பிரதமர் அலுவலகம்
புதுதில்லி கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற என்.சி.சி பேரணியில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
28 JAN 2026 6:37PM by PIB Chennai
பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் ஏனைய முக்கியப் பிரமுகர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்திருக்கும் என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ் மாணவர்களே, ராஷ்ட்ரிய ரங்சாலாவின் சகாக்களே மற்றும் எனது அருமை இளம் நண்பர்களே.
உங்கள் அனைவரின் கடின உழைப்பும் இங்கே கண்கூடாகத் தெரிகிறது. மிகுந்த ஒருங்கிணைப்புடன் இந்தச் செயல்விளக்கத்தை நீங்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளீர்கள்.
ஆனால் நண்பர்களே,
இன்று நமக்கு ஒரு மிகுந்த துயரமான செய்தியும் வந்துள்ளது. இன்று காலை மகாராஷ்டிராவில் ஒரு சோகமான விமான விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்து மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் திரு. அஜித் பவார் அவர்களையும் மற்றும் சில சகாக்களையும் நம்மிடமிருந்து பறித்துச் சென்றுவிட்டது. மகாராஷ்டிர மாநிலத்தின் வளர்ச்சிக்கும் நாட்டிற்கும் திரு. அஜித் தாதா அவர்கள் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. குறிப்பாக கிராமப்புற வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக அவர் எப்போதும் முன்னின்று உழைத்தவர். திரு. அஜித் பவார் அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயரமான நேரத்தில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் நாம் அனைவரும் துணையாக நிற்கிறோம்.
நண்பர்களே,
இந்தத் துயரமான மற்றும் இரங்கல் தருணங்களுக்கு மத்தியிலும், இங்கு வந்துள்ள அனைத்து மாணவர்களையும், பல்வேறு நட்பு நாடுகளிலிருந்து வந்துள்ள மாணவர்கள் மற்றும் அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன். இந்த முறையும் பெண் மாணவர்கள் (Girl cadets) மிக அதிக எண்ணிக்கையில் பங்கேற்றுள்ளனர். அவர்களுக்கு எனது சிறப்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
இந்தியாவின் இளைஞர் சக்தியைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், ஒழுக்கம் மிக்கவர்களாகவும், உணர்திறன் கொண்டவர்களாகவும், தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட குடிமக்களாகவும் உருவாக்கும் ஒரு இயக்கமே என்.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பங்களிப்பை மேலும் வலிமையாக்கி வருகிறீர்கள். கடந்த சில ஆண்டுகளில், என்.சி.சி மாணவர்களின் எண்ணிக்கை 14 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக நமது எல்லைப் பகுதிகளிலும், கடற்கரைப் பகுதிகளிலும் என்.சி.சி மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
எனது இளம் நண்பர்களே,
என்.சி.சி என்பது இளைஞர்களுக்கான ஒரு தளம், இந்தத் தளத்தின் வழியாக ஒருவர் தனது பாரம்பரியத்தைப் பெருமையுடன் வாழ முடிகிறது. உதாரணமாக, இந்த ஆண்டு என்.சி.சி 'வந்தே மாதரம்' பாடலின் 150 ஆண்டுகளை முழு உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளது. நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இது தொடர்பான நிகழ்ச்சிகளை நீங்கள் நடத்தியுள்ளீர்கள். 'பரம் வீர் சாகர் யாத்திரை'யும் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். உங்கள் அனைவருக்கும் தெரிந்தபடி, சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தமான் நிக்கோபாரின் 21 தீவுகளுக்கு நமது 'பரம் வீர் சக்ரா' விருது பெற்றவர்களின் பெயர்களை அரசாங்கம் சூட்டியது. உங்களின் இந்த பாய்மரக் கப்பல் பயணத்தின் மூலம் தேசிய நாயகர்களுக்கு மரியாதை அளிக்கும் அந்த உணர்வை நீங்கள் முன்னெடுத்துச் சென்றுள்ளீர்கள். அதேபோல், லட்சத்தீவில் நடைபெற்ற தீவுத் திருவிழா மூலம் கடல், கலாச்சாரம் மற்றும் இயற்கை ஆகிய அனைத்தையும் ஒன்றிணைத்துக் கொண்டாடியுள்ளீர்கள்.
நண்பர்களே,
என்.சி.சி வரலாற்றை நினைவுச்சின்னங்களுக்கு வெளியேயும் கொண்டு வந்து, மக்களின் இதயங்களில் அதை உயிர்ப்பிக்கச் செய்துள்ளது. பாஜிராவ் பேஷ்வா அவர்களின் வீரம், மாவீரர் லச்சித் போர்புகன் அவர்களின் திறன் மற்றும் பகவான் பிர்சா முண்டாவின் தலைமைத்துவம் குறித்து மிதிவண்டிப் பேரணிகள் மூலம் பொது விழிப்புணர்வை ஏற்படுத்தப் பணியாற்றியுள்ளீர்கள். உங்களின் இத்தகைய துணிச்சலான பணிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன். இன்று விருதுகளைப் பெற்ற சக நண்பர்களுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
'இதுவே தருணம், ஆகச் சிறந்த தருணம்' என்று நான் செங்கோட்டையில் இருந்து கூறியிருந்தேன். நமது நாட்டு இளைஞர்களுக்கு இன்றைய காலம் அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும் காலமாகும். இந்த காலகட்டத்தின் பலனை நமது இளைஞர்கள் அதிகபட்சமாகப் பெறுவதை உறுதி செய்வதே அரசின் முயற்சியாகும். இதற்கான ஒரு உதாரணத்தை நேற்றுதான் நீங்கள் பார்த்தீர்கள். இந்தியாவிற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் ஓமன், நியூசிலாந்து, பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா மற்றும் மொரிஷியஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் அனைத்தும் நமது கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகளை உருவாக்கப்போகின்றன.
நண்பர்களே,
இன்று ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் இளைஞர் சக்தியை மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது. உலக நாடுகளின் இந்த நம்பிக்கைக்குக் காரணம் - 'திறனுடன் இந்திய இளைஞர்களிடம் ஜனநாயகப் பண்புகள் உள்ளன. ஒவ்வொரு வகையான பன்முகத்தன்மைக்கும் மரியாதை அளிக்கும் பண்பு உள்ளது, ஒட்டுமொத்த உலகத்தையும் ஒரே குடும்பமாகக் கருதும் உயரிய பண்பு உள்ளது. எனவே, இந்திய இளைஞர்கள் எங்கு சென்றாலும் அந்த நாட்டு மக்களுடன் எளிதில் கலந்து விடுகிறார்கள், அவர்களின் இதயங்களை வெல்கிறார்கள். நமது திறமையால் அந்த நாட்டின் வளர்ச்சிக்கும் நாம் உதவுகிறோம். இதுவே நமது பண்பு, இதுவே நமது இயல்பு. தாய்நாட்டின் மீது அளவற்ற பற்றும், பணிபுரியும் இடத்தின் மீது ஈடு இணையற்ற அர்ப்பணிப்பும் கொண்டிருப்பதே நமது பாரம்பரியம்.
நண்பர்களே,
உலகெங்கிலும் உள்ள தலைவர்களுடன் நான் உரையாடும்போது, அந்த உரையாடல்களின் அடிப்படையில் என்னால் முழு நம்பிக்கையுடன் கூற முடியும் - இந்திய இளைஞர்கள் எவ்வளவு கடின உழைப்பாளிகளோ, அதே அளவிற்குச் சிறந்த நிபுணர்களாகவும் திகழ்கிறார்கள். எனவேதான், இந்திய இளைஞர்களுக்கு உலக அளவில் பெரும் தேவை நிலவுகிறது. உதாரணமாக, வளைகுடா நாடுகளைப் பாருங்கள், அங்கு லட்சக்கணக்கான மக்கள் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர். நமது மருத்துவர்களும் பொறியாளர்களும் பல நாடுகளின் சுகாதார அமைப்புகளிலும், உள் கட்டமைப்புகளிலும் அற்புதமான பணிகளைச் செய்து வருகின்றனர். முன்பு இங்கிருந்து சென்ற நமது ஆசிரியர்கள் பல நாடுகளின் சமூகங்களில் புதிய விழுமியங்களைச் சேர்த்துள்ளனர்.
நண்பர்களே,
உலகிற்கு அவர்கள் அளிக்கும் இந்த பங்களிப்புடன் சேர்த்து, நமது நாட்டில் இளைஞர்கள் படைக்கும் சாதனைகளையும் ஒட்டுமொத்த உலகமும் பாராட்டி வருகிறது. இந்த இளைஞர்களால்தான் இந்தியா உலகின் தகவல் தொழில்நுட்பத்தின் முதுகெலும்பாக மாறியுள்ளது. இப்போது, இந்த இளைஞர்களின் சக்தியால்தான் புத்தொழில் விண்வெளி, டிஜிட்டல் தொழில்நுட்பம் என ஒவ்வொரு துறையிலும் ஒரு புதிய புரட்சி தொடங்கியுள்ளது.
நண்பர்களே,
தற்போது ஐரோப்பிய ஒன்றியத்துடன் எட்டப்பட்டுள்ள ஒப்பந்தத்தை, "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என்று உலகம் போற்றுகிறது; இது உலகிற்கே ஒரு திருப்புமுனை ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உங்களுக்கு "விருப்பங்களை நிறைவேற்றும் சுதந்திரம்" ஆகும். இந்த ஒப்பந்தம் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கையும், உலகளாவிய வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
ஐரோப்பிய ஒன்றியம் என்றால், உலகின் இருபத்தேழு நாடுகளுடன் இந்தியாவின் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்று பொருள். இதன் பலன் இந்தியாவின் புத்தொழில்களுக்குச் சென்றடையும். இந்தியப் புத்தொழில்களுக்கான நிதி உதவி மற்றும் புத்தாக்கச் சூழல் எளிதாகும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நமது படைப்பாற்றல் பொருளாதாரம் - திரைப்படம், கேமிங், ஃபேஷன், டிஜிட்டல் உள்ளடக்கம், இசை மற்றும் வடிவமைப்பு - ஆகியவையும் பெரும் பலன் பெறும். அதோடு இணைந்து, ஆராய்ச்சி மற்றும் கல்வி முதல் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்முறை சேவைகள் வரை இந்திய இளைஞர்களுக்கு எண்ணற்ற புதிய வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
நண்பர்களே,
இந்த ஒப்பந்தம் மிகவும் விரிவானது, ஆழமானது, புதிய உயரங்களைத் தொடுவது மற்றும் இதிலுள்ள நன்மைகளின் பட்டியல் மிக நீளமானது என்பதால் இது "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என்று அழைக்கப்படுகிறது. இது தற்சார்பு இந்தியா' இயக்கத்திற்குப் புத்துயிர் அளிக்கும். 'இந்தியாவில் தயாரிப்போம், உலகிற்காகத் தயாரிப்போம்' என்ற தீர்மானத்திற்கு இது வலிமை சேர்க்கும். ஏனெனில், இந்த ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவின் ஏற்றுமதியில் 99 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்களுக்கான வரி விகிதம் பூஜ்ஜியமாகவோ அல்லது மிகக் குறைவாகவோ மாறும். இதன் மூலம் ஜவுளி, தோல், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், காலணிகள் மற்றும் பொறியியல் பொருட்கள் என ஒவ்வொரு இந்தியத் தொழிற்துறையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் பெரும் பயன் பெறும். நமது நெசவாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் சிறு தொழில்முனைவோர் 27 ஐரோப்பிய நாடுகளின் பிரம்மாண்டமான சந்தையை நேரடியாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
நண்பர்களே,
இந்த ஒப்பந்தத்தில் மற்றொரு வலுவான பக்கமும் உள்ளது. இந்தியாவிற்கு அதிக முதலீடுகள் வரும். நாட்டில் புதிய பொறியியல், மின்னணுவியல், ரசாயனம், மருந்து மற்றும் இதர உற்பத்தி ஆலைகள் தொடங்கப்படும். இதன் மூலம் விவசாயம், உணவுப் பதப்படுத்துதல் மற்றும் மீன்வளம் ஆகியவற்றிலும் புதிய முதலீடுகளுக்கான ஒரு உறுதியான சந்தை தயாராகும். இது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் கிராமப்புற இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள ஒரு மிகப்பெரிய வாய்ப்பாகும்.
எனது இளம் நண்பர்களே,
இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இந்திய இளைஞர்களை ஐரோப்பாவின் வேலைவாய்ப்புச் சந்தையுடன் நேரடியாக இணைக்கிறது. குறிப்பாகப் பொறியியல், பசுமைத் தொழில்நுட்பம், வடிவமைப்பு, தளவாடங்கள் மற்றும் மேம்பட்ட உற்பத்தித் துறைகளில் பல வாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் பொருள், இந்திய இளைஞர்களாகிய உங்களுக்கு 27 நாடுகளில் புதிய வாய்ப்புகள் திறக்கப்படுகின்றன என்பதாகும்.
நண்பர்களே,
அரசு மேற்கொண்டு வரும் விரிவான சீர்திருத்தங்கள் மூலம் இந்த உலகளாவிய வாய்ப்புகளை இன்னும் விரிவுபடுத்தி வருகிறது. இன்று நாடு பயணித்துக் கொண்டிருக்கும் சீர்திருத்த விரைவு வண்டி இளைஞர் சக்தியின் முன்னால் உள்ள ஒவ்வொரு தடையையும் நீக்கி வருகிறது. நாட்டின் முன் வளர்ந்து வரும் இந்த வாய்ப்புகளும், என்.சி.சி அமைப்பில் இணைந்துள்ள உங்களிடம் உள்ள இந்த விழுமியங்களும் ஒழுக்கமும் - உங்களுக்கு தங்கத் தாமரை பூத்தது போலாகும்.
நண்பர்களே,
இங்கே 'ஆபரேஷன் சிந்துார்' குறித்த ஒரு அற்புதமான கலைநிகழ்ச்சியை நீங்கள் வழங்கியுள்ளீர்கள். குறிப்பாக, 'ஆபரேஷன் சிந்துார்' சமயத்தில் நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை நான் பெரிதும் பாராட்டுகிறேன். தேசியப் பாதுகாப்பு தொடர்பான அந்த முக்கியமான நேரத்தில், நமது என்.சி.சி மாணவர்கள் தங்களது பொறுப்புகளை மிகச்சிறப்பாகக் கையாண்டனர். சிலர் நமது படைகளின் ஆயத்தப் பணிகளுக்கு ஆதரவு அளித்தனர், சிலர் ரத்த தான முகாம்களை அமைத்தனர், சிலர் முதலுதவி முகாம்கள் மூலம் சேவையாற்றினர்; அணிவகுப்பு மைதானப் பயிற்சியுடன் சேர்த்து, 'தேசமே முதன்மை' என்ற சிந்தனைப் பயிற்சியும் என்.சி.சி-யில் வழங்கப்படுகிறது என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். என்.சி.சி-யிடமிருந்து பெறப்பட்ட இந்தத் தேசபக்தியும், கடினமான காலங்களில் முழு வலிமையுடன் நாட்டிற்காக உழைக்கத் தூண்டும் இந்தத் தலைமையும்தான் நாம் அங்கிருந்து கற்றுக்கொள்ளும் பாடமாகும். நான் என்.சி.சி-யில் இருந்தபோது, எனது 'தேசமே முதன்மை' என்ற உணர்வு இவ்வாறுதான் வலுப்பெற்றது. இன்று நீங்களும் என்.சி.சி-யில் அதையே கற்றுக்கொள்வதைப் பார்த்து நான் பெருமிதம் கொள்கிறேன்.
நண்பர்களே,
'ஆபரேஷன் சிந்துார்' இந்தியாவின் ஆற்றலையும் நமது ராணுவத்தின் வீரத்தையும் மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது. நமது உள்நாட்டு ஆயுதங்கள் எவ்வளவு மேம்பட்டவை மற்றும் உயர்தொழில்நுட்பம் கொண்டவை என்பதையும் 'ஆபரேஷன் சிந்துார்' காட்டியுள்ளது.
நண்பர்களே,
இன்றைய நவீனப் போர்க்காலச் சூழலில், இளைஞர்களின் திறன்களின் பங்கு பெரிதும் அதிகரித்துள்ளது. இப்போது போர் என்பது எல்லையில் உள்ள டாங்கிகள், துப்பாக்கிகள் மற்றும் குண்டுகளுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை. இன்றைய போர் பல முனைகளில் நடக்கிறது. இன்றைய போர் 'கோடிங்' மற்றும் 'கிளவுட்' தொழில்நுட்பங்களிலும் நடக்கிறது. தொழில்நுட்பத்தில் பின்தங்கியுள்ள நாடுகள் பொருளாதாரத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பிலும் பலவீனமாகவே இருக்கும்.
எனவே நண்பர்களே,
இளைஞர்களாகிய நீங்கள் நமது நாட்டிற்காகச் செய்யும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகள் - இந்த ஆர்வம் தேசபக்தியை வலுப்படுத்துவதுடன் நாட்டின் பாதுகாப்பிற்கும் பெரிய பங்களிப்பை அளிக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் புதுமையான சிந்தனை கொண்ட இளைஞர்களுக்கு ராணுவத்தில் இன்று புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதை நீங்கள் அறிவீர்கள். இன்று நமது இளைஞர்களின் பாதுகாப்புத்துறைச் சார்ந்த புத்தொழில்கள் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றன. இன்று 'மேட் இன் இந்தியா' ட்ரோன்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன; செயற்கை நுண்ணறிவு மற்றும் பாதுகாப்புப் புதுமைகள் இப்போது நமது படைகளை நவீனமாக்கி வருகின்றன. அதாவது, இளம் நண்பர்களாகிய உங்களுக்கு வாய்ப்புகள் பெரிதும் விரிவடைந்துள்ளன. இங்கே அமர்ந்திருப்பவர்கள் மட்டுமல்லாமல், நாட்டின் கோடிக்கணக்கான இளைஞர்களும் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
நண்பர்களே,
நமது நாடு 'தேசிய வாக்காளர் தினத்தை' கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான், அதாவது 2026 ஜனவரி 25 அன்று கொண்டாடியது. அன்றைய தினம் நான் நாட்டு மக்களுக்கு ஒரு கடிதமும் எழுதியிருந்தேன். நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் வழங்கியுள்ள அந்த உரிமையையும், கடமை உணர்வையும் கொண்டாடுவதே தேசிய வாக்காளர் தினமாகும். இன்று உலகில் இளம் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இந்த இளைஞர்கள் வாக்களிக்கும் தகுதியைப் பெற்று, 18 வயதை எட்டும்போது, தேசத்தின் விதியை நிர்ணயிக்கும் சக்தியைப் பெறுகிறார்கள். எனவே, இப்போது நாம் நாட்டில் ஒரு புதிய மரபைத் தொடங்க வேண்டும். என்.சி.சி- மற்றும் என்.எஸ்.எஸ் 'எனது இளைய இந்தியா' அமைப்பு, அதாவது 'மை பாரத்' அமைப்பு ஆகியவற்றில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25 அன்று ஒரு பெரிய நிகழ்வை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அன்றைய தினம், முதல்முறை வாக்காளர்களைக் கவுரவிக்கும் வகையில் ஒரு பிரம்மாண்டமான நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும். இந்த முயற்சி நமது இளைய தலைமுறையினரிடையே பொறுப்புணர்வை மேலும் வலுப்படுத்தும் என்றும், நமது ஜனநாயகத்தை வலிமைப்படுத்தும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்.
நண்பர்களே,
வளர்ச்சியடைந்த இந்தியா என்பதன் பொருள் பொருளாதாரச் செழிப்புடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. ஒரு குடிமகனாக நமது நடத்தை எவ்வாறு இருக்கிறது என்பதும் வளர்ச்சியடைந்த இந்தியாவின் முக்கியமான அம்சமாகும். ஒரு குடிமகனாக, நமது கடமைக்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும். உதாரணமாக, 'தூய்மை இந்தியா' இயக்கத்தைத் தொடங்குவதில் அரசாங்கத்தின் பங்களிப்பு இருக்கலாம்; ஆனால், அதனை யார் முன்னெடுத்துச் சென்றார்கள் என்று பார்த்தால், நமது நாட்டு குடிமக்களும், இளைஞர்களும், சிறு குழந்தைகளுமே அதனை முன்னெடுத்துச் சென்றனர் என்று என்னால் பெருமையுடன் சொல்ல முடியும். வீட்டிற்குள்ளும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி, தூய்மை என்பது ஒரு பழக்கமாக, வாழ்க்கை முறையாக, ஒரு விழுமியமாக மாற வேண்டும். குடிமைப் பொறுப்பு குறித்த இந்த உணர்வை நாம் நமது வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். நமது வீட்டு முற்றத்தில் நாம் எந்த அழகைக் காண விரும்புகிறோமோ, அதே உணர்வுடன் நமது நகரத்தையும் அழகாக்க வேண்டும், அதனைத் தொடர்ந்து பராமரிக்கவும் வேண்டும். வாரத்தில் ஏதேனும் ஒரு நாளில் ஒரு மணி நேரம் தூய்மை தொடர்பான ஏதேனும் ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும் என்று இங்குள்ள ஒவ்வொரு இளம் நண்பரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன். என்.சி.சி-என்.எஸ்.எஸ் அமைப்பால் இதை மிகச்சிறப்பாகச் செய்ய முடியும். உங்கள் பகுதிகளில் ஏதேனும் ஒரு இடத்தில் இதற்கான நடவடிக்கையைத் திட்டமிடுங்கள்.
நண்பர்களே,
'தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும்' பிரச்சாரத்தின் கீழ் என்.சி.சி சுமார் 8 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். நாம் நட்ட மரங்கள் நன்றாக வளருவதை உறுதி செய்வதும் நமது கடமையாகும்.
நண்பர்களே,
நமது இளைஞர் சக்தியின் மிகப்பெரிய சோதனை என்பது, வரும் காலத்தில் நாம் எவ்வளவு உடல் தகுதியுடன் இருக்கப்போகிறோம் என்பதில் உள்ளது. உடல் தகுதி என்பது சில நிமிட உடற்பயிற்சியுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை. அது நமது இயல்பிலேயே வர வேண்டும். நமது உணவுப் பழக்கம் முதல் தினசரி நடைமுறைகள் வரை, ஒரு ஒழுக்கமான வாழ்க்கை முறை அவசியமாகும். நீங்கள் 'பிட் இந்தியா' இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதை அறிந்து நான் மகிழ்ச்சியடைந்தேன். என்.சி.சி மாணவர்கள் விளையாட்டுத் துறையிலும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர்.
நண்பர்களே,
இன்று உங்கள் மத்தியில், உடல் பருமன் குறித்த விஷயத்தை நான் மீண்டும் எழுப்புகிறேன். வரும் காலத்தில் இந்தியாவில் மூன்றில் ஒருவர் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்த உடல் பருமன் சிக்கலால் நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பல நோய்களின் அபாயம் நாட்டில் அதிகரித்து வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக நமது இளைஞர்கள் இருக்கக்கூடும். எனவே, நாம் இப்போதே விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம்; நமது உணவில் எண்ணெய் பயன்பாட்டைக் குறைக்க நாம் முயற்சிக்க வேண்டும். சில காலத்திற்கு முன்பு, உணவில் எண்ணெய்ப் பயன்பாட்டை 10% குறைக்க வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த வேண்டுகோளை இளைஞர்களாகிய உங்கள் அனைவரிடமும் முன்வைக்கிறேன்.
நண்பர்களே,
என்.சி.சி உங்களுக்கு வெறும் அணிவகுப்பை மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை; ஒரு குடிமகனாகப் பொறுப்புடன் வாழ்வதையும் இந்த அமைப்பு உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறது. நீங்கள் ஒரு சிறந்த குடிமகனாக உருவாகத் தேவையான திறன்களையும், விழுமியங்களையும் இங்கே கற்கிறீர்கள். குடியரசு தினக் கொண்டாட்டங்களில் உங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் ஆளுமையை மேலும் செதுக்குகின்றன. வாழ்வின் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் வெற்றி பெற வேண்டும் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியா) உருவாக்கத்தில் உங்களின் பங்களிப்பு தொடர்ந்து ஒளிர வேண்டும் என்றும் விரும்புகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
பாரத மாதாவுக்கு ஜே!
பாரத மாதாவுக்கு ஜே!
இன்று நாடு 'வந்தே மாதரம் பாடல் இயற்றி 150' ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ள நிலையில் அனைவரும் சேர்ந்து சொல்லுவோம் -
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!
மிக்க நன்றி.
----
(Release ID: 2219726)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2258077)
आगंतुक पटल : 27
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam