பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நடந்த இந்தியா-ரஷ்யா வர்த்தக மன்ற கூட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

प्रविष्टि तिथि: 05 DEC 2025 7:48PM by PIB Chennai

எனது நண்பர், அதிபர் புதின் அவர்களே, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள அனைத்துத் தலைவர்களே, தாய்மார்களே மற்றும் பெரியோர்களே, வணக்கம்!

இந்தியா-ரஷ்யா வர்த்தக மன்றம் குறித்து நான் நம்புவது என்னவென்றால், இவ்வளவு பெரிய ஒரு குழுவுடன் இன்றைய இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக அதிபர் திரு புதின் பங்கேற்றது ஒரு மிகவும் முக்கியமான முயற்சி ஆகும். உங்கள் அனைவரையும் நான் மனபூர்வமாக வரவேற்கிறேன், உங்கள் மத்தியில் இருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த மன்றத்தில் கலந்துகொண்டு, தனது மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட எனது நண்பர் அதிபர் புதினுக்கு நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வர்த்தகத்திற்காக எளிமைப்படுத்தப்பட்ட, யூகிக்கக்கூடிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தியா மற்றும் யூரேசிய பொருளாதார ஒன்றியம் ஆகியவற்றுக்கு இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்  குறித்த விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன

மேலும், நண்பர்களே,

பியூஷ் கோயல் அவர்கள், இப்போது குறிப்பிட்டது போல, இந்த பல்வகைப்பட்ட தலைப்புகளிலும் மற்றும் அதிபர் விவரித்த சாத்தியக்கூறுகளை நாம் பார்க்கும்போதும், மிகக் குறுகிய காலத்திலேயே நாம் முக்கியமான இலக்குகளை அடைய முடியும்.

அது வர்த்தகமாக இருந்தாலும் சரி அல்லது இராஜதந்திரமாக இருந்தாலும் சரி, எந்தவொரு கூட்டாண்மையின் அடித்தளமும் பரஸ்பர நம்பிக்கைதான். இந்த நம்பிக்கையே இந்தியா-ரஷ்யா உறவுகளின் மிகப்பெரிய பலமாகும். இது நமது கூட்டு முயற்சிகளுக்குத் திசையையும், உந்துதலையும் அளிக்கிறது. இதுவே, புதிய கனவுகளுடன், புதிய விருப்பங்களுடன் நாம் தீவிரமாக செயல்படுவதற்கு ஊக்கமளிக்கும் ஏவுதளம்  ஆகும்.

கடந்த ஆண்டு, அதிபர் புதினும் நானும் 2030-ம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தை 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாகக் கொண்டு செல்வது என்ற இலக்கை நிர்ணயித்தோம். ஆனால், நேற்று முதல் அதிபர் புதினுடன் நான் நடத்திய உரையாடல்களின் அடிப்படையிலும், நாம் காணும் ஆற்றலின் அடிப்படையிலும், 2030 வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன். அதை என்னால் தெளிவாகக் காண முடிகிறது. அந்த இலக்கை குறித்த காலக்கெடுவுக்கு முன்னதாகவே அடைவதற்கு நாம் உறுதியுடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம், மேலும் எனது நம்பிக்கை வளர்ந்து கொண்டே வருகிறது. சுங்க வரிகளும்  மற்றும் சுங்க வரிகள் அல்லாத தடைகளும்  குறைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால் நண்பர்களே,

இந்த முயற்சிகளுக்குப் பின்னால் உள்ள உண்மையான சக்தி உங்களைப் போன்ற வர்த்தகத் தலைவர்களிடம் தான் உள்ளது. உங்களின் ஆற்றல், உங்களின் புதுமையான கண்டுபிடிப்புகள், மற்றும் உங்களின் இலட்சியம் ஆகியவைதான் நமது பகிரப்பட்ட எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.

நண்பர்களே,

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் நாம் ஏற்படுத்திய மாற்றத்தின் வேகத்தையும், அளவையும் பின்பற்றி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த 11 ஆண்டுகால சீர்திருத்தப் பயணத்தில், நாம் சோர்வடையவும் இல்லை, நின்றுவிடவும் இல்லை. நமது உறுதியானது முன்பை விடவும் வலிமையானதாக உள்ளது, மேலும் நமது இலக்கை நோக்கிப் பெரும் நம்பிக்கையுடன், மிக வேகமானப் பாதையில் நாம் முன்னேறி வருகிறோம். சரக்கு மற்றும் சேவை வரியில்  அடுத்த தலைமுறைச் சீர்திருத்தங்கள் மற்றும் இணக்கங்களைக்  குறைத்தது ஆகியவை வர்த்தகம் செய்வதை எளிதாக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும். பாதுகாப்பு  மற்றும் விண்வெளித் துறைகள் தனியார் துறைக்குத் திறக்கப்பட்டுள்ளன, இத்துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. இப்போது, சிவில் அணுசக்தித் துறையிலும் புதிய சாத்தியக்கூறுகளுக்கான கதவுகளை நாம் திறக்க இருக்கிறோம். இவை வெறும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, இவை மனநிலைச் சீர்திருத்தங்கள் ஆகும். இந்தச் சீர்திருத்தங்களுக்குப் பின்னால் ஒரே ஒரு தீர்மானம் மட்டுமே உள்ளது, அதுதான் ஒரு வளர்ச்சியடைந்த இந்தியா.

நேற்றும் இன்றும் நீங்கள் மிகவும் பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள விவாதங்களை நடத்தியுள்ளீர்கள். இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான ஒத்துழைப்பின் அனைத்துப் பகுதிகளும் இந்தக் கூட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டுள்ளன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். உங்களின் ஆலோசனைகள் மற்றும் முயற்சிகளுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். என் பங்கிற்கு, நமது ஒத்துழைப்பை  முன்னோக்கி கொண்டு செல்ல சில யோசனைகளை தெரிவிக்க விரும்புகிறேன்.

இன்றைய கூட்டத்தில் தளவாடங்கள்  மற்றும் போக்குவரத்து இணைப்புத் துறையில் நமது இணைப்பின் முழு ஆற்றலை உணர்ந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை அதிபர் புதினும் நானும் வலியுறுத்தினோம். ஐஎன்எஸ்டிசி என்ற  தெற்கு வடக்கு கடல் வழி, அதாவது சென்னை - விளாடிவோஸ்டாக் வழித்தடம் ஆகியவற்றில் முன்னேற நாம் உறுதிபூண்டுள்ளோம். இது தொடர்பான முன்னேற்றம் விரைவில் ஏற்படும். இது பயண நேரத்தைக் குறைக்கும், செலவுகளைக் குறைக்கும், மற்றும் வர்த்தகத்திற்கான புதிய சந்தைகளைத் திறந்துவிடும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் வலிமையால், சுங்கவரி, (தளவாடங்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளை மெய்நிகர் வர்த்தக வழித்தடங்கள்  மூலம் நம்மால் இணைக்க முடியும். இது சுங்க அனுமதியை விரைவுபடுத்தும், ஆவணப்பணிகளைக் குறைக்கும், மேலும் சரக்கு இயக்கத்தை மிகவும் தடையற்றதாக மாற்றும்.

இந்தியாவில் இருந்து பால் மற்றும் கடல்சார் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தகுதிவாய்ந்த இந்திய நிறுவனங்களின் பட்டியலை ரஷ்யா சமீபத்தில் விரிவாக்கம் செய்துள்ளது. இது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இந்தியாவின் உயர்தர கடல்சார் பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட கடல் உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கு உலகளவில் அதிக தேவை உள்ளது. குளிர்பதன கிடங்குகளுக்கான தளவாடங்கள், ஆழ்கடல் மீன்பிடித்தல் மற்றும் மீன்பிடி துறைமுகங்களை நவீனமயமாக்குதல் ஆகியவற்றில் நாம் கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்பக் கூட்டு செயல்பாட்டை  உருவாக்கலாம். இது ரஷ்யாவின் உள்நாட்டுத் தேவையையும் பூர்த்தி செய்யும், மேலும் இந்தியப் பொருட்களுக்குப் புதிய சந்தைகளையும் பெற்றுத்தரும். மலிவான, திறமையான மின்சார வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் சிஎன்ஜி போக்குவரத்துத் தீர்வுகளில் இந்தியா இன்று உலகளவில் ஒரு தலைவராக உள்ளது. ரஷ்யா மேம்பட்ட மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடாகும். மின்வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் மற்றும் பகிரப்பட்ட போக்குவரத்துத்  தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் நாம் கூட்டாளராக முடியும். இது நமது சொந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுவதுடன், குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற உலகளாவிய தெற்கின்  வளர்ச்சிக்கும் பங்களிக்கும்.

இந்தியா இன்று உலகெங்கிலும் மலிவு விலையில், மிக உயர்ந்த தரமான மருந்துகளை வழங்கி வருகிறது. அதனால்தான் இந்தியா 'உலகின் மருந்தகம்என்றும் அழைக்கப்படுகிறது. கூட்டாக நாம் தடுப்பூசி மேம்பாடு, புற்றுநோய் சிகிச்சைகள், கதிரியக்க மருந்துகள்  மற்றும் ஏபிஐ விநியோகச் சங்கிலி ஆகியவற்றில் ஒத்துழைக்க முடியும். இது சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன் புதிய தொழில்களையும் உருவாக்கும்.

இயற்கை இழைகள் முதல் தொழில்நுட்ப ஜவுளிகள்  வரை இந்தியாவுக்கு அபரிமிதமான ஆற்றல் உள்ளது. வடிவமைப்பு, கைவினைப்பொருட்கள் மற்றும் கம்பளங்களில் நமக்கு உலகளாவிய இருப்பு உள்ளது. ரஷ்யா பாலிமர்கள் மற்றும் செயற்கை மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு முக்கிய நாடாகும். நாம் இணைந்து ஒரு நெகிழ்ச்சியான ஜவுளி மதிப்புச் சங்கிலியை உருவாக்க முடியும்.

அதேபோல, உரங்கள், மண்பாண்டங்கள், சிமெண்ட் உற்பத்தி மற்றும் மின்னணுவியல் போன்ற துறைகளிலும் ஒத்துழைப்புக்கான பல சாத்தியக்கூறுகள் உள்ளன.

நண்பர்களே,

இன்று, நமது இரு நாடுகளின் குடிமக்களுக்கான சுற்றுலா விசாக்கள் தொடர்பாக நாம் பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். இது நமது இரு நாடுகளுக்கும் இடையேயான சுற்றுலாவை மேம்படுத்தும். இது சுற்றுலா நடத்துபவர்களுக்கு புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குவதுடன், புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். நண்பர்களே, இன்று இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டுக் கண்டுபிடிப்பு, கூட்டு உற்பத்தி, கூட்டு உருவாக்கம்  என்ற புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளன.

நமது இலக்கு பரஸ்பர வர்த்தகத்தை அதிகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடவில்லை. முழு மனிதகுலத்தின் நலனை நாம் உறுதி செய்ய விரும்புகிறோம். இதைச் செய்வதற்கு, உலகளாவிய சவால்களுக்கு நிலையான தீர்வுகளை நாம் உருவாக்க வேண்டும். இந்தப் பயணத்தில் ரஷ்யாவுடன் தோளோடு தோள் சேர்ந்து நடக்க இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது.

உங்கள் அனைவருக்கும் நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், வாருங்கள், 'இந்தியாவில் தயாரிப்போம்', இந்தியாவுடன் கூட்டாளராகுங்கள், மேலும் உலகத்திற்காகத் தயாரிப்போம். இந்த வார்த்தைகளுடன், அதிபர் புதின் மற்றும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி.

 

***

(Release ID 2199718)

AD/VK/KR


(रिलीज़ आईडी: 2249625) आगंतुक पटल : 45
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam