பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாநிலங்களவையில் ஓய்வுபெறும் உறுப்பினர்கள் இடையே பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

இடுகை இடப்பட்ட நாள்: 18 MAR 2026 1:13PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஓய்வுபெறும் மாநிலங்களவை உறுப்பினர்களிடையே இன்று உரையாற்றினார். ஓய்வுபெறும் சக உறுப்பினர்களை கௌரவிக்கும் வாய்ப்பு கிடைத்தமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்த பிரதமர், இத்தகைய தருணங்கள் கட்சி எல்லைகளைக் கடந்து, ஒரு பொதுவான உணர்வைப் பகிர்ந்துகொள்ள வழிவகுப்பதாகக் குறிப்பிட்டார். உறுப்பினர்கள் மீண்டும் அவைக்குத் திரும்பினாலும் சரி அல்லது பரந்த சமூக சேவையில் ஈடுபட்டாலும் சரி, அவர்கள் பெற்ற அனுபவம் நாட்டிற்கு ஒரு சொத்தாகவே நிலைத்திருக்கும் என்று பிரதமர் மோடி கருத்து தெரிவித்தார். மாறிவரும் அரசியல் களத்தில், அனுபவம் வாய்ந்த தலைவர்களுக்கு எதிர்காலம் எப்போதும் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதால், அவர்களின் அரசியல் பயணம் ஒருபோதும் முழுமையாக முடிவடைவதில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அரசியலில் முற்றுப்புள்ளிகள் ஏதுமில்லை, அவர்களுடைய அனுபவமும் பங்களிப்பும் என்றென்றும் நாட்டின் ஒரு பகுதியாகவே நிலைத்திருக்கும் என்று திரு மோடி உறுதியளித்தார்.

ஓய்வுபெறும் உறுப்பினர்களின் சிறந்த பங்களிப்புகளைச் சுட்டிக்காட்டிய பிரதமர், புதிய தலைமுறை நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு தேவகவுடா, திரு கார்கே, திரு சரத் பவார் போன்ற மூத்த தலைவர்களைத் தங்கள் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். துணைத் தலைவர் ஹரிவன்ஷ்  அவர்களின் மென்மையான அணுகுமுறையையும், சிக்கலான நெருக்கடிகளைக் கையாளும்போதும் அவையின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனையும் பிரதமர் பாராட்டினார். சமூகத்தால் தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளின் மீதுள்ள ஆழ்ந்த அர்ப்பணிப்பையே இத்தகைய அர்ப்பணிப்புமிக்க சேவை பிரதிபலிப்பதாகத் திரு மோடி சுட்டிக்காட்டினார். சமூகத்தால் வழங்கப்பட்ட பொறுப்புகளுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பது குறித்து, இந்த மூத்த தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை நிறைய உள்ளதாக பிரதமர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை உறுப்பினர்களின் ஒரு பிரிவினர் ஓய்வுபெற்றுச் செல்வது, அறிவின் தொடர்ச்சியான பரிமாற்றத்திற்கு வழிவகுப்பதாகவும், இதன் மூலம் இந்த அவையின் செழுமையான மரபுகள், புதிதாகப் பொறுப்பேற்கும் உறுப்பினர்களால் தொடர்ந்து பாதுகாக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஓய்வுபெறும் உறுப்பினர்கள் தங்கள் பதவிக்காலத்தில் பழைய மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டிடங்கள் இரண்டிலும் பணியாற்றிய அரிய பெருமையைப் பெற்றுள்ளனர் என்று பிரதமர் சுட்டிக்காட்டினார். புதிய அவைக்கு மாறிய இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தின் ஒரு பகுதியாக இருந்தது, அவர்களின் பொதுச் சேவை வாழ்க்கையில் ஒரு புத்துணர்ச்சியான மற்றும் குறிப்பிடத்தக்க நினைவாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஓய்வுபெறும் பிரதிநிதிகளின் நீண்ட மற்றும் அர்ப்பணிப்புள்ள சேவையை மீண்டும் ஒருமுறை பாராட்டி, அவர்களின் ஈடுபாட்டிற்கு நன்றி தெரிவித்தார். ஓய்வுபெறும் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்புகளையும் தான் மீண்டும் ஒருமுறை வணங்கிப் போற்றுவதாக திரு மோடி கூறினார்.  

***

(Release ID: 2241634)

TV/IR/RJ/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2263179) வருகையாளர் எண்ணிக்கை : 3