பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊரடங்கு குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்: மத்திய அரசு

தவறான செய்திகள் குறித்து குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 MAR 2026 6:16PM by PIB Chennai

மேற்கு ஆசியாவில் நிலவி வரும் சூழல் குறித்து ஊடகங்களுக்குத் தொடர்ந்து தகவல் அளிக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய அரசு இன்று தேசிய ஊடக மையத்தில் தனது வழக்கமான செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. இதில், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை, வெளியுறவு மற்றும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று நிலைத்தன்மையை உறுதி செய்ய எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.

கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள்

அனைத்து சுத்திகரிப்பு நிலையங்களும் போதுமான கச்சா எண்ணெய் இருப்புடன் உயர் திறனில் இயங்கி வருவதுடன், போதுமான பெட்ரோல், டீசல் இருப்பும் பராமரிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு நுகர்வை ஆதரிக்கும் வகையில், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உள்நாட்டு எல்பிஜி உற்பத்தி 40% அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில்லறை விற்பனை நிலையங்கள்

நாடு முழுவதும் அனைத்து சில்லறை விற்பனை நிலையங்களும் வழக்கம் போல் இயங்கி வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, நுகர்வோரைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ₹10 குறைத்துள்ளது. போதுமான உள்நாட்டு இருப்பை உறுதி செய்வதற்காக, டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ₹21.5 மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ₹29.5 வரியையும் அரசு விதித்துள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலில் 50%மும், டீசலில் 30%மும்  உள்நாட்டு சந்தைக்கு வழங்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இயற்கை எரிவாயு

வீட்டு உபயோகத்திற்கான குழாய் மூலம் வழங்கப்படும் பிஎன்ஜி மற்றும் சிஎன்ஜி எரிவாயுவிற்கு 100% முன்னுரிமை விநியோகம் தொடர்கிறது. அதே நேரத்தில் தொகுப்புடன்  இணைக்கப்பட்டுள்ள தொழில்துறை மற்றும் வணிக நுகர்வோருக்கான விநியோகம் சராசரி நுகர்வில் சுமார் 80% ஆக உள்ளது. உணவகங்கள், தங்கும் விடுதிகள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகள் போன்ற வணிக நிறுவனங்களுக்கு பிஎன்ஜி இணைப்புகளுக்கு முன்னுரிமை அளிக்குமாறு நகர எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு (சிஜிடி) அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிஜிடி வலையமைப்புகளின் விரிவாக்கத்திற்குத் தேவையான ஒப்புதல்களை விரைவுபடுத்துமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் அமைச்சகங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

எல்பிஜி

நிலவும் புவிசார் அரசியல் சூழல் காரணமாக சமையல் எரிவாயு விநியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. எல்பிஜி விநியோக மையங்களில் எந்தவிதமான தட்டுப்பாடுகளும் பதிவாகவில்லை. வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் வழக்கம் போல் தொடர்கிறது.

பொதுமக்களுக்கான வேண்டுகோள்

பெட்ரோல், டீசல் மற்றும் எல்பிஜி கிடைப்பதை உறுதிசெய்ய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் பீதியுடன் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மக்கள் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே நம்புமாறும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிஎன்ஜி மற்றும் மின்சார அடுப்புகள் போன்ற மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

ஊரடங்கு போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பரப்பப்படும் தவறான செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறும் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2246202&reg=3&lang=1

***

TV/BR/SE


(வெளியீட்டு அடையாள எண்: 2246329) வருகையாளர் எண்ணிக்கை : 22