பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

என்.டி.டி.வி. உலக உச்சி மாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 17 OCT 2025 11:03PM by PIB Chennai

மாண்புமிகு இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியா அவர்களே, மாண்புமிகு ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர், என் நண்பர் டோனி அபோட் அவர்களே, மாண்புமிகு இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் ரிஷி சுனக் அவர்களே, கவுரவ விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, வணக்கம்!

இது பண்டிகைக் காலம். உங்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். இந்த உற்சாகமான சூழலில்தான் என்.டி.டி.வி. உலக உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த அமர்வுக்காக நீங்கள் மிகவும் முக்கியமான ஒரு கருப்பொருளைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள்: தடுக்க முடியாத பாரதம் (Unstoppable Bharat). உண்மைதான், இன்று இந்தியாவுக்கு நிற்கும் எண்ணம் இல்லை. நாம் நிற்கவும் மாட்டோம், தயங்கவும் மாட்டோம். நாம் 140 கோடி நாட்டு மக்களும் இணைந்து அதிவேகமாக முன்னேறிச் செல்வோம்.

நண்பர்களே,

இன்று உலகம் குறிப்பிடத்தக்க தடைகளையும் வேகத்தடைகளையும் சந்தித்து வரும் நிலையில், தடுக்க முடியாத பாரதம் பற்றிய விவாதம் இயல்பானதுதான். நான் பதினொரு ஆண்டுகளுக்கு முந்தைய சூழலையும் நிகழ்காலச் சூழலையும் ஒப்பிட்டுப் பேச விரும்புகிறேன். 2014-க்கு முன்பு இதுபோன்ற மாநாடுகளில் என்னென்ன பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பீர்கள். என்ன தலைப்புச் செய்திகள் இருந்தன, தெருக்களிலும் சுற்றுப்புறங்களிலும் உள்ள மாநாடுகளில் என்னென்ன தலைப்புகள் விவாதிக்கப்பட்டன என்பதையெல்லாம் நீங்கள் நினைவுகூர்ந்தால், பின்வரும் விஷயங்களைக் கவனிப்பீர்கள்:

இந்தியா உலகச் சவால்களை எப்படி எதிர்கொள்ளும்? "நெருக்கடியான ஐந்து நாடுகளில்" (Fragile Five) இருந்து இந்தியா எப்படி மீண்டு வரும்? கொள்கை முடக்கத்தில் (Policy Paralysis) இந்தியா எவ்வளவு காலம் இருக்கும்? இந்தியாவில் நடக்கும் பெரிய ஊழல்கள் எப்போது நிற்கும்? என்பது பற்றியே விவாதங்கள் இருந்தன.

நண்பர்களே,

அந்த நேரத்தில், பெண்கள் பாதுகாப்பைப் பற்றிப் பல கேள்விகள் இருந்தன. பயங்கரவாதச் செயலற்ற செல்கள் (Sleeper Cells) கட்டுப்பாட்டை மீறி எப்படிச் செயல்படுகின்றன என்பது பற்றிய தகவல்கள் வெளியாகின. "விலைவாசி உயர்வு எனும் பேய் (டாயன்) தின்று கொண்டிருக்கிறது" போன்ற பாடல்கள் பரவலாக இருந்தன. 2014-க்கு முன் என்ன நடந்தது என்பது இப்போது உங்களுக்கு ஒரு தெளிவான படத்தைக் கொடுக்கிறது. அப்போது, இவ்வளவு நெருக்கடிகளில் சிக்கியிருந்த இந்தியா, அவற்றிலிருந்து ஒருபோதும் மீள முடியாது என்று நாட்டு மக்களும் உலகமும் நம்பின.

ஆனால், கடந்த பதினொரு ஆண்டுகளில், இந்தியா ஒவ்வொரு அச்சத்தையும் அகற்றியுள்ளது. ஒவ்வொரு சவாலையும் கடந்துள்ளது. இன்று, இந்தியா நெருக்கடியான ஐந்து நாடுகளில் இருந்து வெளியேறி, முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக மாறியுள்ளது. இன்று பணவீக்கம் 2 விழுக்காட்டிற்குக் கீழேயும், வளர்ச்சியானது 7 விழுக்காட்டிற்கும் அதிகமாகவும் உள்ளது. இன்று சிப் (Chip) முதல் கப்பல்கள் (Ship) வரை, தற்சார்புள்ள இந்தியா தன்னம்பிக்கை நிறைந்த இந்தியாவாக உள்ளது. இப்போது பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியா மௌனமாக இருப்பதில்லை; துல்லியத் தாக்குதல் (Surgical Strikes), வான்வழித் தாக்குதல் (Air Strikes) மற்றும் ஆப்பரேஷன் சிந்துர் ஆகியவற்றை நடத்தி தக்க பதிலடி கொடுக்கிறது.

நண்பர்களே,

பெருந்தொற்றுக் காலத்தை நினைத்துப் பாருங்கள். அப்போது உலகம் வாழ்வுக்கும் மரணத்திற்கும் இடையில் இருந்த நிழலில் வாழ்ந்தது. இவ்வளவு பெரிய மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு இத்தகைய மாபெரும் நெருக்கடியிலிருந்து எப்படித் தப்பிக்கும் என்று உலகம் வியந்தது. இதன் காரணமாக இந்தியா மூழ்கிவிடும் என்று மக்கள் உணர்ந்தார்கள். பல்வேறு ஊகங்கள் வெளிவந்தன. ஆனால், இந்தியா ஒவ்வொரு ஊகத்தையும் தவறென்று நிரூபித்தது. நாம் போராடினோம்; மிக விரைவில் நாமே நம்முடைய தடுப்பூசியை உருவாக்கினோம். நாம் குறுகிய கால சாதனை நேரத்தில் தடுப்பூசிகளை வழங்கினோம். இவ்வளவு பெரிய நெருக்கடியிலிருந்து வெளியே வந்த பிறகும்கூட, நாம் வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக மாறினோம்.

நண்பர்களே,

கரோனாவின் தாக்கம் இன்னும் முடிவடையாத நிலையில், உலகின் பல்வேறு பகுதிகளில் மோதல்கள் எழத் தொடங்கின. போர் பற்றிய செய்திகள் தலைப்புச் செய்திகளில் வரத் தொடங்கின. இப்போது மீண்டும், இந்தியாவின் வளர்ச்சிக்கு என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்தது. இத்தகைய நெருக்கடியான நேரத்திலும்கூட, இந்தியா மீண்டும் அனைத்து ஊகங்களையும் தவறென்று நிரூபித்தது. இந்தியா தொடர்ந்து வேகமாக வளரும் முக்கியப் பொருளாதாரமாக முன்னேறிக்கொண்டே இருந்தது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் சராசரி வளர்ச்சி 7.8 விழுக்காடாக உள்ளது. இது முன்னெப்போதும் இல்லாதது, எதிர்பாராதது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான், சரக்கு ஏற்றுமதி புள்ளிவிவரங்கள் வெளியானது; இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஆண்டைவிட சுமார் 7 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, இந்தியா சுமார் 4.5 லட்சம் கோடி மதிப்புள்ள விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்தது. பல நாடுகளின் நிலைத்தன்மையற்ற தரவரிசைகளுக்கு மத்தியில், எஸ் & பி (S&P) நிறுவனம் 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் கடன் தரவரிசையை உயர்த்தியுள்ளது. .எம்.எஃப். (IMF) அமைப்பும் இந்தியாவின் வளர்ச்சியை உயர்த்தித் திருத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான், கூகுள் (Google) நிறுவனம் இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் துறையில் (AI Space) 15 பில்லியன் டாலர் அளவுக்குப் பெரும் முதலீட்டை அறிவித்துள்ளது. இன்று, பசுமை எரிசக்தி மற்றும் செமிகண்டக்டர்கள் (Green Energy and Semiconductors) துறையிலும் அதிக முதலீடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நண்பர்களே,

இன்று இந்தியாவின் வளர்ச்சி, உலகளாவிய வாய்ப்புகளை வடிவமைக்கிறது என்று நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். சமீபத்தில் கையெழுத்திடப்பட்ட .எஃப்.டி.. (EFTA) வர்த்தக ஒப்பந்தம் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ஐரோப்பிய நாடுகள் இந்தியாவில் 100 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளன. இது இந்தியாவில் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். சில நாட்களுக்கு முன்பு, எனது நண்பர் ஸ்டார்மர், இங்கிலாந்துப் பிரதமர், தனது நாட்டின் மிகப்பெரிய வணிகப் பிரதிநிதிகளுடன் இந்தியாவிற்கு வருகை தந்தார். இது, இந்தியா கொண்டிருக்கும் பரந்த வாய்ப்புகளை உலகம் மிகுந்த நம்பிக்கையுடன் பார்க்கிறது என்பதைக் காட்டுகிறது. இன்று, ஜி7 நாடுகளுடனான நமது வர்த்தகம் 60 விழுக்காட்டுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. இன்று உலகம் முழுவதும் இந்தியாவை நம்பகமான, பொறுப்பான மற்றும் வலிமையான (Reliable, Responsible and Resilient) கூட்டாளியாகப் பார்க்கிறது. மின்னணுவியல் முதல் மருந்துத் துறை வரை, ஆட்டோமொபைல் முதல் மொபைல் உற்பத்தி வரை, ஒரு முதலீட்டு அலை இந்தியாவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. இந்த முதலீடு, இந்தியாவை உலகளாவிய விநியோகச் சங்கிலியின் (Global Supply Chain) நரம்பு மையமாக (Nerve Center) மாற்ற உதவுகிறது.

இந்த மாநாட்டில், நீங்கள் "அறியப்படாததின் விளிம்பு" (Edge of the Unknown) என்ற தலைப்பில் விவாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். உலகிற்கு, அறியப்படாததின் விளிம்பு என்பது நிச்சயமற்ற ஒன்றாக இருக்கலாம், ஆனால் இந்தியாவிற்கு, அது வாய்ப்புகளுக்கான ஒரு நுழைவாயில் ஆகும். பல யுகங்களாக, இந்தியா கண்டறியப்படாத பாதைகளில் பயணிக்கத் துணிச்சலைக் காட்டியுள்ளது. "முதல் படி" தான் மாற்றத்தின் தொடக்கம் என்பதை நமது ஞானிகள், நமது விஞ்ஞானிகள், நமது மாலுமிகள் எப்போதும் நிரூபித்துள்ளனர்.

அது தொழில்நுட்பமாக இருந்தாலும், கொரோனா தடுப்பூசியின் தேவையாக இருந்தாலும், திறமையான மனிதசக்தியாக இருந்தாலும், நிதி தொழில்நுட்பம் (Fintech) அல்லது பசுமை எரிசக்தித் துறையாக இருந்தாலும், நாம் ஒவ்வொரு அபாயத்தையும் சீர்திருத்தமாகவும், ஒவ்வொரு சீர்திருத்தத்தையும் மீள் திறனாகவும் (Resilience), ஒவ்வொரு மீள் திறனையும் புரட்சியாகவும் மாற்றியுள்ளோம்.

சமீபத்தில், .எம்.எஃப். தலைவர் (IMF Chief) இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களின் தைரியத்தைக் கண்டு தான் மிகவும் உற்சாகமடைந்துள்ளதாகக் கூறினார். அவர் ஒரு உதாரணத்தையும் கூறினார். உங்களுக்குத் தெரிந்திருக்கலாம், இந்தியாவில் ஒரு காலத்தில் சீர்திருத்தம் நடந்தது. ஆனால் அந்தச் சீர்திருத்தம் ஒரு கட்டாயம் காரணமாக நடந்தது, அந்தக் கட்டாயமும் .எம்.எஃப். அமைப்பிடமிருந்து வந்ததுதான்.

ஆனால் இன்று, சீர்திருத்தங்கள் உறுதியான நம்பிக்கையின் (Conviction) காரணமாக நடக்கின்றன. அதே .எம்.எஃப். தான், இந்தியாவின் சீர்திருத்தங்களில் உள்ள தைரியத்தைக் கவனிப்பதாகக் கூறுகிறது. .எம்.எஃப். தலைவர் மற்றொரு உதாரணத்தையும் தெரிவித்தார். டிஜிட்டல் அடையாளத்தை மக்கள் அளவில் வழங்குவது சாத்தியமில்லை என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இந்தியா எல்லோரும் தவறென்று நிரூபித்தது. இன்று, நிதி தொழில்நுட்பம் உலகில் நடைபெறும் உலகளாவிய நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் ஐம்பது விழுக்காடு இந்தியாவில் நடைபெறுகிறது, ஐம்பது விழுக்காடு! இந்தியாவின் யு.பி.. (UPI) உலகளாவிய டிஜிட்டல் கட்டண முறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இதன் பொருள் என்னவென்றால், ஒவ்வொரு முன்னறிவிப்பையும், ஒவ்வொரு மதிப்பீட்டையும் மீறிச் செல்வது இன்று இந்தியாவின் இயல்பாகவே (Temperament) மாறிவிட்டது. நான் "தன்மை" என்ற வார்த்தையைப் பயன்படுத்தவில்லை, "இயல்பு" என்று சொன்னேன். மோடி இங்கு இருப்பதால், அவர் இயல்பைப் பற்றிப் பேசுகிறார். அதனால்தான் இந்தியா தடுக்க முடியாததாக இருக்கிறது.

நண்பர்களே,

நாட்டின் சாதனைகளின் உண்மையான பலம் அதன் மக்களிடமிருந்து வருகிறது. மேலும், அரசின் அழுத்தம் அல்லது தலையீடு அவர்களின் வாழ்க்கையில் இல்லாதபோதுதான், நாட்டு மக்கள் தங்கள் ஆற்றலைச் சரியாகப் பயன்படுத்த முடியும். அரசுமயமாக்கல் (Governmentalization) அதிகமாக இருந்தால், அங்குத் தடைகள் அதிகமாக இருக்கும். அதே சமயம், ஜனநாயகமயமாக்கல் (Democratization) அதிகமாக இருந்தால், அங்கு வேகம் அதிகமாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 60 ஆண்டுகள் நாட்டை ஆண்ட காங்கிரஸ் கட்சி எப்போதும் கொள்கை மற்றும் செயல்முறையை அரசுமயமாக்குவதற்கே முக்கியத்துவம் கொடுத்தது. மாறாக, கடந்த 11 ஆண்டுகளில் நாம் கொள்கை மற்றும் செயல்முறையை ஜனநாயகமயமாக்குவதில் பணியாற்றி வருகிறோம். இதுவும் தடுக்க முடியாத இந்தியா உருவாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

வங்கித் துறையை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள். 1960களில் இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கியதற்குக் காரணம் என்ன? நாட்டின் ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும், அதாவது சாமானிய மக்களுக்கும் வங்கிக் கடன் வசதிகளை வழங்குவதற்காகவே தேசியமயமாக்கப்பட்டது என்று கூறப்பட்டது. இதுதான் நமக்கு தெரிவிக்கப்பட்ட காரணம். ஆனால், உண்மையில் காங்கிரஸ் என்ன செய்தது, அரசுகள் என்ன செய்தன? வங்கிகள் நாட்டு மக்களிடமிருந்து மேலும் விலகிச் சென்றன; தூரம் அதிகமானது. ஏழைகள் வங்கிக் கதவுகளுக்குள் செல்லக்கூடப் பயந்தனர்.

எங்கள் அரசாங்கம் 2014-ல் அமைக்கப்பட்டபோது, நாட்டின் மக்கள்தொகையில் பாதியைவிட அதிகமானோருக்கு வங்கி கணக்கு கூட இல்லை. மேலும், இது வெறும் வங்கிக் கணக்கு இல்லாத பிரச்சினை மட்டுமல்ல. இது நாட்டின் மக்கள்தொகையில் ஒரு பெரிய பிரிவினர் வங்கிச் சலுகைகளைப் பெறுவதிலிருந்து வஞ்சிக்கப்பட்டனர் என்பதைக் குறிக்கிறது. தேவைப்படும்போது அதிக வட்டி விகிதங்களைச் சந்தையில் செலுத்துமாறும், தங்கள் வீடுகளையும் நிலங்களையும் அடமானம் வைக்குமாறும் அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டனர்.

நண்பர்களே,

நாட்டை இந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் இருந்து விடுவிப்பது அத்தியாவசியமாக இருந்தது, அதை நாம் செய்து முடித்துள்ளோம். நாம் வங்கித் துறையை ஜனநாயகமயமாக்கிச் சீர்திருத்தினோம். நாம் 50 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கிக் கணக்குகளை ஒரு இயக்கமாகத் தொடங்கினோம். அதாவது, உலகம் முழுவதும் திறக்கப்பட்ட வங்கிக் கணக்குகள் ஒருபுறம், இந்தியா மட்டும் தனியாகத் திறந்த கணக்குகள் மறுபுறம் என்ற அளவில் பணி நடந்தது. இன்று, நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஏதோ ஒருவகையான வங்கிச் சேவை உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் இந்தியாவை உலகின் மிகவும் நிதி உள்ளடக்கமுள்ள  நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளன.

காங்கிரஸ் ஆட்சியின்போது வங்கிகளில் செயல்பாடு இல்லாத சொத்துகள் அதிகமாக அதாவது ஒரு மலைபோல் குவிந்திருந்தது. பா...வின் ஜனநாயகமயமாக்கலால் வங்கிகள் சாதனை அளவிலான லாபத்தைப் ஈட்டியுள்ளன. கடந்த 11 ஆண்டுகளில், சுய உதவிக் குழுக்களின் பெண்கள், சிறு விவசாயிகள், கால்நடை வளர்ப்போர், மீனவர்கள், தெரு வியாபாரிகள் மற்றும் கைவினை கலை நண்பர்கள் ஆகியோருக்கு, வங்கி பிணையம் (Guarantee) இல்லாமலேயே லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

நண்பர்களே,

பெட்ரோல் மற்றும் எரிவாயுத் துறையின் உதாரணத்தையும் நான் உங்களுக்குக் தெரிவிக்கிறேன். தேசியமயமாக்கல் என்ற கருத்து ஆதிக்கம் செலுத்திய 2014-க்கு முந்தைய நிலைமை என்னவாக இருந்தது? பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மானியத்தை அதிகரிக்காமல் இருக்க, காங்கிரஸ் அரசாங்கம் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை பெட்ரோல் நிலையங்களை மூடத் தயாராகி வந்தது என்ற தகவலை கேட்டால் நீங்கள் அதிர்ச்சி அடைவீர்கள். இப்போதைய நிலை என்ன? இன்று, பெட்ரோல் நிலையங்கள் 24 மணி நேரமும் திறந்திருக்கின்றன. மேலும், மாற்று எரிபொருட்கள் மற்றும் மின் வாகனப் போக்குவரத்து ஆகியவற்றில் நாம் முன்னெப்போதும் இல்லாத முதலீடுகளைச் செய்து வருகிறோம்.

நண்பர்களே,

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஒரு எரிவாயு இணைப்பு பெறக்கூட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஓராண்டிற்கு 25 கூப்பன்களைப் பெறுவார், மேலும் அவர் தன் பகுதியில் உள்ள மக்களுக்கு எரிவாயு இணைப்புக்காக 25 கூப்பன்களைக் கொடுப்பார். அதனால், மக்கள் "எனக்கு ஒரு எரிவாயு கூப்பன் கொடுங்கள்" என்று அவர் வீட்டு வாசலில் வரிசையில் நிற்பார்கள், இதுதான் நிலைமை.

நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள், 2013-ம் ஆண்டின் செய்தித்தாள்களை எடுத்துப் பாருங்கள். 2014-ல் மோடியை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் ஒரு உத்தியைத் தயாரித்துக் கொண்டிருந்தது. அவர்களுக்கு அப்போது என்னைப் பற்றி நன்றாகத் தெரியவில்லை, இப்போதும் தெரியவில்லை என்றுதான் நினைக்கிறேன். எனவே, அவர்கள் பொதுமக்களுக்கு என்ன வாக்குறுதி அளிப்பது என்று விவாதித்துக் கொண்டிருந்தார்கள். விவாதமெல்லாம் ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் கொடுப்பதா அல்லது 9 சிலிண்டர்கள் கொடுப்பதா என்பது பற்றித்தான் இருந்தது. அதாவது, அந்த அளவுக்கு அரசுமயமாக்கல் இந்த அமைப்பில் ஆதிக்கம் செலுத்தியது.

 

இப்போது, நாம் இங்கு வந்த பிறகு என்ன செய்தோம்? இந்த வசதியைப் பற்றி கனவிலும் நினைத்துப் பார்க்காத 10 கோடிக்கும் அதிகமான ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பை வழங்கியுள்ளோம். எரிவாயு சிலிண்டர்கள் கிராமத்திற்கு வரும்போது, அது பணக்காரர்களுக்கானது, பெரியவர்களுக்கானது, அவர்கள் வீட்டில் எரிவாயு இருக்கும், ஆனால் ஏழைகளின் வீடுகளில் இருக்காது என்று சாமானிய மக்கள் நம்பினர். நாம் இந்த நிலைமையை மாற்றினோம். 10 கோடி வீடுகளுக்கு அடுப்புகள் சென்றடைந்தன. இதுதான் அமைப்பின் ஜனநாயகமயமாக்கல், இதுதான் அரசியலமைப்பின் உண்மையான உணர்வு.

நண்பர்களே,

அந்த தேசியமயமாக்கல் சிந்தனையால் நிரம்பிய காலத்தில், நமது அரசு நிறுவனங்களையும், நமது பொதுத்துறை நிறுவனங்களையும் (PSUs) பூட்டிவிட்டு காங்கிரஸ் நிம்மதியாகத் தூங்கியது. "அது மூழ்கிக் கொண்டிருக்கிறது, பூட்டிவிடு; அது வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறது, பூட்டிவிடு" என்று நினைத்தது. "ஏன் நாம் இவ்வளவு கடினமாக உழைக்க வேண்டும், அது மூழ்கினால் மூழ்கட்டும், அது தானாக இறந்துபோகட்டும், நம் பாக்கெட்டில் இருந்து என்ன நஷ்டமாகப் போகிறது" என்று காங்கிரஸ் நினைத்தது, இதுதான் அவர்களின் சிந்தனையாக இருந்தது.

நாம் இந்தச் சிந்தனையையும் மாற்றினோம். இன்று பாருங்கள், அது எல்..சி. ஆக இருந்தாலும் சரி, எஸ்.பி.. ஆக இருந்தாலும் சரி, அல்லது நமது பெரிய பொதுத்துறை நிறுவனங்களாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் லாபத்தில் புதிய சாதனைகளைப் படைத்து வருகின்றன.

நண்பர்களே,

அரசுக் கொள்கைகள் அரசுமயமாக்கலை விட ஜனநாயக மயமாக்கலை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது, நாட்டு மக்களின் மன உறுதி உயர்கிறது.

இந்த அரசுமயமாக்கல் சிந்தனையுடன், காங்கிரஸ் "வறுமையை ஒழிப்போம், வறுமையை ஒழிப்போம்" என்று சொல்லிக்கொண்டே இருந்தது. ஒவ்வொரு தேர்தலிலும் நீங்கள் இதைப் பார்த்திருப்பீர்கள். இந்த வம்சத்தைச் சேர்ந்தவர்கள் செங்கோட்டையில் கொடியேற்றச் சென்றபோது ஆற்றிய அனைத்து உரைகளையும் கேளுங்கள். முதல் தலைவர் முதல் கடைசித் தலைவர் வரை, வறுமை பற்றிப் பேசாத தலைவர் எவருமில்லை. நீங்கள் யூடியூபில் இந்த உரைகள் அனைத்தையும் கேட்கலாம். ஆனால் வறுமை மட்டும் குறையவில்லை.

நமது ஜனநாயகமயமாக்கல் அணுகுமுறையானது, கடந்த 11 ஆண்டுகளில் 25 கோடி ஏழை மக்களை வறுமையிலிருந்து மீட்டெடுத்துள்ளது. அதனால்தான் நாடு நம்மை நம்புகிறது, அதனால்தான்  இந்தியா வளர்ச்சியில் தடுக்க முடியாததாக இருக்கிறது.

நண்பர்களே,

இன்று இந்தியாவில், ஏழைகளுக்கும், விளிம்புநிலை மக்களுக்கும் சேவை செய்வதற்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசாங்கம் உள்ளது. நாம் பின்தங்கிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிக்கிறோம். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த முழு உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். பெரும்பாலும், இந்தப் பிரச்சினை பெரிய விவாதங்களில் கவனிக்கப்படுவதில்லை.

நான் உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். சமீபத்தில், பி.எஸ்.என்.எல். (BSNL) உள்நாட்டிலேயே இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தனது 4ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது என்று பேசப்பட்டது.

நண்பர்களே,

இது உண்மையிலேயே நாட்டிற்கு ஒரு பெரிய வெற்றி என்று நான் சொல்ல விரும்புகிறேன். இன்று, 4ஜி தொழில்நுட்பம் தயாராக உள்ள உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று நாம் பெருமையுடன் சொல்ல முடியும்.

இந்தியா 2ஜி, 2ஜி, 2ஜி என்று கேள்விப்பட்டிருக்கிறது. ஏனெனில் தலைப்புச் செய்திகள் அனைத்தும், "2ஜி-யில் இது நடந்தது, 2ஜி-யில் அது நடந்தது" என்றுதான் நமக்கு தெரிவிக்கப்பட்டது. இப்போது நான் 4ஜி பற்றிப் பேசுகிறேன், எனவே இதற்குச் சிறிது நேரம் ஆகும், இதை விளக்கிக் கூறி நான் சோர்வடைகிறேன். காங்கிரஸ் தனது அழிப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்த அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல்., இப்போது புதிய சாதனைகளைப் படைத்து வருகிறது.

ஆனால் நண்பர்களே,

இது நாட்டின் வெற்றியின் ஒரு அம்சம் மட்டும்தான். இதன் மறுபக்கம் என்னவென்றால், அதே நாளில் தான் இந்த 4ஜி தொழில்நுட்பம் தொடங்கப்பட்டதோ, அன்றே பி.எஸ்.என்.எல். நிறுவனம் சுமார் ஒரு இலட்சம் 4ஜி மொபைல் கோபுரங்களைத் தொடங்கியது. இதன் விளைவு என்ன? இது இதுவரை அதிவேக இணைய அணுகல் இல்லாத தொலைதூரக் காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் வாழும் லட்சக்கணக்கான மக்களுக்கு அதிவேக இணைய சேவையைக் கொண்டு வந்துள்ளது.

நண்பர்களே,

இப்போது நான் உங்களுக்கு மற்றொரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். நாம் 2ஜி, 4ஜி, 6ஜி போன்றவைகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். பின்னர் நம்மைச் சுற்றியுள்ள உலகைப் பார்க்கிறோம், வேறு ஒன்றைப் பற்றி யோசிக்கிறோம். அப்படி யோசித்த பிறகு, புதிதாக எதையாவது செய்ய முயற்சிக்கிறோம். இன்று நான் இந்த நாட்டின் வெற்றியின் மூன்றாவது அம்சத்தை உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். அதுவரை ஊடகங்கள் அந்த விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. சரி, பல விஷயங்கள் இருக்கின்றன, என் கணக்கில் அவை மிகவும் பின்னால் இருக்கின்றன.

இத்தகைய வசதிகள் தொலைதூரப் பகுதிகளை அடையும்போது, அந்தப் பகுதிகளில் உள்ள  மக்களின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? நீங்கள் -சஞ்சீவனி (e-Sanjeevani) பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். இந்த -சஞ்சீவனியின் உதாரணத்தை நான் தருகிறேன்.

தொலைதூரக் காடுகளில் எங்கோ வாழும் ஒரு குடும்பம் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அக்குடும்பத்தில் ஒரு உறுப்பினர் நோய்வாய்ப்பட்டு, மலைகளின் மீதோ, அல்லது காடுகளின் உள்ளேயோ எங்கோ அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்போது மோசமான வானிலை காரணமாக, அவர்களால் தங்கள் நோயாளியான குடும்ப உறுப்பினரை மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முடியவில்லை. அப்போது அவர்கள் என்ன செய்வார்கள்? இதுபோன்ற சூழ்நிலையில், அதிவேக இணைப்பு அடிப்படையிலான சேவையான -சஞ்சீவனி சேவை அவர்களுக்கு உதவுகிறது.

நண்பர்களே,

நோயாளி தனது தொலைபேசியில் உள்ள -சஞ்சீவனி செயலி மூலம் மருத்துவருடன் இணைக்கப்பட்டு, சிறப்பு மருத்துவரிடம் ஆலோசனை பெறும் வசதியைப் பெறுகிறார். என்.டி.டி.வி. பார்வையாளர்கள் தெரிந்து கொண்டால் மகிழ்ச்சியடைவார்கள்: இதுவரை 42 கோடி மக்கள் -சஞ்சீவனி மூலம் புறநோயாளிகள் பிரிவில் (OPD) ஆலோசனையைப் பெற்றுள்ளனர். அதாவது, 4ஜி, 2ஜி என்பது வெறும் வசதி மட்டுமல்ல, அது வாழ்க்கையில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. நான் உங்களுடன் பேசிக்கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், காலை முதல் மாலை வரை நாட்டின் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் -சஞ்சீவனி மூலம் உதவியைப் பெற்றுள்ளனர். நான் உங்களுக்கு 12 மணி நேரம் பற்றிய விவரத்தைக் கூறுகிறேன். -சஞ்சீவனி என்பது வெறும் வசதி மட்டுமல்ல; நெருக்கடி ஏற்பட்டால் உடனடி உதவி கிடைக்கும் என்ற உறுதிப்பாடு ஆகும். இது அரசு அமைப்பில் உள்ள ஜனநாயகமயமாக்கலின் அதிசயங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு!

நண்பர்களே,

ஒரு உணர்வுள்ள அரசு, ஜனநாயகத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு, அரசியலமைப்பிற்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு, இதுபோன்ற முடிவுகளை எடுக்கிறது, இதுபோன்ற கொள்கைகளை உருவாக்குகிறது. மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கும், மக்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கும் நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

உதாரணமாக, ஒரு ஜிபி டேட்டா முன்பு ரூ.300 க்கு விற்கப்பட்டது, இப்போது அதன் விலை  ரூ.10 மட்டுமே. இதன் பொருள் ஒவ்வொரு இந்தியரின் பாக்கெட்டிலும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் சேமிக்கப்படுகிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம், ஏழைகள் குறைந்தபட்சம்  ரூ.1.25 லட்சம் கோடியைச் சேமித்துள்ளனர். பிரதமரின் மக்கள் மருந்தக மையங்களில் (PM Jan Aushadhi Centers) மருந்துகள் 80 விழுக்காடு தள்ளுபடியில் கிடைக்கின்றன. இதன் காரணமாக, மக்கள் சுமார் ரூ.40 ஆயிரம் கோடியைச் சேமித்துள்ளனர். இருதயத்தில் வைக்கும் ஸ்டென்ட்களின் விலைகள் குறைக்கப்பட்டதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடியைச் சேமிக்கிறார்கள்.

நண்பர்களே,

நேர்மையான வரி செலுத்துபவர்களுக்கும் நாம் நேரடிச் சலுகைகளை வழங்கியுள்ளோம். அது வருமான வரியாக இருந்தாலும் சரி அல்லது ஜி.எஸ்.டி. (GST) ஆக இருந்தாலும் சரி, ஒரு பெரிய வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு, ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கான வரி பூஜ்யமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. சேமிப்புத் திருவிழா (GST Savings Festival) தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. அதாவது, நான் இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் சந்தைகளின் படங்களைப் பார்க்கிறேன், ஏன் எல்லா இடங்களிலும் Google-ல் பார்த்தால்? இந்த நிலையை உருவாக்கியது ஜி.எஸ்.டி. சேமிப்புத் திருவிழா தான். இந்த நாட்களில், முந்தைய அனைத்து விற்பனை சாதனைகளும் முறியடிக்கப்படுவதை நாம் காண்கிறோம். வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி.யின் இந்த இரண்டு நடவடிக்கைகளாலும், நாட்டு மக்கள் ஒரு வருடத்தில் சுமார்  ரூ.2.5 லட்சம் கோடியைச் சேமிப்பது உறுதி.

நண்பர்களே,

சமீபகாலமாக, நாடும் உலகமும் ஆபரேஷன் சிந்துர் பற்றி அதிகம் விவாதித்து வருகின்றன. சமீபத்தில், நம் நண்பர் ராகுல்ஜியும் ஆபரேஷன் சிந்துர் பற்றி மிக விரிவாகப் பேசினார். அவர் ஒரு இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவர், எனவே அதில் அவருக்கு உள்ள ஆர்வம் இயல்பானது. அந்தக் காரியங்கள் அவர் இரத்தத்தில் ஓடுகின்றன. அவர் பெருமையுடன் அதைப் பாராட்டியுள்ளார். நாடும் உலகமும் அதையேதான் செய்து கொண்டிருக்கின்றன.

ஆனால், இன்று நான் உங்களை வேறு ஒரு தலைப்புக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இது நாட்டின் பாதுகாப்பைப் பொறுத்தவரை முக்கியமானது மட்டுமல்ல, இது என் இளைஞர்களின் எதிர்காலத்துடனும் தொடர்புடையது. இந்தக் கேள்வி நக்சலிசம் (Naxalism) பற்றியது. இந்த நக்சலிசம் என்ற சொல்லை அப்படித்தான் இவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள் என்று நான் நம்புகிறேன். உண்மையில், இது மாவோயிச பயங்கரவாதம் (Maoist terror) பற்றியது. இன்று நான் உங்களுக்கு இந்த மாவோயிச பயங்கரவாதத்தின் கதையைச் சொல்ல விரும்புகிறேன்.

காங்கிரஸ் ஆட்சியின்போது இருந்த நகர்ப்புற நக்சல்களின் சூழலமைப்பில் நகர்ப்புற நக்சல்கள், ஒரு வகையில் ஆதிக்கம் செலுத்தினர். அவர்கள் இப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள். மாவோயிச பயங்கரவாதம் குறித்த எந்தச் சம்பவமும் நாட்டு மக்களைச் சென்றடையாமல் இருக்க, அவர்கள் கடுமையான தணிக்கை  செய்தனர். நமது நாட்டில் பயங்கரவாதம் பற்றி நிறைய விவாதங்கள் நடக்கும். பிரிவு 370 பற்றி விவாதங்கள் நடக்கும். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் நமது நகரங்களில் செழித்து வளர்ந்திருந்த, இதுபோன்ற நிறுவனங்களைக் கைப்பற்றியிருந்த நகர்ப்புற நக்சல்கள், மாவோயிச பயங்கரவாதத்தை மறைத்து நாட்டை இருட்டில் வைத்திருந்தனர்.

சில நாட்களுக்கு முன்புதான், மாவோயிச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பலர் தில்லிக்கு வந்திருந்தனர்; இது மிகவும் வேதனையான விஷயம். அவர்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்தனர், சிலருக்குக் கால்கள் இல்லை, சிலருக்குக் கைகள் இல்லை, சிலருக்குக் கண்கள் இல்லை. சில உடல் பாகங்கள் இல்லாமல் இருந்தன. இவர்கள் மாவோயிச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள். ஏழைகள், பழங்குடியினர், கிராமத்துச் சகோதர சகோதரிகள், விவசாயிகளின் மகன்கள், தாய்மார்கள் மற்றும் சகோதரிகள், பலரின் கால்கள் துண்டிக்கப்பட்டிருந்தன. அவர்கள் தில்லிக்கு வந்து, ஏழு நாட்கள் தங்கியிருந்தனர். கைகளைக் கூப்பிக் கொண்டு, தங்கள் செய்தியை இந்திய மக்களிடம் கொண்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினர். உங்களில் யாரும் அதைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோ மாட்டீர்கள், ஏனென்றால் இங்கே அமர்ந்திருக்கும் மாவோயிச பயங்கரவாதத்தின் இந்த ஒப்பந்தக்காரர்கள், அந்த ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்களின் வலியின் கதையைக் கூட இந்திய மக்களிடம் சென்றடைய விடவில்லை. காங்கிரஸ் சூழலமைப்பு அதைப் பற்றி விவாதிக்கக் கூட அனுமதிக்கவில்லை.

நண்பர்களே,

நாட்டின் ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய மாநிலமும் நக்சல் வன்முறை மற்றும் மாவோயிச பயங்கரவாதத்தின் பிடியில் இருந்த நிலை இருந்தது. நாட்டின் மற்ற பகுதிகளில் அரசியலமைப்புச் சட்டம் நடைமுறையில் இருந்தது, ஆனால் சிவப்பு வழித்தடத்தில் (Red Corridor) அதைப் பற்றிக் குறிப்பிட யாருக்கும் தைரியம் இல்லை. மேலும், அரசியலமைப்பைத் தங்கள் தலையில் வைத்து ஆடுபவர்கள், அரசியலமைப்பை நம்பாத இந்த மாவோயிச பயங்கரவாதிகளைப் பாதுகாக்க இன்னும் இரவும் பகலும் உழைக்கிறார்கள் என்று நான் மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன்.

 

நண்பர்களே,

அரசு தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆனால் அதற்கு சிவப்பு வழித்தடத்தில் எந்த அங்கீகாரமும் இல்லை. மாலை மங்கத் தொடங்கியதும், வீட்டை விட்டு வெளியேறுவது கடினமாகி விட்டது. மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கியவர்களும்  பாதுகாப்புடனே செல்ல வேண்டியிருந்தது.

நண்பர்களே,

கடந்த 50-55 ஆண்டுகளில், இந்த மாவோயிச பயங்கரவாதத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர், பல பாதுகாப்புப் பணியாளர்கள் மாவோயிச பயங்கரவாதத்திற்குப் பலியானார்கள், நாம் பல இளைஞர்களை இழந்தோம். இந்த நக்சலைட்டுகள், இந்த மாவோயிச பயங்கரவாதிகள் அந்தப் பகுதிகளில் பள்ளிகள் கட்டப்பட அனுமதிக்கவில்லை, மருத்துவமனைகள் கட்டப்பட அனுமதிக்கவில்லை, மருத்துவமனை இருந்தாலும் மருத்துவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. மீதமிருந்தவற்றையும் கூட வெடிகுண்டுகள் வைத்துத் தகர்த்தனர். பல தசாப்தங்களாக, நாட்டின் ஒரு பெரிய பகுதி, மிகப் பெரிய மக்கள்தொகை, வளர்ச்சியின் ஒளியைப் பெற முடியாமல் போனது. நமது பழங்குடி சகோதர சகோதரிகள், தலித் சகோதர சகோதரிகள், மற்றும் ஏழை மக்கள் இதனால் பெரும் இழப்பைச் சந்திக்க நேரிட்டது.

நண்பர்களே,

மாவோயிச பயங்கரவாதம் என்பது நாட்டின் இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதி, அது ஒரு பெரும் பாவம். நாட்டின் இளைஞர்களை இந்த நிலையில் என்னால் விட்டுவிட முடியவில்லை, நான் அமைதியாக அமர்ந்திருக்க முடியவில்லை. இன்று, நான் முதன்முறையாக உங்களிடம் எனது வேதனையை வெளிப்படுத்துகிறேன். மகன்களை இழந்த தாய்மார்கள் எனக்குத் தெரியும்; அந்தத் தாய்மார்கள் தங்கள் மகன்களிடம் சில எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் வைத்திருந்தனர். அவர்கள் ஒன்று மாவோயிச பயங்கரவாதிகளின் பொய்களில் சிக்கினர், அல்லது மாவோயிச பயங்கரவாதத்திற்குப் பலியானார்கள்.

எனவேதான், 2014-க்கு பிறகு, நமது அரசாங்கம் வழி தவறிய இளைஞர்களை முக்கிய நீரோட்டத்திற்குக் கொண்டு வர முழு உணர்வுடன் முயற்சி செய்தது. இந்த விஷயத்தை இன்று நான் நாட்டு மக்களிடம் முதன்முறையாகச் சொல்கிறேன். நாட்டு மக்கள் திருப்தி அடைவார்கள், நாட்டு மக்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள். மகன்களை இழந்த தாய்மார்கள், அந்தத் தாய்மார்கள் நம்மை ஆசீர்வதிப்பார்கள், நாட்டின் பலத்தை ஆசீர்வதிப்பார்கள். இன்று நாடு அதன் விளைவுகளைப் பார்க்கிறது.

11 ஆண்டுகளுக்கு முன்பு வரை, நாட்டில் 125-க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் மாவோயிச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.

நண்பர்களே,

இன்று, இந்த எண்ணிக்கை வெறும் 11 மாவட்டங்களாகச் சுருங்கிவிட்டது. இந்த முயற்சியில் எவ்வளவு உழைப்பைச் செலுத்த வேண்டியிருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். அந்த 11 மாவட்டங்களில் கூட, மாவோயிச பயங்கரவாதத்திற்கு மிகவும் ஆளாகக்கூடிய நிலையில் இருப்பது மூன்று மாவட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன.

நண்பர்களே,

கடந்த பத்தாண்டுகளில் ஆயிரக்கணக்கான நக்சலைட்டுகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்துள்ளனர். கடந்த 75 மணி நேரத்திற்கான புள்ளிவிவரங்களை நான் உங்களுக்குத் தருகிறேன். எனக்குத் தெரியும், இது ஊடகங்களின் மெனுவாக இருக்காது, ஆனால் இந்த 75 மணி நேரத்தில் 303 நக்சலைட்டுகள் சரணடைந்துள்ளனர் என்பது என் வாழ்க்கையில் மிகுந்த திருப்தியை அளிக்கிறது. ஒரு காலத்தில் 3 நாட்கள் 3 (3 naught 3) ஐப் பயன்படுத்தியவர்கள், இன்று சரணடைந்துள்ளனர்.

மேலும், இவர்கள் சாதாரண நக்சலைட்டுகள் அல்ல; சிலர் மீது  ரூ.1 கோடி, சிலர் மீது ரூ.15 இலட்சம், சிலர் மீது  ரூ.5 இலட்சம் எனப் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டிருந்தது. இவர்கள் அனைவர் மீதும் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நக்சலைட்டுகளிடமிருந்து பெரிய அளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த அனைவரும் துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளைக் கைவிட்டு, இந்திய அரசியலமைப்பைத் தழுவத் தயாராக உள்ளனர். அரசியலமைப்பிற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அரசு இருக்கும்போது, தவறான பாதையில் சென்ற ஒருவர்கூடத் திரும்பி வந்து, அந்த அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைக்கிறார். இப்போது அவர்கள் வளர்ச்சியின் மைய நீரோட்டத்திற்குள் வந்து கொண்டிருக்கிறார்கள். மேலும், இந்த மக்கள் தாங்கள் தவறான பாதையில் இருந்ததை ஒத்துக் கொள்கிறார்கள். ஐந்து தசாப்தங்கள் கடந்துவிட்டன, அவர்கள் தங்கள் இளமையைக் கழித்துவிட்டார்கள், ஆனால் அவர்கள் எதிர்பார்த்த மாற்றம் வரவில்லை. இப்போது அவர்கள் இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கை வைத்து முன்னோக்கிச் செல்வார்கள்.

நண்பர்களே,

சத்தீஸ்கரில் உள்ள பஸ்தரில் இது நடந்தது, அது நடந்தது, ஒரு முழுப் பேருந்து தகர்க்கப்பட்டது, இத்தனை பாதுகாப்புப் பணியாளர்கள் கொல்லப்பட்டனர் என்று ஊடகங்களில் தலைப்புச் செய்திகள் வரும். பஸ்தர் மாவோயிச பயங்கரவாதிகளின், நக்சலைட்டுகளின் கோட்டையாக இருந்தது. இன்று அதே பஸ்தரை நான் உதாரணமாகக் காட்டுகிறேன். பழங்குடியின இளைஞர்கள் பஸ்தர் ஒலிம்பிக்ஸ் நடத்துகிறார்கள். இலட்சக்கணக்கான இளைஞர்கள் பஸ்தர் ஒலிம்பிக்ஸுக்கு வந்து விளையாட்டுத் துறையில் தங்கள் வலிமையைக் காட்டுகிறார்கள்; இதுதான் அந்த மாற்றம்.

நண்பர்களே,

இந்த முறை, மாவோயிச பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பகுதிகளில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் இன்னும் துடிப்பாக இருக்கப் போகின்றன. 50-55 ஆண்டுகளாக அவர்கள் தீபாவளியைப் பார்க்கவில்லை, இப்போது அவர்கள் தீபாவளியைப் பார்க்கப் போகிறார்கள். நண்பர்களே, நமது கடின உழைப்பு பலனளிக்கும், அங்கும் மகிழ்ச்சியின் தீபங்கள் ஏற்றப்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இன்று, எனது நாட்டு மக்களுக்கும் என்.டி.டி.வி. பார்வையாளர்களுக்கும் நான் உறுதியளிக்கிறேன்: நக்சலிசம் மற்றும் மாவோயிச பயங்கரவாதத்திலிருந்து நாடு முழுமையாக விடுபடும் நாள் வெகு தொலைவில் இல்லை, இதுவும் மோடியின் உத்தரவாதம்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய நமது பயணம் என்பது வெறும் வளர்ச்சியின் பயணம் மட்டுமல்ல. அங்கே வளர்ச்சியும் கண்ணியமும் கைகோர்த்துச் செல்லும்; அங்கே குடிமக்களுக்கு வேகமும் மரியாதையும் இருக்கும்; அங்கே புத்தாக்கத்தின் நோக்கம் வெறும் திறமையாக மட்டும் இல்லாமல், உளப்பாதிப்பு (Empathy) மற்றும் கருணையுடனும் இருக்கும். இந்த தொலைநோக்குடன் நாம் முன்னோக்கிச் செல்கிறோம்.

என்.டி.டி.வி. உலக உச்சி மாநாடு போன்ற நிகழ்வுகள் இந்த தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கிக் கொண்டு செல்வதில் மிகப்பெரிய பங்கைக் கொண்டுள்ளன. நாட்டுக்காகப் பேசுவதற்கு என்னை அழைத்த என்.டி.டி.வி.க்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்வு வெற்றிபெற உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். மேலும், தீபாவளி கொண்டாட்டங்களுக்கும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

----

(Release ID: 2180611)

AD/VK/KR

 

 


(रिलीज़ आईडी: 2252404) आगंतुक पटल : 70
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam