பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிக்கிம் மாநிலத்தின் 50-வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தின் நிறைவு விழாவில், காங்டாக்கில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 28 APR 2026 1:51PM by PIB Chennai

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

சிக்கிம் ஆளுநர் திரு. ஓம் மாத்தூர் அவர்களே, திரு. பிரேம் சிங் தமாங் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாக்களான திரு. டோர்ஜி ஷெரிங் லெப்சா அவர்களே, டாக்டர் இந்திர ஹாங் சுப்பா அவர்களே, திரு. தில்லி ராம் தாப்பா அவர்களே மற்றும் சிக்கிமின் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே!

சிக்கிம் மாநிலத்தின் இந்த பொன்விழா கொண்டாட்டத்திற்காக ஒட்டுமொத்த சிக்கிம் மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நமஸ்தே, தாஷி டெலெக்!

நீங்கள் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள்?

நண்பர்களே,

நேற்று மதியம் நான் காங்டாக் வந்தடைந்தேன். இங்கு வருவதற்கு முன்னதாக, வங்காளத் தேர்தல் பணிகளின் பரபரப்பில் நான் ஓய்வில்லாமல் தொடர் வேலையில் இருந்தேன். ஆனால், இங்கு வந்திறங்கியவுடன் ஒரு புதிய உணர்வு, ஒரு புதிய மகிழ்ச்சி மற்றும் சுற்றிலும் கொண்டாட்டமான சூழலைக் கண்டு எனது இதயம் மகிழ்ச்சியால் நிறைந்தது. நேற்றிரவு பெய்த மழை, அதிகாலையின் குளிர்ச்சி, அதன் பிறகு இந்த பிரகாசமான சூரிய ஒளி - என சிக்கிமின் வண்ணங்கள் உண்மையாகவே தனித்துவமானவை.

நண்பர்களே,

கிழக்கின் சொர்க்கம், ஆர்க்கிட் மலர்களின் தோட்டம், ஈடு இணையற்ற அழகு, அமைதி, ஆன்மீக மகிழ்ச்சி என சிக்கிம் வழங்கும் இந்த அனுபவம் மிகுந்த அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கிடைக்கும். இன்று நான் இங்குள்ள ஆர்க்கிட் மலர்களைப் பார்க்கச் சென்றேன். எனக்காக ஒதுக்கப்பட்ட நேரம் குறைவாக இருந்த போதிலும், நான் அங்கு அதிக நேரத்தைச் செலவிட்டேன். நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளுக்கும், இயற்கையை நேசிக்கும் பயணிகளுக்கும் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்—நீங்கள் சிக்கிமின் ஆர்க்கிட் மலர்களைப் பார்க்கவில்லை என்றால், நீங்கள் எதையுமே பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம். இந்த முறை சிக்கிமின் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை முந்தைய சாதனைகள் அனைத்தையும் முறியடிக்கும் என்று நான் நம்புகிறேன். அந்த மலர்களில் இயற்கையின் வண்ணங்களையும் அதன் இன்பத்தையும் கண்டேன்; என் மனம் இன்னும் அதிலேயே மூழ்கிக் கிடக்கிறது.

நண்பர்களே,

சிக்கிமின் 50 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வாய்ப்பு இன்று நமக்குக் கிடைத்துள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு, தெய்வீகமான சூழலில் நடக்கும்போது அதன் மகத்துவம் பல மடங்கு உயருகிறது. இன்று இந்த பால்ஜோர் மைதானம் அந்த அற்புதமான அதிர்வலையோடு நிறைந்து காணப்படுகிறது. இங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகள், கலைஞர்களின் மனதைக் கவரும் ஆடல் பாடல்கள், சிக்கிம் மக்கள் காட்டிய உற்சாகம், முன்னால் தெரியும் மலைகளும் வானமும் இணைந்த இயற்கைக் காட்சிகள் என இயற்கையும் கலாச்சாரமும் ஒன்றாக இணைந்து உயிர் பெற்றது போல் இருந்தது. உண்மையிலேயே இந்த நினைவுகள் எப்போதும் என் இதயத்தில் நிலைத்திருக்கும். இந்த நிகழ்ச்சியை வடிவமைத்த அனைவருக்கும், பாடிய அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சி, ஊடகங்கள் மற்றும் தூர்தர்ஷன் ஆகியவை மீண்டும் மீண்டும் நாட்டிற்குக் காட்ட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

நாட்டில் அரசியல் நலன்களுக்காக மொழிவாரியான பிரிவினைகள், பிராந்தியவாதம், பாகுபாடு போன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், இன்று சிக்கிம் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்'  என்பதன் தரிசனத்தைக் காட்டியுள்ளது. இந்தச் சிறிய நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த இந்தியாவையும் நம் கண்முன்னே நிறுத்தினார்கள். இப்போதும் கூட, மக்கள் அமர்ந்துள்ள விதத்தை மேலிருந்து பார்க்கும்போது, அது ஒட்டுமொத்த இந்தியாவைப் போலவே தெரிகிறது. மக்கள் தத்தமது மாநிலங்களின் பாரம்பரிய உடைகளை அணிந்து அமர்ந்துள்ளனர். அங்கே குஜராத் மாநிலத்தவர்கள் குஜராத்தி உடையில் அமர்ந்திருக்கிறார்கள். உண்மையிலேயே, நீங்கள் அனைவரின் இதயங்களையும் வென்றுவிட்டீர்கள். மோடியின் இதயத்தை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவின் இதயத்தையும் இன்று நீங்கள் வென்றுவிட்டீர்கள். இதுதான் இந்தியாவின் மீதான பக்தி; இதுதான் தேசபக்தி. புதிய தலைமுறையினரிடம் இவ்வாறே தேசபக்தி உணர்வு எழுகிறது. உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

நண்பர்களே,

சிக்கிம் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. ஏனெனில், கடந்த முறை மோசமான வானிலை காரணமாக என்னால் இங்கு வர முடியாமல் போனது. அப்போது பாக்டோக்ராவிலிருந்து இணையம் வாயிலாகவே உங்களுடன் இணைய வேண்டியிருந்தது. உங்களை நேரில் சந்திக்க முடியவில்லையே என்ற வருத்தம் என் மனதில் இருந்து கொண்டே இருந்தது. பிரேம் சிங் ஜி என்னை சந்திக்கும் போதெல்லாம், 'நீங்கள் இவ்வளவு கடினமாக உழைத்தீர்கள், ஆனால் என்னால் வர முடியவில்லையே' என்ற எண்ணத்தில் என் கண்கள் தாழ்ந்து போகும். அந்த காத்திருப்பு இன்று இந்த நிகழ்வின் மூலம் நிறைவேறியுள்ளது.

நண்பர்களே,

சிக்கிம் மக்களைச் சந்திப்பது எப்போதும் எனக்கு ஒரு தனித்துவமான அமைதியைத் தருகிறது. உங்கள் கனிவு, எளிமை மற்றும் உங்கள் முகங்களில் இருக்கும் புன்னகை ஆகியவை அற்புதமானவை. இங்கு வருவதற்கு முன்பே, சிக்கிமின் பல திறமையாளர்களை நான் சந்தித்துள்ளேன். சிக்கிமின் புத்திஜீவிகள், பத்மா விருது பெற்றவர்கள், கலைஞர்கள் மற்றும் கால்பந்து வீரர்கள் எனப் பலருடன் வெவ்வேறு தலைப்புகளில் நான் உரையாடினேன்.

நண்பர்களே,

நேற்று மாலை நடைபெற்ற வாகனப் பேரணியை நான் இன்னும் மறக்கவில்லை, ஒருவேளை என்னால் அதை மறக்கவும் முடியாது. கைகளில் நமது அன்பிற்குரிய மூவர்ணக் கொடி, தொடர்ந்து ஒலித்த 'பாரத் மாதா கி ஜே' முழக்கங்கள் மற்றும் 'வந்தே மாதரம்' பிரகடனம் என ஒட்டுமொத்த சூழலும் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' என்ற சித்திரத்தால் நிறைந்திருந்தது. கஞ்சு லாமா வாயில் முதல் லோக் பவன் வரை, சிக்கிமின் எனது சகோதர சகோதரிகள் அன்பைப் பொழிந்த விதம், அனைத்து இனச் சமூகங்களும் வரவேற்ற விதம், ஒவ்வொரு சமூகமும் தத்தமது பாரம்பரிய உடைகள், இசை மற்றும் கலாச்சாரங்களுடன் நின்றது என ஒட்டுமொத்த இடமும் ஒரு மாபெரும் திருவிழாவாக மாறியது. இயற்கையின் மடியில் வெவ்வேறு வண்ணங்கள் மலர்ந்திருப்பதைப் போல இந்த காட்சி இருந்தது. எனது தாய்மார்கள், சகோதரிகள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என ஏராளமானோர் திரண்டு வந்து ஆசீர்வாதங்களை வழங்கினர். அந்த வழி நெடுகிலும் நான் கண்ட மிகச்சிறந்த விஷயங்களில் ஒன்று, சிக்கிம் சாலைகளின் தூய்மை. உங்கள் அனைவருக்கும் எனது சல்யூட்! எங்குமே அழுக்கு இல்லை, காற்றிலும் தூய்மை, சாலைகளிலும் தூய்மை. சிக்கிம் மக்களாகிய நீங்கள் இயற்கையின் உண்மையான பாதுகாவலர்கள் மற்றும் தூதுவர்கள். நான் மீண்டும் நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன்—சிக்கிம் வாருங்கள். நீங்கள் சிக்கிமை எவ்வளவு தூய்மையாகவும், எவ்வளவு சிறப்பாகவும் பராமரித்து வருகிறீர்கள் என்பதை அனைவரும் பார்க்க வேண்டும்.

சகோதர சகோதரிகளே,

நேற்றைய வாகனப் பேரணிக்காகவும், தற்போது நடைபெறுகின்ற இந்த நிகழ்விற்காகவும், உங்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை நான் பாராட்டுகிறேன். இந்த முக்கியமான 50 ஆண்டுகால பயணத்தின் கொண்டாட்டத்திற்காக சிக்கிம் மக்களுக்கும், ஒட்டுமொத்த நாட்டு மக்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அன்பு, பாசம் மற்றும் ஆசீர்வாதங்களின் கடனைத் திருப்பிச் செலுத்த நான் எந்த முயற்சியையும் விட்டுவைக்க மாட்டேன் என்று உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

நண்பர்களே,

சிக்கிமின் பயணம் என்பது மனித விழுமியங்களின் பயணம். இது வளர்ச்சியையும் பாரம்பரியத்தையும் ஒன்றாக ஏந்திச் செல்லும் பயணம். சிக்கிமின் பல தலைமுறைகள் இந்தப் பயணத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளன. கடந்த 50 ஆண்டுகளில் சிக்கிமை முன்னேற்றி, இந்த நிலைக்குக் கொண்டு வந்த அனைவரையும் இன்று நான் மனதாரப் பாராட்டுகிறேன், அவர்களைக் கௌரவிக்கிறேன். அந்தந்த காலகட்டத்தில், யார் யாரெல்லாம் என்ன செய்ய வேண்டுமோ, அதை அவர்கள் சிக்கிமுக்காக வழங்கினார்கள். இப்போது, அந்தப் பொறுப்பு நம்மிடம் உள்ளது. எனது நண்பர் திரு. பிரேம் சிங் ஜியின் தலைமையிலான சிக்கிம் அரசு, மாநிலத்தின் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கும் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் முழு நேர்மையுடன் பணியாற்றி வருகிறது.

எங்களைப் பொறுத்தவரை, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் நாட்டின் ஒரு முக்கியமான பகுதி மட்டுமல்ல, அவை இந்தியாவின் 'அஷ்டலட்சுமிகள்'. வடகிழக்கு என்பது இந்தியாவின் 'அஷ்ட லட்சுமி'. எனவே, நாம் 'கிழக்கை நோக்கிய செயல்பாடு' என்ற கொள்கையில் பணியாற்றி வருகிறோம்; அத்துடன் வடகிழக்கிற்காக 'வேகமாகச் செயல்படு' என்ற உறுதியையும் எடுத்துள்ளோம். எனவே, 'கிழக்கை நோக்கிய செயல்பாடு, வேகமான செயல்பாடு' என்பதே எமது மந்திரம். இன்றும் கூட, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான 30-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு இங்கு அடிக்கல் நாட்டப்பட்டு, தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இதில் சாலைகள், மின்சாரம், சுற்றுலா, சுகாதாரம், கல்வி என அனைத்து வகையான திட்டங்களும் அடங்கும். 2023-ம் ஆண்டிற்குப் பிறகு வட சிக்கிம் பகுதிகளில் ஏற்பட்ட சவால்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன. எங்கெல்லாம் போக்குவரத்துத் தொடர்பு பாதிக்கப்பட்டதோ, அங்கெல்லாம் அதை மீண்டும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்காக சிக்கிம் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நமது சிக்கிமின் மிகப் பெரிய பலம் அதன் சுற்றுலாப் பொருளாதாரம் ஆகும். சிக்கிமின் பரப்பளவு நாட்டின் மொத்தப் பரப்பளவில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானதுதான், ஆனால் நாட்டின் மலர் பன்முகத்தன்மையில் 25 சதவீதத்திற்கும் மேலானது நமது சிக்கிமில் காணப்படுகிறது. இங்கு சுமார் 500 வகை பறவையினங்கள், சுமார் 700 வகை பட்டாம்பூச்சிகள், அழகான வனப்பகுதிகள், கஞ்சன்ஜங்கா மலையின் அற்புதமான ஈர்ப்பு என இவ்வளவு சிறப்புகள் இங்கே உள்ளன. அதனால்தான், அனைவரும் மீண்டும் மீண்டும் சிக்கிமிற்கு வர விரும்புகிறார்கள்.

நண்பர்களே,

சிக்கிமில் உள்ள பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வருமானம் சுற்றுலாவோடு இணைக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்கும்போதுதான் சுற்றுலா வளர்ச்சி அடையும். அதனால்தான், சிக்கிமின் போக்குவரத்துத் தொடர்பு மற்றும் உள்கட்டமைப்

பில் நாங்கள் அதிக கவனம் செலுத்தி வருகிறோம். சமீபத்திய ஆண்டுகளில், இங்கு நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவிற்கு நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலைகளைக் கொண்டு செல்லும் பணி மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இதற்கு முன் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நவீன உள்கட்டமைப்புகள் இன்று நனவாகி வருகின்றன. பாக்டோக்ராவிலிருந்து காங்டாக் வரையிலான விரைவுச் சாலை கட்டுமானம், செவோக்-ரங்போ ரயில் பாதை - போன்ற திட்டங்கள் சிக்கிமை ஒட்டுமொத்த நாட்டுடன் இணைக்கும் சாதனங்களாக மாறி வருகின்றன. இங்கு புதிய தேசிய நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. காங்டாக் போன்ற நகரங்களில், எதிர்காலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு வெளிவட்டச் சாலைகள் போன்ற திட்டங்கள் அவசியமானவை. அந்தத் திசையிலும் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன.

சகோதர சகோதரிகளே,

இன்று பிஜேபி அரசு செய்து வரும் பணிகளை முன்னரே செய்திருக்க முடியும், ஆனால் காங்கிரஸ் அரசாங்கங்கள் எப்போதும் சிக்கிமின் வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளின. செவோக்-ரங்போ ரயில் பாதையையே உதாரணமாகக் கொள்ளுங்கள். இத்திட்டம் 2008-2009-ல் அங்கீகரிக்கப்பட்டது, ஆனால் களத்தில் எந்தப் பணியும் நடக்கவில்லை; அது காகிதத்திலேயே முடங்கிக் கிடந்தது. அந்தத் திட்டம் கோப்புகளுக்குள்ளேயே முடங்கிப் போனது. மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான், வளர்ச்சிப் பணிகள் மீண்டும் வேகம் பெற்றன. முதல் முறையாக, சிக்கிமிற்கு ரயில் சேவை சென்றடையப் போகிறது.

நண்பர்களே,

சுற்றுலாவை மேம்படுத்த நமக்கு புதிய சிந்தனைகளும் தேவைப்படுகின்றன. இன்று நாம் அந்த நோக்குடனேயே பணியாற்றி வருகிறோம். பலேதுங்கா யென்-யெங் (மற்றும் பெல்லிங் ஆகிய இடங்களில் ரோப்வேக்கள் அமைக்கப்படுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். பலேதுங்காவில் ஆகாய நடைபாதை ஒன்றும் கட்டப்பட்டு வருகிறது. இப்போது சிங்ஷோர் பாலத்தில் கண்ணாடித் தளம் கொண்ட ஆகாய நடைபாதை அமைக்கத் தயாரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாதுலா மற்றும் நம்லி போன்ற இடங்களில் எல்லைப் பகுதி அனுபவத்தை மேம்படுத்தவும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நண்பர்களே,

எங்கள் அரசாங்கத்தின் இந்த முயற்சிகளால் உங்கள் வாழ்க்கை எளிதாகும்; சிக்கிமிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும், அதன் மூலம் உங்கள் வருமானமும் பெருகும். நான் எப்போதும் நாடு முழுவதிலும் உள்ள சுற்றுலாப் பயணிகளிடம் ஒன்றை வலியுறுத்துகிறேன்: நீங்கள் சாகசச் சுற்றுலா அல்லது சுற்றுச்சூழல் சுற்றுலா என எதற்காகப் பயணம் செய்தாலும், எங்கு சென்றாலும், உங்கள் பயண வரவுசெலவில் 5 சதவீதத்தை உள்ளூர் தயாரிப்புகளை வாங்குவதற்காகச் செலவிடுவதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கான குரலாக மாறுவதற்கான பாதை இங்கிருந்துதான் தொடங்குகிறது. நீங்கள் எங்கு சென்றாலும், அங்கிருக்கும் உள்ளூர் உணவுகளை உண்ணுங்கள், உள்ளூர் பொருட்களை வாங்குங்கள், அவற்றை நினைவுப் பரிசுகளாக எடுத்துச் செல்லுங்கள். அப்போதுதான் இங்குள்ள மக்கள், மலைகளில் தொலைதூரத்தில் வசிக்கும் சிறு குழுக்கள், சுயஉதவிக் குழுக்களில் அற்புதமான பொருட்களைத் தயாரிக்கும் சகோதரிகள் ஆகியோருக்கு நாடு முழுவதிலுமிருந்து வாங்குபவர்கள் கிடைப்பார்கள். இது இங்கிருக்கும் வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும்.

நண்பர்களே,

சிக்கிமில் 'ஈகோ-வெல்னஸ்' சுற்றுலாவுக்கும் அதிக வாய்ப்புகள் உள்ளன, அதையும் நாம் ஊக்குவித்து வருகிறோம். சுற்றுலாவின் மூலம் உள்ளூர் மக்கள் அதிகபட்ச வருமானம் பெறுவதை உறுதி செய்வதற்காக, 1,000 தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருகின்றன. சாகசச் சுற்றுலாவிற்கான உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

சிக்கிமிற்கான சாத்தியக்கூறுகளின் மற்றொரு வானம் விளையாட்டுத் துறையில் உள்ளது. இங்குள்ள இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் தங்களின் ஆற்றலையும் திறமையையும் பெரிய மேடைகளில் நிரூபித்துள்ளனர். கால்பந்து, குத்துச்சண்டை, வில்வித்தை ஆகியவற்றில் இங்கிருந்து சென்ற வீரர்கள் சிக்கிமிற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

நண்பர்களே,

இந்தத் திறமைகளை முன்னெடுத்துச் செல்ல, 'கேலோ இந்தியா' மற்றும் 'ஃபிட் இந்தியா' போன்ற இயக்கங்களை நாம் நடத்தி வருகிறோம். இங்குள்ள மாநில விளையாட்டு அகாடமிக்கும் புத்துயிர் அளிக்கப்பட்டுள்ளது. சிக்கிம் பிரீமியர் லீக் போன்ற விளையாட்டு நிகழ்வுகள் ஊக்குவிக்கப்படுகின்றன, இதனால் அதிகமான வீரர்கள் விளையாடும் வாய்ப்பைப் பெறுவார்கள் மற்றும் அவர்களின் செயல்திறன் மேம்படும்.

நண்பர்களே,

ஜஸ்லால் பிரதான் ஜியின் பெயரில் அதிநவீன குத்துச்சண்டை அகாடமி அமைக்கும் முன்மொழிவும் உள்ளது. ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் கலாச்சார கிராமம் போன்ற திட்டங்களும் முன்னேறி வருகின்றன. இது சிக்கிம் இளைஞர்களுக்குச் சிறந்த வசதிகளை வழங்கும், மேலும் அவர்கள் தங்களின் விளையாட்டுத் திறனை மேலும் மிளிரச் செய்ய முடியும்.

நண்பர்களே,

இன்று தொடங்கி வைக்கப்பட்ட மற்றும் அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்களில், சுகாதாரத் துறை சார்ந்த பல பெரிய பணிகளும் அடங்கும். காங்கிரஸ் அரசாங்கங்கள் சிக்கிம் மற்றும் வடகிழக்குப் பகுதிகளை முற்றிலும் புறக்கணித்த ஒரு காலம் இருந்தது. இங்கு சுகாதார சேவைகள் மிகவும் குறைவாகவே இருந்தன. இதன் காரணமாக, சுற்றுலாப் பயணிகளும் இங்கு வரத் தயங்கினர். ஆனால் இன்று அந்தச் சவால் முடிவுக்கு வருகிறது. இன்று சிக்கிமில் சுமார் 200 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இன்று 4 மாவட்ட மருத்துவமனைகள், ஒரு மூன்றாம் நிலை பராமரிப்பு மருத்துவமனை, ஆரோக்கிய மையங்கள் உள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குள்ள ஆயுஷ் வசதிகளால் பயனடைந்து வருகின்றனர். த்ரெசோங் நம்கியால் சோவா ரிக் பா மருத்துவமனை திறக்கப்பட்ட பிறகு, சிக்கிமின் சுகாதார அமைப்பு மேலும் ஊக்கம் பெறும்.

சகோதர சகோதரிகளே,

சுகாதாரக் கட்டமைப்புடன் சேர்த்து, மக்களுக்குக் குறைந்த விலையில் சிகிச்சையும் கிடைக்க வேண்டும் என்பதில் எமது அரசு உறுதியாக உள்ளது. முன்னதாக ஏழைகளுக்கு இலவச சிகிச்சை அளிப்பதற்காக ஆயுஷ்மான் அட்டைகளை வழங்கியிருந்தோம். இப்போது 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து முதியவர்களுக்கும் இந்த வசதி வழங்கப்படுகிறது. இதனுடன், ஜன் அவுஷதி மையங்களில் மருந்துகளும் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இத்தகைய முயற்சிகளால் இங்குள்ள மக்களின் வாழ்க்கை எளிதாகியுள்ளதுடன், சிகிச்சைக்காக நீங்கள் செய்யும் செலவும் குறைந்து வருகிறது.

நண்பர்களே,

இன்று பொருளாதார முன்னேற்றம் மற்றும் வளங்கள் குறித்த உலகின் பார்வை வேகமாக மாறிவருகிறது. இன்று உலகம் நிலையான வாழ்க்கை முறையைப் பற்றிப் பேசுகிறது. உலகின் கவனம் இப்போது தூய்மையான ஆற்றல் மீது உள்ளது. இன்று இயற்கை உணவுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. நமது வடகிழக்கு மாநிலங்களும் சிக்கிமும் இத்தகைய எதிர்கால வளர்ச்சியின் முக்கிய மையங்களாகத் திகழ்வது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. சிக்கிம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2016-லேயே சிக்கிம் தனது மாநிலம் முழுவதையும் இயற்கை விவசாய மாநிலமாக அறிவித்தது. நமது 'டெமாசாங்' இப்போது அரிசி உற்பத்திக்காக மட்டும் அறியப்படவில்லை, அதன் அடையாளம் இப்போது 'இயற்கை விவசாய அரிசி' என்பதாக மாறியுள்ளது. பெரிய ஏலக்காய், இஞ்சி, மஞ்சள், வெண்ணெய் பழம்), கிவி - என பல தயாரிப்புகள் நாட்டின் சந்தைகளுக்கும் உலகச் சந்தைகளுக்கும் சென்றடைகின்றன. சிக்கிமில் நூற்றுக்கணக்கான மூலிகைத் தாவர இனங்களும் காணப்படுகின்றன. இவையும் உள்ளூர் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் ஒரு வழியாக மாறி வருகின்றன.

நண்பர்களே,

சிக்கிமின் இயற்கை மற்றும் இயற்கை வழி விவசாய முறை ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஒரு உத்வேகமாகும். சிக்கிமின் வாழ்க்கை முறை, சிக்கிமின் உறுதிப்பாடு ஆகியவை இன்று தேசத்தின் தொலைநோக்குப் பார்வையின் ஒரு அங்கமாக மாறியுள்ளன. இங்கு இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக, இயற்கை முறை பதப்படுத்தும் ஆலைகளும் தொடங்கப்பட்டுள்ளன. இது விவசாயிகள் நேரடியாகச் சந்தையுடன் இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

நண்பர்களே,

சிக்கிமின் பொருளாதார முன்னேற்றத்தில், இங்குள்ள சுயஉதவிக் குழுக்களுக்கும் இந்தப் பெண்களுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு. இந்தச் சுயஉதவிக் குழுக்களின் தயாரிப்புகள் பெரிய சந்தைகளைச் சென்றடைந்துள்ளன, இதில் 'டிஜிட்டல் இந்தியா' பெரும் பங்காற்றுகிறது. "சுயம் சிக்கிம்" போன்ற தளங்கள் இன்று இந்தப் பெண்களுக்கு அதிகாரமளித்து வருகின்றன.

நண்பர்களே,

தூய்மையான எரிசக்தி துறையில், சிக்கிம் பரந்த திறனைக் கொண்டுள்ளது. இங்குள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில், சிக்கிமின் இந்தத் திறனை நாம் மேலும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சிக்கிம் மக்களின் இயல்பு என்பதை நான் அறிவேன். நாடு 'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று' என்ற முன்முயற்சியைத் தொடங்கியபோது, சிக்கிம் மக்கள் அதை ஒரு கடமை உணர்வுடன் முன்னெடுத்துச் சென்றனர். மேலும், இங்குள்ள முதலமைச்சர், ஒரு மரம், ஒரு சந்ததி என்ற முன்முயற்சியின் மூலம் மக்களுக்கு உத்வேகம் அளித்தார். இதன்கீழ், ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும் 108 மரங்கள் நடப்படுகின்றன. இந்த முயற்சி ஒட்டுமொத்த உலகிற்கே ஒரு உத்வேகம் என்று நான் கருதுகிறேன். சுற்றுச்சூழல் தொடர்பான நமது முயற்சிகளை இன்னும் கூடுதல் அர்ப்பணிப்புடன் நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இது நமது பாரம்பரியம், இதை அடுத்த தலைமுறைக்காக நாம் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

நண்பர்களே,

சிக்கிம் இன்னும் வேகமாக முன்னேற வேண்டும், வளர்ந்த இந்தியா என்ற கனவிற்கு வேகம் கொடுக்க வேண்டும், இதற்காக நாம் இணைந்து செயல்பட வேண்டும். சிக்கிமை நாம் புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். இந்த உறுதியுடன், மீண்டும் ஒருமுறை இந்த தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் பிரகாசமான எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன். 50 ஆண்டுகால இந்தப் பயணத்திற்குப் பிறகு, இப்போது நாம் இரண்டு மைல்கற்களை எட்ட வேண்டியுள்ளது. சிக்கிமின் பயணம் 100 ஆண்டுகளை எட்டும்போது நாம் என்ன செய்வோம்? சிக்கிமின் பயணம் 75 ஆண்டுகளை எட்டுவதற்குள் நாம் என்ன செய்வோம்? நாட்டின் சுதந்திரம் 100 ஆண்டுகளை எட்டும்போது, அதாவது 2047-ல் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற கனவை நனவாக்க, அதற்கான தயாரிப்புகளை இன்றே தொடங்கி உறுதியுடன் முன்னேற வேண்டும். இந்த உணர்வுடன், உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி. என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்-

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

பாரத் மாதா கி ஜே!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

 

(Release ID:2256184)

AD/VK/KR

 

 


(வெளியீட்டு அடையாள எண்: 2280692) வருகையாளர் எண்ணிக்கை : 30