பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரது சந்திப்புக்குப் பின் வெளிடப்பட்ட கூட்டு அறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
19 JAN 2026 8:10PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், ஜனவரி 19, 2026 அன்று இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமர மேற்கொண்டார். கடந்த பத்து ஆண்டுகளில் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியாவிற்கு மேற்கொண்ட ஐந்தாவது வருகை இதுவாகும். மேலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இந்தியாவிற்கு அவர் மேற்கொண்ட மூன்றாவது அரசு முறைப் பயணம் இதுவாகும்.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை பிரதமர் திரு நரேந்திர மோடியும் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானும் ஆய்வு செய்தனர். கடந்த பத்தாண்டுகளில் இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விரிவான உத்திசார் ஒத்துழைப்பு தொடர்ந்து வலுப்பெற்று வருவதாக அவர்கள் கூறனர்.
அபுதாபியின் பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான், துபாய் பட்டத்து இளவரசர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகியோர் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிற்கு மேற்கொண்ட வருகைகளை இரு தலைவர்களும் குறிப்பிட்டனர். இந்த வருகைகள் இருதரப்பு உறவின் தலைமுறை தொடர்ச்சியைக் குறிக்கின்றன என்பதை அவர்கள் குறிப்பிட்டனர்.
2025 செப்டம்பரில் நடைபெற்ற 13-வது உயர்மட்ட முதலீடுகள் பணிக்குழு, 2025 டிசம்பரில் நடைபெற்ற 16வது இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கூட்டு ஆணையக் கூட்டம் ஆகியவற்றின் முடிவுகளை இரு தலைவர்களும் வரவேற்றனர். 2022-ம் ஆண்டில் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானதிலிருந்து வர்த்தகம், பொருளாதார ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள வலுவான வளர்ச்சியை இரு தலைவர்களும் வரவேற்றனர். 2024-25-ம் நிதியாண்டில் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டிய இருதரப்பு வர்த்தகத்தின் விரைவான வளர்ச்சியை அவர்கள் குறிப்பிட்டனர். 2032-ம் ஆண்டுக்குள் 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை இலக்காகக் கொண்டு இருதரப்பு வர்த்தகத்தை இரட்டிப்பாக்க இருதலைவர்களும் முடிவு செய்துள்ளனர்.
இரு தரப்பிலும் உள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் துறை நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் பணியாற்றுமாறு தங்கள் குழுக்களை அவர்கள் அறிவுறுத்தினர். 2024-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம் இரு நாடுகளிலும் பல துறைகளில் முதலீடுகளை மேலும் வலுப்படுத்தியுள்ளது என்று தலைவர்கள் திருப்தி தெரிவித்தனர்.
உணவுப் பாதுகாப்பில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்-இந்தியா ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வலுவான கொள்கையை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர். நிலையான விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை அவர்கள் அங்கீகரித்தனர். விண்வெளித் துறையில் ஒத்துழைப்பை ஆழப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அறிவியல், தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
இருதரப்பு எரிசக்தி ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பிற்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பங்களிப்பை தலைவர்கள் சுட்டிக் காட்டினர். 2028-ம் ஆண்டு தொடங்கி, ஆண்டுக்கு 0.5 மில்லியன் டன் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை வழங்குவதற்காக, இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் - ஏடிஎன்ஓசி எரிவாயு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே 10 ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதை அவர்கள் வரவேற்றனர்.
இரு நாடுகளுக்கும் இடையே நிதித்துறை ஒத்துழைப்பு வலுவடைவதை இரு தலைவர்களும் பாராட்டினர். திறமையான, வேகமான, செலவு குறைந்த எல்லை தாண்டிய பணப்பரிமாற்றங்களை செயல்படுத்த தேசிய பரிவர்த்தனைத் தளங்களை ஒன்றோடொன்று இணைக்கப் பணியாற்றுமாறு அவர்கள் தங்கள் குழுக்களுக்கு அறிவுறுத்தினர்.
இரு நாடுகளுக்கும் இடையே பகிரப்பட்ட கலாச்சார, வரலாற்று பாரம்பரியத்தை அங்கீகரித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, லோத்தலில் உள்ள தேசிய கடல்சார் பாரம்பரிய வளாகத்திற்கு கலைப்பொருட்களை வழங்குவதற்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முடிவை வரவேற்றார். இந்தியா-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நட்பின் நீடித்த அடையாளமாக அபுதாபியில் 'இந்திய இல்லம்' ஒன்றை நிறுவ இரு தலைவர்களும் முடிவு செய்தனர்.
கல்வி நிறுவனங்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கும், இரு நாடுகளுக்கும் இடையே அறிவுப் பாலமாகச் செயல்படும் மாணவர் பரிமாற்றங்களை விரிவுபடுத்துவதற்கும் அதிக முயற்சிகளை அவர்கள் ஊக்குவித்தனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் பயங்கரவாதத்தை இரு தலைவர்களும் கடுமையாகக் கண்டித்தனர்.
பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய, உலகளாவிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றில் தங்கள் பகிரப்பட்ட ஆர்வத்தை அவர்கள் வெளிப்படுத்தினர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அன்பான வரவேற்பு, அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
***
(Release ID: 2216270)
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2242039)
வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam