பிரதமர் அலுவலகம்
மலேசியப் பிரதமருடன் இணைந்து நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி கூறிய கருத்துகளின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
08 FEB 2026 10:33AM by PIB Chennai
மாண்புமிகு மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
காலை வணக்கம்!
முதலில், எனது நெருங்கிய நண்பர் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு, ஆசியான் உச்சிமாநாட்டிற்காக மலேசியாவுக்கு வர முடியவில்லை. ஆனால், விரைவில் மலேசியாவுக்கு வருவேன் என்று எனது அன்பு நண்பருக்கு உறுதியளித்திருந்தேன். இன்று நான் இங்கே மலேசியாவில் இருக்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையிலான உறவு உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. நாம் கடல்சார் அண்டை நாடுகள். பல நூற்றாண்டுகளாக, நமது மக்கள் ஆழமான, அன்பான பிணைப்புகளைப் பகிர்ந்து கொண்டுள்ளனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மக்கள் அதிகம் உள்ள உலகின் இரண்டாவது பெரிய நாடு மலேசியா. நமது நாகரிகங்கள் பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், ஜனநாயக விழுமியங்கள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
கடந்த சில ஆண்டுகளில், எங்கள் உறவுகள் புதிய உத்வேகத்தைப் பெற்றுள்ளன. எனது நண்பர், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம், இந்த முன்னேற்றத்தில் சிறப்புப் பங்காற்றியுள்ளார்.
எரிசக்தி, உள்கட்டமைப்பு, உற்பத்தி ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பு வலுவடைந்துள்ளது. டிஜிட்டல் பொருளாதாரம், உயிரி தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பத்தில் பரஸ்பர முதலீடுகள் அதிகரித்துள்ளன. சுற்றுலா, மக்களுக்கு இடையேயான உறவுகள் மேலும் ஆழமடைந்துள்ளன. இந்த சாதனைகளால் ஈர்க்கப்பட்டு, இன்று நமது ஒத்துழைப்பில் முன்னெப்போதும் இல்லாத வேகத்தையும் ஆழத்தையும் கொண்டு வர நாம் தீர்மானித்துள்ளோம்.
நண்பர்களே,
பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, உளவுத்துறை பகிர்வு, கடல்சார் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவோம். நமது பாதுகாப்பு ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவோம்.
செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பங்களுடன், குறைக்கடத்திகள், சுகாதாரம், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவோம்.
நண்பர்களே,
நேற்று, மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கூட்டத்தை அலங்கரித்தார். இது அதன் பெருமையை அதிகரித்தது. மலேசியாவில் உள்ள முப்பது லட்சம் எண்ணிக்கை கொண்ட இந்திய சமுதாயத்தினர் நமது இரு நாடுகளுக்கு இடையே ஒரு பாலமாகவும், வலிமையின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளனர். அவர்களின் நலனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நமது உறவுக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை வழங்குகின்றன.
மலேசியாவில் உள்ள இந்திய தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம், சுற்றுலாவிற்கான இலவச விசாக்கள், மலேசியாவில் இந்தியாவின் டிஜிட்டல் கட்டண தளமான யுபிஐ-யை செயல்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் இரு நாடுகளின் மக்களுக்கும் வாழ்க்கையை எளிதாக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, எந்தவொரு ஒத்துழைப்பும் அதன் நன்மைகள் மக்களை நேரடியாகச் சென்றடையும்போது மட்டுமே உண்மையிலேயே வெற்றி பெறும்.
நண்பர்களே,
தமிழ் மொழியின் மீதான பகிரப்பட்ட அன்பினால் இந்தியாவும் மலேசியாவும் ஒன்றுபட்டுள்ளன. மலேசியாவில் தமிழ் வலுவாக, துடிப்பாக உள்ளது. இன்றைய ஒலி-ஒளி ஒப்பந்தம் திரைப்படங்கள், இசை மூலம், குறிப்பாக தமிழ் சினிமா மூலம் நம் இதயங்களை நெருக்கமாகக் கொண்டுவரும் என்று நான் நம்புகிறேன்.
பல்கலைக்கழக பரிமாற்றங்கள், புத்தொழில் நிறுவன இணைப்புகள், திறன் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள் ஆகியவற்றை நமது இளைஞர்களிடையே விரிவுபடுத்துகிறோம். வளர்ந்து வரும் நமது உறவுகளை அதிகரிக்க, மலேசியாவில் ஒரு புதிய தூதரகத்தைத் திறக்கிறோம்.
நண்பர்களே,
உலக வளர்ச்சியில் இந்தோ-பசிபிக் பிராந்தியம் முக்கிய இடம் பெற்றுள்ளது. ஆசியான் ஒத்துழைப்புடன், இந்தோ-பசிபிக் முழுவதும் வளர்ச்சி, அமைதி, ஸ்திரத்தன்மைக்கு நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம். ஆசியான் மையத்திற்கு இந்தியா மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது. ஆசியான் தலைமைத்துவ பொறுப்பை வெற்றிகரமாக வகித்ததற்காக மலேசியாவை மீண்டும் ஒருமுறை மனமார வாழ்த்துகிறேன்.
மலேசியா போன்ற நட்பு நாடுகளின் ஆதரவுடன், ஆசியான் உடனான தனது உறவுகளை இந்தியா மேலும் விரிவுபடுத்தும். ஆசியான்-இந்தியா சரக்கு வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும்.
நண்பர்களே,
இன்று, பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அர்த்தமுள்ள விவாதங்களையும் நடத்தினோம். இப்போதைய உலகளாவிய சூழ்நிலையில், இந்தியாவிற்கும் மலேசியாவிற்கும் இடையேயான நட்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் அவசியம். அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிப்போம்.
மதிப்பிற்குரிய மலேசிய பிரதமர் அவர்களே,
இந்தியா-மலேசியா உறவுகளுக்கான அர்ப்பணிப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். வளமான மலேசியா என்ற தொலைநோக்குப் பார்வையையும், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய எங்கள் உறுதியையும் நனவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
மீண்டும் ஒருமுறை, உங்கள் நட்புக்கும், அன்பான வரவேற்புக்கும், அன்பான விருந்தோம்பலுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவில் உங்களை வரவேற்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.
மிக்க நன்றி.
மீண்டும் சந்திப்போம்!
-----
(Release ID: 2225057)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2265321)
आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam