பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

அஜ்மீரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாமினைப் பிரதமர் தொடங்கி வைத்து நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 28 FEB 2026 2:17PM by PIB Chennai

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

தீர்த்தராஜ் புஷ்கர் மற்றும் அன்னை சாவித்திரி உறையும் இந்தப் புனித பூமியில், இன்று உங்கள் மத்தியில் வந்து உங்களின் ஆசிகளைப் பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. இந்த மேடையிலிருந்து, சுரசுராவின் தேஜாஜி தாம் மற்றும் பிருத்விராஜின் பூமியான அஜ்மீரை நான் வணங்குகிறேன்.

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் –

தீர்த்தராஜ் புஷ்கர் கி ஜே

தீர்த்தராஜ் புஷ்கர் கி ஜே

வீர தேஜாஜி மகாராஜ் கி ஜே

வீர தேஜாஜி மகாராஜ் கி ஜே

பகவான் தேவ் நாராயண் கி ஜே

பகவான் தேவ் நாராயண் கி ஜே

வருண அவதார பகவான் ஜூலேலால் ஜி கி ஜே

பகவான் ஜூலேலால் ஜி கி ஜே

மேடையில் வீற்றிருக்கும் ராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு. ஹரிபாவ் பாக்டே அவர்களே; மாநிலத்தின் மக்கள் செல்வாக்கு பெற்ற முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா அவர்களே, முன்னாள் முதலமைச்சர் சகோதரி வசுந்தரா அவர்களே, மத்திய அமைச்சரவையின்; சக அமைச்சர் திரு. பாகீரத் சௌத்ரி அவர்களே, துணை முதலமைச்சர்கள் திரு. பிரேம்சந்த் பைர்வா மற்றும் திருமதி. தியா குமாரி அவர்களே; நாடாளுமன்றத்தின் எனது சக உறுப்பினர்களே; பிஜேபி-யின் மாநிலத் தலைவர் திரு. மதன் ரத்தோர் அவர்களே; மற்ற மதிப்பிற்குரிய அமைச்சர்களே; மேன்மையான சான்றோர்களே; மற்றும் ராஜஸ்தானின் எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே, எங்களை ஆசிர்வதிப்பதற்காக இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இங்கு வருகை தந்துள்ள மதிப்பிற்குரிய துறவிகளுக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்.

நண்பர்களே,

அஜ்மீர் என்பது நம்பிக்கை மற்றும் வீரத்தின் பூமி. இங்கே புனிதமான திருத்தலங்கள் உள்ளன, அதேபோல் புரட்சியாளர்களின் கால்தடங்களும் உள்ளன. நேற்றுதான் நான் இஸ்ரேல் நாட்டிற்கான எனது பயணத்தை முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன். ராஜஸ்தானின் மகன் மேஜர் தல்பத் சிங்கின் வீரத்தை இஸ்ரேல் நாட்டு மக்கள் இன்றும் பெருமையுடன் நினைவுகூர்கின்றனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மேஜர் தல்பத் சிங் அவர்களின் வீரத்திற்கு அஞ்சலி செலுத்தும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. இஸ்ரேலின் ஹைஃபா நகரை விடுவிப்பதில் முக்கியப் பங்காற்றிய ராஜஸ்தானின் வீரம் செறிந்த போர்வீரர்களின் பெருமையினை எடுத்துரைக்கும் பெருமை எனக்குக் கிடைத்தது.

நண்பர்களே,

சிறிது நேரத்திற்கு முன்னர்தான் ராஜஸ்தானில் பிஜேபி-யின் இரட்டை எஞ்சின் அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்தது. இன்று ராஜஸ்தான் வளர்ச்சியின் புதிய பாதையில் முன்னேறிச் செல்வது எனக்குத் திருப்தி அளிக்கிறது. உங்களுக்குச் சேவை செய்வதற்காக எந்த முன்னேற்ற வாக்குறுதிகளுடன் பிஜேபி அரசு வந்ததோ, அந்த வாக்குறுதிகள் மிக வேகமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. மேலும், இந்த வளர்ச்சிப் பிரச்சாரத்தை விரைவுபடுத்த வேண்டிய நாள் இன்று. சற்று நேரத்திற்கு முன்பு, ராஜஸ்தானின் வளர்ச்சியுடன் தொடர்புடைய சுமார் 17 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டன. சாலைகள், மின்சாரம், தண்ணீர், ஆரோக்கியம், கல்வி என ஒவ்வொரு துறையிலும் புதிய பலம் சேர்க்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தும் ராஜஸ்தான் மக்களின் வசதிகளை மேம்படுத்துவதுடன், ராஜஸ்தான் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும்.

நண்பர்களே,

பிஜேபி-யின் இரட்டை எஞ்சின் அரசு இளைஞர்களுக்குத் தொடர்ந்து அதிகாரம் அளித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, ராஜஸ்தான் என்றாலே வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு ஊழல் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற செய்திகள்தான் அதிகளவில் வந்தன. இப்போது வினாத்தாள் கசிவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இன்று, இதே மேடையிலிருந்து ராஜஸ்தானைச் சேர்ந்த 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு மிகப்பெரிய மாற்றம். இந்த மாற்றத்திற்காக, புதிய வேலைவாய்ப்புகளுக்காக, அனைத்து வளர்ச்சிப் பணிகளுக்காக, ராஜஸ்தான் மக்கள் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

இன்று, இந்த வீர மங்கையர் மண்ணிலிருந்து நாட்டின் மகள்களுக்கான ஒரு முக்கியமான பிரச்சாரத்தைத் தொடங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அஜ்மீரில் இருந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் எச்.பி.வி  தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் நாட்டின் பெண் சக்தியை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

நண்பர்களே,

ஒரு தாய் நோய்வாய்ப்படும்போது, அந்த இல்லமே நிலைகுலைந்து போவதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், அதே தாய் ஆரோக்கியமாக இருந்தால், அந்த குடும்பம் எந்தவொரு நெருக்கடியையும் மன உறுதியுடன் எதிர்கொள்ளும். இந்த உணர்வோடுதான், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசு எண்ணற்ற திட்டங்களைத் தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

2014-ம் ஆண்டிற்கு முந்தைய காலத்தை நாம் பார்த்திருக்கிறோம், அப்போது கழிப்பறை வசதி இல்லாதது நமது சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் அளவிட முடியாத துயரத்தையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது. தனி கழிப்பறை வசதிகள் இல்லாத காரணத்தால் பெண் குழந்தைகள் பள்ளியிலிருந்து பாதியிலேயே நின்றுவிட்டனர். ஏழை மகள்களால் சானிட்டரி பேடுகளை வாங்க முடியவில்லை. இதற்கு முன்பு அதிகாரத்தில் இருந்தவர்களுக்கு இவையெல்லாம் பேசுவதற்குக்கூட தகுதியற்ற மிகச் சாதாரணமான விஷயங்களாகத் தெரிந்தன. ஆனால், எங்களைப் பொறுத்தவரை இவை நமது சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆரோக்கியத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினைகள். அதனால்தான், இவற்றை நாங்கள் ஒரு இயக்கமாகவே முன்னெடுத்துத் தீர்வு கண்டோம்.

நண்பர்களே,

கர்ப்ப காலத்தில், ஊட்டச்சத்து குறைபாடு என்பது தாய்மார்களின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்தது. பாதுகாப்பான தாய்மைக்கான திட்டங்களை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்; தாய்மார்களுக்குச் சத்தான உணவு கிடைப்பதை உறுதி செய்தோம், மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக ரூ.5,000 செலுத்தப்பட்டது. இதற்கு முன்பு தாய்மார்கள் சமையல் புகையில் இருமிக் கொண்டே இருந்தனர், ஆனால் ஒருபோதும் புகார் செய்ததில்லை. இது இப்படியே தொடரக்கூடாது என்று நாங்கள் முடிவு செய்தோம். அதனால்தான் உஜ்வாலா எரிவாயு திட்டத்தைத் தொடங்கினோம். இவை அனைத்தும் சாத்தியமானதற்குக் காரணம், இந்திய அரசு அதிகார மனப்பான்மையுடன் அல்லாமல், சேவை மனப்பான்மையுடன் செயல்படுவதுதான்.

நண்பர்களே,

21-ம் நூற்றாண்டின் கால் பகுதி ஏற்கனவே கடந்துவிட்டது. ராஜஸ்தானின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமான காலம். ராஜஸ்தானின் பாரம்பரியத்தையும் முன்னேற்றத்தையும் ஒன்றாக இணைத்து பிஜேபி-யின் இரட்டை எஞ்சின் அரசு முன்னெடுத்துச் செல்கிறது. நல்ல சாலைகள், இரயில்வே மற்றும் விமான இணைப்பு ஆகியவை பயணத்தை எளிதாக்குவதுடன் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பிராந்தியத்தின் தலையெழுத்தையே மாற்றும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலைகள் சென்றடையும் போது, விவசாயிகள் தங்கள் விளைபொருட்களைச் சரியான விலைக்கு விற்க முடியும். வணிகர்கள் தங்கள் பொருட்களை எளிதாக வெளியே அனுப்ப முடியும். அஜ்மீர்-புஷ்கர் பகுதியின் சுற்றுலா வலிமையை யார்தான் அறியமாட்டார்கள்? மேம்படுத்தப்பட்ட போக்குவரத்து வசதி என்பது சுற்றுலாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். பயணம் எளிதாகும் போது, அதிகமான மக்கள் இங்கு வருகை தருவார்கள்.

மேலும் நண்பர்களே,

சுற்றுலாப் பயணிகள் வரும்போது, இயல்பாகவே விடுதிகள் செழிக்கின்றன, சாலையோர உணவகங்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன, கச்சோரிகள் மற்றும் தால் பாட்டிகள் அதிக அளவில் விற்பனையாகின்றன, ராஜஸ்தானின் கைவினைஞர்களின் படைப்புகளுக்குக் கொள்முதல் செய்பவர்கள் கிடைக்கிறார்கள், டாக்ஸிகள் இயங்குகின்றன, மேலும் வழிகாட்டிகளுக்கு வேலை கிடைக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், ஒரு சுற்றுலாப் பயணி பல குடும்பங்களின் வாழ்வாதாரமாக மாறுகிறார். இந்த தொலைநோக்குப் பார்வையுடன் தான், ராஜஸ்தானில் நவீன போக்குவரத்து இணைப்புகளை உருவாக்குவதில் நமது அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

நண்பர்களே,

ராஜஸ்தானில் போக்குவரத்து வசதிகள் விரிவடையும் போது, முதலீட்டிற்கான வாய்ப்புகளும் சீராக அதிகரித்து வருகின்றன. டெல்லி-மும்பை தொழில்வழிச் சாலையைச் சுற்றி, தொழில்துறைகளுக்கான உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதாவது, ராஜஸ்தானை வாய்ப்புகளின் பூமியாக மாற்ற, இரட்டை எஞ்சின் அரசு பல வழிகளில் அயராது உழைத்து வருகிறது.

நண்பர்களே,

ராஜஸ்தானின் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை வளர்க்கும் போதே தேசபக்தி எனும் நற்பண்புகளை அவர்களுக்குள் புகட்டுகிறார்கள். தேசத்தின் மீதான மரியாதை என்றால் என்ன என்பதை ராஜஸ்தான் மண் அறியும், அதனால்தான் இன்று ராஜஸ்தான் மண்ணில் உங்களுடன் இன்னும் ஒரு கருத்தைப் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்.

நண்பர்களே,

சமீபத்தில் டெல்லியில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மாநாடு நடைபெற்றது. பல நாடுகளின் பிரதமர்கள், அதிபர்கள் மற்றும் அமைச்சர்கள் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் தலைவர்களும் ஒரே கூரையின் கீழ் கூடினர். அனைவரும் இந்தியாவை வெளிப்படையாகப் பாராட்டினார்கள். ராஜஸ்தானின் எனது சகோதர சகோதரிகளிடம் நான் கேட்க விரும்புகிறேன் - உலகம் முழுவதிலுமிருந்து இவ்வளவு பேர் இந்தியாவைப் புகழும்போது, நீங்கள் பெருமைப்பட வில்லையா? நீங்கள் கவுரவமாக உணரவில்லையா? உங்கள் தலை நிமிரவில்லையா? உங்கள் மனம் பெருமிதத்தால் பொங்கவில்லையா?

நண்பர்களே,

நீங்கள் பெருமைப்பட்டீர்கள், ஆனால் தொடர் தோல்விகளால் விரக்தியிலும் சோர்விலும் மூழ்கியுள்ள காங்கிரஸ் என்ன செய்தது என்பதையும் பார்த்தீர்கள். உலகம் முழுவதிலுமிருந்து வந்த விருந்தினர்களுக்கு முன்னால், தேசத்தின் பெயரைக் கெடுக்க காங்கிரஸ் முயன்றது. வெளிநாட்டுப் பார்வையாளர்கள் முன்னிலையில் நாட்டிற்கு அவதூறு விளைவிப்பதற்காக அவர்கள் ஒரு பெரிய நாடகத்தையே நடத்தினார்கள்.

நண்பர்களே

நாடு முழுவதும் காங்கிரஸ் தோல்வியடைந்து வருகிறது, அந்த ஆத்திரத்தில் இந்தியாவின் பிம்பத்தைச் சிதைப்பதன் மூலம் அவர்கள் பழிவாங்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் காங்கிரஸ் என்பது ஐ.என்.சி  - இந்திய தேசிய காங்கிரஸாக இருந்தது. ஆனால் இன்று, அது ஐ.என்.சி-யாக இல்லை. அதற்குப் பதிலாக, அது எம்.எம்.சி ஆக மாறிவிட்டது. எம்.எம்.சி என்றால் முஸ்லீம் லீக் மாவோயிஸ்ட் காங்கிரஸ் என்று பொருள்.

ராஜஸ்தானின் எனது வீரமிக்க மக்களே,

முஸ்லீம் லீக் இந்தியாவை வெறுத்தது, அதனால்தான் நாட்டைப் பிரித்தது என்பதற்கு வரலாறே சாட்சி. இன்று காங்கிரஸும் அதையே செய்து வருகிறது. மாவோயிஸ்டுகளும் இந்தியாவின் செழிப்பு, நமது அரசியலமைப்பு மற்றும் நமது வெற்றிகரமான ஜனநாயகத்தை வெறுக்கிறார்கள். அவர்கள் மறைந்திருந்து தாக்குவார்கள். தேசத்தை அவதூறு செய்வதற்காக காங்கிரஸும் எங்காவது பதுங்கி நுழைகிறது. காங்கிரஸின் இத்தகைய தீய செயல்களை நாடு ஒருபோதும் மன்னிக்காது.

நண்பர்களே,

தேசத்தை அவதூறு செய்வதும், நமது ஆயுதப் படைகளை வலுவிழக்கச் செய்வதும் காங்கிரஸின் பழைய பழக்கம். நமது வீரர்களை ஆயுதங்களுக்கும் சீருடைகளுக்கும் கூட ஏங்கவிட்ட அதே காங்கிரஸ் இதுதான் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ராணுவக் குடும்பங்களுக்கு 'ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்' திட்டத்தை பல ஆண்டுகளாக வழங்காமல் தடுத்த அதே காங்கிரஸ் இதுதான். வெளிநாடுகளுடனான பாதுகாப்பு ஒப்பந்தங்களில் மிகப்பெரிய ஊழல்கள் நடந்ததும் இதே காங்கிரஸின் ஆட்சியில்தான்.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில், இந்திய ராணுவம் ஒவ்வொரு முனையிலும் பயங்கரவாதிகள் மற்றும் எதிரிகளுக்கு எதிராகக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஒவ்வொரு பணியிலும், ஒவ்வொரு போரிலும் நமது ராணுவம் வெற்றி பெற்றுள்ளது. துல்லியத் தாக்குதல் முதல் ஆபரேஷன் சிந்துார் வரை, அவர்கள் தங்களின் வீரத்தை நிரூபித்துள்ளனர். இருப்பினும் காங்கிரஸ் தலைவர்கள் நமது எதிரிகளின் பொய்களைப் பெரிதுபடுத்துவதையே தேர்ந்தெடுத்தனர். தேசத்திற்கு எது நல்லதோ, மக்களுக்கு எது நன்மையோ, அவை அனைத்தையும் காங்கிரஸ் எதிர்க்கிறது. அதனால்தான் இன்று நாடு காங்கிரஸிற்குப் பாடம் புகட்டி வருகிறது.

நண்பர்களே,

ராஜஸ்தானில் காங்கிரஸின் தவறான ஆட்சியை நீங்கள் மிக நெருக்கத்திலிருந்து அனுபவித்திருக்கிறீர்கள். இங்கே காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, ஊழல் மற்றும் உட்கட்சி மோதல்களில் மட்டுமே அது சிக்கியிருந்தது. காங்கிரஸ் எப்போதும் நமது விவசாயிகளுக்குத் துரோகமே இழைத்துள்ளது. பாசனத் திட்டங்களை பல தசாப்தங்களாக காங்கிரஸ் எவ்வாறு கிடப்பில் போட்டது என்பதையும், அதனால் ராஜஸ்தான் விவசாயிகளுக்கு ஏற்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள். இ.ஆர்.சி.பி திட்டம் காங்கிரஸ் அரசாங்கங்களால் வெறும் கோப்புகளிலும் அறிவிப்புகளிலும் மட்டுமே முடக்கப்பட்டிருந்தது. எங்களது அரசு வந்தவுடனேயே, இந்தத் திட்டத்தைக் கோப்புகளிலிருந்து வெளியே கொண்டு வந்து, களத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

நண்பர்களே,

எங்கள் அரசு தொடங்கியுள்ள நதிகளை இணைக்கும் பிரச்சாரம் ராஜஸ்தானுக்குப் பெரும் பயனைத் தரும். திருத்தப்பட்ட பார்வதி - காளிசிந்த் - சம்பல் இணைப்புத் திட்டமாக இருக்கட்டும் அல்லது யமுனை - ராஜஸ்தான் இணைப்புத் திட்டமாக இருக்கட்டும், இத்தகைய பாசனத் திட்டங்களின் பலன்களை விவசாயிகளுக்குக் கொண்டு சேர்க்க இரட்டை எஞ்சின் அரசு உறுதியுடன் உள்ளது. இன்றும் கூட ஜாலாவார், பாரன், கோட்டா மற்றும் பூந்தி மாவட்டங்களுக்காகப் பல நீர் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ராஜஸ்தானின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதும் எங்களது முயற்சியாகும்.

நண்பர்களே,

இந்திய அரசு ராஜஸ்தானின் திறனைப் புரிந்து கொண்டு, அதற்கேற்பத் திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்தி வருகிறது. ராஜஸ்தான் இப்போது சூரிய சக்தியின் மூலம் செழிப்பைப் பெறும் நிலமாக மாறியிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ராஜஸ்தானில் சூரிய ஒளிக்குப் பஞ்சம் இல்லை என்பதை நாம் அனைவரும் அறிவோம். இப்போது இந்தச் சூரிய ஒளி சாதாரணக் குடும்பங்களுக்குச் சேமிப்பு மற்றும் வருமானத்திற்கான ஆதாரமாக மாறி வருகிறது. இதில் பிரதமரின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ராஜஸ்தானின் தலையெழுத்தையே மாற்றும் வலிமை இத்திட்டத்திற்கு உண்டு. இத்திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளித் தகடுகளை அமைக்க இந்திய அரசு ரூ.78,000 நிதியுதவி வழங்குகிறது. இந்தத் தொகையை அரசு நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகான அனைத்து வரவு-செலவுத் திட்டங்களையும், இதரத் திட்டங்களையும் பாருங்கள் - நடுத்தர வர்க்கத்தினருக்கு இவ்வளவு பலன் தரும் ஒரு திட்டத்தை உங்களால் காண முடியாது. இன்று சூரிய ஒளித் தகடுகளை அமைக்க ஒரு குடும்பத்திற்கு அரசு நேரடியாக ரூ.78,000 வழங்குகிறது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் பெரிதும் பயனடைகிறார்கள். இது ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்குகிறது. பகல் நேரத்தில் சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டு வீடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது, மீதமுள்ள மின்சாரம் விநியோகக் கட்டமைப்புக்கு அனுப்பப்படுகிறது. மின்சாரத்தைத் தயாரிக்கும் அந்தக் குடும்பம் இதன் மூலம் வருமானமும் பெறுகிறது.

நண்பர்களே,

இன்று ராஜஸ்தானில் 1,25,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இத்திட்டத்தின் காரணமாகப் பல வீடுகளில் மின்சாரக் கட்டணம் கிட்டத்தட்ட பூஜ்ஜியமாகக் குறைந்து வருகிறது. அதாவது செலவுகள் குறைந்து, சேமிப்பு அதிகரித்துள்ளது.

நண்பர்களே,

"வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு வளர்ச்சியடைந்த ராஜஸ்தான்" என்ற மந்திரத்துடன் நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். இன்று தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், வளர்ச்சியடைந்த ராஜஸ்தானின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்தும். ராஜஸ்தான் வளர்ச்சியடையும் போது, இங்குள்ள ஒவ்வொரு குடும்பமும் வளமான வாழ்க்கையை வாழும். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள் -

பாரத மாதாவுக்கு ஜே!

பாரத மாதாவுக்கு ஜே!

நாடு இப்போது வந்தே மாதரத்தின் 150 ஆண்டுகளைக் கொண்டாடி வருகிறது. என்னுடன் இணைந்து சொல்லுங்கள் -

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

வந்தே மாதரம்.

மிக்க நன்றி.

----

(Release ID:2233884)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2279781) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam