பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதோடு, இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்

प्रविष्टि तिथि: 17 APR 2026 2:13PM by PIB Chennai

மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் குறித்து நாடாளுமன்றத்தில் தற்போது விவாதம் நடைபெற்று வருவதாகவும், நேற்று இரவு 1 மணி வரை இந்த ஆலோசனைகள் தொடர்ந்ததாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் திருத்தம் தொடர்பான அனைத்து தவறான புரிதல்களுக்கும் தர்க்கரீதியான பதில்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட அனைத்து கவலைகளும் தீர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தேவையான தகவல்கள் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டு, தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

மக்களவையில் விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிப்பதன் மூலம் அனைத்து அரசியல் கட்சிகளும் சிந்தனைமிக்க மற்றும் உணர்வுப்பூர்வமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் மக்கள்தொகையில் பாதியாக உள்ள பெண்களுக்கு, உரிய பிரதிநிதித்துவத்தை வழங்குவதன் மூலம் வரலாறு படைக்க அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத் திருத்தம் குறித்து மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளையும் நான் கேட்டுக்கொள்கிறேன்... அவர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்...

தயவுசெய்து கவனமாகச் சிந்தித்து, உணர்வுப்பூர்வமாக முடிவெடுத்து, மகளிர் இட ஒதுக்கீட்டிற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

பெண்களின் உணர்வுகளைப் புண்படுத்தக்கூடிய எதையும் செய்ய வேண்டாம் என்றும் அனைத்து உறுப்பினர்களையும் நான் நாட்டின் பெண்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பெண்களின் கண்கள் நம் மீதும், நமது நோக்கங்கள் மீதும், நமது முடிவுகள் மீதும் உள்ளன. தயவுசெய்து மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தை ஆதரியுங்கள்.

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நான் கூற விரும்புவது என்னவென்றால்...

உங்கள் தாய், சகோதரி, மகள், மனைவி ஆகியோரை நினைவுகூர்ந்து, உங்கள் மனசாட்சிக்குச் செவிசாயுங்கள்...

நாட்டின் பெண்களுக்குச் சேவை செய்வதற்கும் அவர்களைக் கௌரவிப்பதற்கும் இது ஒரு சிறந்த தருணம்.

அவர்களுக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்புகளைப் பறிக்காதீர்கள்.

இந்தத் திருத்தம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டால், நாட்டின் பெண்கள் மேலும் வலுப்பெறுவார்கள்... நாட்டின் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்.

வாருங்கள்... இன்று நாம் ஒன்றிணைந்து சரித்திரம் படைப்போம். இந்தியாவின் பெண்களுக்கு, நாட்டின் மக்கள்தொகையில் பாதியாக உள்ள அவர்களுக்கு, அவர்களின் உரிமைகளை வழங்குவோம்.

***

(Release ID: 2252922)

TV/PLM/KR


(रिलीज़ आईडी: 2278836) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Bengali-TR , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam