பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலம் மண்டியாவில் ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயத்தை திறந்து வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
15 APR 2026 1:49PM by PIB Chennai
பரம பூஜ்ய ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் நிர்மலானந்தநாத மஹாசுவாமி அவர்களே, முன்னாள் பிரதமர் மதிப்பிற்குரிய ஹெச்.டி. தேவேகவுடா அவர்களே, மாநில ஆளுநர் திரு. தாவர் சந்த் கெலாட் அவர்களே, பரம பூஜ்ய ஜெகத்குரு சுவாமி பரமாத்மானந்த சரஸ்வதி அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சக நண்பர்கள் ஹெச்.டி. குமாரசாமி அவர்களே, ஷோபா கரந்த்லாஜே அவர்களே, கர்நாடக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். அசோக் அவர்களே, மாநில அமைச்சர் என். செலுவராயசாமி அவர்களே, இங்கு வருகை தந்துள்ள மதிப்பிற்குரிய துறவிகளே, ஏனைய பெருந்தகைகளே மற்றும் பெருந்திரளாகக் கூடியிருக்கும் எனது சகோதர சகோதரிகளே!
நண்பர்களே,
இன்று எனது இதயம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு உணர்ச்சிகளால் நிறைந்துள்ளது. ஸ்ரீ கால பைரவர் கோவிலில் தரிசனம் செய்து வழிபாடு நடத்தியது, ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயத்தின் பிரம்மாண்ட திறப்பு விழாவிற்குச் சாட்சியாக இருந்தது, வரலாற்றுச் சிறப்புமிக்க ஜுவாலா பீடத்தில் நேரத்தைச் செலவிட்டது, ஆன்மீக உச்சங்களைத் தொட்ட துறவிகளின் சகவாசத்தைப் பெற்றது மற்றும் இப்போது இங்கு கூடியிருக்கும் மக்கள் வெள்ளத்தைக் காண்பது என - இந்த அனுபவங்கள் எப்போதும் என்னுடன் நிலைத்திருக்கும். உங்கள் மத்தியில் வரும் வாய்ப்பு கிடைத்ததை எனது நற்பேறாகக் கருதுகிறேன். இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
கர்நாடகாவிற்கு வருவது எனக்கு எப்போதும் பெருமகிழ்ச்சியைத் தருகிறது. நான் இங்கு வரும் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய உத்வேகத்தைப் பெறுகிறேன். ஆனால், இன்று மாண்டியா மாவட்டத்தின் 'சர்க்கரை நகருக்கு' நான் வந்துள்ள இந்தப் பயணம் பல காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த நிலம் கரும்பின் இனிமைக்குப் பெயர் பெற்றது, அதே இனிமையை இங்குள்ள மக்களின் பேச்சிலும் காண முடிகிறது. அவர்களின் கனிவும், வரவேற்கும் பண்பும் இதயத்தைத் தொடுகின்றன. கர்நாடகா தத்துவத்திலும், தொழில்நுட்பத்திலும் சிறந்து விளங்குகிறது என்று நான் அடிக்கடி கூறுவேன். அதாவது, தத்துவத்தின் ஆழமும், தொழில்நுட்பத்தின் வலிமையும் ஒருங்கே அமைந்த இடமிது. ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மஹாசம்ஸ்தான மடம் போன்ற ஆன்மீக மையங்கள் இந்த நிலம் நமக்குத் தந்த மாபெரும் பரிசுகளாகும். இந்த நிறுவனம் தத்துவம், ஆன்மீகம் மற்றும் தார்மீக விழுமியங்களின் மூலம் சமூகத்தை நல்வழிப்படுத்துகிறது.
நண்பர்களே,
பாரதம் என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் ஒரு வாழும் நாகரிகம். உலகில் இவ்வளவு நீண்ட காலம் பாரம்பரியங்கள் தொடர்வதற்கு மிகச்சில உதாரணங்களே உள்ளன. ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மஹாசம்ஸ்தான மடத்தைப் பார்க்கும்போது, அந்தத் தொடர்ச்சியின் வாழும் வடிவத்தை நாம் காண்கிறோம். இந்தப் புனித மடத்தின் வரலாறு சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது. இதன் குரு மரபும், ஆன்மீகத் தத்துவமும், சேவையுள்ளமும் பல தலைமுறைகளாக இந்த மண்ணை வளப்படுத்தி வந்துள்ளன.
இந்தத் தர்ம மரபில், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பாலகங்காதரநாத மஹாசுவாமி அவர்கள் போன்ற மாபெரும் துறவிகள் தோன்றி, இந்தப் பாரம்பரியத்தை புதிய உசரங்களுக்குக் கொண்டு சென்றனர். இன்று, ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் நிர்மலானந்தநாத மஹாசுவாமி அவர்கள் அதே அறவழியை புதிய ஆற்றலுடனும், வேகத்துடனும், அர்ப்பணிப்புடனும் அனைவரையும் ஒருங்கிணைத்து முன்னெடுத்துச் செல்கிறார்.
நண்பர்களே,
நமது சமூகத்தில், அவ்வப்போது ஆன்மீக வழிகாட்டுதலோடு மட்டும் தங்களை நிறுத்திக்கொள்ளாத மாபெரும் ஆளுமைகள் தோன்றி இருக்கிறார்கள். அவர்கள் மக்களிடையே வாழ்ந்தார்கள், அவர்களின் இன்ப துன்பங்களைப் புரிந்து கொண்டார்கள், அவர்களின் போராட்டங்களை உணர்ந்தார்கள்; மேலும் வேதனையிலிருந்தும் சிரமங்களிலிருந்தும் சமூகம் மீண்டு வருவதற்கான வழியைக் காட்டினார்கள். ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பாலகங்காதரநாத மஹாசுவாமி அவர்கள் அத்தகைய ஒரு தெய்வீக ஆளுமை ஆவார். அவர் இப்போது நம்மிடையே இல்லை, ஆனால் அவர் (தனது அருளாசியால்) இங்கேயே இருக்கிறார்.
மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் பல நிலைகளில் பணியாற்றினார். அவர் ஆழ்ந்த ஆன்மீக சக்தியைக் கொண்டிருந்தார், ஆனால் அவரது வாழ்க்கை தியானத்துடன் மட்டும் முடிந்துவிடவில்லை. கிராமப்புறப் பின்னணியில் இருந்து வந்த அவர், கிராமப்புற இளைஞர்களின் விருப்பங்களையும், சாதாரண மக்களின் சவால்களையும் நன்கு அறிந்திருந்தார். எனவே, அவரைப் பொறுத்தவரை 'பக்தி' என்பது சமூகத்தை விட்டு விலகிச் செல்வதல்ல, மாறாகச் சமூகத்திற்கான பொறுப்பை ஏற்று முன்னெடுத்துச் செல்வதாகும்.
நண்பர்களே,
கல்வித்துறையில் மஹாசுவாமி அவர்கள் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களை நிறுவினார். அங்கு ஆரம்பக் கல்வி முதல் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற தொழில்முறைப் படிப்புகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏழை மற்றும் கிராமப்புறக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பெருமளவில் பயனடைந்துள்ளனர். சுகாதாரத் துறையில் அவரது தொலைநோக்குப் பார்வை சமமான மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் சுகாதார நிறுவனங்களை உருவாக்கினார், அங்கு இன்றும் சேவை மனப்பான்மையுடன் பணிகள் நடைபெற்று வருகின்றன. தரமான மருத்துவம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமேயான சிறப்பு உரிமையாக இருக்கக்கூடாது, அது ஒவ்வொரு குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்று அவர் நம்பினார்.
நண்பர்களே,
இன்று நமது அரசாங்கமும் அதே தொலைநோக்குப் பார்வையுடன்தான் செயல்பட்டு வருகின்றது. ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், கோடிக்கணக்கான ஏழை எளிய மக்கள் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சைப் பெற்றுள்ளனர். மூத்த குடிமக்கள் அனைவரும் கண்ணியத்துடனும், சிறந்த மருத்துவ வசதிகளுடனும் வாழ வேண்டும் என்பதற்காக, இத்திட்டத்தை 70 வயதிற்கு மேற்பட்ட அனைத்து முதியோர்களுக்கும் நாம் விரிவுபடுத்தியுள்ளோம்.
நண்பர்களே,
இன்று இந்த ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயத்தில் இருப்பதும், ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பாலகங்காதரநாத மஹாசுவாமி அவர்களின் ஆசியைப் பெறுவதும் எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியமாகும். மஹாசுவாமி அவர்கள் கருணையின் வடிவம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரது கருணை மனிதர்களோடு மட்டும் நின்றுவிடவில்லை, அது அனைத்து உயிரினங்களுக்கும் விரிவடைந்தது. மயில்களைப் பாதுகாப்பதற்காக அவர் தொடங்கிய சமூக இயக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். இன்று சுவாமிஜி எனக்கு வழங்கிய நினைவுப் பரிசிலும் ஒரு மயில் உள்ளது. இது வெறும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மட்டுமல்ல, நமது கலாச்சார உணர்வோடும் தொடர்புடையது; ஏனெனில் மயில் நமது தேசியப் பறவை மட்டுமல்ல, அது முருகப்பெருமானின் (சுப்பிரமணிய சுவாமி) வாகனமும் ஆகும். தில்லியில், மக்களின் ஆசியுடன் இந்திய அரசாங்கம் எனக்கு வழங்கியுள்ள அதிகாரபூர்வ இல்லத்திலும் ஏராளமான மயில்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றுடன் நான் நல்ல நட்பையும் ஏற்படுத்திக் கொண்டுள்ளேன். மயில் எவ்வளவு அமைதியானது மற்றும் அழகானது என்பதை நான் நேரடியாகக் காண்கிறேன்.
நண்பர்களே,
இன்று ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் நிர்மலானந்தநாத மஹாசுவாமி அவர்கள் தனது குருவின் பாரம்பரியத்தை மிகச்சிறப்பாக முன்னெடுத்துச் செல்கிறார். தனது குரு காட்டிய பாதையில் பயணித்து, மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டு வருகிறார். தனது குருவின் நினைவாக இந்த ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயத்தை அவர் நிர்மாணித்திருப்பது, வெறும் ஒரு கட்டிடத்தை எழுப்புவது மட்டுமல்ல, அது ஒரு உன்னதமான உணர்வை நனவாக்குவதாகும். வரும் காலங்களில், இந்த இடம் சேவை, தியானம் மற்றும் உத்வேகத்தின் மையமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.
நண்பர்களே,
ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மஹாசம்ஸ்தான மடம் - அன்னம், அட்சரம், ஆரோக்கியம், அத்யாத்மம் (ஆன்மீகம்), ஆஸ்ரயம் (இருப்பிடம்), அரண்யம் (வனம்), ஆகலு (பசு), அனுகம்பா (கருணை) மற்றும் அனுபந்தம் (உறவு) ஆகிய ஒன்பது கொள்கைகளின் அடிப்படையில் இயங்கி வருகிறது. அதே உணர்வுடன், நாம் அனைவரும் இணைந்து மேற்கொள்ள வேண்டிய ஒன்பது உறுதிமொழிகளை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். எனது ஒன்பது கோரிக்கைகளை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.
நண்பர்களே,
தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்த மாண்டியா நன்கு அறியும். இந்தப் பிராந்தியம் முழுவதும் அன்னை காவிரியின் ஆசியால் செழிப்படைந்துள்ளது. எனவே, எனது முதல் கோரிக்கை, நாம் அனைவரும் தண்ணீரைச் சேமிக்கவும், நீர் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்யவும் உறுதி ஏற்க வேண்டும்.
எனது இரண்டாவது கோரிக்கை, மரங்கள் மற்றும் இயற்கையோடு தொடர்புடையது. ‘தாயின் பெயரால் ஒரு மரம்’ என்ற பிரச்சாரத்தின் கீழ், கோடிக்கணக்கான மக்கள் தங்களது தாயின் பெயரில் மரங்களை நட்டுள்ளனர். நாமும் நமது அன்னையரை கௌரவிக்கும் வகையில் மரங்களை நட்டு, இந்தப் பூமித்தாயைப் பாதுகாக்க உறுதி எடுக்க வேண்டும்.
எனது மூன்றாவது கோரிக்கை, தூய்மை பற்றியது. அது வழிபாட்டுத் தலமாகவோ, பொது இடமாகவோ, கிராமமாகவோ அல்லது நகரமாகவோ இருந்தாலும், எல்லா இடங்களிலும் தூய்மையைப் பராமரிப்பது நமது கூட்டுப் பொறுப்பு; அது நமது கடமையாகும்.
எனது நான்காவது கோரிக்கை, சுதேசி மற்றும் தற்சார்பு பற்றியது. நாம் இந்தியத் தயாரிப்புகளைப் பயன்படுத்த வேண்டும், இந்திய உற்பத்தியாளர்களையும் தொழில்துறையையும் வலுப்படுத்த வேண்டும். ‘உள்ளூர் பொருட்களுக்குக் குரல் கொடுப்போம்’ என்ற மந்திரத்துடன் வாழ வேண்டும்.
எனது ஐந்தாவது கோரிக்கை, நம் நாட்டின் அழகைக் காண்பது. நமது நாட்டைப் பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டும், நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் பயணம் செய்து, உள்நாட்டுச் சுற்றுலாவை ஊக்குவிக்க வேண்டும்.
நண்பர்களே,
மாண்டியா என்பது கடின உழைப்பாளிகளான விவசாயிகளின் பூமி. எனது ஆறாவது கோரிக்கை விவசாயிகளுக்கானது; அவர்கள் ரசாயனங்கள் இல்லாத இயற்கை விவசாயத்தை நோக்கி நகர வேண்டும் என்பதுதான் அது. எனது ஏழாவது கோரிக்கை ஆரோக்கியமான உணவு சார்ந்தது. இப்போது நம்மிடையே மதிப்பிற்குரிய திரு. தேவேகவுடா அவர்கள் இருக்கிறார். 'ராகி முத்தே' (கேழ்வரகு களி) உணவைப் பிரபலப்படுத்தியவர் அவர். ராகியின் முக்கியத்துவத்தை இந்தப் பிராந்தியம் முழுவதுமே அறியும். இளம் தலைமுறையினரும் தங்களது உணவில் சிறுதானியங்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நமது நாட்டில் உடல் பருமன் ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது. இதனை எதிர்கொள்ள, உணவில் பயன்படுத்தும் எண்ணெயை 10 சதவீதம் குறைக்க முயற்சி செய்யுங்கள்.
எனது எட்டாவது கோரிக்கை யோகா, விளையாட்டு மற்றும் உடற்தகுதி சார்ந்தது. நாம் அனைவரும் இவற்றை நமது வாழ்வின் அங்கமாக்கிக் கொள்ள வேண்டும். எனது ஒன்பதாவது கோரிக்கை சேவை மனப்பான்மை பற்றியது; இதனை நீங்கள் ஏற்கனவே உங்கள் செயல்களின் மூலம் தொடர்ந்து நிரூபித்து வருகிறீர்கள்.
நண்பர்களே,
தேவையுள்ளவர்களுக்குச் செய்யும் சேவை சமூகத்தை வலுப்படுத்துகிறது; அது உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய நோக்கத்தை இணைக்கிறது. நாம் அனைவரும் இந்த ஒன்பது கோரிக்கைகளின் மீது நேர்மையுடனும் உறுதியுடனும் முன்னேறினால், வளர்ந்த கர்நாடகம் மற்றும் வளர்ந்த இந்தியா எனும் இலக்கை நோக்கி வேகமாக நகர முடியும்.
மீண்டுமொருமுறை, இந்தச் சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப்புனிதமான தருணத்தில், இந்தப்புனித பூமியில், தவம் நிறைந்த இந்த நிலத்தில், என்னை அழைத்து உங்களோடு சில கணங்களைச் செலவிட வாய்ப்பளித்த ஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் நிர்மலானந்தநாத மஹாசுவாமி அவர்களுக்கும், ஸ்ரீ ஆதிசுஞ்சனகிரி மஹாசம்ஸ்தான மடத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் இதயபூர்வமான நன்றிகள். வாழ்த்துகள். நன்றி!
குறிப்பு: இது பிரதமரின் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில் நிகழ்த்தப்பட்டது.
----
(Release ID: 2252157)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2278997)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam