பிரதமர் அலுவலகம்
ஸ்கைரூட் இன்ஃபினிட்டி வளாக தொடக்க விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
27 NOV 2025 1:30PM by PIB Chennai
மத்திய அமைச்சரவையில் எனது சகாவான திரு. ஜி. கிஷன் ரெட்டி அவர்களே; ஆந்திர மாநில தொழில் துறை அமைச்சர் திரு. டி. ஜி. பாரத் அவர்களே; இன்-ஸ்பேஸ் (IN-SPACE) தலைவர் திரு. பவன் கோயங்கா அவர்களே; ஸ்கைரூட் குழுவினரே; பிற முக்கியப் பிரமுகர்களே; பெரியோர்களே மற்றும் தாய்மார்களே!
நண்பர்களே,
இன்று விண்வெளித் துறையில் முன்னெப்போதும் இல்லாத ஒரு வாய்ப்பை நாடு கண்டு வருகிறது. இன்று இந்தியாவின் விண்வெளி சூழல் அமைப்பில் தனியார் துறை ஒரு மாபெரும் பாய்ச்சலை மேற்கொண்டுள்ளது. ஸ்கைரூட் நிறுவனத்தின் 'இன்ஃபினிட்டி வளாகம்', இந்தியாவின் புதிய சிந்தனை, கண்டுபிடிப்பு மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக இளைஞர்களின் ஆற்றலைப் பிரதிபலிக்கிறது. நமது இளைஞர்களின் புத்தாக்கம், ரிஸ்க் எடுக்கும் திறன் மற்றும் தொழில்முனைவுத் திறன் ஆகியவை இன்று புதிய உயரங்களை எட்டி வருகின்றன. வரும் காலங்களில் உலகளாவிய செயற்கைக்கோள் ஏவுதள சூழல் அமைப்பில் பாரதம் ஒரு தலைவராக உருவெடுக்கும் என்பதற்கு இன்றைய நிகழ்வே ஒரு சான்றாகும்.
பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பரத் தாகா ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இருவரும் பல இளம் விண்வெளித் தொழில்முனைவோருக்கும், நாட்டின் ஒவ்வொரு இளைஞருக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறீர்கள். உங்கள் மீது நீங்கள் நம்பிக்கை வைத்தீர்கள், ஆபத்துகளை எதிர்கொள்ளத் தயங்கவில்லை. அதன் விளைவை இன்று ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கிறது. உங்களைக் கண்டு நாடு பெருமை கொள்கிறது.
நண்பர்களே,
இந்தியாவின் விண்வெளிப் பயணம் மிகக் குறைந்த வளங்களைக் கொண்டே தொடங்கியது. ஆனால் நமது லட்சியங்கள் ஒருபோதும் எல்லைக்குட்பட்டதாக இருந்ததில்லை. ராக்கெட் பாகங்களை நாம் மிதிவண்டியில் கொண்டு சென்ற ஒரு காலம் இருந்தது. இன்று, கனவுகளின் உயரம் என்பது வளங்களால் தீர்மானிக்கப்படுவதில்லை, மன உறுதியால் (Resolve) மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. பல தசாப்தங்களாக இந்தியாவின் விண்வெளிப் பயணத்திற்கு இஸ்ரோ புதிய சிறகுகளை வழங்கியுள்ளது. நம்பகத்தன்மை, திறன் மற்றும் மதிப்பு ஆகியவற்றில் இந்தியா தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
மாறிவரும் இந்தக் காலக்கட்டத்தில் விண்வெளித் துறை எவ்வளவு வேகமாக விரிவடைந்து வருகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தகவல் தொடர்பு, விவசாயம், கடல்சார் கண்காணிப்பு, நகரத் திட்டமிடல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு ஆகியவற்றின் அடித்தளமாக இது மாறியுள்ளது. அதனால்தான் பாரதத்தின் விண்வெளித் துறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தங்களை நாங்கள் மேற்கொண்டோம்.
அரசாங்கம் விண்வெளித் துறையைத் தனியார் கண்டுபிடிப்புகளுக்குத் திறந்துவிட்டதுடன், ஒரு புதிய விண்வெளிக் கொள்கையை வரைவு செய்தது. தொடக்கநிலை நிறுவனங்களையும் தொழில்துறையையும் புத்தாக்கத்துடன் இணைக்க நாங்கள் முயற்சி செய்தோம். நாங்கள் இன்-ஸ்பேஸ் அமைப்பை நிறுவி, இஸ்ரோவின் வசதிகளையும் தொழில்நுட்பத்தையும் நமது ஸ்டார்ட்அப்களுக்கு வழங்கினோம். கடந்த 6-7 ஆண்டுகளில், பாரதம் தனது விண்வெளித் துறையை ஒரு திறந்த, கூட்டுறவு மற்றும் புத்தொழில் சார்ந்த சூழல் அமைப்பாக மாற்றியுள்ளது. இன்றைய நிகழ்வு நமக்கு இதன் ஒரு சிறு பார்வையைத் தருவதுடன், நம்மைப் பெருமையால் நிரப்புகிறது.
நண்பர்களே,
பாரதத்தின் இளைஞர்கள் எப்போதும் எல்லாவற்றிற்கும் மேலாக தேசிய நலனுக்கே முதலிடம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு வாய்ப்பையும் அவர்கள் மிகச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசாங்கம் விண்வெளித் துறையைத் திறந்துவிட்டபோது, நமது இளைஞர்கள், குறிப்பாக நமது 'ஜென்-ஜி' (Gen-Z) இளைஞர்கள், அதன் முழுப் பலனையும் பெற முன்வந்தனர். இன்று, பாரதத்தில் உள்ள 300-க்கும் மேற்பட்ட விண்வெளி தொடக்கநிலை நிறுவனங்கள் நாட்டின் விண்வெளிப் பயணத்தின் எதிர்காலத்திற்குப் புதிய நம்பிக்கையை அளித்து வருகின்றன.
இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால், நமது விண்வெளி ஸ்டார்ட்அப்களில் பெரும்பாலானவை மிகச் சிறிய குழுக்களுடன் தொடங்கப்பட்டவை. கடந்த 5-6 ஆண்டுகளில் அவர்களில் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சில சமயங்களில் இரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள், சில சமயம் ஐந்து சகோதரிகள் அல்லது நண்பர்கள் ஒரு சிறிய வாடகை அறையைப் பகிர்ந்து கொண்டு பணியாற்றுவார்கள். குழுக்கள் சிறியவை, வளங்கள் வரையறுக்கப்பட்டவை, ஆனால் அவர்களின் லட்சியங்கள் உயரத்தில் பறந்தன. இந்த உணர்வுதான் பாரதத்தின் 'தனியார் விண்வெளிப் புரட்சிக்கு' வித்திட்டுள்ளது.
இன்று, 'ஜென்-ஜி' பொறியாளர்கள், வடிவமைப்பாளர்கள், குறியீட்டாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகின்றனர். உந்துவிசை அமைப்புகள், கலப்புப் பொருட்கள், ராக்கெட் நிலைகள் அல்லது செயற்கைக்கோள் தளங்கள் என எதுவாக இருந்தாலும், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கற்பனை செய்ய முடியாத துறைகளில் பாரதத்தின் இளைஞர்கள் இன்று பணியாற்றி வருகின்றனர். இந்தியாவின் தனியார் விண்வெளித் திறமையாளர்கள் உலகம் முழுவதும் ஒரு தனித்துவமான அடையாளத்தை நிறுவி வருகின்றனர். இன்று, பாரதத்தின் விண்வெளித் துறை உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்கும் ஒரு இடமாக மாறி வருகிறது.
இன்று, உலகம் முழுவதும் சிறிய செயற்கைக்கோள்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. செயற்கைக்கோள்களை ஏவும் இடைவெளி குறைந்து அதன் வேகம் அதிகரித்து வருகிறது, மேலும் பல புதிய நிறுவனங்கள் செயற்கைக்கோள் சேவைத் துறையில் நுழைந்து வருகின்றன. விண்வெளி என்பது இப்போது ஒரு உத்திசார் சொத்தாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. எனவே, உலகளாவிய விண்வெளிப் பொருளாதாரம் வரவிருக்கும் ஆண்டுகளில் பலமடங்கு பெருகப்போகிறது. இது பாரதத்தின் இளைஞர்களுக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும்.
நண்பர்களே,
விண்வெளித் துறையில் இந்தியா பெற்றுள்ள திறன், உலகில் ஒரு சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. நம்மிடம் நிபுணத்துவம் வாய்ந்த பொறியாளர்கள், உயர்தர உற்பத்தி சூழல் அமைப்பு, உலகத்தரம் வாய்ந்த ஏவுதளங்கள் மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் மனப்பாங்கு ஆகியவை உள்ளன. இந்தியாவின் விண்வெளித் திறன் செலவு குறைவானது மட்டுமல்லாமல், நம்பகமானதுமாகும். இதனால்தான் உலகம் பாரதத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளது. உலகளாவிய நிறுவனங்கள் இந்தியாவில் செயற்கைக்கோள்களைத் தயாரிக்கவும், இந்தியாவிடமிருந்து ஏவுதளச் சேவைகளைப் பெறவும், இந்தியாவுடன் தொழில்நுட்பத்தில் கூட்டு செயல்பாடுகளை வைத்துக் கொள்ளவும் விரும்புகின்றன. எனவே, நாம் இந்தத் தருணத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
நண்பர்களே,
இன்று விண்வெளித் துறையில் நாம் காணும் மாற்றங்கள், பாரதத்தில் நிகழ்ந்து வரும் 'ஸ்டார்ட்அப் புரட்சியின்' ஒரு பகுதியாகும். கடந்த பத்தாண்டுகளில், பல்வேறு துறைகளில் புதிய ஸ்டார்ட்அப்களின் அலை உருவாகியுள்ளது. அது நிதிதொழில்நுட்பம்‘ வேளாண் தொழில்நுட்பம், சுகாதார தொழில்நுட்பம். பருவநில தொழில்நுட்பம், கல்வி தொழில்நுட்பம் அல்லது பாதுகாப்பு தொழில்நுட்பம் என எதுவாக இருந்தாலும், பாரதத்தின் இளைஞர்கள், நமது 'ஜென்-ஜி' (Gen-Z) தலைமுறையினர், ஒவ்வொரு துறையிலும் புதிய தீர்வுகளை வழங்கி வருகின்றனர்.
இன்று, உலகின் 'ஜென்-ஜி' இளைஞர்களுக்கு நான் நம்பிக்கையுடன் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் – அவர்கள் உண்மையான உத்வேகத்தைப் பெற விரும்பினால், அதை இந்தியாவின் இளைஞர்களிடமிருந்து பெற முடியும். பாரத இளைஞர்களின் படைப்பாற்றல், அவர்களின் நேர்மறையான மனப்பாங்கு மற்றும் அவர்களின் திறன் மேம்பாடு ஆகியவை உலகெங்கிலும் உள்ள இளைஞர்களுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இன்று, இந்தியா உலகின் மூன்றாவது மிகப்பெரிய புத்தொழில் நிறுவன சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது. ஒரு காலத்தில் புத்தொழில் நிறுவனங்கள் சில பெரிய நகரங்களுக்குள் மட்டுமே முடங்கிக் கிடந்தன. ஆனால் இன்று, இந்தியாவின் மிகச்சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்து கூட புத்தொழில் நிறுவனங்கள் உருவாகி வருகின்றன. இன்று நாட்டில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப்கள் உள்ளன, அவற்றில் பல 'யூனிகார்ன்' அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
நண்பர்களே,
இன்று இந்தியா செயலிகள் மற்றும் சேவைகளுடன் மட்டும் நின்றுவிடவில்லை. நமது இளைஞர்களின் (Gen-Z) முயற்சியால் டீப்-டெக் (ஆழ்ந்த தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் வன்பொருள் கண்டுபிடிப்புகளை நோக்கி நாம் வேகமாக நகர்ந்து வருகிறோம். உதாரணமாக, செமி கண்டக்டர் துறையை எடுத்துக் கொள்ளுங்கள். அரசாங்கம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கைகள் இந்தியாவின் தொழில்நுட்ப எதிர்காலத்திற்கான அடித்தளத்தை வலுப்படுத்துகின்றன. செமிகண்டக்டர் சிப் உற்பத்தி அலகுகள், சிப் உற்பத்தி மற்றும் வடிவமைப்பு மையங்கள் நாட்டில் வேகமாக வளர்ந்து வருகின்றன. சிப்கள் முதல் முழுமையான அமைப்புகள் வரை, இந்தியா ஒரு வலிமையான மின்னணு மதிப்புச் சங்கிலியை உருவாக்கி வருகிறது. இது சுயசார்பு இந்தியாவுக்கான நமது உறுதியின் ஒரு பகுதியாகும், மேலும் இது உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாரதத்தை ஒரு வலுவான மற்றும் நம்பகமான தூணாக மாற்றும்.
நண்பர்களே,
நமது சீர்திருத்தங்களின் வரம்பு தொடர்ந்து விரிவடைந்து வருகிறது. விண்வெளித் துறை கண்டுபிடிப்புகளைத் தனியார் துறைக்குத் திறந்துவிட்டது போலவே, இப்போது மற்றொரு மிக முக்கியமான துறையிலும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். அணுசக்தித் துறையையும் தனியார் பங்களிப்பிற்குத் திறக்கும் நோக்கில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். இத்துறையிலும் தனியார் துறை வலுவான பங்கினை வகிப்பதற்கான அடித்தளத்தை நாங்கள் அமைத்து வருகிறோம். இது சிறிய மாதிரி அணு உலைகள் மேம்பட்ட அணு உலைகள் மற்றும் அணுசக்தி கண்டுபிடிப்புகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும். இந்தச் சீர்திருத்தம் நமது எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தலைமைத்துவத்திற்கு ஒரு புதிய வலிமையை அளிக்கும்.
நண்பர்களே
எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது இன்று மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளையே பெரிதும் சார்ந்துள்ளது. அதனால்தான் நமது அரசு இளைஞர்களுக்கு அதிகபட்ச ஆராய்ச்சி வாய்ப்புகளை வழங்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. நவீன ஆராய்ச்சிகளில் இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக நாம் 'தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையை' நிறுவியுள்ளோம். "ஒரே நாடு, ஒரே சந்தா" என்ற திட்டம், அனைத்து மாணவர்களும் சர்வதேச ஆய்விதழ்களை எளிதாக அணுக வழிவகை செய்துள்ளது. 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 'ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதி', நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்குப் பெரிதும் உதவும். நாம் 10,000-க்கும் மேற்பட்ட 'அடல் டிங்கரிங் ஆய்வகங்களை' தொடங்கியுள்ளோம், இவை மாணவர்களிடையே ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க உணர்வைத் தூண்டி வருகின்றன. எதிர்காலத்தில் புதிதாக 50,000 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை அமைக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அரசாங்கத்தின் இந்த முயற்சிகள் பாரதத்தில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான அடித்தளத்தை உருவாக்கி வருகின்றன.
நண்பர்களே,
வரவிருக்கும் காலம் இந்தியாவிற்கும், இந்திய இளைஞர்களுக்கும், இந்தியாவின் கண்டுபிடிப்புகளுக்குமே உரியது. சில மாதங்களுக்கு முன்பு, விண்வெளி தினத்தை முன்னிட்டு நமது விண்வெளி லட்சியங்களைப் பற்றி நான் பேசினேன். அடுத்த ஐந்து ஆண்டுகளில் பாரதம் தனது ஏவுதல் திறனைப் புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என்று நாம் உறுதி பூண்டோம். இந்தியாவின் விண்வெளித் துறையிலிருந்து ஐந்து புதிய 'யூனிகார்ன்கள்' (அதாவது 1 பில்லியன் டாலர் மதிப்புள்ள 5 விண்வெளி நிறுவனங்கள்) உருவாகும் என்றும் நாங்கள் முடிவு செய்தோம். ஸ்கைரூட் குழுவினர் முன்னேறி வரும் விதத்தைப் பார்க்கும்போது, இந்தியா தனது அனைத்து இலக்குகளையும் நிச்சயம் அடையும் என்பது உறுதியாகிறது.
நண்பர்களே,
ஒவ்வொரு இளம் இந்தியருக்கும், ஒவ்வொரு ஸ்டார்ட்அப்பிற்கும், விஞ்ஞானி, பொறியாளர் மற்றும் தொழில்முனைவோருக்கும், எனது இளம் நண்பர்களுக்கும் நான் ஒன்றை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன், இது எனது உத்தரவாதம்: அரசாங்கம் ஒவ்வொரு அடியிலும் உங்களுடன் நிற்கும். மீண்டும் ஒருமுறை, முழு ஸ்கைரூட் குழுவிற்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாரதத்தின் விண்வெளிப் பயணத்திற்கு புதிய வேகத்தை அளித்து வரும் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாருங்கள், 21-ஆம் நூற்றாண்டை பூமியிலும் சரி, விண்வெளியிலும் சரி, பாரதத்தின் நூற்றாண்டாக மாற்றுவோம். உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. நல்வாழ்த்துகள்!
---
(Release Id: 2195250)
AD/VK/EA
(வெளியீட்டு அடையாள எண்: 2243115)
வருகையாளர் எண்ணிக்கை : 29
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam