பிரதமர் அலுவலகம்
ET Now உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
13 FEB 2026 9:59PM by PIB Chennai
இந்த உலகளாவிய வணிக உச்சி மாநாட்டிற்கு உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்; உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "ஒரு தசாப்த கால இடையூறு, ஒரு நூற்றாண்டு கால மாற்றம்" (A Decade of Disruption, A Century of Change) என்ற கருப்பொருளைப் பற்றி விவாதிக்க நாம் இங்கு கூடியுள்ளோம். வினீத் ஜியின் உரையைக் கேட்ட பிறகு, என் பணி மிகவும் எளிதாகிவிட்டதாக உணர்கிறேன். ஆனால் நான் ஒரு சிறிய கோரிக்கையை வைக்கிறேன் - உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிந்திருப்பதால், அது அவ்வப்போது 'ET' (Economic Times) இதழிலும் எதிரொலிக்க வேண்டும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டின் கடந்த பத்தாண்டுகள் முன்னெப்போதும் இல்லாத இடையூறுகளைச் சந்தித்த ஒரு காலமாகும். ஒரே தசாப்தத்திற்குள் உலகம் ஒரு உலகளாவிய பெருந்தொற்று, பல்வேறு பிராந்தியங்களில் பதற்றங்கள் மற்றும் போர்கள், மற்றும் உலகளாவிய சமநிலையை உலுக்கிய விநியோகச் சங்கிலி முறிவுகள் ஆகியவற்றைக் கண்டுள்ளது. ஆனால் நண்பர்களே, ஒரு தேசத்தின் உண்மையான பலம் நெருக்கடி காலங்களில்தான் வெளிப்படும் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு இடையூறுகளுக்கு மத்தியிலும், இந்த தசாப்தம் இந்தியாவிற்கு முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியையும், குறிப்பிடத்தக்க விநியோகத்தையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதையும் கொண்ட ஒன்றாக அமைந்திருப்பது குறித்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
கடந்த தசாப்தம் தொடங்கியபோது, இந்தியா பதினோராவது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இத்தகைய கொந்தளிப்பான சூழலில், இந்தியா இன்னும் கீழே இறங்கிவிடுமோ என்ற பலமான அச்சங்கள் நிலவின. ஆனால் இன்று, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. நீங்கள் குறிப்பிடும் "மாற்றத்தின் நூற்றாண்டு" என்பது குறிப்பிடத்தக்க அளவில் இந்தியாவையே சார்ந்து இருக்கும் என்பதை நான் மிகுந்த பொறுப்புடன் கூறுகிறேன். இன்று, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது. இந்த நூற்றாண்டின் ஒவ்வொரு வரவிருக்கும் ஆண்டிலும் நமது பங்களிப்பு சீராக அதிகரித்துக்கொண்டே இருக்கும் என்று நான் நம்புகிறேன். ஏதோ ஒரு ஜோதிடர் கணிப்புகளைச் சொல்வது போல நான் இங்கு வரவில்லை. இந்தியா உலகளாவிய வளர்ச்சியை இயக்கும்; அது உலகப் பொருளாதாரத்தின் புதிய இயந்திரமாக உருவெடுக்கும்.
நண்பர்களே,
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு புதிய உலகளாவிய ஒழுங்கு உருவானது. ஆனால் ஏழு தசாப்தங்களுக்குப் பிறகு, அந்த அமைப்பு இப்போது சிதைந்து வருகிறது. உலகம் ஒரு புதிய உலக ஒழுங்கை நோக்கி நகர்கிறது. இது ஏன் நடக்கிறது? ஏனெனில் முந்தைய அமைப்பின் அடித்தளம் "அனைவருக்கும் ஒரே அளவு" என்ற அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உலகப் பொருளாதாரம் மையப்படுத்தப்பட்டிருக்கும் என்றும், விநியோகச் சங்கிலிகள் வலுவாகவும் நம்பகமானதாகவும் மாறும் என்றும் நம்பப்பட்டது. நாடுகள் அந்த கட்டமைப்பிற்குள் பங்களிப்பாளர்களாக மட்டுமே பார்க்கப்பட்டன. ஆனால் இன்று, இந்த மாதிரி சவாலுக்கு உள்ளாக்கப்பட்டு அதன் பொருத்தத்தை இழந்து வருகிறது. ஒவ்வொரு நாடும் இப்போது தனது சொந்த மீள்திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்துள்ளன.
நண்பர்களே,
இன்று உலகம் எதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறதோ, அதை இந்தியா பத்து ஆண்டுகளுக்கு முன்பே, அதாவது 2015-லேயே தனது கொள்கையின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டது. நித்தி ஆயோக் அமைக்கப்பட்டபோது, அதன் நிறுவன ஆவணத்தில் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது: இந்தியா எந்த ஒரு நாட்டிடமிருந்தும் ஒரு வளர்ச்சி மாதிரியைக்கூட இறக்குமதி செய்யாது. இந்தியாவின் வளர்ச்சிக்கான 'இந்திய அணுகுமுறையை' நாம் பின்பற்றுவோம். இந்த கொள்கைதான், இந்தியாவின் தேவைகளுக்கும் தேசிய நலனுக்கும் ஏற்ப முடிவுகளை எடுக்கும் நம்பிக்கையை இந்தியாவிற்கு வழங்கியது. இடையூறுகள் நிறைந்த இந்த தசாப்தத்திலும், இந்தியாவின் பொருளாதாரம் பலவீனமடையாமல் தொடர்ந்து வலுவடைந்து வருவதற்கு இதுவே முக்கியக் காரணமாகும்.
நண்பர்களே,
21-ம் நூற்றாண்டின் இந்த தசாப்தத்தில், இந்தியா 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' வேகத்தில் பயணம் செய்கிறது. இந்த சீர்திருத்த எக்ஸ்பிரஸின் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், நாங்கள் இதை ஏதோ ஒரு கட்டாயத்தினால் செய்யாமல், சீர்திருத்தத்தின் மீதான முழுமையான நம்பிக்கையுடனும் உறுதிப்பாட்டுடனும் முடுக்கிவிடுகிறோம். பொருளாதார உலகின் பல புகழ்பெற்ற நிபுணர்களும் ஜாம்பவான்களும் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். நீங்கள் 2014-க்கு முந்தைய காலத்தைப் பார்த்திருப்பீர்கள். அப்போது சூழ்நிலைகள் நெருக்கடி கொடுத்தால் மட்டுமே, வேறு வழியே இல்லை என்ற நிலையில் மட்டுமே சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1991-ம் ஆண்டின் சீர்திருத்தங்கள், நாடு திவாலாகும் அபாயத்தை எதிர்கொண்டு, தங்கத்தை அடமானம் வைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டபோதுதான் நிகழ்ந்தன. அதுதான் முந்தைய அரசாங்கங்களின் அணுகுமுறையாக இருந்தது - அவர்கள் கட்டாயத்தின் பேரில் மட்டுமே சீர்திருத்தங்களைச் செய்தார்கள். 26/11 பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, காங்கிரஸ் அரசாங்கத்தின் பலவீனங்கள் வெளிப்பட்டபோதுதான் என்.ஐ.ஏ உருவாக்கப்பட்டது. மின்சாரம் மற்றும் கிரிட்கள் செயலிழக்கத் தொடங்கியபோதுதான், தேவையைக் கருதி மின் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன.
நண்பர்களே,
கட்டாயத்தின் பேரில் சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது, சரியான முடிவுகளோ அல்லது விரும்பிய தேசிய விளைவுகளோ கிடைப்பதில்லை என்பதை நினைவூட்டப் பல உதாரணங்கள் உள்ளன.
நண்பர்களே,
கடந்த பதினொரு ஆண்டுகளில் கொள்கை, செயல்முறை, விநியோகம் மற்றும் மனப்பாங்கு என அனைத்திலும் முழுமையான உறுதியுடன் சீர்திருத்தங்களை மேற்கொண்டுள்ளோம் என்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். ஏனெனில், கொள்கை மாறினாலும் செயல்முறைகள் மாறாமல் இருந்தால், மனப்பாங்கு மாறாமல் இருந்தால், விநியோகம் மேம்படவில்லை என்றால், அந்தச் சீர்திருத்தங்கள் வெறும் காகிதங்களாகவே எஞ்சிவிடும். எனவே, ஒட்டுமொத்த அமைப்பையும் மாற்றுவதற்கு நாங்கள் நேர்மையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
நண்பர்களே,
செயல்முறைகளைப் பற்றி நான் பேசுகிறேன். அமைச்சரவைக் குறிப்புகள் என்பது ஒரு எளிய ஆனால் முக்கியமான செயல்முறையாகும். முந்தைய காலங்களில் ஒரு அமைச்சரவைக் குறிப்பைத் தயாரிக்கவே பல மாதங்கள் ஆகும் என்பது இங்குள்ள பலருக்குத் தெரிந்திருக்கும். அந்த வேகத்தில் ஒரு நாடு எப்படி வளர்ச்சி அடையும்? எனவே நாங்கள் இந்தச் செயல்முறையை மாற்றினோம். முடிவெடுப்பதை ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள்ளும், தொழில்நுட்பம் சார்ந்ததாகவும் மாற்றினோம். ஒரு அமைச்சரவைக் குறிப்பு எந்த ஒரு அதிகாரியின் மேசையிலும் நிர்ணயிக்கப்பட்ட மணிநேரங்களுக்கு மேல் இருக்கக் கூடாது என்பதை நாங்கள் உறுதி செய்தோம் - அதை நிராகரிக்க வேண்டும் அல்லது அதன் மீது முடிவெடுக்க வேண்டும். அதன் முடிவுகளை நாடு இன்று நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நண்பர்களே,
ரயில்வே மேம்பாலங்களுக்கான ஒப்புதல்களைப் பற்றியும் ஒரு உதாரணத்தைக் கூறுகிறேன். முன்பு ஒரு சிறிய வடிவமைப்பிற்கு ஒப்புதல் பெறவே பல ஆண்டுகள் ஆகும். பலவிதமான அனுமதிகள் தேவைப்பட்டன, பல்வேறு நிலைகளில் கடிதங்கள் எழுத வேண்டியிருந்தது - நான் இதைத் தனியார் துறையைப் பற்றிப் பேசவில்லை, அரசாங்கத்திற்குள்ளேயே நடந்ததைப் பற்றிப் பேசுகிறேன். இதையும் நாங்கள் மாற்றினோம். இன்று, சாலை மற்றும் ரயில்வே உள்கட்டமைப்புகள் எவ்வளவு வேகத்தில் கட்டப்படுகின்றன என்பதைப் பாருங்கள். வினீத் ஜி இதனை விரிவாக விளக்கினார்.
நண்பர்களே,
தேசிய பாதுகாப்புடன் நேரடியாகத் தொடர்புடைய எல்லை உள்கட்டமைப்பு மற்றொரு சுவாரஸ்யமான உதாரணமாகும். எல்லைப் பகுதிகளில் ஒரு சாதாரணச் சாலையை அமைப்பதற்குக்கூட தில்லியிலிருந்து அனுமதி பெற வேண்டிய காலம் ஒன்று இருந்தது. மாவட்ட அளவில் முடிவெடுப்பதற்கு எந்த அதிகாரமும் நடைமுறையில் இல்லை; சுவர்களுக்கு மேல் சுவர்கள் எழுப்பப்பட்டிருந்தன, யாராலும் பொறுப்பேற்க முடியவில்லை. அதனால்தான், பல தசாப்தங்களுக்குப் பிறகும் எல்லை உள்கட்டமைப்பு மோசமான நிலையிலேயே இருந்தது. 2014-க்குப் பிறகு, இந்தச் செயல்முறையை நாங்கள் சீர்திருத்தினோம், உள்ளூர் நிர்வாகத்திற்கு அதிகாரம் அளித்தோம். இன்று எல்லை உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள அதிவேக வளர்ச்சியை நாம் காண்கிறோம்.
நண்பர்களே,
கடந்த தசாப்தத்தில் உலகையே வியக்க வைத்த ஒரு சீர்திருத்தம் இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையான யுபிஐ ஆகும். இது வெறும் ஒரு செயலி மட்டுமல்ல; கொள்கை, செயல்முறை மற்றும் விநியோகம் ஆகியவற்றின் அசாதாரணமான ஒருங்கிணைப்பை இது பிரதிபலிக்கிறது. வங்கி மற்றும் நிதிச் சேவைகளை அணுகுவதைப் பற்றி ஒருபோதும் கற்பனை செய்யாதவர்களுக்குக் கூட இன்று யுபிஐ சேவை அளிக்கிறது. டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை, ஜன் தன்-ஆதார்-மொபைல் ஆகிய இந்தச் சீர்திருத்தங்கள் கட்டாயத்தால் பிறந்தவை அல்ல, மாறாக எங்களின் உறுதியான நம்பிக்கையினால் உருவானவை. முந்தைய அரசாங்கங்கள் ஒருபோதும் சென்றடையாத குடிமக்களை உள்ளடக்குவதை உறுதி செய்வதே எங்களின் நம்பிக்கையாக இருந்தது. யாரைப் பற்றி யாரும் கவலைப்படவில்லையோ, அவர்களை மோடி கௌரவித்து அதிகாரம் அளிக்கிறார். அதனால்தான் இந்தச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன, எமது அரசு அதே உத்வேகத்துடன் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
நண்பர்களே,
இந்தியாவின் இந்த புதிய மனப்பாங்கு எங்களது வரவு செலவுத் திட்டத்திலும் பிரதிபலிக்கிறது. முன்னதாக, பட்ஜெட் பற்றி விவாதிக்கப்படும்போது, எவ்வளவு பணம் ஒதுக்கப்பட்டது, எது மலிவானது அல்லது விலை உயர்ந்தது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. தொலைக்காட்சிகளில் பட்ஜெட் விவாதங்கள் அனைத்தும் வருமான வரி அதிகரித்ததா அல்லது குறைந்ததா என்பதைச் சுற்றியே இருக்கும்; அதைத் தாண்டி நாட்டில் எதுவும் இல்லாதது போன்ற பிம்பம் இருந்தது. எத்தனை புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன என்பது தலைப்புச் செய்திகளில் இடம் பெறும், ஆனால் பிறகு அந்த அறிவிப்புகளுக்கு என்ன ஆனது என்று யாரும் கேட்க மாட்டார்கள். எனவே, பட்ஜெட்டை வெறும் 'ஒதுக்கீடு சார்ந்ததாக' வைத்திருப்பதை மாற்றி, 'விளைவு சார்ந்ததாக' மாற்றினோம்.
நண்பர்களே,
பட்ஜெட் விவாதங்களில் ஏற்பட்டுள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க மாற்றம் இதுதான்: 2014-க்கு முன்பு, பட்ஜெட்டுக்கு வெளியே வாங்கப்படும் கடன்களைப் பற்றி விரிவான விவாதங்கள் இருந்தன. இப்போது, பட்ஜெட்டுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தங்கள் பற்றிய விவாதங்கள் உள்ளன. பட்ஜெட் கட்டமைப்பிற்கு அப்பால், நாங்கள் அடுத்த தலைமுறைக்கான ஜிஎஸ்டி சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினோம், திட்டக் குழுவிற்குப் பதிலாக நிதி ஆயோக்கைக் கொண்டு வந்தோம், 370-வது சட்டப்பிரிவை நீக்கினோம், முத்தலாக் முறைக்கு எதிராகச் சட்டம் இயற்றினோம் மற்றும் மகளிர் சக்தியை போற்றுதல் சட்டத்தை நிறைவேற்றினோம்.
நண்பர்களே,
பட்ஜெட்டிற்குள் அறிவிக்கப்பட்டாலும் அல்லது அதற்கு வெளியிலிருந்தாலும், இந்தச் 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' தொடர்ந்து வேகம் எடுத்து வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், துறைமுகங்கள் மற்றும் கடல்சார் துறையில் சீர்திருத்தங்களைச் செய்துள்ளோம், கப்பல் கட்டும் தொழிலுக்காகப் பல முயற்சிகளை எடுத்துள்ளோம், மக்கள் நம்பிக்கை சட்டத்தின் கீழ் சீர்திருத்தங்களை முன்னெடுத்துள்ளோம், எரிசக்தி பாதுகாப்பிற்காகச் 'சாந்தி' சட்டத்தை இயற்றியுள்ளோம், தொழிலாளர் சட்டச் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தினோம், 'இந்திய நீதித்துறை சட்டத்தை அறிமுகப்படுத்தினோம், வக்ஃப் சட்டத்தைச் சீர்திருத்தினோம் மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பை மேம்படுத்த புதிய 'ஜிராம் ஜி' சட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இது போன்ற எண்ணற்ற சீர்திருத்தங்கள் ஆண்டு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நண்பர்களே,
இந்த ஆண்டு பட்ஜெட், 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்' வேகத்தை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது. பட்ஜெட்டில் பல பரிமாணங்கள் இருந்தாலும், இரண்டு முக்கியக் காரணிகளைப் பற்றி நான் பேச விரும்புகிறேன் - அவை மூலதனச் செலவு (Capex) மற்றும் தொழில்நுட்பம். கடந்த ஆண்டுகளைப் போலவே, இந்த பட்ஜெட்டிலும் உள்கட்டமைப்பு செலவினங்கள் கிட்டத்தட்ட ரூ.17 லட்சம் கோடி வரை அதிகரிக்கப்பட்டுள்ளன. மூலதனச் செலவினங்கள் ஏற்படுத்தும் பன்மடங்கு விளைவுகளை நீங்கள் அறிவீர்கள்; இது நாட்டின் திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதோடு, பல துறைகளில் பெரிய அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. ஐந்து பல்கலைக்கழக நகரங்களை உருவாக்குவது, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் பொருளாதார மண்டலங்களை உருவாக்குவது மற்றும் ஏழு புதிய அதிவேக ரயில் வழித்தடங்கள் போன்ற பட்ஜெட் அறிவிப்புகள், உண்மையான அர்த்தத்தில் நமது இளைஞர்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடுகளாகும்.
நண்பர்களே,
கடந்த பத்தாண்டுகளில், தொழில்நுட்பத்தையும் கண்டுபிடிப்புகளையும் வளர்ச்சியின் முக்கிய உந்துசக்திகளாக நாங்கள் கருதி வருகிறோம். இந்த தொலைநோக்குப் பார்வையுடன், நாடு முழுவதும் ஸ்டார்ட்-அப் கலாச்சாரம் மற்றும் ஹேக்கத்தான் கலாச்சாரத்தை நாங்கள் ஊக்குவித்தோம். இன்று, பல்வேறு துறைகளில் இயங்கும் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட ஸ்டார்ட்-அப்கள் இந்தியாவில் உள்ளன. நாங்கள் எங்கள் இளைஞர்களை ஊக்குவித்தோம்; சவால்களை எதிர்கொண்டு துணிச்சலுடன் செயல்படும் மனப்பாங்கிற்கு உரிய அங்கீகாரத்தை வழங்கினோம். அதன் முடிவுகள் இன்று நம் கண் முன்னே தெரிகின்றன. இந்த ஆண்டு பட்ஜெட் இந்த முன்னுரிமையை மேலும் வலுப்படுத்துகிறது. குறிப்பாக பயோபார்மா, செமிகண்டக்டர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளுக்காக மிக முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
நண்பர்களே,
நாட்டின் பொருளாதார வலிமை வளர்ந்துள்ள நிலையில், அதற்கு இணையாக மாநிலங்களுக்கும் நாங்கள் அதிகாரம் அளித்துள்ளோம். மற்றொரு புள்ளிவிவரத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2004 முதல் 2014 வரையிலான பத்து ஆண்டுகளில், மாநிலங்களுக்கு வரிப் பகிர்வாக சுமார் ₹18 லட்சம் கோடி கிடைத்தது. இதற்கு நேர்மாறாக, 2014 முதல் 2025 வரை, மாநிலங்களுக்கு ரூ.84 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ள சுமார் ரூ.14 லட்சம் கோடியையும் சேர்த்தால், எங்கள் ஆட்சியின் கீழ் மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த வரிப் பகிர்வு கிட்டத்தட்ட ரூ.100 லட்சம் கோடியை எட்டும். அந்தந்தப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, மத்திய அரசால் இந்தத் தொகை பல்வேறு மாநில அரசுகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
நண்பர்களே,
இன்றைய நாட்களில், இந்தியாவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்துப் பெரிய அளவில் விவாதங்கள் நடைபெறுகின்றன. நான் இங்கே நுழையும்போதே அதுகுறித்த உரையாடல்கள் தொடங்கிவிட்டன; உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடக்கின்றன. இருப்பினும், இன்று நான் மற்றொரு சுவாரஸ்யமான பார்வையை முன்வைக்கிறேன் - இது ஊடகங்கள் எதிர்பார்க்கும் கோணமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் சொல்லப்போகும் விஷயம் உங்கள் மனதிலும் இதுவரை தோன்றியிருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன். வளர்ந்த நாடுகளுடன் இவ்வளவு விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் ஏன் 2014-க்கு முன்பு சாத்தியமாகவில்லை என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நாடும் அதேதான், இளைஞர்களின் ஆற்றலும் அதேதான், அரசு இயந்திரமும் அதேதான் - பிறகு என்ன மாறியது? மாற்றம் என்பது அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையில், அதன் கொள்கை மற்றும் நோக்கத்தில், மற்றும் இந்தியாவின் திறனில் ஏற்பட்டது.
நண்பர்களே,
ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள் - இந்தியா "பலவீனமான ஐந்து" பொருளாதாரங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டிருந்தபோது, யார் நம்முடன் வணிகம் செய்ய முன்வந்திருப்பார்கள்? ஒரு கிராமத்தில், ஒரு வசதியான குடும்பம் தங்கள் மகளை ஒரு ஏழ்மையான வீட்டிற்குத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதிக்குமா? அவர்கள் அதைத் தாழ்வாகவே பார்ப்பார்கள். அதுதான் உலக அரங்கில் அன்று நமது நிலைமையாக இருந்தது. நாடு கொள்கை முடக்கத்தில் சிக்கி, ஊழல்களாலும் மோசடிகளாலும் சூழப்பட்டிருந்தபோது, யாரால் இந்தியாவின் மீது நம்பிக்கை வைத்திருக்க முடியும்?
2014-க்கு முன்பு, இந்தியாவின் உற்பத்தித் திறன் மிகவும் பலவீனமாக இருந்தது. முந்தைய அரசாங்கங்கள் தயக்கம் காட்டின; இந்தியாவை யாரும் அணுகவில்லை, அப்படியே முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்தால் அந்த நாடுகள் நமது சந்தைகளைக் கைப்பற்றிவிடும் என்ற பயம் இருந்தது. அந்த விரக்தியான சூழலில், 2014-க்கு முன்பு இருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நான்கு நாடுகளுடன் மட்டுமே விரிவான வர்த்தக ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. அதற்கு நேர்மாறாக, கடந்த பத்தாண்டுகளில் இந்தியா மேற்கொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் உலகின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள 38 நாடுகளை உள்ளடக்கியுள்ளன. இன்று இந்தியா நம்பிக்கையுடன் இருப்பதால் இந்த வர்த்தக ஒப்பந்தங்களில் ஈடுபடுகிறோம். இன்றைய இந்தியா உலகளவில் போட்டியிடத் தயாராக உள்ளது. கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியா ஒரு வலுவான உற்பத்தி சூழலை உருவாக்கியுள்ளது. எனவே, இந்தியா இன்று திறமையுள்ளதாகவும் அதிகாரம் பெற்றதாகவும் உள்ளது, அதனால்தான் உலகம் நம்மை நம்புகிறது. இந்த மாற்றம்தான் நமது வர்த்தகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றத்தின் அடித்தளம் இந்த மாற்றம் 'வளர்ச்சியடைந்த இந்தியா'வை நோக்கிய நமது பயணத்தின் இன்றியமையாத தூணாக மாறியுள்ளது.
நண்பர்களே,
ஒவ்வொரு குடிமகனும் வளர்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்ய எங்கள் அரசு முழு உணர்திறனுடன் செயல்பட்டு வருகிறது. முன்னேற்றத்திற்கான ஓட்டத்தில் பின் தங்கியவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முந்தைய அரசாங்கங்கள் மாற்றுத்திறனாளிகளுக்காக அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டன; நாங்களும் அதே பாதையைத் தொடர்ந்திருக்க முடியும். ஆனால் உணர்திறன் மிக்க அணுகுமுறைதான் சிறந்த நிர்வாகத்தை வரையறுக்கிறது. நான் இப்போது சொல்லப்போகும் உதாரணம் உங்களில் சிலருக்குச் சிறியதாகத் தோன்றலாம். நமது நாட்டில் மொழிப் பன்முகத்தன்மை இருப்பது போலவே, சைகை மொழியும் சிதறிக்கிடந்தது - தமிழ்நாட்டில் ஒரு வடிவம், உத்தரபிரதேசத்தில் இன்னொன்று, குஜராத்தில் மூன்றாவது, அசாமில் நான்காவது என இருந்தது. ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மற்றொரு மாநிலத்திற்குச் சென்றால், தகவல் தொடர்பு கடினமாக இருந்தது. இது ஒரு பெரிய பணியாகத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் ஒரு உணர்திறன் மிக்க அரசாங்கம் இத்தகைய விஷயங்களைச் சிறியதாகக் கருதுவதில்லை. முதன்முறையாக, இந்தியா 'இந்திய சைகை மொழி'யை முறைப்படுத்தி தரப்படுத்தியுள்ளது.
அதேபோல், திருநங்கைகள் சமூகத்தினர் தங்கள் உரிமைகளுக்காக நீண்டகாலமாகப் போராடி வந்தனர்; அவர்களுக்கு கண்ணியம் மற்றும் பாதுகாப்பை வழங்கும் சட்டத்தை நாங்கள் இயற்றினோம். கடந்த தசாப்தத்தில், லட்சக்கணக்கான பெண்கள் முத்தலாக் எனும் பிற்போக்குத் தனமான பழக்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர், மேலும் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடும் உறுதி செய்யப்பட்டது.
நண்பர்களே,
அரசு இயந்திரத்திற்குள்ளான மனப்பாங்கும் இப்போது அதிக உணர்திறன் மிக்கதாக மாறியுள்ளது. தேவையுள்ளவர்களுக்கு இலவச உணவு தானியங்களை வழங்கும் திட்டத்திலேயே இந்தச் சிந்தனை மாற்றத்தைக் காண முடியும். எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் எங்களை எள்ளி நகையாடுகிறார்கள்; சில செய்தித்தாள்களும் அத்தகைய கேலிகளைப் பெரிதுபடுத்துகின்றன. 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீண்டுவிட்டதாகச் சொல்லும்போது, ஏன் இன்னும் இலவச ரேஷன் வழங்கப்படுகிறது என்று அவர்கள் கேட்கிறார்கள். இது ஒரு விசித்திரமான கேள்வி. ஒரு நோயாளி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது, மருத்துவர் இன்னும் சில நாட்களுக்கு முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்துவதில்லையா? ஆம், அந்த நபர் வறுமையிலிருந்து வெளியே வந்துவிட்டார், ஆனால் அதற்காக அவருக்கு வழங்கப்படும் ஆதரவு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அர்த்தமல்ல.
வறுமையிலிருந்து ஒருவரை மீட்பது மட்டும் போதாது; புதிய நடுத்தர வர்க்கத்திற்குள் நுழைந்தவர்கள் மீண்டும் வறுமைக்குள் சரிந்துவிடாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பதை குறுகிய சிந்தனை கொண்டவர்கள் புரிந்துகொள்வதில்லை. அதனால்தான் இலவச உணவு தானியங்கள் வடிவில் தொடர்ந்து ஆதரவு அளிப்பது அவசியமாகிறது. கடந்த ஆண்டுகளில், மத்திய அரசு இத்திட்டத்திற்காக லட்சக்கணக்கான கோடிகளைச் செலவிட்டு, ஏழைகளுக்கும் புதிய நடுத்தர வர்க்கத்தினருக்கும் மகத்தான ஆதரவை வழங்கி வருகிறது.
நண்பர்களே,
மற்றொரு சூழலிலும் இந்தச் சிந்தனை வேறுபாட்டை நாம் கவனிக்கிறோம். நான் ஏன் 2047-ஐப் பற்றிப் பேசுகிறேன் என்று சிலர் கேட்கிறார்கள். 2047-க்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்பது உண்மையிலேயே நனவாகுமா என்றும், அந்த நேரத்தில் நாம் இருக்கப்போவதில்லை எனும் போது அது ஒரு பொருட்டா என்றும் அவர்கள் கேட்கிறார்கள். இதுவும் ஒரு பரவலான மனப்பாங்காக உள்ளது.
நண்பர்களே,
இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடியவர்கள் லத்தி அடிகளைத் தாங்கினார்கள், செல்லுலார் சிறையில் அடைக்கப்பட்டார்கள், தூக்குமேடை ஏறினார்கள். சுதந்திரம் தங்களது வாழ்நாளில் கிடைக்காது என்று நினைத்து, அதற்காக நாம் ஏன் இவ்வளவு துன்பப்பட வேண்டும் என்று அவர்கள் கேள்வி கேட்டிருந்தால், இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா? ஒருவருக்குத் தேசமே முதன்மையானதாக இருக்கும்போது, தேசிய நலனே மேலோங்கி நிற்கும்போது, ஒவ்வொரு முடிவும் ஒவ்வொரு கொள்கையும் நாட்டிற்காகவே வடிவமைக்கப்படுகிறது. எங்களது தொலைநோக்குப் பார்வை தெளிவானது - 'வளர்ச்சியடைந்த இந்தியா'வை உருவாக்க நாம் அயராது உழைக்க வேண்டும். 2047-ல் நாம் இருக்கிறோமோ இல்லையோ, இந்தத் தேசம் நிலைத்திருக்கும், எதிர்காலத் தலைமுறையினர் வாழ்வார்கள். எனவே, அவர்களின் நாளை பாதுகாப்பாகவும் பிரகாசமாகவும் இருக்க, நமது இன்றைய காலத்தை நாம் அர்ப்பணிக்க வேண்டும். எதிர்காலத் தலைமுறையினர் அறுவடை செய்வதற்காக, இன்று நான் விதைகளை விதைக்கிறேன்.
நண்பர்களே,
உலகம் இப்போது 'இடையூறுகளுடன்' வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அதன் தன்மை காலப்போக்கில் மாறலாம், ஆனால் அமைப்புகளில் ஏற்படும் அதிவேக மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை. செயற்கை நுண்ணறிவு ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களை நீங்கள் ஏற்கனவே பார்க்க முடியும். வரும் ஆண்டுகளில், இன்னும் பல புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வரும், அதற்கு இந்தியா தயாராக உள்ளது. இன்னும் சில நாட்களில், இந்தியா 'உலகளாவிய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டை' நடத்த உள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து பல நாடுகளின் தொழில்நுட்பத் தலைவர்களும் இங்கு கூடுவார்கள். அவர்கள் அனைவருடனும் இணைந்து, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்க நாம் தொடர்ந்து பாடுபடுவோம். இந்த நம்பிக்கையுடன், இந்த உச்சி மாநாட்டிற்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
வந்தே மாதரம்.
***
Release ID 2227865)
AD/VK
(रिलीज़ आईडी: 2276919)
आगंतुक पटल : 26
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
English
,
Gujarati
,
Malayalam
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Odia
,
Kannada