பிரதமர் அலுவலகம்
புது தில்லியில் நடைபெற்ற, பகவான் புத்தரின் புனித பிப்ரவா நினைவுச் சின்னங்களின் சர்வதேசக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்:
இடுகை இடப்பட்ட நாள்:
03 JAN 2026 2:59PM by PIB Chennai
நமோ புத்தாய.
மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களே, கிரண் ரிஜிஜு அவர்களே, ராம்தாஸ் அத்வாலே அவர்களே, ராவ் இந்தர்ஜித் அவர்களே, தில்லியின் துணைநிலை ஆளுநர் சக்சேனா அவர்களே, வெளிநாட்டுத் தூதர்களே, மதிப்பிற்குரிய பௌத்த அறிஞர்களே, தம்மத்தைப் பின்பற்றுபவர்களே, பெரியோர்களே, தாய்மார்களே!
125 ஆண்டுகால காத்திருப்புக்குப் பிறகு, இந்தியாவின் பாரம்பரியம் மீண்டும் திரும்பியுள்ளது. இந்தியாவின் பெருமை இன்று மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல், இந்திய மக்கள் பகவான் புத்தரின் இந்தப் புனிதமான நினைவுச் சின்னங்களைக் கண்டு தரிசிக்கவும், அவரது ஆசிகளைப் பெறவும் முடியும்.
இந்த மங்கலகரமான வேளையில், இங்கு வருகை தந்துள்ள விருந்தினர்கள் அனைவரையும் நான் மனதார வரவேற்கிறேன். பௌத்த மரபுடன் தொடர்புடைய துறவிகளும், தம்; ஆசிரியர்களும் நமக்கு ஆசி வழங்க இங்கு வந்துள்ளனர். உங்கள் அனைவருக்கும் நான் தலைவணங்குகிறேன். உங்கள் வருகை இந்த நிகழ்விற்குப் புதிய உயரத்தையும் ஆற்றலையும் அளித்துள்ளது.
2026-ம் ஆண்டின் தொடக்கத்திலேயே இத்தகைய ஒரு புனிதமான கொண்டாட்டம் அமைந்திருப்பது உண்மையிலேயே எழுச்சியூட்டுகிறது. 2026-ம் ஆண்டின் எனது முதல் பொது நிகழ்ச்சி பகவான் புத்தரின் திருவடிகளில் தொடங்குவது எனது பாக்கியமாகும். பகவான் புத்தரின் ஆசியுடன், இந்த 2026-ஆம் ஆண்டு உலகிற்கு அமைதி, செழிப்பு மற்றும் நல்லிணக்கத்தின் புதிய யுகத்தைக் கொண்டுவர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
நண்பர்களே,
இந்தக் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ள இடம் மிகவும் சிறப்பானது. கிலா ராய் பித்தோரா தளம் இந்தியாவின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்ட ஒரு நிலமாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அன்றைய ஆட்சியாளர்கள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையைச் சுற்றி வலுவான மற்றும் பாதுகாப்பான சுவர்களுடன் கூடிய ஒரு நகரத்தை நிறுவினர். இன்று, அதே வரலாற்றுச் சிறப்புமிக்க நகர வளாகத்தில், நமது வரலாற்றில் ஒரு ஆன்மீக மற்றும் புனிதமான அத்தியாயத்தை நாம் இணைத்துக் கொண்டிருக்கிறோம்.
நண்பர்களே,
இங்கே வருவதற்கு முன்பாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை நான் விரிவாகப் பார்வையிட்டேன். பகவான் புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் நம்மிடையே இருப்பது நம் அனைவரையும் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாக உணரச் செய்கிறது. அவை இந்தியாவிலிருந்து வெளியேறியதும், இறுதியில் மீண்டும் திரும்பியதும் ஒரு முக்கியமான பாடமாகும். அடிமைத்தனம் என்பது வெறும் அரசியல் மற்றும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல, அது நமது பாரம்பரியத்தையும் அழிக்கிறது என்பதே அந்தப் பாடம். பகவான் புத்தரின் புனித நினைவுச் சின்னங்களுக்கும் இதுதான் நேர்ந்தது. அடிமைத்தனத்தின் போது, அவை இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டு, கிட்டத்தட்ட நூற்று இருபத்தைந்து ஆண்டுகள் நாட்டிற்கு வெளியே இருந்தன. அவற்றை எடுத்துச் சென்றவர்களுக்கும், அவர்களின் வம்சாவளியினருக்கும், இந்த நினைவுச் சின்னங்கள் வெறும் உயிரற்ற பழங்காலப் பொருட்கள் மட்டுமே. அதனால்தான், அவர்கள் இந்தப் புனித நினைவுச் சின்னங்களைச் சர்வதேச சந்தையில் ஏலம் விட முயன்றனர். ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை, இந்த நினைவுச் சின்னங்கள் நாம் போற்றும் தெய்வத்தின் ஒரு பகுதி, நமது நாகரிகத்தின் பிரிக்க முடியாத ஒரு அம்சம். எனவே, அவற்றை பொது ஏலத்திற்கு விடக்கூடாது என்று இந்தியா முடிவு செய்தது. பகவான் புத்தருடன் தொடர்புடைய இந்தப் புனித நினைவுச் சின்னங்கள், அவர் தவம் செய்த நிலத்திற்கும், மகாபோதி மற்றும் மகாபரிநிர்வாண நிலத்திற்கும் திரும்புவதை உறுதி செய்ய ஒத்துழைத்த கோத்ரெஜ் குழுமத்திற்கு நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
பகவான் புத்தரின் ஞானமும் அவர் காட்டிய பாதையும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் சொந்தமானது; அவை காலத்தால் மாற்ற முடியாதவை, காலங்களைக் கடந்தவை. கடந்த சில மாதங்களில் இந்த உணர்வை நாம் மீண்டும் மீண்டும் அனுபவித்தோம். அண்மைக் காலங்களில் பகவான் புத்தரின் புனித நினைவுச் சின்னங்கள் எங்கு சென்றாலும், அங்கு பக்தி அலைகள் எழுந்தன. தாய்லாந்தில், ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த நினைவுச் சின்னங்களைத் தரிசிக்க 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வந்தனர். வியட்நாமில், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கண்காட்சியின் காலத்தை நீட்டிக்க வேண்டியிருந்தது; அங்கு ஒன்பது நகரங்களில் கிட்டத்தட்ட 1 கோடியே 90 லட்சம் மக்கள் இந்த நினைவுச் சின்னங்களுக்குத் தங்கள் மரியாதையைச் செலுத்தினர்.
மங்கோலியாவில், காந்தன் மடாலயத்தின் வெளியே ஆயிரக்கணக்கான மக்கள் பல மணிநேரம் காத்திருந்தனர். புத்தர் பிறந்த நிலத்திலிருந்து வந்தவர்கள் என்பதால் மட்டுமே, இந்தியப் பிரதிநிதிகளைத் தொட்டு வணங்கப் பலர் விரும்பினர். ரஷ்யாவின் கல்மீக்கியா பகுதியில், ஒரே வாரத்தில் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் இந்தத் தரிசனத்தைப் பெற்றனர், இது அந்தப் பகுதியின் மொத்த மக்கள் தொகையில் பாதியாகும். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், சாதாரண குடிமக்கள் முதல் அரசாங்கத் தலைவர்கள் வரை அனைவரும் சமமான மரியாதையுடன் ஒன்றுபட்டனர். பகவான் புத்தர் அனைவருக்கும் சொந்தமானவர். பகவான் புத்தர் அனைவரையும் இணைக்கிறார்.
பகவான் புத்தர் எனது வாழ்க்கையில் மிக ஆழமான இடத்தைப் பிடித்துள்ளதால், நான் என்னை மிகவும் பாக்கியசாலியாகக் கருதுகிறேன். எனது பிறந்த ஊரான வட்நகர், பௌத்தக் கல்வியின் ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந்தது. பகவான் புத்தர் தனது முதல் போதனையை வழங்கிய சாரநாத், இன்று எனது கர்ம பூமியாக இருக்கிறது. நான் அரசுப் பொறுப்புகளில் இல்லாத காலத்தில்கூட, பௌத்தத் தலங்களுக்கு ஒரு யாத்ரீகராகப் பயணம் செய்திருக்கிறேன்.
பாரதப் பிரதமராக, உலகம் முழுவதிலும் உள்ள பௌத்த யாத்திரை மையங்களுக்குச் செல்லும் பெரும் பேறு எனக்குக் கிடைத்தது. நேபாளத்தின் லும்பினியில் உள்ள புனித மாயா தேவி கோவிலில் தலைவணங்கியது ஒரு தனித்துவமான அனுபவமாகும். ஜப்பானின் டோ-ஜி மற்றும் கின்காகு-ஜி கோவில்களுக்குச் சென்றபோது, புத்தரின் செய்தி காலங்களைக் கடந்து நிற்பதை என்னால் உணர முடிந்தது. சீனாவின் ஷியான் நகரில் உள்ள 'பிக் வைல்ட் கூஸ் பகோடா'விற்குச் சென்றேன்; அங்கிருந்துதான் பௌத்த புனித நூல்கள் ஆசியா முழுவதும் பரவின, இன்றும் அங்கு இந்தியாவின் பங்கு போற்றப்படுகிறது. மங்கோலியாவின் காந்தன் மடாலயத்தில், புத்தரின் பாரம்பரியத்தோடு மக்களுக்கு இருக்கும் உணர்வுபூர்வமான பிணைப்பை நேரில் கண்டேன். இலங்கையின் அனுராதபுரத்தில் உள்ள 'ஜெய ஸ்ரீ மகாபோதி'யைத் தரிசித்தது, பேரரசர் அசோகர், பிக்கு மகிந்தர் மற்றும் சங்கமித்திரை ஆகியோரால் தொடங்கப்பட்ட அந்தப் பெரும் பாரம்பரியத்துடன் இணைந்த ஒரு உணர்வைத் தந்தது. தாய்லாந்தின் வாட் போ மற்றும் சிங்கப்பூரின் புத்தர் பல் நினைவுச் சின்னக் கோவில் ஆகியவற்றிற்கு நான் மேற்கொண்ட பயணங்கள், பகவான் புத்தரின் போதனைகள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றிய எனது புரிதலை மேலும் ஆழப்படுத்தின.
நண்பர்களே, நான் எங்கு பயணம் செய்தாலும், பகவான் புத்தரின் பாரம்பரியத்தின் அடையாளத்தை அந்த நாட்டு மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சி செய்தேன். அதனால்தான் சீனா, ஜப்பான், கொரியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளுக்குச் சென்றபோது, போதிமரக் கன்றுகளை நான் பரிசாகக் கொண்டு சென்றேன். அணு குண்டால் சிதைக்கப்பட்ட ஹிரோஷிமா நகரத்தின் தாவரவியல் பூங்காவில் ஒரு போதி மரம் வளரும்போது, அது மனிதகுலத்திற்கு எவ்வளவு ஆழமான அமைதிச் செய்தியை வழங்கும் என்பதை நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
பகவான் புத்தரின் இந்தப் பகிர்ந்துகொள்ளப்படும் பாரம்பரியமானது, இந்தியா என்பது வெறும் அரசியல், ராஜதந்திரம் மற்றும் பொருளாதாரத்தால் மட்டும் பிணைக்கப்பட்ட நாடு அல்ல, மாறாக இவை அனைத்தையும் விட ஆழமான உணர்வுகளின் பிணைப்புகளைக் கொண்டது என்பதற்குச் சான்றாகும். நாம் மனதாலும் உணர்வுகளாலும், நம்பிக்கையாலும் ஆன்மீகத்தாலும் ஒன்றிணைக்கப்பட்டுள்ளோம்.
நண்பர்களே,
இந்தியா பகவான் புத்தரின் புனித நினைவுச் சின்னங்களின் பாதுகாவலர் மட்டுமல்ல, அவரது பாரம்பரியத்தின் உயிருள்ள வாகனமாகவும் திகழ்கிறது. பிப்ரவா, வைசாலி, தேவனி மோரி மற்றும் நாகார்ஜுனகொண்டா ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட புத்தரின் நினைவுச் சின்னங்கள், புத்தரின் செய்தியின் உயிருள்ள சாட்சிகளாக விளங்குகின்றன. இந்தியா இந்த நினைவுச் சின்னங்களை அறிவியல் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டின் வழியாகவும் சிதையாமல் பாதுகாத்து வருகிறது.
நண்பர்களே,
உலகம் முழுவதும் உள்ள பௌத்தப் பாரம்பரியத் தலங்களின் மேம்பாட்டிற்குப் பங்களிக்க இந்தியா தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பழமையான ஸ்தூபிகள் சேதமடைந்தபோது, அவற்றைப் புனரமைக்க இந்தியா தனது ஆதரவை வழங்கியது. மியான்மரின் பகான் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு, அங்குள்ள பதினொன்றுக்கும் மேற்பட்ட பகோடாக்களைப் பாதுகாக்கும் பணியை இந்தியா மேற்கொண்டது. இதுபோன்ற பல உதாரணங்களைச் சொல்ல முடியும். இந்தியாவிற்குள்ளும் பௌத்த மரபுடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் நினைவுச் சின்னங்களைக் கண்டறிந்து பாதுகாக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நான் முன்பே குறிப்பிட்டது போல, குஜராத்தில் உள்ள எனது பிறந்த ஊரான வட்நகர், பௌத்த பாரம்பரியத்தின் முக்கிய மையமாக இருந்தது. நான் முதலமைச்சராக இருந்த காலத்தில், அங்கு பௌத்த மதத்துடன் தொடர்புடைய ஆயிரக்கணக்கான நினைவுச் சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டன. இன்று, நமது அரசு அவற்றைப் பாதுகாப்பதிலும், தற்போதைய தலைமுறையினரை அவற்றோடு இணைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறது. சுமார் 2500 ஆண்டு கால வரலாற்றை அனுபவிக்கும் வகையில் அங்கே ஒரு பிரம்மாண்டமான அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்புதான், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் புத்தர் காலத்தைச் சேர்ந்த ஒரு முக்கிய தளம் கண்டறியப்பட்டது; அதன் பாதுகாப்புப் பணிகள் இப்போது வேகப்படுத்தப்பட்டுள்ளன.
நண்பர்களே,
கடந்த பத்து முதல் பதினோரு ஆண்டுகளில், பௌத்தத் தலங்களை நவீனத்துவத்துடன் இணைக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. புத்த கயாவில் ஒரு மாநாட்டு மையம் மற்றும் தியானம் மற்றும் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளன. சாரநாத்தில் உள்ள தமேக் ஸ்தூபியில் ஒளி-ஒலி காட்சி மற்றும் புத்தர் கருப்பொருள் பூங்கா உருவாக்கப்பட்டுள்ளன. சிராவஸ்தி, கபிலவஸ்து மற்றும் குஷிநகர் ஆகிய இடங்களில் நவீன வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தெலுங்கானாவின் நல்கொண்டாவில் டிஜிட்டல் அனுபவ மையம் அமைக்கப்பட்டுள்ளது. சாஞ்சி, நாகார்ஜுன சாகர் மற்றும் அமராவதி ஆகிய இடங்களில் யாத்ரீகர்களுக்காகப் புதிய வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று, இந்தியாவில் உள்ள அனைத்து பௌத்த யாத்திரை தலங்களுக்கும் இடையே சிறந்த இணைப்பை உறுதி செய்வதற்காக ஒரு 'பௌத்தச் சுற்றுலாத்திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்களுக்கும் யாத்ரீகர்களுக்கும் நம்பிக்கை மற்றும் ஆன்மீகத்தின் ஆழமான அனுபவத்தை வழங்க முடியும்.
நண்பர்களே,
பௌத்தப் பாரம்பரியம் எதிர்காலத் தலைமுறையினரை இயல்பான முறையில் சென்றடைவதை உறுதி செய்வதே எங்களது முயற்சியாகும். உலகளாவிய பௌத்த உச்சிமாநாடு மற்றும் வைகாசி, ஆடி பௌர்ணமி போன்ற சர்வதேச நிகழ்வுகள் இந்தச் சிந்தனையால் தூண்டப்பட்டவைதான். பகவான் புத்தரின் அபிதம்மா, அவரது வார்த்தைகள் மற்றும் போதனைகள் அனைத்தும் முதலில் பாலி மொழியில் இருந்தன என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. பாலி மொழியைச் சாமானிய மக்களும் அணுகக்கூடியதாக மாற்ற நாங்கள் பாடுபட்டு வருகிறோம். இதற்காகவே, பாலி மொழிக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இது தம்மத்தின் அசல் சாராம்சத்தைப் புரிந்து கொள்வதையும் விளக்குவதையும் எளிதாக்கும், மேலும் பௌத்த பாரம்பரியம் தொடர்பான ஆய்வுகளையும் வலுப்படுத்தும்.
நண்பர்களே,
பகவான் புத்தரின் வாழ்க்கைத் தத்துவமானது எல்லைகளையும் நிலப்பரப்புகளையும் கடந்து உலகிற்கு ஒரு புதிய பாதையைக் காட்டியது. "பவது ஸப்ப மங்கலம், ரக்கந்து ஸப்ப தேவதா, ஸப்ப புத்தானுபாவேன ஸதா ஸுத்தி பவந்து தே" - அதாவது ஒட்டுமொத்த உலகின் நலனுக்காகவும் வேண்டப்படும் பிரார்த்தனை இது. பகவான் புத்தர் மனிதகுலத்தை தீவிரவாதத்திலிருந்து காப்பாற்ற முயன்றார், மேலும் அவர் தனது சீடர்களிடம், "அத்த தீப்போ பவ பி்க்கவே! பரீக்ஷ்ய பிக்ஷவோ கிராஹ்யம், மத்வச்சோ ந து கௌரவாத்" என்று கூறினார். இதன் பொருள், "துறவிகளே, உங்களுக்கு நீங்களே ஒளியாக இருங்கள். என் வார்த்தைகளைக் கூட, என் மீதுள்ள மரியாதையினால் மட்டுமே ஏற்றுக்கொண்டுவிடாதீர்கள், அவற்றை ஆராய்ந்து பார்த்த பின்னரே ஏற்றுக்கொள்ளுங்கள்" என்பதாகும்.
நண்பர்களே,
புத்தரின் இந்தச் செய்தி எல்லா காலத்திற்கும் எல்லா யுகத்திற்கும் பொருத்தமானது. நமக்கு நாமே ஒளியாக மாறுவதுதான் சுயமரியாதையின் அடிப்படை மற்றும் தற்சார்பின் சாரமாகும் - "அத்த தீப்போ பவ".
நண்பர்களே,
மோதல்கள் மற்றும் ஆதிக்கத்திற்குப் பதிலாக, அனைவரும் இணைந்து நடக்கும் பாதையை பகவான் புத்தர் உலகிற்குக் காட்டினார்; இதுவே எப்போதும் இந்தியாவின் மையத் தத்துவமாகவும் இருந்து வருகிறது. கருத்துக்களின் வலிமை மற்றும் உணர்வுகளின் ஆழம் மூலம், எப்போதும் மனிதகுலத்தின் நலனுக்காக உலகளாவிய நல்வாழ்வுப் பாதையை நாம் பின்பற்றி வருகிறோம். இதே அணுகுமுறையுடன்தான், 21-ம் நூற்றாண்டின் உலகிற்கு இந்தியா தனது பங்களிப்பை அளித்து வருகிறது. அதனால்தான், 'இது போருக்கான யுகமல்ல, புத்தருக்கான யுகம்' என்று நாம் கூறும்போது இந்தியாவின் பங்கு தெளிவாகிறது: மனிதகுலத்தின் எதிரிகளுக்கு எதிராக வலிமை அவசியம், ஆனால் எங்கு வெறும் கருத்து வேறுபாடுகள் மட்டுமே உள்ளனவோ, அங்கு பேச்சுவார்த்தையும் அமைதியுமே அவசியமானவை.
இந்தியா அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்பதில் உறுதியாக உள்ளது. இதைத்தான் பகவான் புத்தர் நமக்குக் கற்றுக்கொடுத்தார். இந்தக் கண்காட்சிக்கு வருகை தரும் ஒவ்வொருவரும் இந்த உத்வேகத்துடன் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
நண்பர்களே, பகவான் புத்தரின் இந்தப் புனித நினைவுச் சின்னங்கள் இந்தியாவின் பாரம்பரியமாகும். ஒரு நூற்றாண்டு கால நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, அவை நாட்டிற்குத் திரும்பியுள்ளன. எனவே, நாடு முழுவதும் உள்ள மக்கள் இங்கே வந்து இந்தப் புனித நினைவுச் சின்னங்களைத் தரிசிக்கவும், பகவான் புத்தரின் சிந்தனைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ளவும், ஒருமுறையாவது இங்குக் கண்டிப்பாக வந்து செல்லுமாறும் நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாகப் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், இளைய தலைமுறையினர் என அனைவரும் நிச்சயமாக இந்தக் கண்காட்சியைப் பார்க்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன். நமது கடந்த காலத்தின் பெருமையை எதிர்காலக் கனவுகளுடன் இணைப்பதற்கான ஒரு சிறந்த ஊடகமாக இந்தக் கண்காட்சி அமையும். நாடு முழுவதும் உள்ள மக்கள் இந்தக் கண்காட்சியில் பங்கேற்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த வேண்டுகோளுடன், இந்த நிகழ்வு சிறக்க உங்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!
நமோ புத்தாய!
-----
(RELEASE ID : 2211058)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2252405)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam