பிரதமர் அலுவலகம்
ஐரோப்பிய கவுன்சில் தலைவர் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் ஆகியோருடன் இணைந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி வழங்கிய கூட்டுப் பத்திரிகை அறிக்கையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 JAN 2026 2:36PM by PIB Chennai
மேதகு அவர்களே,
தலைவர் திரு. அந்தோனியோ கோஸ்டா மற்றும் தலைவர் திருமதி. உர்சுலா வான் டெர் லேயன் அவர்களே, இரு தரப்பு பிரதிநிதிகளே, ஊடக நண்பர்களே,
வணக்கம்!
எனது நெருங்கிய நண்பர்களான தலைவர் திரு. கோஸ்டா மற்றும் தலைவர் திருமதி. வான் டெர் லேயன் ஆகியோரை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இந்திய வருகைக்காக வரவேற்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
தலைவர் திரு. கோஸ்டா அவர்கள் தனது எளிமையான வாழ்க்கை முறை மற்றும் சமூகத்தின் மீதான ஆழ்ந்த அர்ப்பணிப்புக்காகப் பரவலாகப் பாராட்டப்படுபவர்; இதன் காரணமாகவே அவர் "லிஸ்பனின் காந்தி" என்று அன்போடு அழைக்கப்படுகிறார். தலைவர் திருமதி. உர்சுலா வான் டெர் லேயன் அவர்கள் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு ஒரு உத்வேகமாகத் திகழ்கிறார் - அவர் ஜெர்மனியின் முதல் பெண் பாதுகாப்பு அமைச்சராக மட்டுமல்லாமல், ஐரோப்பிய ஆணையத்தின் முதல் பெண் தலைவராகவும் விளங்குகிறார்.
நேற்றைய தினம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாக அமைந்தது. முதன்முறையாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்கள் இந்தியாவின் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினர்களாகப் பங்கேற்றனர். இன்றும் மற்றொரு வரலாற்றுச் சந்தர்ப்பமாகும்; உலகின் இரண்டு மிகப்பெரிய ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, தங்களுக்கு இடையேயான உறவில் ஒரு முக்கியமான அத்தியாயத்தை இன்று உருவாக்குகின்றன.
நண்பர்களே,
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளன. "நமது கூட்டாண்மை, இரு நாடுகளுக்கும் பொதுவான ஜனநாயகப் பண்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த கூட்டாண்மை புதிய உயரங்களை எட்டி வருகிறது. இன்று, நமக்கு இடையே 180 பில்லியன் யூரோ மதிப்பிலான வர்த்தகம் நடைபெறுகிறது. 8,00,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வசித்து வருவதோடு, அந்த நாடுகளின் வளர்ச்சிக்கும் தீவிரமாகப் பங்களித்து வருகின்றனர்.
உத்திசார் தொழில்நுட்பங்கள் முதல் தூய்மையான எரிசக்தி வரையிலும், டிஜிட்டல் ஆளுமை முதல் வளர்ச்சி சார்ந்த கூட்டாண்மை வரையிலும் ஒவ்வொரு துறையிலும் நாம் ஒத்துழைப்பின் புதிய பரிமாணங்களை நிறுவியுள்ளோம். இந்தச் சாதனைகளின் அடிப்படையில், இன்றைய உச்சிமாநாட்டில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் வகையில் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம்.
நண்பர்களே,
இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை இன்று இந்தியா நிறைவு செய்துள்ளது. இந்த மாதத்தின் 27-ம் தேதியன்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளுடன் இந்தியா இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வது ஒரு மகிழ்ச்சியான தற்செயல் நிகழ்வாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் நமது விவசாயிகள் மற்றும் சிறு நிறுவனங்கள் ஐரோப்பிய சந்தைகளை எளிதாக அணுக வழிவகை செய்யும்; உற்பத்தித் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் நமது சேவைத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும்.
மேலும், இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான முதலீட்டை ஊக்குவிப்பதோடு, புதிய கண்டுபிடிப்பு வளர்க்கும் மற்றும் உலக அளவில் விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்தும். சுருக்கமாகச் சொன்னால், இது வெறும் வர்த்தக ஒப்பந்தம் மட்டுமல்ல; இது பொதுவான செழpப்பிற்கான ஒரு புதிய வரைபடமாகும்.
நண்பர்களே,
இந்த லட்சியமான வர்த்தக ஒப்பந்தத்துடன், நடமாட்டத்திற்கான ஒரு புதிய கட்டமைப்பையும் நாம் உருவாக்கி வருகிறோம். இது இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய வாய்ப்புகளைத் திறந்துவிடும். அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் நமக்கு நீண்டகால மற்றும் விரிவான ஒத்துழைப்பு உள்ளது. இன்று, இந்த முக்கியமான தொடர்புகளை மேலும் வலுப்படுத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
நண்பர்களே,
பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளே எந்தவொரு வலுவான இணைந்த செயல்பாடுகளுக்கும் அடித்தளமாகும். இன்று, ஒரு 'பாதுகாப்பு மற்றும் தற்காப்புக்கான இணைந்த செயல்பாடு' மூலம் இதனை நாங்கள் அதிகாரபூர்வமாக்குகிறோம். இது பயங்கரவாத எதிர்ப்பு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றில் நாம் இன்னும் நெருக்கமாக இணைந்து செயல்பட உதவும்.
இது சர்வதேச விதிகளுக்கு உட்பட்ட உலகளாவிய ஒழுங்கிற்கான நமது பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தும். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் நமது ஒத்துழைப்பு வளரும், மேலும் நமது பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் இணைந்து தயாரித்தல் மற்றும் கூட்டு மேம்பாடு ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளைப் பெறும்.
நண்பர்களே,
இன்றைய சாதனைகளின் அடிப்படையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான இன்னும் லட்சியமான மற்றும் முழுமையான மூலோபாய செயல்திட்டத்தை நாங்கள் தொடங்கி வைக்கிறோம். சிக்கலான உலகளாவிய சூழலில், இந்தச் செயல்திட்டம் ஒரு தெளிவான திசையை வழங்குவதோடு, நமது பகிரப்பட்ட செழிப்பை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மற்றும் மக்களிடையேயான உறவை ஆழப்படுத்தவும் உதவும்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு என்பது "உலகளாவிய நன்மைக்கான ஒரு கூட்டாண்மை" ஆகும். இந்தோ-பசிபிக் முதல் கரீபியன் வரையிலான முத்தரப்புத் திட்டங்களை நாங்கள் விரிவுபடுத்துவோம், அதன் மூலம் நிலையான விவசாயம், தூய்மையான எரிசக்தி மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றிற்குத் தேவையான ஆதரவை வழங்குவோம். நாம் இணைந்து, 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' உலக வர்த்தகம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான ஒரு முக்கியத் தூணாக நிலைநிறுத்தப் பாடுபடுவோம்.
நண்பர்களே,
இன்று உலகளாவிய ஒழுங்குமுறை பெரும் கொந்தளிப்பைச் சந்தித்து வருகிறது. இத்தகைய சூழலில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையிலான கூட்டாண்மை சர்வதேச அமைப்பிற்குள் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும். இதன் பின்னணியில், உக்ரைன், மேற்கு ஆசியா மற்றும் இந்தோ-பசிபிக் உள்ளிட்ட பல உலகளாவிய விவகாரங்கள் குறித்து இன்று விரிவான விவாதங்களை நடத்தினோம். பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச விதிமுறைகளை மதிப்பது நமது பொதுவான முன்னுரிமையாகும். காலத்தின் சவால்களை எதிர்கொள்ள உலகளாவிய நிறுவனங்களின் சீர்திருத்தம் அவசியம் என்பதில் நாம் ஒருமித்த கருத்துடன் இருக்கிறோம்.
நண்பர்களே,
நாடுகளுக்கு இடையிலான உறவுகளின் வரலாற்றில், சில தருணங்களில் வரலாறு தானாகவே முன்வந்து, 'இந்த இடத்தில்தான் திசை மாறியது, இந்த இடத்தில்தான் ஒரு புதிய யுகம் தொடங்கியது' என்று பிரகடனம் செய்யும். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே இன்று நடைபெற்றுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சிமாநாடு அத்தகைய ஒரு தருணத்தைப் பிரதிபலிக்கிறது.
இந்த அசாதாரணமான பயணத்திற்காகவும், இந்தியாவின் மீதான உங்களது நட்பிற்காகவும், நமது பொதுவான எதிர்காலத்திற்கான உங்களது அர்ப்பணிப்பிற்காகவும் தலைவர் திரு. கோஸ்டா மற்றும் தலைவர் திருமதி. வான் டெர் லேயன் ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பொறுப்புத் துறப்பு: இது பிரதமர் ஆற்றிய உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். பிரதமர் தனது உரையை இந்தியில் நிகழ்த்தினார்.
***
(Release ID: 2219089)
AD/VK
***
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2258084)
வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam