பிரதமர் அலுவலகம்
ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
19 NOV 2025 2:30PM by PIB Chennai
சாய் ராம்!
முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு அவர்களே, மத்திய அமைச்சரவையில் உள்ள எனது சகாக்களான ராம்மோகன் நாயுடு ஜி, ஜி. கிஷன் ரெட்டி ஜி, பூபதி ராஜு ஸ்ரீனிவாச வர்மா ஜி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஜி, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஜி, மாநில அமைச்சர் நாரா லோகேஷ் ஜி, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர். ஜே. ரத்னாகர் ஜி, துணைவேந்தர் கே. சக்ரவர்த்தி ஜி, ஐஸ்வர்யா ஜி, மற்றும் இங்கு வருகை புரிந்துள்ள அனைத்துப் பிரமுகர்களே, தாய்மார்களே, பெரியோர்களே, சாய் ராம்!
நண்பர்களே,
புட்டபர்த்தியின் இந்த புனித பூமியில் இன்று உங்கள் அனைவருடனும் இருப்பது எனக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான மற்றும் ஆன்மீக அனுபவம். சற்று நேரத்திற்கு முன், நான் பாபாவின் சமாதியில் எனது மரியாதையை செலுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். அவரது பாதங்களில் விழுந்து ஆசி பெறுவது, என் இதயத்தை எப்போதும் உணர்ச்சியால் நிரப்பும் ஒரு அனுபவமாகும்.
நண்பர்களே,
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்த நூற்றாண்டு விழா, வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல; இது நமது தலைமுறைக்குக் கிடைத்த ஒரு தெய்வீக ஆசீர்வாதம். அவர் இப்போது நம்முடன் இல்லாவிட்டாலும், அவரது போதனைகள், அவரது அன்பு, அவரது சேவை மனப்பான்மை ஆகியவை இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றன. 140க்கும் மேற்பட்ட நாடுகளில் கோடிக்கணக்கான மக்கள் அவரது வழிகாட்டுதலில் புதிய வெளிச்சத்துடன், புதிய திசையுடன், புதிய உறுதிப்பாட்டுடன் முன்னேறிச் செல்கின்றனர்.
நண்பர்களே,
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கை, "வசுதைவ குடும்பகம்" (உலகமே ஒரு குடும்பம்) என்பதன் வாழும் வடிவமாகத் திகழ்ந்தது. எனவேதான், அவரது இந்த நூற்றாண்டு விழா, நமக்கு உலகளாவிய அன்பு, அமைதி மற்றும் சேவைக்கான மாபெரும் திருவிழாவாக மாறியுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் ₹100 மதிப்புள்ள நினைவு நாணயம் மற்றும் ஒரு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டிருப்பது நமது அரசுக்குக் கிடைத்த ஒரு பாக்கியமாகும். இந்த நாணயமும் அஞ்சல் தலையும் அவரது சேவைப் பணிகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த மங்களகரமான தருணத்தில், உலகம் முழுவதும் பரவி வாழும் பாபாவின் அனைத்து பக்தர்களுக்கும், சேவகர்களுக்கும், சீடர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
'சேவை' என்பதே இந்திய நாகரிகத்தின் மைய மதிப்பாகும். நமது பல்வேறு ஆன்மீக மற்றும் தத்துவ மரபுகள் அனைத்தும் இறுதியில் இந்த ஒரு இலட்சியத்திற்கு இட்டுச் செல்கின்றன. ஒருவர் பக்தி, ஞானம் அல்லது கர்மம் ஆகிய எந்தப் பாதையில் நடந்தாலும், ஒவ்வொன்றும் சேவையுடன் இணைந்தே உள்ளன. எல்லா உயிர்களிலும் இருக்கும் இறைவனுக்குச் சேவை செய்யாவிட்டால் பக்தி என்பது ஏது? பிறருக்கான கருணையை எழுப்பவில்லையென்றால் ஞானம் என்பது ஏது? ஒருவரின் வேலையைச் சமூகத்திற்குச் சேவையாக அர்ப்பணிக்கும் மனப்பான்மை இல்லையென்றால் கர்மம் என்பது ஏது? 'சேவா பரமோ தர்மஹ' (சேவையே உயர்ந்த தர்மம்) என்பதுதான், பல நூற்றாண்டுகளின் மாற்றங்களையும் சவால்களையும் தாண்டி இந்தியாவைத் தாங்கிப் பிடித்திருக்கும் நெறிமுறையாகும். இதுதான் நமது நாகரிகத்திற்கு அதன் உள்ளார்ந்த பலத்தை அளித்துள்ளது. நமது பல மகத்தான துறவிகளும் சீர்திருத்தவாதிகளும் இந்தக் காலத்தால் அழியாத செய்தியை, அந்தந்தக் காலத்திற்கு ஏற்ற வழிகளில் முன்னெடுத்துச் சென்றுள்ளனர்.
ஸ்ரீ சத்ய சாய் பாபா, சேவையை மனித வாழ்வின் மிக முக்கியமான மையமாக வைத்தார். அவர் அடிக்கடி "அனைவரிடமும் அன்பு செலுத்து; அனைவருக்கும் சேவை செய்" என்று கூறுவார். அவரைப் பொறுத்தவரை, சேவை என்பது செயல்படும் வடிவிலான அன்பு. கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு மற்றும் இது போன்ற பல துறைகளில் அவரது நிறுவனங்கள், இந்தத் தத்துவத்திற்கு வாழும் சான்றுகளாக நிற்கின்றன. அவை, ஆன்மீகமும் சேவையும் தனித்தனி இல்லை, மாறாக ஒரே உண்மையின் வெவ்வேறு வெளிப்பாடுகள் என்பதைக் காட்டுகின்றன.
மேலும், ஒருவர் தன் பௌதீக இருப்பின்போது மக்களுக்கு ஊக்கமளிப்பது என்பது அசாதாரணமானதல்ல. ஆனால், பாபா உடல் வடிவில் நம்முடன் இல்லாவிட்டாலும், அவர் உருவாக்கிய நிறுவனங்களின் சேவைப் பணிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இது, உண்மையாகவே மகத்தான ஆத்மாக்களின் தாக்கம் காலப்போக்கில் குறைவதில்லை, மாறாக வளர்கிறது என்பதைக் காட்டுகிறது.
நண்பர்களே,
ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் செய்தி வெறும் நூல்களிலும், சொற்பொழிவுகளிலும், ஆசிரமங்களிலும் மட்டுமே அடைபட்டிருக்கவில்லை. அவரது போதனைகளின் தாக்கம் மக்கள் மத்தியிலும் தெளிவாகத் தெரிகிறது. இன்று, நகரங்கள் முதல் சிறிய கிராமங்கள் வரை, பள்ளிகள் முதல் பழங்குடியினர் குடியிருப்புகள் வரை, கலாச்சாரம், கல்வி மற்றும் மருத்துவ சேவைகளில் ஒரு அற்புதமான ஓட்டம் இந்தியாவில் நிலவுகிறது. பாபாவின் கோடிக்கணக்கான பக்தர்கள் இந்தச் சேவையில் சுயநலமின்றி ஈடுபட்டுள்ளனர். 'மனித குலத்திற்குச் செய்யும் சேவையே மாதவனுக்குச் செய்யும் சேவை' என்பதே பாபாவின் சீடர்களின் தலையாய இலட்சியமாகும்.
அவர் நமக்காகப் பல சிந்தனைகளை விட்டுச் சென்றிருக்கிறார். அவற்றில் கருணை, கடமை, ஒழுக்கம் மற்றும் வாழ்க்கை தத்துவம் ஆகியவற்றின் சாராம்சம் அடங்கியுள்ளது. அவர், "எப்போதும் உதவுங்கள், ஒருபோதும் துன்புறுத்தாதீர்கள், குறைவாகப் பேசுங்கள், அதிகமாக உழையுங்கள்" என்று கூறுவார். ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் இந்தக் கொள்கைகள் இன்றும் நம் அனைவருக்கும் வழிகாட்டியாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
நண்பர்களே,
சாய் பாபா, ஆன்மீகத்தை சமூகம் மற்றும் மக்களின் நலனுக்காகப் பயன்படுத்தினார். அவர் அதை சுயநலமற்ற சேவை, குணநலன் உருவாக்கம் மற்றும் மதிப்புகள் சார்ந்த கல்வி ஆகியவற்றுடன் இணைத்தார். அவர் தனது அதிகாரத்தை எந்தவொரு கருத்து அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் நிலைநிறுத்தவில்லை. அவர் ஏழைகளுக்கு உதவினார், மேலும் அவர்களின் துயரங்களைப் போக்க உழைத்தார்.
குஜராத் பூகம்பத்திற்குப் பிறகு, பாபாவின் சேவா தளம் மற்றும் அனைத்து சேவை மனப்பான்மை கொண்டவர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முதல் வரிசையில் நின்றதை நான் நினைவு கூர்கிறேன். அவரது பக்தர்கள் பல நாட்கள் முழு பக்தியுடன் சேவையில் ஈடுபட்டிருந்தனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சென்றடைவதிலும், அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதிலும், உளவியல்-சமூக ஆதரவை வழங்குவதிலும் அவர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர்.
நண்பர்களே,
ஒருவரின் இதயம் ஒரே ஒரு சந்திப்பில் உருகிவிட்டால், ஒருவரின் வாழ்க்கைப் பாதையே மாறிவிட்டால், அது அந்த மகத்தான மனிதரின் சிறப்பைக் காட்டுகிறது. இன்று இந்த நிகழ்வில், சத்ய சாய் பாபாவின் செய்திகளால் ஆழமாகப் பாதிக்கப்பட்ட, மற்றும் அவர்களின் முழு வாழ்க்கையும் மாற்றமடைந்த பலரும் நம்மிடையே இருக்கிறார்கள்.
நண்பர்களே,
ஸ்ரீ சத்ய சாய் பாபா அவர்களால் ஈர்க்கப்பட்டு, சாய் மத்திய அறக்கட்டளையும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களும் சேவையை ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, நிறுவன ரீதியான மற்றும் நீண்ட கால அமைப்பாக முன்னெடுத்துச் செல்வதில் நான் திருப்தி அடைகிறேன். இன்று இது நம் முன் ஒரு நடைமுறை மாதிரியாக உள்ளது. நீர், வீட்டு வசதி, சுகாதாரம், ஊட்டச்சத்து, பேரிடர் ஆதரவு மற்றும் தூய எரிசக்தி போன்ற துறைகளில் நீங்கள் அனைவரும் ஆச்சரியமூட்டும் வகையில் பணியாற்றி வருகிறீர்கள்.
நான் குறிப்பாக சில சேவைப் பணிகளைக் குறிப்பிட விரும்புகிறேன். உதாரணமாக, ராயலசீமாவில் குடிநீர்ப் பற்றாக்குறை தீவிரமான பிரச்சினையாக இருந்தபோது, அறக்கட்டளை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிலோமீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்தது. ஒடிசாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக அறக்கட்டளை 1,000 வீடுகளை கட்டிக் கொடுத்தது. ஸ்ரீ சத்ய சாய் மருத்துவமனைகளுக்கு முதன்முறையாக வரும் ஏழை குடும்பங்கள், அங்கே பில் செலுத்தும் கவுண்டர் இல்லை என்பதைக் கண்டு பெரும்பாலும் திகைத்துப் போகிறார்கள். இங்கு சிகிச்சை இலவசமாக இருந்தாலும், நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் எந்தவிதமான சிரமத்தையும் எதிர்கொள்வதில்லை.
நண்பர்களே,
இன்றைய தினம், 20,000 க்கும் மேற்பட்ட மகள்களின் பெயரில் செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது அந்த மகள்களின் கல்வியையும், பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதி செய்துள்ளது.
நண்பர்களே,
மத்திய அரசு இந்தப் ‘செல்வமகள் சேமிப்புத்’ திட்டத்தை 10 ஆண்டுகளுக்கு முன்பு, மகள்களின் கல்வியையும், அவர்களது ஒளிமயமான எதிர்காலத்தையும் மனதில் வைத்துத் தொடங்கியது. இது நாட்டில் அதிகபட்சமாக 8.2 சதவிகிதம் வட்டி விகிதத்தை நம் மகள்களுக்கு வழங்கும் திட்டங்களில் ஒன்றாகும். இதுவரை, இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டில் 4 கோடிக்கும் அதிகமான மகள்களின் பெயரில் கணக்குகள் தொடங்கப் பட்டுள்ளன. மேலும், இந்தக் கணக்குகளில் இதுவரை ரூ.3.25 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிந்து மகிழ்ச்சி அடைவீர்கள். ஸ்ரீ சத்ய சாய் குடும்பத்தினர் இங்கே 20 ஆயிரம் செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்குகளைத் திறந்து ஒரு உன்னதமான பணியைச் செய்திருப்பது மிகவும் சிறப்பான முயற்சி.
நான் காசியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால், அங்கிருந்து ஒரு உதாரணத்தையும் கூறுகிறேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், நாங்கள் அங்கு 27 ஆயிரம் மகள்களுக்காக செல்வமகள் சேமிப்புத் திட்டக் கணக்குகளைத் தொடங்கினோம். அத்துடன், ஒவ்வொரு மகளின் வங்கிக் கணக்கிலும் ரூ.300 தொகையும் செலுத்தப்பட்டது. செல்வமகள் சேமிப்புத் திட்டம், மகள்களின் கல்வியிலும், சிறந்த எதிர்காலத்திலும் ஒரு பெரிய பங்களிப்பைச் செய்து வருகிறது.
நண்பர்களே,
கடந்த 11 ஆண்டுகளில், குடிமக்களின் சமூகப் பாதுகாப்பை கணிசமாக வலுப்படுத்திய பல திட்டங்கள் நாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், நாட்டின் ஏழைகளும், விளிம்பு நிலையில் உள்ளவர்களும் தொடர்ச்சியாக சமூகப் பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டில், நாட்டில் வெறும் 25 கோடி மக்கள் மட்டுமே சமூகப் பாதுகாப்பின் கீழ் இருந்தனர். இன்று நான் மிகுந்த திருப்தியுடன், பாபாவின் பாதத்தில் அமர்ந்து சொல்கிறேன்—இன்று இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 100 கோடியை எட்டியுள்ளது. இந்தியாவின் நலத் திட்டங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து இன்று வெளிநாடுகளிலும், அனைத்து சர்வதேச மன்றங்களிலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.
நண்பர்களே,
இன்றைய தினமே, இங்குள்ள கோ தானம் (பசு தானம்) வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. அறக்கட்டளையின் சார்பில் 100 பசுக்கள் ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்றன. நமது பாரம்பரியத்தில், பசுவானது உயிர், வளம், மற்றும் கருணையின் சின்னமாகப் போற்றப்படுகிறது. இந்த பசுக்கள் அந்தக் குடும்பங்களின் பொருளாதார, ஊட்டச்சத்து மற்றும் சமூக நிலைத்தன்மைக்கு உதவும்.
நண்பர்களே,
கோமாதாவைப் பாதுகாப்பதன் மூலம் வளம் பெறும் செய்தி நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஒவ்வொரு மூலையிலும் காணப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்டிரிய கோகுல இயக்கத்தின் கீழ், வாரணாசியில் 480க்கும் மேற்பட்ட கிர் இனப் பசுக்கள் விநியோகிக்கப்பட்டன. அப்போது, நான் ஒரு விதிமுறையை தெரிவித்தேன். அதாவது, முதலில் பிறக்கும் பெண் கன்றை நான் திரும்பப் பெற்று, வேறொரு குடும்பத்திற்கு வழங்குவேன் என்பதே அந்த விதி. இன்று, வாரணாசியில் கிர் இனப் பசுக்கள் மற்றும் கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 1700-ஐ எட்டியுள்ளது. மேலும், அங்கு நாங்கள் தொடங்கிய ஒரு பாரம்பரியம் என்னவென்றால், விநியோகிக்கப்பட்ட பசுக்களுக்குப் பிறக்கும் பெண் கன்றுகள், மற்ற பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. இதனால், இந்தப் பசுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனக்கு நினைவிருக்கிறது, 7-8 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவில் உள்ள ருவாண்டாவிற்கு நான் சென்றபோது, அங்குள்ள ஒரு கிராமத்திற்குச் சென்று இந்தியாவிலிருந்து கொண்டு சென்ற 200 கிர் இனப் பசுக்களைப் பரிசளித்தேன். அங்கும் தானம் வழங்கும் இந்த பாரம்பரியம் உள்ளது. அங்கே ‘கிரிங்கா’ என்ற ஒரு வழக்கம் உள்ளது. இதன் பொருள், "உங்களுக்கு ஒரு பசு கிடைக்கட்டும்" என்பதாகும். அதன்படி, ஒரு பசுவுக்குப் பிறக்கும் முதல் பெண் கன்று அண்டை குடும்பத்திற்கு தானமாக வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை அங்கே ஊட்டச்சத்து, பால் உற்பத்தி, வருமானம் மற்றும் சமூக ஒற்றுமையை அதிகரித்துள்ளது.
நண்பர்களே,
பிரேசில் நாடும் கூட, இந்தியாவின் கிர் மற்றும் காங்கிரேஜ் இனங்களைப் பின்பற்றி, நவீன தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் மேலாண்மையுடன் அவற்றைப் பேணி வளர்த்துள்ளது. இன்று, அவை சிறந்த பால் பண்ணைத் திறனுக்கான ஆதாரமாக மாறியுள்ளன. இந்த அனைத்து உதாரணங்களும், பாரம்பரியம், கருணை மற்றும் அறிவியல் சிந்தனை ஆகியவை ஒன்றிணைந்து செயல்படும்போது, பசுவானது நம்பிக்கைக்கான சின்னமாக மட்டுமல்லாமல், அதிகாரமளித்தல், ஊட்டச்சத்து மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கான ஒரு வழியாகவும் மாறுகிறது என்பதைக் காட்டுகின்றன. நீங்கள் இந்தப் பாரம்பரியத்தை இவ்வளவு நல்ல நோக்கங்களுடன் இங்கு முன்னெடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
நண்பர்களே,
இன்று, கடமை உணர்வுடன் கூடிய வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கி நாடு முன்னேறி வருகிறது. இந்தக் குறிக்கோளை அடைவதற்கு குடிமக்களின் பங்கேற்பு அத்தியாவசியமானது. இதில், சத்ய சாய் பாபாவின் இந்தக் நூற்றாண்டு விழா ஆண்டு நமக்கு மிகப் பெரிய உத்வேகமாக அமைந்துள்ளது. இந்த ஆண்டில், நாம் குறிப்பாக 'உள்ளூர் தயாரிப்புகளுக்கு குரல் கொடுங்கள்' என்ற மந்திரத்தை வலுப்படுத்துவதற்குச் சபதம் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க, நாம் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். நாம் நினைவில் கொள்ள வேண்டும்: நாம் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும்போது, ஒரு குடும்பம், ஒரு சிறிய நிறுவனம் மற்றும் உள்ளூர் விநியோகச் சங்கிலி ஆகியவற்றை நாம் நேரடியாக அதிகாரமளிக்கிறோம். இது சுயசார்பு இந்தியாவுக்கான பாதையையும் வகுக்கிறது.
நண்பர்களே,
நீங்கள் அனைவரும் ஸ்ரீ சத்ய சாய் பாபாவால் ஈர்க்கப்பட்டு, தேசத்தைக் கட்டமைப்பதில் தொடர்ந்து பங்களித்து வருகிறீர்கள். இந்த புனித பூமி உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சக்தியைக் கொண்டுள்ளது. இங்கு வரும் ஒவ்வொருவரின் வார்த்தைகளிலும் கருணையும், சிந்தனைகளில் அமைதியும், செயல்களில் சேவை மனப்பான்மையும் வெளிப்படுகின்றன.
எங்கெல்லாம் வறுமையும் துன்பமும் இருக்கிறதோ, அங்கெல்லாம் நீங்கள் இதேபோன்று நம்பிக்கை மற்றும் ஒளியின் கலங்கரை விளக்கமாக நிற்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த உணர்வுடன், அன்பு, அமைதி, மற்றும் சேவைக்கான இந்த யாகத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் சத்ய சாய் குடும்பம், அனைத்து நிறுவனங்கள், அனைத்து சேவை அணிகள், மற்றும் நாடு முழுவதிலும் இருந்தும் உலகெங்கிலும் இருந்தும் வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக்க நன்றி. சாய்-ராம்!
----
(Release ID: 2191625)
AD/VK/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2242270)
வருகையாளர் எண்ணிக்கை : 14
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam