பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

இன்று இந்தியா சீர்திருத்த எக்ஸ்பிரஸ்-இல் முன்னேறி வருகிறது; அதே நேரத்தில், இன்றைய இந்தியா நவீன உள்கட்டமைப்புகளைக் கட்டமைத்து வருகிறது: பிரதமர்

கடந்த 12 ஆண்டுகளாக, நவீன இணைப்பு வசதிகளும் இந்திய அரசின் முக்கிய முன்னுரிமையாக இருந்து வருகின்றன; சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள் என அனைத்து இணைப்பு முறைகளிலும் முன்னெப்போதும் இல்லாத முதலீடு செய்யப்பட்டு வருகிறது: பிரதமர்

இன்று உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு தனிநபரும் எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகின்றனர்; அதன் விளைவாக, இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக மத்திய அரசு முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது: பிரதமர்

இடுகை இடப்பட்ட நாள்: 10 MAY 2026 5:59PM by PIB Chennai

தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் 9,400 கோடி மதிப்பிலான பல்வேறு  வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி, நிறைவடைந்தவற்றைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தத் திட்டங்கள் பிராந்திய இணைப்பை வலுப்படுத்துவதுடன்ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளையும் உருவாக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

பல்வேறு துறைகளில் நவீன உள்கட்டமைப்பை உருவாக்கும் அதே வேளையில், சீர்திருத்த விரைவுப் பாதையில் இந்தியாவின் முன்னேற்றத்தை வலியுறுத்திய பிரதமர், ஜஹீராபாத் தொழிற்பேட்டையை இந்த மாற்றத்தின் ஒரு முக்கிய தூணாக சுட்டிக்காட்டினார். இது, தொழில் வழித்தடங்களை மேம்படுத்துவதற்கான இந்திய அரசின் தேசிய லட்சியத்தைப் பிரதிபலிக்கிறது. உருவாகி வரும் இந்த வளாகம், உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு, சிறந்த மின்சார விநியோகம் மற்றும் மேம்பட்ட தகவல் தொடர்பு தொழில்நுட்ப வலையமைப்புகளுடன் கூடிய ஒரு நவீன தொழில்துறை நகரமாகச் செயல்படும் என்றும், உலகளாவிய முதலீட்டாளர்கள் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். கணிசமான நிதி ஒதுக்கீடு பற்றி  விவரித்த பிரதமர், மத்திய அரசிடமிருந்து இந்த மையங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதியளிக்கப்படும் என்றும், இது தெலங்கானா மற்றும் ஹைதராபாத்தில் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பாதைகளை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

சாலைகள், ரயில்வே மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட நவீன இணைப்பு உள்கட்டமைப்பில் இந்திய அரசின் முன்னெப்போதும் இல்லாத 12 ஆண்டு கால முதலீட்டுப் பயணத்தை விவரித்த பிரதமர், தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டிற்கு மட்டும் கிட்டத்தட்ட ஒரு லட்சத்து எழுபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த தேசிய அளவிலான கவனத்தால் தெலங்கானா கணிசமான பலன்களைப் பெற்றுள்ளதாகவும், கடந்த 12 ஆண்டுகளில் அம்மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை வலையமைப்பு இரட்டிப்பாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எரிசக்தித் தடைகள் அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளையும் முடக்கிவிடக்கூடிய 21 ஆம் நூற்றாண்டின் உலகளாவிய சூழலில், எரிசக்திப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொருவரும் இப்போது எரிசக்திப் பாதுகாப்பின் உத்திசார் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டுள்ளனர் என்று குறிப்பிட்டார். தேசிய எரிசக்திப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய அரசு இதுவரை இல்லாத அளவிலான முதலீடுகளைச் செய்து வருவதாகக் கூறிய பிரதமர், மல்காபூரில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய முனையத்தின் திறப்பு விழாவை ஒரு குறிப்பிடத்தக்க உத்திசார் நடவடிக்கையாகக் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2259550&reg=3&lang=1  

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2259638) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam