பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
மேற்கு ஆசியாவில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டம்
உர இருப்பு வலுவாக உள்ளது - விநியோகம் தேவையை விட அதிகமாகவே இருக்கிறது
2026 ஏப்ரல் 1 முதல் சுமார் 19.5 லட்சம் 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள், கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு விமான சேவைகளை விரைவில் மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன
இடுகை இடப்பட்ட நாள்:
27 APR 2026 6:12PM by PIB Chennai
மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு தொடர்ச்சியான தகவல்கள் மூலம் குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இது தொடர்பாக, இன்று புதிதில்லி தேசிய ஊடக மையத்தில் ஒரு ஊடக சந்திப்பு நடைபெற்றது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள், மற்றும் வெளியுறவு அமைச்சகங்களின் அதிகாரிகள் பங்கேற்று, எரிபொருள் இருப்பு, கடல்சார் செயல்பாடுகள், அப்பகுதியில் உள்ள இந்தியக் குடிமக்களுக்கு வழங்கப்படும் உதவிகள், மற்றும் முக்கியத் துறைகளில் நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர்.
நாட்டில் உரங்களின் ஒட்டுமொத்த கையிருப்பு நிலை இன்று வரை 190.21 லட்சம் மெட்ரிக் டன்னாக, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த 169.24 லட்சம் மெட்ரிக் டன்னைவிட அதிகமாக உள்ளது. மாநிலங்களில் விநியோக நிலை தொடர்ந்து வலுவாக உள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல் 26 வரையிலான காலகட்டத்திற்கு, தேவையை விட இருப்பு கணிசமாக உள்ளது. உலகளாவிய உர விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள போதிலும், ஒரு மூட்டை யூரியாவின் சர்வதேச விலை ₹4,000-ஐத் தாண்டியுள்ள நிலையில், அரசு 45 கிலோ மூட்டை யூரியாவை விவசாயிகளுக்கு ₹266.5 என்ற அதிக மானிய விலையில் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்தியாவின் உரப் பாதுகாப்பு வலுவாகவும், நிலையானதாகவும் இருப்பதுடன், சிறப்பாக நிர்வகிக்கப்பட்டு, அனைத்து முக்கிய உரங்களின் இருப்பும் தொடர்ந்து தேவையை விட அதிகமாகவே இருக்கிறது.
எரிவாயுவைப் பொறுத்தவரை, வீட்டு உபயோக எல்பிஜி, வீட்டு உபயோக பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி (போக்குவரத்து) ஆகியவை 100% விநியோகம் செய்யப்படுவதை அரசு உறுதி செய்துள்ளது. வணிக எல்பிஜியைப் பொறுத்தவரை, மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மருந்து, எஃகு, வாகனம், விதை, விவசாயம் போன்ற துறைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2026 மார்ச் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் உள்ள சராசரி தினசரி விநியோகத்தின் அடிப்படையில், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான 5 கிலோ எஃப்டிஎல் விநியோகமும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல் 1 முதல், சுமார் 19.5 லட்சம் 5 கிலோ எஃப்டிஎல் சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. எல்பிஜி பதுக்கல் மற்றும் கள்ளச்சந்தையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் அமலாக்க நடவடிக்கைகள் தொடர்கின்றன. நாடு முழுவதும் நேற்று1800-க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன.
2026 ஏப்ரல் மாதத்தில் (26.04.26 வரை), மொத்தம் 1,65,627 மெட்ரிக் டன் (87.17 லட்சத்திற்கும் அதிகமான 19 கிலோ எல்பிஜி சிலிண்டர்களுக்குச் சமம்) வர்த்தக எல்பிஜி விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் சராசரி வாகன எல்பிஜி விற்பனை, 2026 ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் இருந்த சராசரியான ஒரு நாளைக்கு சுமார் 177 மெட்ரிக் டன்னுடன் ஒப்பிடும்போது, ஒரு நாளைக்கு சுமார் 346 மெட்ரிக் டன்னாக உள்ளது. இது பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் வாகன எல்பிஜி விற்பனையில் சுமார் 95% அதிகரிப்பைக் காட்டுகிறது.
2026 ஏப்ரல் 25 அன்று, டோகோ நாட்டுக் கொடி தாங்கிய எம்டி சிரோன் 7 (ஐஎம்ஓ எண். 9127291) என்ற எண்ணெய்/ரசாயனக் கப்பல் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அக்கப்பலில் 17 இந்திய மாலுமிகள் (மொத்தம் 24 பணியாளர்கள்) இருந்தனர். இந்தச் சம்பவம் ஓமனின் ஷினாஸ் வெளித் துறைமுக எல்லையில் நிகழ்ந்தது. ஈரானிய கடலோரக் காவல்படையால் இடைமறிக்கப்பட்ட கப்பல்களுக்கு அருகில் அக்கப்பல் சென்றுகொண்டிருந்தபோது, எச்சரிக்கைக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. எனினும் கப்பலில் இருந்த 17 இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக உள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில், செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே குறைந்த அளவிலான வணிக விமானங்களை விமான நிறுவனங்கள் தொடர்ந்து இயக்கி வருகின்றன. இன்று ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இந்தியாவிற்கும் இடையே சுமார் 105 விமானங்கள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சவுதி அரேபியா மற்றும் ஓமனில் உள்ள பல்வேறு விமான நிலையங்களிலிருந்து இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படுகின்றன. கத்தார் வான்வெளி, பகுதியளவு திறக்கப்பட்டுள்ளதால், கத்தார் ஏர்வேஸ் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்களும் விரைவில் கத்தாரிலிருந்து இந்தியாவிற்கு விமானச் சேவைகளை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டுள்ளன.
ஈராக் வான்வெளி திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இடங்களுக்கு வரையறுக்கப்பட்ட விமானச் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவற்றை இந்தியாவிற்குப் பயன்படுத்தலாம். ஈரான் வான்வெளி, சரக்கு மற்றும் வாடகை விமானங்களுக்காகப் பகுதியளவு திறக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தியக் குடிமக்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏற்கனவே அங்கு இருப்பவர்கள், இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதுவரை, 2,461 இந்தியக் குடிமக்கள் தரைவழியாக ஈரானிலிருந்து வெளியேறுவதற்கு தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம், வழிவகுத்துள்ளது. இஸ்ரேல் வான்வெளியும் திறக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள இடங்களுக்கு வரையறுக்கப்பட்ட விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றை இந்தியாவிற்குப் பயன்படுத்தலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2256010®=3&lang=1
(Release ID: 2256010)
****
TV/BR/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2256090)
வருகையாளர் எண்ணிக்கை : 12