பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மக்களவையில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 16 APR 2026 5:43PM by PIB Chennai

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

இந்த முக்கியமான மசோதா மீதான விவாதம் இன்று காலை தொடங்கியது. இங்கே இருக்கும் பல சக உறுப்பினர்கள் பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசியுள்ளனர்; அவர்கள் நிச்சயமாக இந்த அவையில் பல உண்மைகளையும் வாதங்களையும் முன்வைப்பார்கள். எனவே, நான் அந்தப் பொருள்களுக்குள் செல்ல விரும்பவில்லை.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

ஒரு தேசத்தின் வாழ்வில் சில முக்கியமான தருணங்கள் அமையும். அந்த நேரத்தில் சமூகத்தின் மனப்போக்கும், தலைமையின் ஆளுமையும் அத்தகைய தருணங்களை உள்வாங்கி, அவற்றை ஒரு தேசிய மரபாக மாற்றி, வலிமையான ஒரு பாரம்பரியத்தை உருவாக்குகின்றன. இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக வரலாற்றில் இதுவும் அத்தகையதொரு தருணம் என்று நான் நம்புகிறேன்.

உண்மையில், 25-30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த யோசனை முதன்முதலில் உருவானபோதே, இதன் அவசியம் உணரப்பட்டபோதே, நாம் இதனை நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்; இந்நேரம் இது முதிர்ச்சியடைந்த நிலையை எட்டியிருக்க வேண்டும். ஜனநாயகத்தின் அழகே தேவைக்கேற்ப அவ்வப்போது மாற்றங்களைச் செய்துகொள்வதுதான். நாம் ‘ஜனநாயகத்தின் தாய். நமது ஜனநாயகம் ஆயிரக்கணக்கான ஆண்டுகால வளர்ச்சிப் பயணத்தைக் கொண்டது. இன்று அந்தப் பயணத்தில் ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்க்கும் நல்வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

நான் தொடக்கத்தில் குறிப்பிட்டது போல, தேசத்தைக் கட்டமைக்கும் கொள்கை முடிவெடுக்கும் செயல்பாடுகளில், நாட்டின் மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களைப் பங்கெடுக்கச் செய்யும் பெருமை நமக்குக் கிடைத்திருப்பது நமது பாக்கியம். இது நமது நற்பேறு. இந்த முக்கியமான வாய்ப்பை எனது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் நழுவ விடக்கூடாது என்று நான் விரும்புகிறேன்.

நாம் இந்தியர்கள் அனைவரும் இணைந்து நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் கொடுக்கப் போகிறோம். நமது நிர்வாக அமைப்பில் உணர்திறனை நிரப்புவதற்கான ஒரு அர்த்தமுள்ள முயற்சியை நாம் மேற்கொண்டு வருகிறோம். இந்த மந்தணத்திலிருந்து வெளிவரும் அமிர்தம், தேசத்தின் அரசியலுக்கு ஒரு வடிவம் கொடுப்பது மட்டுமல்லாமல், நாட்டின் நிலையையும் திசையையும் தீர்மானிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். நாம் அத்தகையதொரு மிக முக்கியமான திருப்புமுனையில் நிற்கிறோம்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

21-ம் நூற்றாண்டில் இந்தியா புதிய தன்னம்பிக்கையுடன் முன்னேறிச் செல்கிறது. இன்று உலக அரங்கில் இந்தியாவிற்குக் கிடைத்துள்ள அங்கீகாரத்தை நாம் அனைவரும் உணர்கிறோம். இது நமக்குப் பெருமிதமான தருணமாகும். ஒரு காலம் கனிந்து வந்துள்ளது, அந்தக் காலத்தை நாம் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற உறுதிமொழியோடு இணைத்துள்ளோம். வளர்ச்சியடைந்த இந்தியா என்பது வெறும் சிறந்த ரயில்வே, சாலைகள், உள்கட்டமைப்பு அல்லது சில பொருளாதார முன்னேற்றப் புள்ளிவிவரங்கள் மட்டுமே என்று நான் கருதவில்லை. வளர்ச்சியடைந்த இந்தியா குறித்த அத்தகைய குறுகிய கற்பனை எங்களிடம் இல்லை. கொள்கை உருவாக்கத்தில் "அனைவருடன் இணைந்து, அனைவருக்குமான வளர்ச்சி என்ற மந்திரம் ஆழமாகப் பதிந்துள்ள ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவையே நாம் விரும்புகிறோம்.

நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதமாக இருக்கும் பெண்கள் கொள்கை உருவாக்கத்தின் ஒரு அங்கமாக மாற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகும். காரணங்கள் எதுவாக இருந்தாலும், அதற்கு யார் பொறுப்பாக இருந்தாலும், நாம் ஏற்கனவே இதில் தாமதம் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை; இந்த உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். நாம் தனிப்பட்ட முறையில் சந்திக்கும்போது இதனை ஒப்புக்கொள்கிறோம், ஆனால் கூட்டாகச் சந்திக்கும்போது நிலைமை மாறுகிறது. இந்தச் செயல்முறை நடந்து கொண்டிருந்தபோது, அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டங்கள் நடத்தப்பட்டது எனக்கு நினைவிருக்கிறது. ஒரே ஒரு கட்சியைத் தவிர, மற்ற அனைவரும் கொள்கை அளவில் உடன்பட்டனர். அதன் பிறகு என்ன நடந்திருந்தாலும், அரசியல் ரீதியான முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஆனால், எதையும் அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்ப்பவர்களுக்கு, ஒரு நண்பனாக நான் ஓர் ஆலோசனையை வழங்க விரும்புகிறேன், இது அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதம் தொடங்கிய பிறகு நடந்த ஒவ்வொரு தேர்தலிலும், பெண்களுக்கு இந்த உரிமையை வழங்க மறுத்தவர்களை இந்நாட்டின் பெண்கள் ஒருபோதும் மன்னிக்கவில்லை. அவர்கள் கடுமையாக நடத்தப்பட்டனர். ஆனால், 2024 தேர்தலைப் பாருங்கள் - அப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏன்? ஏனெனில் 2024-ல் இதனை நிறைவேற்ற அனைவரும் ஒப்புக்கொண்டனர், எனவே அது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. இதில் யாருக்கும் அரசியல் ஆதாயமோ, அரசியல் இழப்போ ஏற்படவில்லை. 2024-ல் அனைவரும் ஒன்றாக இருந்ததால், தேர்தலை மற்ற விஷயங்களின் அடிப்படையில் சந்தித்தோம். சிலர் இங்கே இருக்கிறார்கள், சிலர் இல்லை, ஆனால் அனைவரும் ஒன்றாக இருந்தனர்.

இன்றும் நான் சொல்கிறேன், நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால், இது எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சிக்கும் சாதகமாக அமையாது என்பதற்கு வரலாறே சாட்சி. இது நாட்டின் ஜனநாயகத்திற்கும், தேசத்தின் கூட்டு முடிவெடுக்கும் ஆற்றலுக்கும் சாதகமாக அமையும்; அதன் பெருமை நம் அனைவருக்கும் சேரும். இதற்கு ஆளுங்கட்சியோ அல்லது மோடியோ உரிமையாளராக முடியாது, இங்கே அமர்ந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் அந்த உரிமை உண்டு. எனவே, இதில் அரசியல் காண்பவர்கள் கடந்த 30 ஆண்டுகால முடிவுகளைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இதில்தான் அவர்களின் நன்மையும் அடங்கியுள்ளது; இழப்புகளிலிருந்து நீங்கள் தப்பிப்பதற்கான வழியையே நான் காட்டுகிறேன். எனவே, இதற்கு அரசியல் சாயம் பூச வேண்டிய அவசியம் இல்லை என்று நான் நம்புகிறேன்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

எனக்கு நினைவிருக்கிறது, அந்த நேரத்தில் நான் அரசு சார்ந்த அரசியலில் இல்லை, ஒரு அமைப்பின் தொண்டனாகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். அப்போது அதிகாரவர்க்கத்தின் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிக்கடி அடிபடும்; அதாவது பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு அளிப்பதில் அவர்களுக்கு எந்தச் சிரமமும் இருக்கவில்லை. ஏனெனில், பஞ்சாயத்துகளில் இடஒதுக்கீடு கொடுப்பதால் தங்கள் சொந்தப் பதவிகளுக்கு ஆபத்து வரும் என்று அவர்கள் பயப்படவில்லை. அங்கே தங்களுக்குப் பாதுகாப்பு இருப்பதாக அவர்கள் உணர்ந்தார்கள், அதனால் 'அங்கே கொடுங்கள்' என்று சொன்னார்கள். ஆனால், அதை ஒருபோதும் நாடாளுமன்றத்தில் செய்ய மாட்டார்கள், ஏனென்றால் இங்கே அவர்கள் எதையாவது இழக்க நேரிடும் என்பதே அப்போது அவர்களது வட்டாரங்களில் நிலவிய பொதுவான விவாதமாக இருந்தது. அதனால்தான் பஞ்சாயத்து இடஒதுக்கீடு 50 விழுக்காடு வரை உயர்ந்தது.

அரசியல் ரீதியாக நான் மற்றொரு கருத்தையும் விளக்க விரும்புகிறேன் நண்பர்களே,

25-30 ஆண்டுகளுக்கு முன்பு யாரெல்லாம் இதை எதிர்த்தார்களோ, அந்த எதிர்ப்பு அரசியலின் மேற்பரப்பைத் தாண்டிச் செல்லவில்லை. இன்றும் அதே நிலையை நினைத்துத் தவறு செய்துவிடாதீர்கள். கடந்த 25-30 ஆண்டுகளில், பஞ்சாயத்துத் தேர்தல்களில் வெற்றி பெற்ற சகோதரிகள் பெரும் அரசியல் விழிப்புணர்வை அடைந்துள்ளனர். அவர்கள் அடித்தட்டு அளவில் மக்களின் கருத்துகளை உருவாக்குபவர்களாக மாறியுள்ளனர். முப்பது ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் அமைதியாக இருந்தார்கள்; அவர்களுக்குப் புரிந்தது ஆனால் பேசவில்லை. இன்று அவர்கள் குரல் கொடுக்கிறார்கள். எனவே, இப்போது எந்த நிலையில் இருந்தாலும், பஞ்சாயத்துகளில் பணியாற்றி, பிரதிநிதித்துவம் பெற்று, மக்களின் இன்ப துன்பங்களை ஆழமாகப் பார்த்திருக்கும் அந்தப் பல லட்சக்கணக்கான சகோதரிகள் இன்று கிளர்ந்தெழுந்துள்ளனர். அவர்கள் சொல்கிறார்கள், "நாங்கள் முன்பே குடும்பங்களில் செய்த துப்புரவு மற்றும் தூய்மைப் பணிகளுக்கு எங்களைத் தள்ளுகிறீர்கள், ஆனால் இப்போது எங்களை முடிவெடுக்கும் செயல்பாட்டில் இணைத்துக் கொள்ளுங்கள்" என்று. முடிவெடுக்கும் அதிகாரம் சட்டப்பேரவைகளிலும் நாடாளுமன்றத்திலும் தான் நடக்கிறது.

எனவே, அரசியல் வாழ்வில் முன்னேற விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி, சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தாலும் சரி - நான் எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை - உங்கள் அரசியல் வாழ்வில் நீங்கள் வெற்றிகரமாக முன்னேற வேண்டுமென்றால், கடந்த 25-30 ஆண்டுகளில் லட்சக்கணக்கான சகோதரிகள் அடித்தட்டு அளவில் தலைவர்களாக உருவெடுத்துள்ளார்கள் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இப்போது அவர்கள் இங்கே 33% இடஒதுக்கீட்டில் மட்டுமல்ல, அங்கேயும் உங்கள் முடிவுகளில் செல்வாக்கு செலுத்துவார்கள். எனவே, இன்று யாரெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்கள் நீண்ட காலத்திற்கு அதன் விலையைச் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, அடித்தட்டு அளவில் உருவெடுத்துள்ள பெண்களின் அரசியல் தலைமைத்துவத்தைக் கருத்தில் கொள்வதில்தான் அரசியல் ஞானம் உள்ளது.

முலாயம் சிங் அவர்கள் காலத்திலிருந்தே இந்த விவாதம் எழுப்பப்பட்டு வருவதையும், அவரது குடும்பத்தினர் அதைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதையும் நான் கேள்விப்பட்டேன். நாட்டின் பெண்கள் மீது நம்பிக்கை வையுங்கள், அவர்களின் ஞானத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். 33 விழுக்காடு சகோதரிகளை இங்கே வர அனுமதியுங்கள்; யாருக்குக் கொடுப்பது, யாருக்குக் கொடுக்கக் கூடாது, எந்த வகுப்பினருக்குக் கொடுப்பது, எந்த வகுப்பினருக்குக் கொடுக்கக் கூடாது என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும். அவர்கள் முடிவுகளை எடுப்பார்கள். அவர்களின் திறமை மீது நாம் ஏன் சந்தேகம் கொள்ள வேண்டும்? அவர்கள் ஒருமுறை வரட்டும்! அவர்கள் ஒருமுறை வரட்டும்!

தர்மேந்திர அவர்கள், என்னை அறிமுகப்படுத்தியதற்காக நான் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன் என்பது உண்மைதான். தர்மேந்திர அவர்கள், நான் உங்களுக்கு மிகவும் நன்றி கூறுகிறேன், அகிலேஷ் அவர்கள் எனது நண்பர், அதனால் சில நேரங்களில் அவர் எனக்கு உதவுகிறார். நான் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவன் என்பது உண்மையாக இருந்தாலும், அனைவரையும் அரவணைத்துச் செல்வதே எனது பொறுப்பு, அதைத்தான் எனது அரசியலமைப்புச் சட்டம் எனக்குக் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டமே உயர்ந்தது. இவ்வளவு சிறிய, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு நாட்டின் இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கியிருப்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தின் வலிமைதான். எனவே, இந்நாட்டு மக்களுக்கும், அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்களுக்கும் நான் கடன்பட்டிருக்கிறேன், அவர்களால்தான் இன்று நான் இங்கே இருக்கிறேன்.

ஆனால் மாண்புமிகு சபாநாயகர் அவர்களே!

இன்று வாழ்வின் ஒவ்வொரு துறையையும் நாம் கவனித்தால், தேசத்தின் பெருமையை உயர்த்துவதிலும், வெற்றிக்கொடியை நிலைநாட்டுவதிலும் பெண்கள் எவருக்கும் பின் சளைத்தவர்கள் அல்ல. வாழ்வின் வெவ்வேறு தளங்களில் நமது தாய்மார்களும், சகோதரிகளும் மகத்தான பங்களிப்பை அளித்து வருவதையும், நமது மகள்கள் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குவதையும் கண்டு நாம் பெருமிதம் கொள்ளலாம்! இவ்வளவு பெரிய ஆற்றல் கொண்ட அவர்களை, இந்த அதிகாரப் பங்களிப்பில் பங்கேற்க விடாமல் தடுப்பதற்கு நாம் ஏன் இவ்வளவு சக்தியை விரயம் செய்ய வேண்டும்? அவர்கள் இணைவது நமது வலிமையை மேலும் அதிகரிக்கவே செய்யும். எனவே, இதனை அரசியலின் தராசில் வைத்து எடை போட வேண்டாம் என்று நான் இன்று உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இது தேசிய நலன் சார்ந்த ஒரு முடிவாகும்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

இன்று நம் முன் உள்ள இந்த வாய்ப்பு என்பது, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அமர்ந்து, ஒரே திசையில் சிந்தித்து, வளர்ந்த பாரதத்தைக் கட்டியெழுப்புவதில் நமது பெண் சக்தியின் பங்களிப்பை ஏற்பது என வெளிப்படையாக முடிவெடுப்பதாகும். நான் முன்பே கூறியது போல, இன்று முழு நாடும், குறிப்பாகப் பெண் சக்தியும் நமது முடிவுகளைக் கவனிக்கும்; ஆனால் முடிவுகளை விடவும், நமது எண்ணத்தைத்தான் அவர்கள் உற்று நோக்குவார்கள். எனவே, நமது எண்ணத்தில் குறை இருந்தால், நாட்டின் பெண் சக்தி நம்மை ஒருபோதும் மன்னிக்காது.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

2023-ம் ஆண்டு, இந்தப் புதிய நாடாளுமன்ற அவையில் நாம் அனைவரும் ஒருமனதாக இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொண்டோம். நாடு முழுவதும் ஒரு மகிழ்ச்சியான சூழல் உருவானது, இதற்கு அரசியல் சாயம் பூசப்படவில்லை, அதனால்தான் இது ஒரு அரசியல் பிரச்சினையாக மாறவில்லை. அது ஒரு நல்ல நிலையாகும். இப்போது கேள்வி என்னவென்றால், நாம் இன்னும் எவ்வளவு காலம் இதனைத் தாமதப்படுத்துவது என்பதுதான். மக்கள்தொகை குறித்த விவகாரங்களை எழுப்புபவர்களுக்குத் தெரியாதா? மக்கள்தொகை கணக்கெடுப்பை நாம் எப்போது நடத்தினோம், அதன் பிறகு கோவிட் பெருந்தொற்றால் என்னென்ன சிரமங்கள் ஏற்பட்டன, என்னென்ன தடைகள் வந்தன என்பது குறித்த அனைத்து விவரங்களையும் அமித்பாய் தனது உரையில் குறிப்பிடுவார் என்று நான் விரும்புகிறேன். இவை அனைத்தும் நம் முன் உள்ள விஷயங்களே, இதில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை.

ஆனால், 2023-ல் நாம் விவாதித்தபோது, இதனை விரைவாகச் செய்ய வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த கருத்தாக இருந்தது; அனைவரும் விரைவாகச் செய்யச் சொன்னார்கள். கால அவகாசம் குறைவாக இருந்ததால் 2024-ல் இது சாத்தியப்படவில்லை. இப்போது 2029-ல் நமக்கு அந்த வாய்ப்பு உள்ளது. நாம் 2029-லும் இதனைச் செய்யவில்லை என்றால், என்ன மாதிரியான சூழல் உருவாகும் என்பதை நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அதன் பிறகு, இந்த முயற்சியை நம்மால் உண்மையிலேயே முன்னெடுக்க முடியும் என்று நாட்டின் தாய்மார்களிடமும், சகோதரிகளிடமும் நம்மால் புரிய வைக்க முடியாது. எனவே, காலத்தின் கட்டாயம் என்னவென்றால், நாம் இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்பதே.

இதற்கிடையில், அரசியல் கட்சி உறுப்பினர்கள், அரசியலமைப்பு வல்லுநர்கள், பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் பலருடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிலர் தாங்களாகவே முன்வந்து ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அனைத்துக் கட்சிகளுடனும் முறைப்படியாகவும், முறைசாரா ரீதியாகவும் தொடர்ச்சியான விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த ஒட்டுமொத்த தீவிரமான விவாதத்தின் இறுதியாக நமது தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான ஒரு வழியை நாம் கண்டடைய வேண்டும்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

நான் நிச்சயமாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். இங்கே அமர்ந்திருக்கும் நம் எவருக்கும், தேசத்தைத் துண்டு துண்டாகச் சிந்திக்கும் உரிமையை நமது அரசியலமைப்புச் சட்டம் வழங்கவில்லை. நாம் எடுத்திருக்கும் உறுதிமொழி, தேசத்தை ஒன்றாகச் சிந்திப்பதற்கே நம்மைப் பணிக்கிறது. அது காஷ்மீராக இருந்தாலும் சரி அல்லது கன்னியாகுமரியாக இருந்தாலும் சரி, நம்மால் துண்டுகளாகச் சிந்திக்க முடியாது; துண்டுகளாக முடிவெடுக்கவும் முடியாது. எனவே, அரசியல் ஆதாயத்திற்காக மட்டும், துளியும் உண்மை இல்லாமல் எழுப்பப்படும் அடிப்படையற்ற பிரச்சனைகள் குறித்து, இந்த அவையின் புனிதமான இடத்திலிருந்து முழுப் பொறுப்புடன் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்: அது தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என எந்தத் திசையாக இருந்தாலும் சரி, சிறிய மாநிலங்கள் அல்லது பெரிய மாநிலங்களாக இருந்தாலும் சரி, இந்த முடிவெடுக்கும் செயல்முறை எவருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டாது, எவருக்கும் அநீதி இழைக்காது என்று நான் பொறுப்புடன் கூறுகிறேன்.

கடந்த காலங்களில் முந்தைய அரசாங்கங்களின் கீழ் தொகுதி மறுவரையறை எப்படி நடந்ததோ, அப்போதிருந்து என்ன விகிதாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகிறதோ, அந்த விகிதாச்சாரங்களில் எந்த மாற்றமும் இருக்காது; ஏதேனும் அதிகரிப்பு இருந்தாலும் அதுவும் அதே விகிதத்தில்தான் இருக்கும். இதற்கு 'உத்தரவாதம்' என்ற வார்த்தை தேவையென்றால், நான் 'உத்தரவாதம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். உங்களுக்கு 'வாக்குறுதி' என்ற வார்த்தை வேண்டுமென்றால், நான் 'வாக்குறுதி' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன். இதைக் குறிக்கத் தமிழில் ஏதேனும் ஒரு நல்ல வார்த்தை இருந்தால், அதையும் பயன்படுத்த நான் தயாராக இருக்கிறேன்; ஏனெனில், எண்ணம் தெளிவாக இருக்கும்போது, வார்த்தைகளுடன் விளையாட வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

இந்த அவையிலுள்ள அனைத்துச் சக உறுப்பினர்களுக்கும் நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன், நாம் மாயையில் இருக்கக் கூடாது; நாம் கர்வத்திலும் இருக்கக் கூடாது. நான் "நாம்" என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறேன், "நான்" மற்றும் "நீங்கள்" என்று பேசவில்லை. நாட்டின் பெண் சக்திக்கு நாம் ஏதோ ஒன்றைக் கொடுக்கிறோம் என்ற மாயையில் நாம் இருக்கக் கூடாது. இல்லை, அது அவர்களின் உரிமை; பல தசாப்தங்களாக நாம் அதைத் தடுத்து வைத்துள்ளோம். இன்று வருந்துவதன் மூலம் அந்தப் பாவத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் வாய்ப்பு நமக்குக் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு முறையும் என்னென்ன தந்திரங்கள் செய்யப்பட்டன, எவ்வளவு சாமர்த்தியம் பயன்படுத்தப்பட்டது என்பது நமக்குத் தெரியும். நாம் எப்போதும் ஆதரவாக இருப்பதாகவே சொன்னோம், ஆனால் ஒவ்வொரு முறையும் அதைத் தடுப்பதற்காக ஏதோ ஒரு தொழில்நுட்பக் காரணத்தைச் சாக்காகச் சேர்த்தோம். ஒவ்வொரு முறையும் இது போன்ற விஷயங்கள் கொண்டு வரப்பட்டன. பெண்களுக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை எதிர்க்கும் துணிச்சல் யாருக்கும் கிடையாது; அந்தக் காலம் கடந்துவிட்டது, உங்களால் அதைச் செய்ய முடியாது. ஆனால் அதைச் சொல்வதற்குக்கூட உங்களுக்குத் துணிச்சல் இல்லை.

எனவே, 'இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள், இதைச் சேருங்கள்' என்ற தொழில்நுட்பக் காரணங்களை இனி உங்களால் இந்நாட்டுப் பெண்களுக்கு விளக்க முடியாது. அவையில் நடக்கும் எண்களின் விளையாட்டை காலம் தீர்மானிக்கும்; ஆனால் பல்வேறு சாக்குப்போக்குகள் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களில் சிக்கவைத்து, கடந்த மூன்று தசாப்தங்களாக நாம் இதைத் தடுத்து நிறுத்திவிட்டோம் என்பது மட்டும் உறுதி. நீங்கள் விரும்பியதைச் சாதித்துவிட்டீர்கள், இப்போது அதை விட்டுவிடுங்கள்! தடுப்பதற்கு மூன்று தசாப்தங்கள் போதாதா? மூன்று தசாப்தங்களாக நீங்கள் அதைத் தடுத்தீர்கள், இருந்தும் உங்களால் எதையும் சாதிக்க முடியவில்லை, எனவே இப்போதாவது அதைச் செய்யுங்கள்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

இதில் எங்கோ ஓரிடத்தில் மோடியின் அரசியல் சுயநலம் இருப்பதாக இங்கிருக்கும் சிலர் கருதுகிறார்கள். அவர்கள் பேசட்டும், பாவம் அந்த மனிதரின் வாய் அங்கே பூட்டப்பட்டுள்ளது; வங்காளத்தில் அவரைப் பேச யாரும் அனுமதிப்பதில்லை.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

பாருங்கள், இது எதிர்க்கப்பட்டால் இயல்பாகவே எனக்குத்தான் அரசியல் ஆதாயம் கிடைக்கும். ஆனால், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால், இதில் யாருக்கும் தனிப்பட்ட ஆதாயம் கிடைக்காது, இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். யாருக்கும் ஆதாயம் கிடைக்காது, ஏனெனில் அப்போது அது ஒரு மாறுபட்ட பரிமாணமாக மாறிவிடும்; அதன் பிறகு யாரும் பயனடையப் போவதில்லை. எனவே, இதற்குரியப் பெருமையை நாங்கள் கோரவில்லை. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டவுடனேயே, நாளை அனைவருக்கும் நன்றி தெரிவித்து விளம்பரம் கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்; அனைவரது புகைப்படத்தையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன். அந்தப் பெருமையை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்! உங்களுக்குப் பெருமை குறித்துக் கவலை இருந்தால், அதை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள். யாருடைய புகைப்படம் வெளியிடப்பட வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதை அரசு செலவிலேயே நாங்கள் செய்வோம். இதற்கான பெருமையை உங்களுக்கே வழங்குவதற்கான ஒரு 'பிளாங்க் செக்' நான் முன்னதாகவே தருகிறேன்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் பெண்களின் பங்கேற்பு என்பது வெறும் எண்களின் விளையாட்டு மட்டுமல்ல, அல்லது ஜனநாயக ஏற்பாடுகளில் செய்யப்படும் ஒரு சிறிய முன்னேற்றமும் அல்ல. ஜனநாயகத்தின் தாய் என்ற முறையில், இந்த முடிவு இந்தியாவின் அர்ப்பணிப்பாகும்; இது ஒரு கலாச்சார அர்ப்பணிப்பாகும். இந்த அர்ப்பணிப்பின் காரணமாகவே, பஞ்சாயத்துகளில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது, இப்போது 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இது 50 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனை நாம் அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளோம்.

நீண்ட காலம் முதலமைச்சராகப் பணியாற்றும் வாய்ப்பை மக்கள் எனக்கு வழங்கினார்கள்; அந்தக்காலக்கட்டத்தில் அடித்தட்டு அளவில் பெண்களின் தலைமையைப் பார்த்திருக்கிறேன். பிரச்சனைகளை உணர்திறனுடன் அணுகித் தீர்ப்பதில் அவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது, அது வளர்ச்சியின் பயணத்திற்குப் பெரும் வேகத்தைக் கொடுத்தது என்பது எனது அனுபவமாகும். அந்த அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் சொல்கிறேன், இந்த அவையில் ஒலிக்கும் அவர்களின் குரல் ஒரு புதிய வலிமையாக மாறும்; ஒரு புதிய சிந்தனை இதில் சேரும், தேசத்தின் திசையில் ஒரு மென்மையான உணர்திறன் இணையும். உண்மைகளுடனும் வாதங்களுடனும் அனுபவமும் சேரும்போது, அதன் வலிமை பன்மடங்கு அதிகரிக்கிறது; இந்த அவை மேலும் வளமடைகிறது.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

நம் நாட்டில் அனுபவம் வாய்ந்த பெண் சக்திக்கும் குறைவில்லை, திறமையான பெண்களுக்கும் குறைவில்லை. அவர்கள் மீது நாம் நம்பிக்கை வைப்போம்; அவர்கள் பங்களிப்பார்கள், மிகச் சிறப்பாகப் பங்களிப்பார்கள். இன்றும் கூட, இங்கே இருக்கும் நமது சகோதரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும் போதெல்லாம், அவர்கள் தங்கள் கருத்துகளை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி, இந்த அவையை வளப்படுத்தியுள்ளனர்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

இன்று நாட்டில் 650-க்கும் மேற்பட்ட மாவட்ட ஊராட்சிகள் உள்ளன; அவற்றில் சுமார் 275 ஊராட்சிகளுக்குப் பெண்களே தலைமை தாங்குகின்றனர். மத்திய அமைச்சரவை அமைச்சர்களைக் காட்டிலும் அதிக பொறுப்புகளையும், நிதிகளையும், நிர்வாக ஏற்பாடுகளையும் கொண்டு அவர்கள் பணியாற்றி வருகிறார்கள். சுமார் 6,700 ஊராட்சி ஒன்றியங்களில் 2,700-க்கும் மேற்பட்டவற்றிற்கு பெண்களே தலைமை தாங்குகின்றனர். இன்று 900-க்கும் மேற்பட்ட நகரங்களில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்களாகவோ அல்லது நிலைக்குழுக்களின் தலைவர்களாகவோ நமது சகோதரிகள் அதிகாரத்தில் உள்ளனர். இன்று நாடு கண்டு வரும் முன்னேற்றத்தில் அவர்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது என்று நான் நம்புகிறேன்; அந்த நன்றிக்கடனை அங்கீகரிப்பதற்கான வாய்ப்பு இதுவாகும். இந்த அனுபவம் இந்த அவையுடன் இணையும் போது, அதன் வலிமை பன்மடங்கு பெருகும்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

நீண்ட காலக் காத்திருப்பு நம் அனைவர் மீதும் ஒரு கேள்விக்குறியை உருவாக்கியுள்ளது; இந்தச் சூழலை நாமே தான் உருவாக்கினோம். கடந்த காலத்தில் இருந்த வரம்புகள் அல்லது சிரமங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றிலிருந்து வெளியே வந்து, துணிச்சலுடன் முன்னேறி, தேசத்தின் வளர்ச்சியில் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்வதற்கான வாய்ப்பு இதுவாகும். நாம் இன்று இணைந்து முடிவெடுத்தால் – நாம் ஒருமனதாக முன்னேற வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் – அது ஒருமனதாகச் செயல்படும்போது, ஆளுங்கட்சியின் மீதும் ஒரு அழுத்தம் இருக்கும். இதில் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு, அனைவரது குரலும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அவர்களும் உணர்வார்கள்; இதில் எந்தத் தீங்கும் இல்லை. கூட்டு வலிமை நமக்கு பல நல்ல முடிவுகளைத் தரும்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல் நான் ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்: இதனை அரசியலின் தராசில் வைத்து எடை போடாதீர்கள். நாம் ஒரு முடிவை எடுக்கும்போதெல்லாம், இந்த மாபெரும் தேசத்தின் பொறுப்பில் பாதி பங்கு யாரிடம் உள்ளதோ, அவர்களைத்தான் நாம் இங்கே அழைத்து வருகிறோம். அவர்களுக்கும் இங்கே வருவதற்கு உரிமை உண்டு, நாம் அவர்களைத் தடுக்கக் கூடாது. மேலும், எண்ணிக்கையைப் பொறுத்தவரை, அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படக்கூடாது, அதிகரிக்கப்பட வேண்டும், அப்போதுதான் காரியம் விரைவாக நடக்கும் என்று முன்பு விவாதிக்கப்பட்டது. அந்த விஷயம் இப்போது வந்துள்ளது; அதாவது, யாருடைய உரிமையும் பறிக்கப்பட்டுவிட்டதாக எவரும் உணராத வகையில், ஏற்கனவே இருந்த 33 சதவீத எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். ஒரு புதிய வலிமை இதில் சேரும், கூடுதல் பலம் கிடைக்கும்; அதற்கேற்ப இந்த அவையின் கட்டமைப்பும் மாற்றியமைக்கப்படும். இதற்காகவே நாங்கள் ஏற்கனவே சிந்தித்து, இடவசதிகளையும் தயார் செய்துள்ளோம்.

மாண்புமிகு சபாநாயகர் அவர்களே,

சற்று நகைச்சுவையாகச் சொல்ல வேண்டுமானால், ஒவ்வொருவருக்கும் அவரவர் சார்ந்த அரசியல் காரணங்கள் உள்ளன; தோல்வி குறித்த பயம் இருப்பது சற்றே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் நமது மரபில், ஒரு நல்ல காரியம் நடக்கும்போது திருஷ்டி கழிக்க கருப்புப் பொட்டு வைப்பார்கள். அந்த வகையில், கருப்புப் பொட்டு வைத்ததற்காக உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்!

மிக்க நன்றி!

பொறுப்புத் துறப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான தமிழாக்கம் ஆகும். மூல உரை இந்தி மொழியில் நிகழ்த்தப்பட்டது.

***

(Release ID: 2252677)

AD/VK/KR

 


(रिलीज़ आईडी: 2279008) आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam