ஆயுஷ்
வெப்ப அலையை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைகள் - ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
18 MAY 2026 3:31PM by PIB Chennai
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்து வரும் வெப்பநிலை, வெப்ப அலை சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, மத்திய சுகாதாரம் அமைச்சகத்தின் கீழ் உள்ள சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகத்தின் ஆயுஷ் பிரிவானது, ஆயுஷ் அமைச்சகத்துடன் இணைந்து, கோடை காலத்திற்கான கடும் வெப்ப அலை குறித்த விரிவான பொது சுகாதார ஆலோசனைகளை வெளியிட்டுள்ளது.
இந்த அறிவுரையானது, பொது மக்கள், பாதிக்கப்படக்கூடிய பிரிவினர், வேலை வழங்குபவர்கள், தொழிலாளர்கள், விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், போன்றவர்களுக்கு வெப்ப அழுத்தம் மற்றும் வெப்பம் தொடர்பான பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான விரிவான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. போதுமான அளவு நீர் அருந்துதல், அதிக வெயில் உள்ள நேரங்களில் நேரடி சூரிய ஒளியைத் தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளைப் பயன்படுத்துதல், பழங்களை உட்கொள்ளுதல் போன்றவற்றை இந்த ஆலோசனைகள் வலியுறுத்துகின்றன
வெப்ப அலை நிலவும் காலங்களில் பச்சிளங்குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள், வெளிப்புறப் பணிகளில் ஈடுபடுவோர், இதய நோய் உள்ளவர்கள், உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறப்பு கவனிப்பும் கண்காணிப்பும் தேவை என்றும் அந்த ஆலோசனை எடுத்துரைக்கிறது.
பணியிடங்கள், வெளிப்புறச் செயல்பாடுகள் ஆகியவற்றின்போது, நிழலான ஓய்விடங்கள் உள்ளிட்ட சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், மனநிலையில் மாற்றம், அதிக உடல் வெப்பநிலை, நீரிழப்பு, வலிப்பு, மயக்கம் போன்ற வெப்பம் தொடர்பான பாதிப்புகளின் அபாய அறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு இந்த ஆலோசனை மக்களை கேட்டுக்கொள்கிறது. கடுமையான நிலை ஏற்பட்டால் 108/102 என்ற அவசர உதவி எண்களை உடனடியாக அழைக்குமாறு இந்த ஆலோசனை பரிந்துரைக்கிறது.
கடும் வெப்பத்தின் போது உடல் வெப்பநிலையைச் சீராக்க உதவும் வகையில், மோர், இளநீர், எலுமிச்சை சார்ந்த பானங்கள் போன்ற நீர்ச்சத்து மிகுந்த பானங்களை உட்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
வெப்ப அழுத்தத்தைக் குறைக்க, மென்மையான யோகா பயிற்சிகளையும் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறது. கோடை காலத்தில் வெள்ளரிக்காய், தர்பூசணி, எலுமிச்சை, முலாம்பழம், பூசணிக்காய், தக்காளி போன்ற உடலுக்கு நீர்ச்சத்தையும் குளிர்ச்சியையும் தரும் பாரம்பரிய உணவுப் பொருட்களைத் தங்களின் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளுமாறு இந்த அறிவுரை பொதுமக்களை ஊக்குவிக்கிறது.
வானிலை ஆய்வு மையம் வெளியிடும் வானிலை நிலவரங்களைத் தவறாமல் பின்பற்றுமாறும், வெப்ப அலை எச்சரிக்கைகளின்போது தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2262274®=3&lang=1
***
(Release ID : 2262274)
SS/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2262459)
வருகையாளர் எண்ணிக்கை : 18