பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு பிரதமர் கூறிய கருத்துகளின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 29 JAN 2026 11:33AM by PIB Chennai

 

வாழ்த்துகள் நண்பர்களே,

நேற்று, மாண்புமிகு குடியரசுத்தலைவரின் உரை 140 கோடி மக்களின் தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவும், 140 கோடி இந்தியர்களின் கூட்டு முயற்சியின் வெளிப்பாடாகவும், 140 கோடி மக்களின் - குறிப்பாக இளைஞர்களின் விருப்பங்களை மிகத் துல்லியமாக வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. அது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பல வழிகாட்டும் எண்ணங்களையும் வழங்கியது. கூட்டத்தொடரின் தொடக்கத்திலும், 2026-ம் ஆண்டின் தொடக்கத்திலும், மாண்புமிகு குடியரசுத் தலைவர் சபையின் முன், எளிமையான வார்த்தைகளில் வெளிப்படுத்திய கருத்துகள், ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அவற்றை முழுமையாக உள்வாங்கிக் கொண்டுள்ளனர் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த கூட்டத்தொடர் மிக முக்கியமான ஒன்றாகும். இது பட்ஜெட் கூட்டத்தொடர்.

21-ம் நூற்றாண்டின் கால் பகுதி ஏற்கெனவே கடந்துவிட்டது. இப்போது நாம் இரண்டாவது காலாண்டைத் தொடங்குகிறோம். 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைய இது ஒரு முக்கியமான காலகட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது இந்த நூற்றாண்டின் இரண்டாவது காலாண்டின் முதல் பட்ஜெட் இது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நாட்டில் அவ்வாறு பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் பெண் நிதியமைச்சர் இவராவார். இது நமது நாடாளுமன்ற வரலாற்றில் பெருமைக்குரிய விஷயமாக பதிவு செய்யப்படும்.

நண்பர்களே,

இந்த ஆண்டு மிகவும் நேர்மறையாக தொடங்கியுள்ளது. தன்னம்பிக்கை கொண்ட இந்தியா இன்று உலகிற்கு நம்பிக்கையின் கதிராக மாறியுள்ளது.  ஈர்ப்பு மையமாகவும் மாறியுள்ளது. இந்த காலாண்டின் தொடக்கத்தில், இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், எதிர்கால வாய்ப்புகளும் இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வளவு நம்பிக்கைக்குரியது என்பதை பிரதிபலிக்கிறது. இது ஒரு லட்சிய இந்தியாவிற்கும், இளைஞர்களுக்கும், தற்சார்பு இந்தியாவிற்கும் தடையற்ற வர்த்தகத்தை வழங்கும். குறிப்பாக இந்தியாவின் உற்பத்தியாளர்கள், தங்கள் திறன்களை மேம்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துவார்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நான் அனைத்து உற்பத்தியாளர்களுக்கும் கூறுகிறேன்: இந்தியாவிற்கும் ஐரோப்பிய யூனியனுக்கும் இடையில் "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" என்று அழைக்கப்படும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கும் போது, ​​நமது தொழிலதிபர்களும் உற்பத்தியாளர்களும் ஒரு பெரிய சந்தை திறக்கப்பட்டுள்ளது என்றும், பொருட்களை இப்போது மலிவாக அனுப்ப முடியும் என்றும் நினைத்து மெத்தனமாக இருக்கக்கூடாது. இது ஒரு வாய்ப்பு. இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதற்கான முதன்மையான தாரக மந்திரம் தரத்தில் கவனம் செலுத்துவதாகும். இப்போது சந்தை திறக்கப்பட்டுள்ளதால், நாம் அதில் மிகச் சிறந்த தரத்துடன் நுழைய வேண்டும். நாம் உயர்தர தரத்துடன் சென்றால், ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளில் உள்ள நுகர்வோரிடமிருந்து வருவாயைப் பெறுவது மட்டுமல்லாமல், அவர்களின் இதயங்களையும் வெல்வோம். அந்த தாக்கம் நீண்ட காலம் நீடிக்கும். நிறுவனத்தின் பிராண்டுகள், நாட்டின் பிராண்டுடன் சேர்ந்து, ஒரு புதிய பெருமை உணர்வை ஏற்படுத்தும்.

எனவே, 27 நாடுகளுடனான இந்த ஒப்பந்தம் நமது மீனவர்கள், நமது விவசாயிகள், நமது இளைஞர்கள், சேவைத் துறையில் உள்ளவர்கள் ஆகியோருக்கு பெரும் வாய்ப்புகளைக் கொண்டுவரும். நம்பிக்கையான, போட்டித்தன்மை வாய்ந்த, உற்பத்தித் திறன் கொண்ட இந்தியாவை நோக்கிய மிக முக்கியமான படி இது என்று நான் முழுமையாக நம்புகிறேன்.

நண்பர்களே,

நாட்டின் கவனம் பட்ஜெட்டில் குவிவது இயல்பானது. ஆனால் இந்த அரசு சீர்திருத்தம், செயல்திறன், மாற்றம் ஆகியவற்றை முக்கியமாக கருதுகிறது. இப்போது நாம் சீர்திருத்தக் கொள்கையில் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். இந்த சீர்திருத்தக் கொள்கையை விரைவுபடுத்த தங்கள் நேர்மறையான ஆற்றலை வழங்கும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து சக உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் காரணமாக சீர்திருத்தம் தொடர்ந்து வேகம் பெறுகிறது.

நாடு இப்போது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, நீண்டகால தீர்வுகளின் பாதையில் உறுதியாக அடியெடுத்து வைக்கிறது. நீண்டகால தீர்வுகள் நடைமுறைக்கு வரும்போது அதன் தன்மை வெளிப்படுகிறது. அது உலகம் முழுவதும் நம்பிக்கையை உருவாக்குகிறது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவிலும், தேசிய முன்னேற்றம் நமது நோக்கமாக இருக்க வேண்டும். ஆனால் நமது அனைத்து முடிவுகளும் மனிதத்தை மையமாகக் கொண்டவை. நமது பங்கும் நமது திட்டங்களும் மனிதத்தை மையமாகக் கொண்டவை. நாம் தொழில்நுட்பத்துடன் போட்டியிடுவோம், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வோம், அதன் திறனை ஏற்றுக்கொள்வோம். ஆனால் அதே நேரத்தில், மனிதத்தை மையமாகக் கொண்ட திறன் அமைப்பு எந்த வகையிலும் குறைய அனுமதிக்க மாட்டோம். உணர்திறன்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, தொழில்நுட்பம், மனித தலையீடு ஆகியவற்றின் இணக்கமான ஒருங்கிணைப்புடன் முன்னேறுவோம்.

நம்மை விமர்சிப்பவர்களுக்கு நம் மீது வெறுப்புகள் இருக்கலாம். இது ஜனநாயகத்தில் இயல்பானது. ஆனால் அனைவரும் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்னவென்றால், இந்த அரசு கடைசி மைல் வரை பலன்கள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் செயல்படுகிறது. திட்டங்கள் கோப்புகளுடன் மட்டுப்படுத்தப்படாமல் மக்களின் வாழ்க்கையை சென்றடைவதை உறுதி செய்வதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தொடர் சீர்திருத்த செயல்முறையில் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் மூலம், இந்த பாரம்பரியம் வரும் நாட்களில் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படும்.

இந்தியாவின் ஜனநாயகமும் இன்றைய இந்தியாவின் மக்கள்தொகை உலகிற்கு ஒரு பெரிய நம்பிக்கையை வழங்குகின்றன. இந்த ஜனநாயகக் கோயிலிலிருந்து, உலக சமூகத்திற்கு ஒரு செய்தியையும் நாம் தெரிவிக்க வேண்டும். அதாவது நமது திறன்கள், ஜனநாயகத்திற்கான நமது அர்ப்பணிப்பு, ஜனநாயக செயல்முறைகள் மூலம் எடுக்கப்படும் முடிவுகள் மீது நாம் கொண்டிருக்கும் மரியாதை ஆகியவையே அந்த செய்தி. உலகம் அதை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.

நாடு முன்னேறிச் செல்லும் இந்த நேரத்தில், இது தடைகளின் சகாப்தம் அல்ல. இது தீர்வுகளின் சகாப்தம். இன்று, முன்னுரிமை என்பது இடையூறு அல்ல. மாறாக தீர்வு. இன்று உட்கார்ந்து தடைகளால் சோர்வடையும் நேரம் அல்ல. இது துணிச்சலான, தீர்வு சார்ந்த முடிவுகளைக் கோரும் ஒரு காலகட்டம். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வந்து, தேசத்திற்கான அத்தியாவசிய தீர்வுகளை விரைவுபடுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

மிக்க நன்றி. உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

***

AD/PLM/PD


(रिलीज़ आईडी: 2257771) आगंतुक पटल : 38
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam