பிரதமர் அலுவலகம்
மத்திய பட்ஜெட் குறித்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
01 FEB 2026 3:19PM by PIB Chennai
எனது அன்பிற்குரிய நாட்டு மக்களே, வணக்கம்
இன்றைய பட்ஜெட் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு; இது நாட்டின் 'பெண் சக்தியின் வலிமையான பிரதிபலிப்பாகும். ஒரு பெண் நிதியமைச்சராக, திருமதி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாட்டின் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்த பட்ஜெட் என்பது எண்ணற்ற வாய்ப்புகளைக் கொண்ட ஒரு நெடுஞ்சாலை. இது நிகழ்காலத்தின் கனவுகளை நனவாக்குவதுடன், இந்தியாவின் ஒளிமயமான எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. 2047-ம் ஆண்டிற்குள் 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை நோக்கி நாம் எடுக்கும் உயரமான பாய்ச்சலுக்கு இந்த பட்ஜெட் ஒரு வலுவான தளமாக அமையும்.
நண்பர்களே,
இந்தியா இன்று பயணித்துக் கொண்டிருக்கும் 'சீர்திருத்த எக்ஸ்பிரஸ்', இந்த பட்ஜெட்டின் மூலம் புதிய ஆற்றலையும், புதிய வேகத்தையும் பெறும். மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னோடியான சீர்திருத்தங்கள், வளரும் இந்தியாவின் தைரியமான மற்றும் திறமையான இளைஞர்கள் வானளவு உயர்ந்து பறக்க வழிவகை செய்கின்றன.
நம்பிக்கை சார்ந்த நிர்வாகம் மற்றும் மனிதநேயத்தை மையமாகக் கொண்ட பொருளாதாரம் ஆகிய தொலைநோக்குப் பார்வையை இந்த பட்ஜெட் நனவாக்குகிறது. நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதிலும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்துவதுடன், அதிக மூலதனச் செலவு மற்றும் உயர் வளர்ச்சியை ஒருங்கிணைக்கும் ஒரு தனித்துவமான பட்ஜெட்டாக இது திகழ்கிறது.
நண்பர்களே,
இந்த பட்ஜெட், உலக அரங்கில் இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் ஒருமுறை வலுப்படுத்துகிறது. 140 கோடி இந்தியக் குடிமக்களும், இந்தியா உலகின் வேகமாக வளரும் பொருளாதாரமாகத் திகழ்வதுடன் மட்டும் திருப்தி அடைந்துவிடவில்லை. இந்தியா மிக விரைவில் உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உருவெடுக்க வேண்டும் என்பதே நம் நாட்டு மக்களின் உறுதிப்பாடாகும்.
உலகின் 'நம்பகமான ஜனநாயகக் கூட்டாளி' மற்றும் 'நம்பகமான தரமான விநியோகிஸ்தர்' என்ற இந்தியாவின் நற்பெயர் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இந்தியா மேற்கொண்ட மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தங்களின் பயன்கள் அனைத்தும் இந்தியாவின் இளைஞர்களுக்கும், சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த பட்ஜெட்டில் முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே,
'இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் 'தற்சார்பு இந்தியா' திட்டங்களுக்குப் புதிய வேகத்தை அளிக்க இந்த பட்ஜெட்டில் ஒரு லட்சியப் பாதை வகுக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் புதிய துறைகளுக்கு (Sunrise Sectors) இந்த பட்ஜெட்டில் வழங்கப்பட்டுள்ள ஆதரவு முன்னெப்போதும் இல்லாதது.
பயோ-பார்மா சக்தி மிஷன், செமிகண்டக்டர் மிஷன் 2.0, எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் உற்பத்தித் திட்டம், 'அரிய கனிம வழித்தடம்' உருவாக்கம், முக்கியமான தாதுக்களுக்கு முக்கியத்துவம் அளித்தல், ஜவுளித் துறையில் புதிய திட்டம், உயர் தொழில்நுட்பக் கருவிகள் தயாரிப்பு மற்றும் சிறந்த எம்.எஸ்.எம்.இ-களை உருவாக்குதல் என இந்த பட்ஜெட் எதிர்காலத் தொலைநோக்குப் பார்வையுடன் அமைந்துள்ளது. நமது சிறு மற்றும் குறு தொழில்களுக்கு இந்த பட்ஜெட்டில் கிடைத்துள்ள ஆதரவு, அவர்கள் உள்ளூர் அளவிலிருந்து உலகளாவிய நிலைக்கு உயரப் புதிய வலிமையை வழங்கும்.
நண்பர்களே,
உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்த பட்ஜெட்டில் பல பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன:
பிரத்யேக சரக்கு போக்குவரத்து வழித்தடம் .
நாடு முழுவதும் நீர்வழிப் பாதைகளை விரிவுபடுத்துதல்.
அதிவேக ரயில் வழித்தடம்.
இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நகரங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை வழங்க 'முனிசிபல் பாண்டுகளை' ஊக்குவித்தல்.
இந்த அனைத்து நடவடிக்கைகளும் 'வளர்ச்சியடைந்த இந்தியா'வை நோக்கிய பயணத்தை மேலும் துரிதப்படுத்தும்.
நண்பர்களே,
எந்தவொரு நாட்டின் மிகப்பெரிய மூலதனமும் அந்த நாட்டு குடிமக்கள்தான். கடந்த ஆண்டுகளில், நமது அரசு குடிமக்களின் திறனை மேம்படுத்துவதில் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளைச் செய்துள்ளது. திறன், அளவு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றிற்குத் தொடர்ந்து வலிமை சேர்ப்பதே எங்களது முயற்சியாகும்.
நாடாளுமன்றத்தில் நிர்மலா ஜி இன்று கூறியது போல், இது ஒரு 'இளைஞர் சக்தி பட்ஜெட்' . இதில் இளைஞர்களின் சிந்தனை, கனவுகள், உறுதிப்பாடு மற்றும் அவர்களின் வேகம் ஆகியவை அடங்கியுள்ளன. பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் பல்வேறு துறைகளில் தலைவர்களையும், கண்டுபிடிப்பாளர்களையும், படைப்பாளர்களையும் உருவாக்கும்.
மருத்துவ மையங்களை உருவாக்குதல், இதர சுகாதாரத் துறை வல்லுநர்களை ஊக்குவித்தல், 'ஆரஞ்சு பொருளாதாரம்' - அதாவது ஆடியோ-விஷுவல் மற்றும் கேமிங் மற்றும் சுற்றுலாவை மேம்படுத்துதல், 'கேலோ இந்தியா' திட்டம் ஆகியவற்றின் மூலம் இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகளுக்கான கதவுகள் திறக்கப்படும். இந்தியாவை உலகின் 'தரவு மையமாக' மாற்றப் பெரிய அளவில் வரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு இந்த பட்ஜெட் மிகப்பெரிய ஊக்கத்தை அளிக்கும் என்பதால், இந்திய இளைஞர்களுக்கு நான் எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுலாவை மேம்படுத்த இந்த பட்ஜெட்டில் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை வலிமையாக்குவதன் மூலம் சமநிலையான வளர்ச்சிக்கான அடித்தளமும் இந்த பட்ஜெட்டில் பலப்படுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களே,
நமது நாட்டில் 10 கோடிக்கும் அதிகமான பெண்கள் சுயஉதவிக் குழுக்களுடன் இணைந்துள்ளனர், இது ஒரு மிகப்பெரிய வெற்றிகரமான இயக்கமாக மாறியுள்ளது. பெண்களால் உற்பத்தி செய்யப்பட்டு, பெண்களாலேயே இயக்கப்படும் சுயஉதவிக் குழுக்களுக்கான ஒரு நவீன சூழலை உருவாக்குவதற்கு இந்த பட்ஜெட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இல்லத்திலும் மகாலட்சுமி அமைய வேண்டும் என்பதே எங்களது முயற்சி. ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவிகளுக்காகப் புதிய விடுதிகளைக் கட்டும் திட்டம், பெண் கல்வியை எளிதில் அணுகக்கூடியதாக மாற்றும்.
நண்பர்களே,
நமது அரசு எப்போதும் இந்தியாவின் விவசாயம், பால்வளம் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு முதன்மையான முன்னுரிமை அளித்து வருகிறது. இந்த பட்ஜெட்டிலும் தேங்காய், முந்திரி, கோகோ மற்றும் சந்தன மரச் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்காகப் பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 'பாரத் விஸ்தார் ஏஐ' என்ற தொழில்நுட்பக் கருவி, விவசாயிகளுக்குத் தேவையான தகவல்களை அவர்களது சொந்த மொழியிலேயே வழங்கி பெரிதும் உதவும். மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதன் மூலம், கிராமங்களிலேயே அதிக வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே,
இந்த பட்ஜெட் லட்சியமானது, அதே சமயம் நாட்டின் எதிர்பார்ப்புகளையும் இது பூர்த்தி செய்கிறது. எதிர்காலத்தை நோக்கிய, உணர்வுபூர்வமான மற்றும் கிராமங்கள், ஏழைகள், விவசாயிகள் என அனைவரது நலனையும் உறுதி செய்யும் இந்த பட்ஜெட்டை வழங்கியதற்காக நிர்மலா ஜி மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி.
---
(Release ID:2221590)
AD/VK
(வெளியீட்டு அடையாள எண்: 2260225)
வருகையாளர் எண்ணிக்கை : 17
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam