பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புத்தொழில் இந்தியா திட்டத்தின் 10-ம் ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 16 JAN 2026 4:11PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாவான திரு பியூஷ் கோயல் அவர்களே, நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பின் நண்பர்களே, பிற சிறப்பு விருந்தினர்களே, பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!

இன்று நாம் அனைவரும் ஒரு மிகச் சிறப்பான தருணத்தில் இங்கே கூடியிருக்கிறோம். இந்த தேசிய புத்தொழில் தினத்தில், புத்தொழில் நிறுவனர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களின் இந்தச் சங்கமத்தில், ஒரு புதிய மற்றும் வளர்ந்து வரும் இந்தியாவின் எதிர்காலத்தை நான் என் கண்முன்னே காண்கிறேன்.

சற்று முன்புதான், புத்தொழில் உலகைச் சேர்ந்த சிலரைச் சந்திக்கவும், அவர்களின் சாதனைகளையும் சோதனைகளையும் நேரில் காணவும், அவர்களின் உரையாடல்களைக் கேட்கவும் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. விவசாயம், நிதித் தொழில்நுட்பம் போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் பணியாற்றும் புத்தொழில்கள் நிறுவனர்களின் யோசனைகள் எனக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் வியப்பைத் தருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, உங்கள் தன்னம்பிக்கையும் உங்களின் லட்சியங்களுமே என்னைக் கவர்ந்தன.

 

பத்தாண்டுகளுக்கு முன்பு, விஞ்ஞான் பவனில் 500 முதல் 700 இளைஞர்களுடன் இந்தத் திட்டம் தொடங்கியது. இன்று திரு ரித்தேஷ் இங்கே அமர்ந்திருக்கிறார்—அவரது பயணம் அப்போதுதான் தொடங்கியது. அன்று, புத்தொழில் உலகில் காலடி எடுத்து வைத்தவர்களின் அனுபவங்களை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். ஒரு இளம்பெண் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு புத்தொழில் நோக்கிச் சென்றது எனக்கு இப்போதும் நினைவிருக்கிறது. அவர் கொல்கத்தா சென்று தன் தாயைச் சந்தித்து, "நான் வேலையை விட்டுவிட்டேன்" என்று கூறியுள்ளார். அதற்கு அவர் தாய் "ஏன்?" என்று கேட்டிருக்கிறார். அன்று விஞ்ஞான் பவனில் அந்தப் பெண் இதை விவரித்தார். "நான் இப்போது ஒரு புத்தொழில் தொடங்கப் போகிறேன்" என்று அவர் கூறியபோது, அவரது தாய், "இது வீணானது—ஏன் அழிவுப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறாய்?" என்று பதிலளித்துள்ளார்.

அன்று புத்தொழில்கள் குறித்து நம் நாட்டில் நிலவிய மனநிலை இதுதான். ஆனால் இன்று பாருங்கள்—விஞ்ஞான் பவனில் இருந்து பாரத மண்டபம் வரை நாம் எவ்வளவு தூரம் பயணித்து வந்திருக்கிறோம்! இங்கே இடமே இல்லாத அளவிற்கு நாம் வளர்ந்துவிட்டோம். கடந்த ஒரே வாரத்தில், நாட்டின் இளைஞர்களை இரண்டு முறை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்ததை எனது பாக்கியமாகக் கருதுகிறேன். கடந்த 2026 ஜனவரி 12 அன்று, தேசிய இளைஞர் தினத்தில், நாடு முழுவதிலுமிருந்து வந்திருந்த சுமார் 3,000 இளைஞர்களுடன் இரண்டரை மணி நேரம் அமர்ந்து அவர்கள் பேசுவதைக் கேட்டேன். இன்றும், உங்கள் அனைவரின் உரையாடல்களைக் கேட்கவும், எனது நாட்டின் இளைஞர்களின் வலிமையைக் காணவும் எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

நண்பர்களே,

மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தியாவின் இளைஞர்கள் உண்மையானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்துகிறார்கள். புதிய கனவுகளைக் காணத் துணிந்த நமது இளைய கண்டுபிடிப்பாளர்கள் ஒவ்வொருவரையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன்.

நண்பர்களே,

இன்று நாம் புத்தொழில் இந்தியா திட்டத்தின் பத்து ஆண்டு கால மைல்கல்லைக் கொண்டாடுகிறோம். இந்த பத்தாண்டு காலப் பயணம் என்பது ஒரு அரசுத் திட்டத்தின் வெற்றிக் கதை மட்டுமல்ல; இது உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான மக்களின் கனவுகளின் பயணம். இது எண்ணற்ற கற்பனைகள் நிஜமான கதை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையை நினைவுகூர்ந்து பாருங்கள்—தனிநபர் முயற்சிகளுக்கும் புத்தாக்கங்களுக்கும் அங்கு இடமே இல்லை. அந்தச் சூழ்நிலைகளை நாம் சவாலாக ஏற்று, புத்தொழில்  இந்தியா திட்டத்தைத் தொடங்கினோம். நமது இளைஞர்களுக்கு ஒரு திறந்த வெளியை நாம் வழங்கினோம், இன்று அதன் விளைவுகளை நாம் பார்க்கமுடிகிறது.

வெறும் பத்தே ஆண்டுகளில், புத்தொழில் இந்தியா இயக்கம் ஒரு புரட்சியாக மாறியுள்ளது. இன்று இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பாகத் திகழ்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாட்டில் 500-க்கும் குறைவான புத்தொழில்களே இருந்தன; இன்று இந்த எண்ணிக்கை 2,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2014-ல் இந்தியாவில் நான்கு யூனிகார்ன்கள் மட்டுமே இருந்தன; இன்று இந்தியா சுமார் 125 செயல்பாட்டில் உள்ள யூனிகார்ன்களைக் கொண்டுள்ளது. உலகம் இந்த வெற்றிக் கதையை வியப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறது. வரும் காலங்களில், இந்தியாவின் புத்தொழில் பயணம் குறித்துப் பேசப்படும்போது, இந்த அரங்கில் அமர்ந்திருக்கும் பல இளைஞர்கள் தாங்களே ஒரு சிறந்த முன்மாதிரிகளாக விளங்குவார்கள்.

நண்பர்களே,

புத்தொழில் இந்தியாவின் வேகம் தொடர்ந்து அதிகரிப்பதைக் கண்டு நான் மேலும் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய புத்தொழில்கள் யூனிகார்ன்களாக மாறுகின்றன, யூனிகார்ன்கள் தங்களது பொதுப் பங்குகளை வெளியிடுகின்றன, மேலும் ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன. கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும், சுமார் 44,000 புதிய புத்தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. புத்தொழில் இந்தியா தொடங்கப்பட்ட பிறகு ஒரே ஆண்டில் ஏற்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி இதுவாகும். நமது புத்தொழில் சுற்றுச்சூழல் அமைப்பு புத்தாக்கத்தையும் வளர்ச்சியையும் எவ்வாறு உந்தித் தள்ளுகிறது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்களே சாட்சி.

நண்பர்களே,

புத்தொழில் இந்தியா நாட்டில் ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சி கொள்கிறேன். இதற்கு முன்பு, பெரிய தொழிலதிபர்களின் வாரிசுகள் மட்டுமே புதிய தொழில்களைத் தொடங்க முடிந்தது, ஏனெனில் அவர்களுக்கு மட்டுமே நிதி மற்றும் ஆதரவு எளிதாகக் கிடைத்தது. நடுத்தர வர்க்கம் மற்றும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகள் வேலைக்குச் செல்வதைப் பற்றி மட்டுமே கனவு காண முடிந்தது. ஆனால் புத்தொழில் இந்தியா திட்டம் இந்த மனநிலையை மாற்றியுள்ளது. இப்போது, இரண்டாம் நிலை  மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இருந்தும், கிராமங்களில் இருந்தும் கூட இளைஞர்கள் சொந்தமாக புத்தொழில்களைத் தொடங்குகிறார்கள். இந்த இளைஞர்கள் மிகவும் சவாலான அடிப்படைப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் போராடுகிறார்கள். சமுதாயத்திற்காகவும் தேசத்திற்காகவும் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற இந்த உத்வேகம் எனக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.

நண்பர்களே,

இந்த மாற்றத்தில், நாட்டின் புதல்விகள் மிக முக்கியப் பங்காற்றியுள்ளனர். இன்று அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் குறைந்தது ஒரு பெண் இயக்குநரோ அல்லது பங்குதாரரோ உள்ளனர். பெண்கள் தலைமையிலான புத்தொழில் நிதி திரட்டலில், இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது. புத்தொழில்களின் இந்த உள்ளடக்கிய வேகம் இந்தியாவின் திறன்களை மேலும் வலுப்படுத்துகிறது.

நண்பர்களே,

இன்று தேசம் தனது எதிர்காலத்தை புத்தொழில் புரட்சியில் காண்கிறது. புத்தொழில்கள் ஏன் இவ்வளவு முக்கியம் என்று நான் உங்களிடம் கேட்டால், ஒருவேளை நீங்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு பதில்களைக் கூறுவீர்கள். இந்தியா உலகின் இளமையான நாடு, எனவே புத்தொழில்களுக்கான வாய்ப்புகள் அதிகம் என்று சிலர் கூறுவார்கள். இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் முக்கியப் பொருளாதாரமாக இருப்பதால், புத்தொழில்களுக்கு புதிய வாய்ப்புகள் உள்ளன என்று மற்றவர்கள் கூறுவார்கள். இந்தியா உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது, புதிய துறைகள் உருவாகின்றன, எனவே புத்தொழில் அமைப்பு முன்னேறுகிறது என்று சிலர் கூறுவார்கள். இந்த பதில்கள் அனைத்தும், இந்த உண்மைகள் அனைத்தும் சரியானவை. ஆனால் எனது இதயத்தைத் தொடுவது அந்த 'புத்தொழில் உத்வேகம்' தான். எனது நாட்டின் இளைஞர்கள் இன்று தங்களின் வாழ்க்கையை ஒரு பாதுகாப்பான வளையத்திற்குள் கழிக்கத் தயாராக இல்லை. அவர்கள் தேய்ந்து போன பாதையில் நடக்க விரும்புவதில்லை. அவர்கள் தங்களுக்கென புதிய பாதைகளை உருவாக்க விரும்புகிறார்கள், ஏனெனில் அவர்கள் புதிய இலக்குகளையும் புதிய மைல்கற்களையும் தேடுகிறார்கள்.

நண்பர்களே,

புதிய இலக்குகளை எவ்வாறு அடைவது? அதற்காக, நாம் கடின உழைப்பின் உச்சத்தை வெளிப்படுத்த வேண்டும். அதனால்தான் சொல்லப்படுகிறது: 'உத்யமேன ஹி சித்யந்தி, கார்யாணி ந மனோரதை' அதாவது, வெறும் விருப்பத்தினால் மட்டும் செயல்கள் முடிவடைவதில்லை, விடாமுயற்சியால் மட்டுமே அவை நிறைவேறும். முயற்சிக்கு முதல் நிபந்தனை துணிச்சல். இன்று நீங்கள் இருக்கும் நிலையை அடைய, நீங்கள் மிகுந்த துணிச்சலைக் காட்டியிருக்க வேண்டும், பலவற்றை பணயம் வைத்திருப்பீர்கள். முன்னதாக, நாட்டில் பிரச்சனைகளை சந்திப்பது ஊக்குவிக்கப்படவில்லை, ஆனால் இன்று இடர்களை சந்திப்பது என்பது ஒரு முக்கிய நீரோட்டமாக மாறிவிட்டது. மாதச் சம்பளத்தைத் தாண்டிச் சிந்திப்பவர்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்படுவது மட்டுமல்லாமல், மதிக்கப்படுகிறார்கள். ஒரு காலத்தில் ஓரத்தில் ஒதுக்கப்பட்டிருந்த யோசனைகள் இன்று நவீனமானவையாக மாறி வருகின்றன.

நண்பர்களே,

இடர்களை சந்திப்பதற்கு  நான் எப்போதும் தனி முக்கியத்துவம் அளித்து வருகிறேன், ஏனெனில் அது நீண்ட காலமாக எனது பழக்கமாகவும் உள்ளது. யாரும் கையில் எடுக்கத் துணியாத பணிகளை, பல தசாப்தங்களாகத் தேர்தல் தோல்வி அல்லது அதிகாரத்தை இழக்கும் பயத்தில் அரசாங்கங்கள் தவிர்த்து வந்த பணிகளை—எந்தப் பணிகளை மக்கள் "அதிக அரசியல் அபாயம்" என்று அழைத்தார்களோ—அவற்றையெல்லாம் மேற்கொள்வது எனது பொறுப்பு என்று நான் எப்போதும் கருதுகிறேன். உங்களைப் போலவே நானும் நம்புவது என்னவென்றால், தேசத்திற்குத் தேவையான பணியை யாராவது ஒருவர் செய்தே தீர வேண்டும், யாராவது ஒருவர் அந்த இடர்பாடுகளை சந்தித்தே ஆக வேண்டும். அதில் இழப்பு ஏற்பட்டால் அது என்னுடையதாக இருக்கட்டும்; ஆனால் ஆதாயம் கிடைத்தால், என் நாட்டின் கோடிக்கணக்கான குடும்பங்கள் பயன்பெறும்.

நண்பர்களே,

கடந்த பத்து ஆண்டுகளில், புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு வலுவான சூழலை நாடு உருவாக்கியுள்ளது. குழந்தைகளிடம் சிறு வயது முதலே புத்தாக்க சிந்தனையை வளர்க்கும் நோக்கில் பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்கங்களை நிறுவினோம். தேசத்தின் பல்வேறு சவால்களுக்கு நமது இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான தீர்வுகளை வழங்க வேண்டும் என்பதற்காகப் பல ஹேக்கத்தான்களை நடத்தினோம். போதிய வளங்கள் இல்லாத காரணத்தால் சிறந்த யோசனைகள் முடங்கிவிடக் கூடாது என்பதற்காகப் பல இன்குபேஷன் மையங்களை உருவாக்கினோம்.

நண்பர்களே,

ஒரு காலத்தில், சிக்கலான விதிமுறைகள், நீண்ட கால அனுமதி நடைமுறைகள் மற்றும் 'இன்ஸ்பெக்டர் ராஜ்' மீதான அச்சம் ஆகியவை புத்தாக்கத்திற்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகளாக இருந்தன. அதனால்தான் நாம் நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட ஒரு சூழலை உருவாக்கினோம். 'ஜன் விஸ்வாஸ்' சட்டத்தின் கீழ், 180-க்கும் மேற்பட்ட விதிமுறைகள் குற்றமற்றவைகளாக மாற்றப்பட்டுள்ளன. நீங்கள் சட்டப் போராட்டங்களில் நேரத்தை வீணடிக்காமல், முழுமையாகப் புத்தாக்கத்தில் கவனம் செலுத்துவதற்காக உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தினோம். குறிப்பாக ஸ்டார்ட்அப்களுக்காக, பல சட்டங்களில் 'சுய சான்றிதழ்' முறையை அறிமுகப்படுத்தியதோடு, நிறுவனங்களை இணைக்கும் மற்றும் வெளியேறும் நடைமுறைகளையும் எளிதாக்கினோம்.

நண்பர்களே,

புத்தொழில் இந்தியா என்பது வெறும் ஒரு திட்டம் மட்டுமல்ல, அது ஒரு 'வண்ணமயமான தொலைநோக்கு' இது பல்வேறு துறைகளை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் ஒரு பாலமாகும். பாதுகாப்புத் துறை உற்பத்தியைப் பாருங்கள்—முன்பு, ஏற்கனவே நிலைநிறுத்தப்பட்ட பெரிய நிறுவனங்களுடன் தங்களால் போட்டியிட முடியும் என்று ஸ்டார்ட்அப்கள் கற்பனை கூட செய்ய முடியாத நிலை இருந்தது. ஆனால் iDEX மூலம், முக்கியத்துவம் வாய்ந்த பாதுகாப்புத் துறைகளில் புத்தொழில்களுக்கான கொள்முதல் வழிகளைத் திறந்தோம். இதற்கு முன்பு தனியார் பங்களிப்புக்கு முற்றிலும் முடக்கப்பட்டிருந்த விண்வெளித் துறை இப்போது தாராளமாகத் திறக்கப்பட்டுள்ளது. இன்று விண்வெளித் துறையில் சுமார் 200 புத்தொழில்கள் பணியாற்றி வருகின்றன, அவை உலகளாவிய அங்கீகாரத்தையும் பெற்று வருகின்றன. அதேபோல், ட்ரோன் துறையைப் பாருங்கள்—சரியான விதிமுறைகள் இல்லாததால் இந்தியா பல ஆண்டுகளாகப் பின்தங்கியிருந்தது. நாங்கள் அந்தப் பழைய விதிகளை நீக்கி, கண்டுபிடிப்பாளர்கள் மீது முழு நம்பிக்கை வைத்தோம்.

நண்பர்களே,

அரசு கொள்முதலில், 'ஜெம்' (GeM - Government e-Marketplace) தளம் மூலம் சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்தியுள்ளோம். இன்று சுமார் 35,000 புத்தொழில்கள் மற்றும் சிறு நிறுவனங்கள் 'ஜெம்' தளத்தில் இணைந்துள்ளன. அவை சுமார் 50,000 கோடி ரூபாய் மதிப்பிலான 5,00,000 ஆர்டர்களைப் பெற்றுள்ளன. ஒரு வகையில், புத்தொழில்கள் தங்களின் வெற்றியின் மூலம் ஒவ்வொரு துறைக்கும் வளர்ச்சியின் புதிய பாதைகளைத் திறந்து விடுகின்றன.

நண்பர்களே,

மூலதனம் இல்லாமல் சிறந்த யோசனைகள் கூட சந்தையைச் சென்றடைய முடியாது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் கண்டுபிடிப்பாளர்களுக்குத் தேவையான நிதி கிடைப்பதை உறுதி செய்வதில் தீவிர கவனம் செலுத்தினோம். புத்தொழில்களுக்கான நிதியுதவி மூலம் 25,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. 'தொழில் முனைவோருக்கான தொடக்க முதலீடு திட்டம், 'IN-SPACe சீட் ஃபண்ட்' மற்றும் 'NIDHI சீட் ஆதரவு' போன்ற திட்டங்கள் ஸ்டார்ட்அப்களுக்கு ஆரம்பக்கட்ட நிதியை வழங்குகின்றன. கடன் வசதியை மேம்படுத்த, 'கடன் உத்தரவாதத் திட்டத்தையும்' நாங்கள் தொடங்கினோம், இதன் மூலம் பிணையம் இல்லாமை என்பது படைப்பாற்றலின் பாதையில் ஒரு தடையாக இருக்காது.

நண்பர்களே,

இன்றைய ஆராய்ச்சி என்பது நாளைய அறிவுசார் சொத்தாக மாறுகிறது. இதனை ஊக்குவிப்பதற்காக, 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 'ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்கத் திட்டத்தை' நாம் தொடங்கியுள்ளோம். எதிர்காலத்தில் எழுச்சி பெறப்போகும் துறைகளில் நீண்டகால முதலீட்டை ஆதரிப்பதற்காக, 'டீப் டெக் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்' (Deep Tech Fund of Funds) என்ற நிதியையும் உருவாக்கியுள்ளோம்.

நண்பர்களே,

இப்போது நாம் எதிர்காலத்திற்காக நம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் புதிய யோசனைகளில் பணியாற்ற வேண்டும். இன்று உருவாகி வரும் பல துறைகள், நாளை நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் உத்திசார் தன்னாட்சியில் முக்கியப் பங்கு வகிக்கப் போகின்றன. இதற்கு செயற்கை நுண்ணறிவு  ஒரு தெளிவான உதாரணம். இந்த ஏஐ புரட்சியில் எந்த நாடு முன்னிலை வகிக்கிறதோ, அந்த நாடு மிகப்பெரிய நன்மையைப் பெறும். இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தப் பணியை நமது புத்தொழில்கள்தான் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். உங்களுக்குத் தெரியும், வரும் பிப்ரவரி மாதம், உலகளாவிய ஏஐ மாநாடான 'ஏஐ தாக்கம் உச்சிமாநாடு ' இங்கே நடைபெறவுள்ளது. இது உங்கள் அனைவருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பு. இத்துறையில் கணினிச் செலவுகள் அதிகமாக இருப்பது போன்ற சவால்களை நான் அறிவேன். 'இந்தியா ஏஐ இயக்கம்' மூலம் நாங்கள் இதற்குத் தீர்வுகளை வழங்கி வருகிறோம். இதற்காக 38,000-க்கும் மேற்பட்ட ஜிபியு-க்களை இணைத்துள்ளோம். பெரிய அளவிலான தொழில்நுட்பங்கள் சிறிய புத்தொழில்களுக்கும் எளிதாகக் கிடைப்பதே எங்களது முயற்சி. இந்தியத் திறமைகளைக் கொண்டு, இந்தியத் தரவு மையங்கள் மூலம் உள்நாட்டு ஏஐ உருவாக்கப்படுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். செமிகண்டக்டர்கள், தரவு மையங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் பல துறைகளிலும் இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

நாம் முன்னேறிச் செல்லும்போது, நமது லட்சியம் வெறும் பங்களிப்போடு மட்டும் நின்றுவிடக் கூடாது. நாம் உலகளாவியத் தலைமையை  இலக்காகக் கொள்ள வேண்டும். புதிய யோசனைகளில் பணியாற்றுங்கள், சிக்கல்களுக்குத் தீர்வு காணுங்கள். கடந்த காலங்களில், டிஜிட்டல் புத்தொழில்கள் மற்றும் சேவைத் துறையில் நாம் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளோம். இப்போது நமது ஸ்டார்ட்அப்கள் உற்பத்தித் துறையில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் புதிய தயாரிப்புகளை உருவாக்க வேண்டும். உலகில் மிகச்சிறந்த தரம் வாய்ந்த தயாரிப்புகளை நாம் உற்பத்தி செய்ய வேண்டும். தனித்துவமான யோசனைகள் மூலம் தொழில்நுட்பத்தில் நாம் முன்னிலை வகிக்க வேண்டும். எதிர்காலம் இதற்கே சொந்தமானது. உங்கள் ஒவ்வொரு முயற்சிக்கும் அரசாங்கம் உறுதுணையாக நிற்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். உங்கள் திறமை மீது எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. உங்களின் துணிச்சல், தன்னம்பிக்கை மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றால் இந்தியாவின் எதிர்காலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகள் நாட்டின் ஆற்றலை நிரூபித்துள்ளன. வரும் பத்து ஆண்டுகளில், புதிய ஸ்டார்ட்அப் போக்குகள் மற்றும் தொழில்நுட்பங்களில் இந்தியா உலகையே வழிநடத்த வேண்டும் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும்.

மீண்டுமொருமுறை, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

***

AD/VK/PD


(வெளியீட்டு அடையாள எண்: 2256895) வருகையாளர் எண்ணிக்கை : 8