப்பாலும் நீடித்த முன்னேற்றத்தை ஆதரிக்கும் புதுமையான மற்றும் விரிவாக்கக்கூடிய தீர்வுகளை உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையை இந்தியாவும் தென் கொரியாவும் வெளிப்படுத்தின.
***
(Release ID: 2253978)
SS/PKV/RJ
(रिलीज़ आईडी: 2281479)
आगंतुक पटल : 25
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam