பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நவ ராய்பூரில் உள்ள சாந்தி ஷிகர் – பிரம்ம குமாரிகள் தியான மையத் திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய ஆங்கில உரையின் தமிழாக்கம்

இடுகை இடப்பட்ட நாள்: 01 NOV 2025 1:23PM by PIB Chennai

ஓம் சாந்தி!

சத்தீஸ்கர் மாநில ஆளுநர் திரு. ரமேன் தேகா அவர்களே, முதலமைச்சர் திரு. விஷ்ணு தியோ சாய் அவர்களே, இராஜயோகினி சகோதரி ஜெயந்தி அவர்களே, இராஜயோகி மிருத்யுஞ்சய் அவர்களே, இங்கே வருகை தந்துள்ள பிரம்ம குமாரிகள் சகோதரிகளே, மேலும் இங்குள்ள மற்ற விருந்தினர்களே, தாய்மார்களே, பெரியோர்களே!

இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். சத்தீஸ்கர் மாநிலம் உருவானதன் 25 ஆண்டுகளை இன்று நிறைவு செய்கிறது. சத்தீஸ்கருடன் சேர்ந்து ஜார்க்கண்ட் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களும் உருவாகி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளன. இன்று, நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களும் தங்களின் நிறுவன நாளைக் கொண்டாடுகின்றன. இந்தச் சிறப்பான தருணத்தில், இந்த மாநிலங்களின் அனைத்து மக்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாநிலங்களின் வளர்ச்சியின் மூலம் தேசத்தின் வளர்ச்சிஎன்ற மந்திரத்தைப் பின்பற்றி, ஒரு வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டியெழுப்புவதற்கான இலட்சியத்தில் நாம் அனைவரும் கூட்டாக ஈடுபட்டுள்ளோம்.

நண்பர்களே,

வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்த முக்கியமான பயணத்தில், பிரம்ம குமாரிகள் போன்ற ஒரு அமைப்பு மிகவும் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது. பல தசாப்தங்களாக நான் உங்கள் அனைவருடனும் தொடர்புடையவனாக இருப்பது எனது அதிர்ஷ்டம். நான் இங்கே ஒரு விருந்தாளி அல்ல நான் உங்களைச் சேர்ந்தவன். இந்த ஆன்மீக இயக்கம் ஒரு வலிமைமிக்க ஆலமரம் போல வளர்ந்து விரிவடைவதை நான் பார்த்திருக்கிறேன். 2011 ஆம் ஆண்டு அகமதாபாத்தில் நடைபெற்ற அதிகாரத்தின் எதிர்காலம்என்ற நிகழ்ச்சி, 2012 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் 75வது ஆண்டு விழா கொண்டாட்டம், 2013 ஆம் ஆண்டில் பிரயாக்ராஜில் நடந்த நிகழ்வு மவுண்ட் அபுவுக்குப் பயணம் செய்தாலும் சரி அல்லது குஜராத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் சரி, இது போன்ற நிகழ்வுகள் எனக்கு கிட்டத்தட்ட வழக்கமானதாகி விட்டிருந்தன. நான் டெல்லிக்கு வந்த பிறகும்கூட, அது சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழா, தூய்மை இந்தியா இயக்கம் அல்லது ஜல் ஜன் இயக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய பிரச்சாரங்களில் பங்கேற்பதாக இருந்தாலும், நான் உங்கள் மத்தியில் வரும்போதெல்லாம், உங்கள் முயற்சிகளை மிகுந்த நேர்மையுடன் நான் கவனித்திருக்கிறேன். இங்கே வார்த்தைகள் குறைவாகவும், சேவைகள் அதிகமாகவும் இருப்பதை நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.

நண்பர்களே,

இந்த அமைப்புடனான எனது பிணைப்பு மிகவும் தனிப்பட்டது ஜானகி தாதி அவர்களின் பாசம், மற்றும் இராஜயோகினி தாதி ஹிருதய மோகினி அவர்களின் வழிகாட்டுதல் ஆகியவை எனது வாழ்க்கையின் மிகவும் பொக்கிஷமான நினைவுகளாகும். நான் என்னை உண்மையிலேயே அதிர்ஷ்டசாலியாகக் கருதுகிறேன். இந்த சாந்தி ஷிகர்என்ற கருத்தாக்கத்தில், அவர்களின் சிந்தனைகள் வடிவம் பெற்று உயிர்ப்பிப்பதை நான் காண்கிறேன். சாந்தி ஷிகர் அமைதியான உலகத்திற்கான அகாடமி. வரவிருக்கும் காலங்களில், உலக அமைதிக்கான அர்த்தமுள்ள முயற்சிகளுக்கான ஒரு பெரிய மையமாக இந்த நிறுவனம் உருவெடுக்கும் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த பாராட்டத்தக்க முயற்சிக்கு உங்கள் அனைவருக்கும், மேலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பிரம்ம குமாரிகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

நம் பாரம்பரியத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: ஆசாரஃ பரமோ தர்ம, ஆசாரஃ பரம் தப:। ஆசாரஃ பரம் ஞானம், ஆசாராத் கிம் ந சாத்யதே॥ இதன் பொருள்: நடத்தை என்பது மிக உயர்ந்த தர்மம், நடத்தை என்பது மிகச்சிறந்த தவமாகும், நடத்தை என்பது மிக உயர்ந்த ஞானமாகும். சரியான நடத்தையின் மூலம் எதைத்தான் சாதிக்க முடியாது? வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வார்த்தைகள் செயல்களாக மாற்றப்படும்போது மட்டுமே உண்மையான மாற்றம் நிகழ்கிறது. மேலும், இதுவே பிரம்ம குமாரிகள் அமைப்பின் ஆன்மீக பலத்தின் மூலமாகும். இங்குள்ள ஒவ்வொரு சகோதரியும் முதலில் தங்களை கடுமையான தவத்திற்கும் கட்டுப்பாடுக்கும் உட்படுத்துகிறார்கள். உலகிலும், பிரபஞ்சத்திலும் அமைதிக்கான முயற்சிகளுடன் உங்கள் அடையாளம் இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் முதல் வாழ்த்தே ஓம் சாந்தி! என்பதாகும். ஓம் என்பது பிரம்மனையும் முழு பிரபஞ்சத்தையும் குறிக்கிறது, மேலும் சாந்தி என்பது அமைதிக்கான விருப்பத்தை அடையாளப்படுத்துகிறது. அதனால்தான் பிரம்ம குமாரிகளின் எண்ணங்களும் போதனைகளும் ஒவ்வொரு தனிமனிதனின் இருப்பின் ஆழமான மையத்தைத் தொடுகின்றன.

நண்பர்களே,

உலக அமைதி என்ற கருத்து, இந்தியாவின் மூலத் தத்துவத்தின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும். இது இந்தியாவின் ஆன்மீக உணர்வின் வெளிப்பாடு. ஏனென்றால், ஒவ்வொரு உயிருள்ள ஜீவனிலும் தெய்வீகத்தைப் பார்ப்பவர்கள் நாமே; சுயத்தை பிரபஞ்சத்தை உள்ளடக்கியதாக விரிவாக்குபவர்களும் நாமே. நமது பாரம்பரியத்தில் உள்ள ஒவ்வொரு மதச் சடங்கும், "உலகம் ஆசீர்வதிக்கப்படட்டும்! அனைத்து உயிர்களிடமும் நல்லெண்ணம் நிலவட்டும்!" என்ற பிரார்த்தனையுடன் முடிவடைகிறது. இத்தகைய பரந்த மற்றும் நன்மையான கண்ணோட்டம், இத்தகைய உன்னதமான சிந்தனை, மேலும் நம்பிக்கையும் உலக நலன் என்ற உணர்வும் இயல்பாக ஒன்றிணைவது நமது நாகரிகம் மற்றும் பாரம்பரியத்திற்கு உள்ளார்ந்ததாகும். நமது ஆன்மீகம் நமக்கு அமைதிக்கான பாடத்தை மட்டுமல்ல, அதை அடைவதற்கான வழியையும் காட்டுகிறது. தன்னடக்கத்திலிருந்து சுய அறிவு பிறக்கிறது, சுய அறிவிலிருந்து சுய உணர்தல் பிறக்கிறது, மற்றும் சுய உணர்தலிலிருந்து மன அமைதி பிறக்கிறது. இந்தப் பாதையில் பயணிப்பதன் மூலம், சாந்தி ஷிகர் அகாடமியில் உள்ள சாதகர்கள் உலக அமைதிக்கான கருவியாக மாறுவார்கள்.

நண்பர்களே,

உலக அமைதிக்கான இலட்சியத்தில், நடைமுறை கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் எவ்வளவு முக்கியமோ, அதேபோல சிந்தனைகளும் முக்கியமானவை. இந்தியா இன்று இந்த திசையில் அதன் பங்கை மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்ற உண்மையிலேயே பாடுபடுகிறது. உலகில் எங்காவது ஒரு நெருக்கடி அல்லது பேரழிவு ஏற்படும்போது, இந்தியா ஒரு நம்பகமான பங்காளியாக முன்னேறி, உடனடியாக உதவிக் கரம் நீட்டுகிறது. இந்தியா உலகிற்கு 'முதல் பதிலளிப்பவராக' மாறியுள்ளது.

நண்பர்களே,

சுற்றுச்சூழல் தொடர்பான சவால்களுக்கு மத்தியில், இந்தியா உலகெங்கிலும் இயற்கை பாதுகாப்பிற்கான ஒரு முன்னணி குரலாக வெளிப்பட்டுள்ளது. இயற்கை நமக்கு அருளியவற்றை நாம் பாதுகாத்து வளர்ப்பது கட்டாயமாகும். இயற்கையுடன் இணக்கமாக வாழ நாம் கற்றுக்கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். நம்முடைய சாஸ்திரங்களும், நமது படைப்பாளரான பிரஜாபிதாவும் இதைத்தான் நமக்குக் கற்பித்துள்ளனர். நாம் ஆறுகளைத் தாயாகக் கருதுகிறோம், நீரை ஒரு தெய்வமாக வணங்குகிறோம், மேலும் தாவரங்களில் தெய்வத்தன்மையைப் பார்க்கிறோம். இந்த உணர்வால் வழிநடத்தப்பட்டு, இயற்கையையும் அதன் வளங்களையும் நாம் பயன்படுத்துவது, வெறும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தால் உந்தப்படுவதில்லை, மாறாக திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தால் உந்தப்படுகிறது. இந்த வாழ்க்கை முறையே பாதுகாப்பான எதிர்காலத்திற்கான ஒரு நம்பிக்கையை உலகிற்கு வழங்குகிறது.

நண்பர்களே,

இந்தியா, இப்போதும் கூட, எதிர்காலத்திற்கான அதன் பொறுப்புகளை உணர்ந்து நிறைவேற்றுகிறது. இந்தியாவின் ஒரு சூரியன், ஒரு உலகம், ஒரு கட்டமைப்பு போன்ற முன்முயற்சிகளும், அதன் ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற தொலைநோக்குப் பார்வையும் உலகை ஒன்றிணைக்கின்றன. இந்தியா மிஷன் லைப் என்ற திட்டத்தையும் தொடங்கியுள்ளது. இது புவிசார் அரசியல் எல்லைகளைத் தாண்டி, மனிதகுலம் அனைத்தின் நலனுக்காக உருவாக்கப் பட்டதாகும்.

நண்பர்களே,

பிரம்ம குமாரிகள் போன்ற நிறுவனங்கள் சமுதாயத்திற்குத் தொடர்ந்து அதிகாரம் அளிப்பதில் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. சாந்தி ஷிகர் போன்ற ஸ்தாபனங்கள் பாரதத்தின் முயற்சிகளுக்குப் புதிய சக்தியைக் கொடுக்கும் என்றும், இந்த நிறுவனத்திலிருந்து வெளிப்படும் ஆற்றல் நாடு மற்றும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானவர்களை உலக அமைதி என்ற கருத்துடன் இணைக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். பிரதமராக ஆனதிலிருந்து, நான் உலகின் பல பகுதிகளுக்குப் பயணம் செய்திருக்கிறேன்; ஒரு விமான நிலையம் அல்லது ஒரு நிகழ்ச்சி நடைபெறும் இடம் என எங்கு சென்றாலும், அங்கு பிரம்ம குமாரிகளின் உறுப்பினர்களைச் சந்திக்காமலோ, அல்லது அவர்களின் நல்வாழ்த்துகள் என்னுடன் வராமல் இருந்ததாகவோ என்னால் நினைவுகூர முடியவில்லை. அப்படி ஒரு சந்தர்ப்பம் கூட இருக்காது. இது எனக்கு ஓர் அசல் பற்றுறுதியை அளிக்கிறது; மேலும், இது உங்கள் பலம் பற்றிய ஒரு பிம்பத்தையும் எனக்கு வழங்குகிறது. உண்மையில், நான் பலத்தை வணங்கி ஆராதிப்பவன்.

இந்த புனிதமான மற்றும் மங்கலமான தருணத்தில் உங்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பை நீங்கள் எனக்கு அளித்திருக்கிறீர்கள், அதற்காக நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் வளர்க்கும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல அவற்றை நான் எப்போதும் உறுதியான உறுதிமொழிகளாகவே உணர்ந்திருக்கிறேன்; உங்கள் உறுதிமொழிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த உணர்வுடன், சாந்தி ஷிகர் அமைதியான உலகத்திற்கான அகாடமி திறப்பு விழாவுக்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி!

ஓம் சாந்தி!

 

 

 

(வெளியீட்டு அடையாள எண்: 2185111)

***

AD/VK/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2241744) வருகையாளர் எண்ணிக்கை : 18