பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மேற்கு வங்கத்தின் சிங்கூரில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடக்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 18 JAN 2026 4:41PM by PIB Chennai

 

மேற்கு வங்க ஆளுநர் திரு. சி.வி. ஆனந்த போஸ் அவர்களே, மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு சுகந்தா மஜும்தார் அவர்களே, திரு. சாந்தனு தாக்கூர் அவர்களே, நாடாளுமன்றத்தில் எனது சகாவான திரு. சௌமிக் பட்டாச்சார்யா அவர்களே, திரு. சௌமித்ரா கான் அவர்களே, மேற்கு வங்க சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. சுவேந்து அதிகாரி அவர்களே, மற்ற பிரதிநிதிகளே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!

நேற்று நான் மால்டாவில் இருந்தேன், இன்று ஹூக்ளியில் உங்கள் அனைவர் மத்தியிலும் வரும் பாக்கியத்தைப் பெற்றுள்ளேன். வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு கிழக்கு இந்தியாவின் வளர்ச்சி அவசியம்.  இந்த இலக்குடன் மத்திய அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நேற்றைய மற்றும் இன்றைய நிகழ்ச்சிகள் இந்த உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்தப் போகின்றன. இந்த நேரத்தில், மேற்கு வங்கம் தொடர்பான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், அவற்றை நாட்டிற்கு அர்ப்பணிக்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நேற்று, நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி கொண்ட ரயில் மேற்கு வங்கத்திலிருந்து தொடங்கியது. வங்காளத்திற்கு சுமார் அரை டஜன் புதிய அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் கிடைத்துள்ளன. இன்று மேலும் மூன்று அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில், ஒரு ரயில் எனது நாடாளுமன்றத் தொகுதியான (காசி) வாரணாசியுடன் வங்காளத்தின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும். இது தவிர, தில்லி மற்றும் தமிழ்நாட்டிற்கான அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களும் தொடங்கப்பட்டுள்ளன. அதாவது, மேற்கு வங்கத்தின் ரயில் இணைப்புக்காக, கடந்த 24 மணிநேரம் என்பது முன்னெப்போதும் இல்லாத ஒன்றாக அமைந்தது. ஒருவேளை கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இவ்வளவு பணிகள் 24 மணிநேரத்தில் நடந்திருக்காது.

நண்பர்களே,

வங்காளத்தில் நீர்வழிப் பாதைகளுக்கான பல வாய்ப்புகள் உள்ளன; மத்திய அரசு இதிலும் பணியாற்றி வருகிறது. துறைமுகங்களைச் சார்ந்த வளர்ச்சிக்கான தேவையான உள்கட்டமைப்பை உருவாக்கவும் இங்கே உதவி வழங்கப்படுகிறது. சற்று நேரத்திற்கு முன்பு, துறைமுகங்கள் மற்றும் நதி நீர்வழிப் பாதைகள் தொடர்பான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் தொடக்க விழா நடைபெற்றது. இவை மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிகவும் முக்கியமானவை. மேற்கு வங்கத்தை உற்பத்தி, வர்த்தகம் மற்றும் தளவாடங்களின் பெரிய மையமாக மாற்றக்கூடிய தூண்கள் இவை. இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

துறைமுகம் மற்றும் அது சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்கு நாம் எவ்வளவு அதிகமாக முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அந்த அளவுக்கு இங்கே அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். கடந்த 11 ஆண்டுகளில், சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தின் திறன் விரிவாக்கத்திற்காக மத்திய அரசால் ஒரு மிகப்பெரிய முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்தின் இணைப்பை மேம்படுத்த, சாகர்மாலா திட்டத்தின் கீழ் சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதன் முடிவை இன்று நாம் அனைவரும் காண முடிகிறது. கடந்த ஆண்டில், கொல்கத்தா துறைமுகம் சரக்கு கையாளுதலில் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.

நண்பர்களே,

பலகரில் அமையவிருக்கும் விரிவாக்கப்பட்ட துறைமுக வாயில் அமைப்பு ஹூக்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும். இது கொல்கத்தா நகரத்தின் போக்குவரத்து மற்றும் தளவாடப் பணிச்சுமையைக் குறைக்கும். கங்கை நதியில் உருவாக்கப்பட்டுள்ள நீர்வழிப்பாதை மூலம் சரக்கு போக்குவரத்து மேலும் அதிகரிக்கும். இந்த ஒட்டுமொத்த உள்கட்டமைப்பும் ஹூக்ளியை ஒரு கிடங்கு மற்றும் வர்த்தக மையமாக மாற்ற உதவும். இதன் மூலம் இங்கு பல நூறு கோடி ரூபாய் புதிய முதலீடுகள் வரும், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், சிறு வணிகர்கள் மற்றும் போக்குவரத்து சார்ந்தவர்கள் பயனடைவார்கள், மேலும் விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கும் புதிய சந்தைகள் கிடைக்கும்.

நண்பர்களே,

இன்று இந்தியாவில் பன்முக போக்குவரத்து இணைப்பு மற்றும் பசுமை வாகன போக்குவரத்து ஆகியவற்றிற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம். தடையற்ற போக்குவரத்து சாத்தியமாகும் வகையில் துறைமுகங்கள், நதி நீர்வழிப்பாதைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் விமான நிலையங்கள் என இவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக, தளவாடச் செலவு மற்றும் போக்குவரத்துக்கான நேரம் ஆகிய இரண்டுமே குறைகின்றன.

நண்பர்களே,

நமது போக்குவரத்து சாதனங்கள் இயற்கைக்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்பதும் நமது முயற்சியாகும். ஹைப்ரிட் மின்சாரப் படகுகள் மூலம், நதிப் போக்குவரத்து மற்றும் பசுமை மொபிலிட்டி ஆகிய இரண்டும் ஊக்கம் பெறும். இது ஹூக்ளி நதியில் பயணத்தை எளிதாக்கும், மாசுப் பிரச்சனை குறையும், மேலும் நதி சார்ந்த சுற்றுலாவும் மேம்படும்.

நண்பர்களே,

இந்தியா இன்று மீன்வளம் மற்றும் கடல் உணவு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் மிக வேகமாக முன்னேறி வருகிறது. இதில் மேற்கு வங்கம் நாட்டிலேயே முன்னிலை வகிக்க வேண்டும் என்பது எனது கனவு. நதி நீர்வழிப்பாதைகள் குறித்த தனது தொலைநோக்குப் பார்வையில், மத்திய அரசு வங்காளத்திற்கு முக்கியத்துவம் அளித்து ஆதரவு அளித்து வருகிறது. இதன் பலன் இங்குள்ள விவசாயிகளுடன் நமது மீனவ நண்பர்களுக்கும் கிடைக்கத் தொடங்கியுள்ளது.

நண்பர்களே,

மத்திய அரசால் தொடங்கப்படும் இந்தத் திட்டங்கள் அனைத்தும் மேற்கு வங்கத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் கொடுக்கும். இந்தத் திட்டங்களுக்காக உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்டை மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள், அங்கும் நான் சொல்ல வேண்டியவை நிறைய உள்ளன, ஒருவேளை மக்கள் அதைக் கேட்க அதிக ஆர்வமாக இருக்கலாம்; நான் அங்கு இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசுவேன், எனவே எனது உரையை இத்துடன் முடித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் அனுமதியுடன் அடுத்த கூட்டத்திற்குப் புறப்படுகிறேன். மிக்க நன்றி

***

AD/VK/PD


(रिलीज़ आईडी: 2257807) आगंतुक पटल : 30
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Bengali-TR , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam