பிரதமர் அலுவலகம்
எத்தியோப்பியப் பிரதமருடனான பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
प्रविष्टि तिथि:
16 DEC 2025 10:17PM by PIB Chennai
மேதகு பிரதமர் அவர்களே, எனது சகோதரரே, எனது நண்பரே,
எத்தியோப்பியாவிற்கு வருகை தந்திருப்பது எனக்கு உண்மையிலேயே பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இது எத்தியோப்பியாவிற்கு எனது முதல் பயணமாகும். இருப்பினும், நான் இங்கு கால் வைத்த தருணத்திலிருந்தே, ஒரு ஆழ்ந்த பிணைப்பையும் அணுக்கத்தையும் உணர்கிறேன்.
இந்தியாவும் எத்தியோப்பியாவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ச்சியான தொடர்பு, உரையாடல் மற்றும் பரிமாற்றங்களைப் பகிர்ந்து கொள்கின்றன. பல மொழிகள் மற்றும் பாரம்பரியங்களால் செழுமையுற்ற நமது இரு நாடுகளும் 'வேற்றுமையில் ஒற்றுமை' என்பதன் அடையாளங்களாகத் திகழ்கின்றன. இரு நாடுகளும் அமைதி மற்றும் மனிதகுல நலனில் அர்ப்பணிப்பு கொண்ட ஜனநாயக சக்திகளாகும். நாம் 'குளோபல் சவுத்' (Global South) அமைப்பின் சக பயணிகளாகவும் கூட்டாளிகளாகவும் இருக்கிறோம். சர்வதேச தளங்களிலும் நாம் தோளோடு தோள் நின்று செயல்பட்டு வருகிறோம்.
ஆப்பிரிக்க ஒன்றியத்தின் (African Union) தலைமையகம் எத்தியோப்பியாவில் அமைந்திருப்பது, இந்த நாட்டை ஆப்பிரிக்க இராஜதந்திரத்தின் சங்கமமாக மாற்றுகிறது. உள்ளடக்கிய உலகத்தைப் பற்றிய நமது பகிரப்பட்ட பார்வையால் ஈர்க்கப்பட்டு, 2023-ம் ஆண்டில் ஆப்பிரிக்க ஒன்றியம் G20 அமைப்பில் உறுப்பினராவதை இந்தியா உறுதி செய்தது. இந்த அம்சங்களையெல்லாம் கருத்தில் கொண்டு, இன்று இந்தியா-எத்தியோப்பியா உறவை 'உத்திபூர்வ கூட்டாண்மை' (Strategic Partnership) நிலைக்கு உயர்த்துகிறோம். இந்த நடவடிக்கை நமது உறவுகளுக்கு புதிய ஆற்றலையும், புதிய வேகத்தையும், புதிய ஆழத்தையும் வழங்கும்.
எதிர்காலத்தின் அபரிமிதமான சாத்தியக்கூறுகளை நனவாக்க ஒரு தெளிவான வரைபடம் (Roadmap) தயாரிக்கப்படும். இன்று பொருளாதாரம், புத்தாக்கம், தொழில்நுட்பம், பாதுகாப்பு, சுகாதாரம், திறன் மேம்பாடு மற்றும் பலதரப்பு ஒத்துழைப்பு போன்ற நமது ஒத்துழைப்பின் முக்கிய பரிமாணங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் எத்தியோப்பிய மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை இரட்டிப்பாக்க இன்று முடிவு செய்துள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
மேதகு பிரதமர் அவர்களே,
பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நீங்கள் தெரிவித்த இரங்கலுக்கும், பயங்கரவாதத்திற்கு எதிரான எங்களது போராட்டத்தில் நீங்கள் அளிக்கும் ஆதரவிற்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் நட்பு நாடுகளின் ஒற்றுமை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட சிறப்பான வரவேற்பிற்காக மீண்டும் ஒருமுறை எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
----
(Release ID:2204957)
AD/VK/KR
(रिलीज़ आईडी: 2250087)
आगंतुक पटल : 33
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam