பிரதமர் அலுவலகம்
பிரதமர், 2026 மார்ச் 31 அன்று குஜராத் செல்கிறார்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காந்திநகரில் உள்ள கோபா தீர்த்தத்தில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார்.
இந்தியாவின் செமி கண்டக்டர் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், சனந்தில் உள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையை பிரதமர் திறந்து வைக்கிறார்
வாவ்-தரத் பகுதியில் ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்
प्रविष्टि तिथि:
30 MAR 2026 11:05AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி 2026 மார்ச் 31 அன்று குஜராத் மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். காலை சுமார் 10 மணியளவில், காந்திநகரில் உள்ள சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அங்கு அவர் மக்களிடையே உரையாற்றுகிறார். பிற்பகல் சுமார் 12:45 மணியளவில், அகமதாபாதின் சனந்தில் உள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையை பிரதமர் திறந்து வைத்து உரையாற்றுகிறார். அதைத் தொடர்ந்து, பிரதமர் வாவ்-தரத் நகருக்குப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு, மாலை சுமார் 4 மணியளவில், ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அவர் அங்கு மக்களிடையே உரையாற்றவுள்ளார்.
காந்திநகரில் பிரதமர் :
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, காந்திநகரில் உள்ள கோபா தீர்த்தத்தில் சாம்ராட் சம்பிரதி அருங்காட்சியகத்தை பிரதமர் திறந்து வைக்கிறார். அசோகரின் பேரனும், அகிம்சை, சமண மதப் பரவல் ஆகியவற்றில் தமது அர்ப்பணிப்புக்காக அறியப்பட்டவரும், சமண மரபில் போற்றப்படும் நபருமான சாம்ராட் சம்பிரதியின் பெயரால் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம், சமண மதத்தின் வளமான வரலாற்று, கலாச்சார, ஆன்மீகப் பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது.
மகாவீர் ஜெயின் ஆராதனை கேந்திரா வளாகத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம், இந்தியாவின் நாகரிக மரபுகளின் தனித்துவமான அம்சங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஏழு தனித்தனி பிரிவுகளைக் கொண்டுள்ளது. இது பார்வையாளர்களுக்கு பல நூற்றாண்டுகளின் அறிவுப் பாரம்பரியத்தின் வழியான ஒரு விரிவான பயணத்தை வழங்குகிறது. இந்த அருங்காட்சியகம், பாரம்பரியக் கண்காட்சிகளை நவீன டிஜிட்டல், ஒலி-ஒளிக் காட்சிகளுடன் ஒருங்கிணைத்து, பார்வையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிஞர்களுக்கு ஒரு ஆழ்ந்த அனுபவத்தை வழங்குகிறது.
இந்த அருங்காட்சியகம், பல நூற்றாண்டுகள் பழமையான அரிய நினைவுச்சின்னங்கள், சமணக் கலைப்பொருட்கள், பாரம்பரிய சேகரிப்புகளைப் பாதுகாத்துக் காட்சிப்படுத்துகிறது. இவற்றில், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட கல், உலோகச் சிலைகள், சிற்றோவியங்கள், வெள்ளித் தேர்கள், நாணயங்கள், பழங்காலக் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் ஏழு பிரம்மாண்டமான காட்சிக்கூடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. விசாலமான அரங்குகளில் அடுக்கப்பட்டிருக்கும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பொக்கிஷங்களைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்கள் சமண மதத்தின் பரிணாம வளர்ச்சி, அதன் ஆழமான கலாச்சாரத் தாக்கம் ஆகியவை குறித்த புரிதலைப் பெற உதவுகிறது.
சனந்தில் பிரதமர் :
அகமதாபாத்தில் உள்ள சனந்த் ஜிஐடிசி-யில் அமைந்துள்ள கெய்ன்ஸ் செமிகான் ஆலையை பிரதமர் திறந்து வைக்கிறார். இதன் மூலம் அந்த ஆலையில் வணிக ரீதியான உற்பத்தி தொடங்குவதோடு, இது இந்தியாவின் செமி கண்டக்டர் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும் அமைகிறது.
திறமையான, நம்பகமான மின் நிலைமாற்று அமைப்புகள் தேவைப்படும் வாகன, தொழில்துறைப் பயன்பாடுகளுக்கு இன்றியமையாத அம்சங்களான மேம்பட்ட நுண்ணறிவு மின் தொகுதிகளை (IPMs) தயாரிப்பதன் மூலம் இந்த ஆலையில் வணிக உற்பத்தி தொடங்குகிறது. ஆலையின் அனைத்துக் கட்டங்களும் நிறைவடைந்தவுடன், அது ஒரு நாளைக்கு 6.33 மில்லியன் அலகுகளை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும்.
கெய்ன்ஸ் செமிகான் ஆலையின் தொடக்க விழா, இந்திய செமி கண்டக்டர் இயக்கத்தின் (ISM) கீழ் ஒரு முக்கிய படியாகும். இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில், மைக்ரான் டெக்னாலஜிக்கு அடுத்தபடியாக, வணிக உற்பத்தியைத் தொடங்கும் இரண்டாவது செமி கண்டக்டர் ஆலையாக இது அமையும்.
இந்த ஆலை, உள்நாட்டு செமி கண்டக்டர் திறனை வலுப்படுத்துவதற்கும், இந்தியாவின் சிப் சூழலமைப்பில் உள்ள ஒரு முக்கிய இடைவெளியை நிவர்த்தி செய்வதற்கும், உயர் தொழில்நுட்ப உற்பத்தியில் தன்னிறைவு என்ற தொலைநோக்குப் பார்வையை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கும் பங்களிக்கும்.
வாவ்-தரத்-ல் பிரதமர் :
வாவ்-தரத்-ல் பிரதமர், ₹20,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள் மின்சாரம், ரயில்வே, சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சுகாதாரம், நகர்ப்புற மேம்பாடு, பழங்குடியினர் மேம்பாடு, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட முக்கியத் துறைகளை உள்ளடக்கியுள்ளன.
₹5,100 கோடிக்கும் அதிகமான செலவில் கட்டப்பட்ட, நெடுஞ்சாலையான அகமதாபாத் - தோலேரா விரைவுச்சாலையை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த விரைவுச்சாலை பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதோடு, தோலேரா சிறப்பு முதலீட்டுப் பகுதியில் தொழில்துறை வளர்ச்சிக்கு ஆதரவளித்து, பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும்.
4-வழி இடார்–படோலி புறவழிச்சாலைப் பிரிவின் கட்டுமானப் பணிகளுக்குப் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், தேசிய நெடுஞ்சாலை 754கே-ன் தோலாவிரா – மௌவனா – வாவ்வா – சந்தல்பூர் பிரிவை தரம் உயர்த்தும் பணகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டங்கள் அப்பகுதிகளில் நெடுஞ்சாலை உள்கட்டமைப்பை வலுப்படுத்தி சமூக-பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும்.
காந்திநகர் – கோபா – விமான நிலைய சாலையில் உள்ள பாய்ஜிபுரா சந்திப்பில் அமையவிருக்கும் மேம்பாலம் உட்பட, முக்கிய சாலை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு, அதன் கீழ் ஒழுங்கமைக்கப்பட்ட வாகன நிறுத்துமிடத்தையும் கொண்டிருக்கும். காந்திநகர் - கோபா - ஆரோத்ராம் சாலையில் உள்ள பிடிபியு சந்திப்பில் அமையவிருக்கும் மேம்பாலமும் பிரதமரால் திறந்து வைக்கப்படும். காந்திநகரை விமான நிலையத்துடன் இணைக்கும் இந்தச் சாலையில் தினமும் 1,40,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த மேம்பாலம் இப்பகுதியில் சீரான, தடையற்ற போக்குவரத்த்தை உறுதி செய்யும்.
சுமார் ₹3,650 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள, 4.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி நிலையம்-2, அதனுடன் தொடர்புடைய மின் பரிமாற்ற அமைப்புகள் உள்ளிட்ட முக்கிய மின் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கவுள்ளார். இந்தத் திட்டங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனை வலுப்படுத்தும்.
ரயில்வே துறையில், கானலூஸ் – ஜாம்நகர் இரட்டை ரயில் பாதைத் திட்டம் (28 கிலோ மீட்டர்), ராஜ்கோட் – கானலூஸ் இரட்டை ரயில் பாதைத் திட்டத்தின் ஒரு பகுதி (111.20 கிலோ மீட்டர்), காந்திதாம் – ஆதிப்பூர் பிரிவை விரிவாக்கும் திட்டம் (10.69 கிலோ மீட்டர்) ஆகியவற்றை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்தத் திட்டங்கள் ரயில் போக்குவரத்துத் திறனை அதிகரித்து, நெரிசலைக் குறைத்து, செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தி, பயணிகள், சரக்குகளின் விரைவான போக்குவரத்தை சாத்தியமாக்கும்.
பிரதமர், இப்பகுதியில் ரயில் போக்குவரத்து இணைப்பையும் பயணிகள் போக்குவரத்தையும் மேம்படுத்தும் ஹிம்மத்நகர் – கேத்பிரம்மா அகலப்பாதை திட்டத்தையும் (54.83 கிலோ மீட்டர்) தொடங்கி வைக்கிறார். மேலும், அவர் கேத்பிரம்மா – ஹிம்மத்நகர் – அசர்வா இடையேயான ரயில் சேவையையும் கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்.
நகர்ப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, குஜராத் முழுவதும் சுமார் ₹5,300 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட 44 நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்துப் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
சுற்றுலா அனுபவத்தை மேம்படுத்துவதையும், கலாச்சார பாரம்பரியத்தை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பல சுற்றுலாத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
சுமார் ₹1,780 கோடி மதிப்பிலான இரண்டு முக்கிய குடிநீர் இணைப்புத் திட்டங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அம்பாஜி அதைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். காந்திநகர் மாவட்டத்தில் சுமார் ₹1000 கோடி ஒருங்கிணைந்த முதலீட்டில் அமையவுள்ள மூன்று சபர்மதி ஆற்றங்கரை விரிவாக்கத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். அகமதாபாத், வேஜல்பூரில் உள்ள அரசு ஆண்கள் விடுதியை பிரதமர் திறந்து வைக்கிறார். இந்த விடுதி, உயர்கல்வி பயிலும் பழங்குடியின மாணவர்களுக்குப் பயன் அளிக்கும்.
***
(Release ID: 2246772)
TV/PLM/KR
(रिलीज़ आईडी: 2267935)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam